வெள்ளப்பாறைப்பட்டியில் பசுமைநடைப் பொங்கல்விழா

Posted: ஜனவரி 19, 2015 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

பொங்கல்

விழா என்றாலே கொண்டாட்டமும், கோலாகலமும்தான். அதிலும் சாதி, மதங்கடந்து அனைவராலும் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகை இன்னும் சிறப்பானது. தொன்மையான தலங்களை நோக்கி பயணித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் பசுமைநடைக்குழுவினர் தமிழர்திருநாளான பொங்கலை சிறுகிராமத்தில் கொண்டாட முடிவுசெய்தனர். மதுரைக்கு அருகேயுள்ள வடபழஞ்சி அருகிலுள்ள வெள்ளப்பாறைப்பட்டியில் பசுமைநடை சார்பாக பொங்கல்விழா சிறப்பாக கொண்டாடிய அனுபவப்பகிர்வு.

மதுரைக்கு அருகிலுள்ள அழகான சிறிய கிராமம் வெள்ளப்பாறைப்பட்டி. சமீபத்தில்தான் அரசுப்பேருந்தே ஊருக்குள் வந்து செல்கிறது. எப்போதாவது எட்டிப்பார்க்கும் சிற்றுந்துகள் தவிர ஊர் சத்தமின்றி அமைதியாக இருக்கிறது. கலையரங்கக் கட்டிடம், அருகே பள்ளிக்கூடம், எதிரே வழிபாட்டுக்குரிய பாறைத்திட்டு என ஊரின் மந்தை மிக அழகாக அமைந்திருக்கிறது.

மந்தை

பொங்கல்விழா கொண்டாடுவதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை பசுமைநடைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் வெள்ளப்பாறைப்பட்டிக்குச் சென்றோம். நான்கு வழிச்சாலையிலிருந்து வேடர்புளியங்குளம் வழி வலதுபக்கமாக சென்றால் சின்னசாக்கிலிபட்டி தாண்டி வெள்ளப்பாறைப்பட்டி வருகிறது. அந்த ஊரைச்சேர்ந்தவர்கள் பொங்கல்விழா கொண்டாட முழுஒத்துழைப்புத் தருவதாகச் சொல்லி எங்களை அன்றே ஊக்கப்படுத்தினார்கள். பசுமைநடைக்குழு ஒருங்கிணைப்பாளர்களுள் ஓரிருவர் அன்றிலிருந்தே வெள்ளப்பாறைப்பட்டிக்குப் போய் விழா ஏற்பாடுகளை தொடங்கிவிட்டனர்.

சனிக்கிழமை மாலை பணிமுடிந்து எங்க வீட்டுக்கருகிலுள்ள சிறுவன் செந்திலோடு வெள்ளப்பாறைப்பட்டிக்கு சென்றேன். நாங்கள் போன சமயம் நண்பர்கள் விறகை இறக்கிக் கொண்டிருந்தார்கள். விறகு இறக்குவதிலிருந்து வேலையை ஏற்கத் தொடங்கிவிட்டேன். மறுநாள் சமையலுக்கு காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தனர். ஊர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உதவிக்கு வந்திருந்தனர். பள்ளி வளாகத்தில் மின்விளக்குகள் கட்டுவதற்கு உதவினோம். தோரணங்களுக்காக வண்ணத்தாள்களை ஒட்டிக்கட்டினோம். அந்த ஊர் இளைஞர்கள் அவர்களிடமிருந்த வண்ணத்தோரணங்களை கொண்டுவந்து ஊர் மந்தைக்கு நடுவில் கட்டி சில நிமிடங்களில் எங்களை அசரடித்துவிட்டனர்.

பனியினூடாக மறுநாள் பணிகள் குறித்து பாறையில் திட்டமிடல் தொடங்கியது. பசுமைநடை அமைப்பாளர் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் விழா ஏற்பாடுகள், ஒருங்கிணைப்பு, உணவு பரிமாறுதல், விளையாட்டுப்போட்டிகள், வாகனநிறுத்துமிடம் என உள்ள பல வேலைகளை குறிப்பிட்டு ஒவ்வொருவருக்குமான பணிகளை பங்கிட்டுக் கொடுத்தார். அதன்பின் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் வட்டமாக அமர்ந்து இரவு உணவை உண்டோம். இட்லி ஒரு உன்னத உணவு. அடுத்த வேலைகளைத் தொடங்கும்முன் ஊரிலிருந்து காப்பி போட்டுக் கொடுத்தனர். குளிருக்கு இதமாக இருந்தது. சணல் பந்தை மண்டையில் கரகம்போல் வைத்து கரகாட்டக்காரன் பாடலுக்கு ஆடிப்பார்த்தேன். இரவை உறங்கச் செய்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளுக்கு நாங்கள் கிளம்பினோம்.

வழிகாட்டும் பதாகைகள், சுண்ணாம்பினால் அடையாளக்குறிகள் இடுவதற்காக நான்கு இருசக்கர வாகனங்களில் ஒருகுழு கிளம்பினோம். இருளினூடாகப் பயணித்து வெள்ளப்பாறைப்பட்டிக்கு வரும் பிரிவை நோக்கிச் சென்றோம். பசுமைநடை பதாகையை வழிகாட்ட முதலில் கட்டினோம். சாலையில் அம்புக்குறியிட்டு பசுமைநடை என சுண்ணாம்பினால் எழுதினோம். அங்கிருந்து கொஞ்சம் விட்டுவிட்டு அம்புக்குறி அட்டைகளை மரத்தில் கட்டிக்கொண்டே சென்றோம். குரூஸ் அண்ணே சென்னை புத்தகக் கண்காட்சி சென்றுவந்த அனுபவங்களை பேசிக்கொண்டே வந்தார். திரும்பி வரும்போது நடுநிசிநாய்கள் உறக்கங்கலைந்து குரைக்கத் தொடங்கின.

வழக்கறிஞர் இராபர்ட் அவர்கள் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தார். அவரை வரவேற்க வடபழஞ்சியிலிருந்து வெள்ளப்பாறைப்பட்டி வரும் பிரிவில் காத்திருந்தோம். வான்முழுக்க நட்சத்திரங்கள் இறைந்து கிடந்தன. ஒளிமாசு இல்லாததால் நிறைய நட்சத்திரங்களைக் காண முடிந்தது. குருஸ் மற்றும் ராஜன்னா நட்சத்திரங்களை அதன் பெயர்களோடு அடையாளமிட்டுக் காட்டினர். சிலுவைபோலுள்ள நட்சத்திரம், வேட்டைக்காரன் போன்றவற்றை பார்த்தோம். எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் அவர்களும் எங்களோடு இருந்தார். பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலைக் குறித்து குருஸ் அண்ணே சிலாகித்துக் கொண்டிருந்தார். மேலும், சு.வேணுகோபாலின் கதைகள் குறித்து உரையாட வேணுவனம் என்ற அமைப்பை உருவாக்கியிருப்பதையும் அதைக்குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். குருஸ் அண்ணனின் நகைச்சுவையான பேச்சுக்கு என்னுடன் வந்த சிறுவன் செந்தில் ரசிகனாகிவிட்டான்.

இராபர்ட் அண்ணன் குடும்பத்துடன் வர பாறைத்திட்டிற்கு சென்றோம். நள்ளிரவு நெடுநேரம் பாறையில் அமர்ந்து கொண்டும், ஒரு சிலர் படுத்துக்கொண்டும் பேசிக்கொண்டிருந்தோம். உற்சாகமாக இருந்தது. பாறையின் சூடு குளிருக்கு இதமாகயிருந்தது. வீட்டுக்குப்போய் குடும்பத்தினரை அழைத்து வருவதற்காக கொஞ்சப்பேர் கிளம்ப ஐந்துபேர் அந்தப் பள்ளியில் பள்ளிகொண்டோம். நாலுமணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்தோம். பசுமைநடை இலட்சினை பொறித்த அட்டைகளை மரத்தடியில், கலையரங்கத்தில் என ஆங்காங்கே அழகாய்க் கட்டினோம். வீட்டுச் சுவர்களில் கொஞ்சம் ஒட்டினோம். மக்களைப் போல வீடுகளும் மிக எளிமையாகயிருந்தது. காலையிலேயே ஒலிபெருக்கியில் பாடல்களைப் போடத்தொடங்கினர். அதிலும் அப்போது ஒலித்த ராமராஜன் பாட்டு மேலும் உற்சாகங்கொள்ள வைத்தது.

நீரின்றிஅங்கிருந்த தேனீர்கடையில் நானும், பினைகாஸ் அண்ணனும் தேனீர் குடித்துவிட்டு விடியும்முன்பே சூடாக அப்பத்தைத் தின்றோம். செந்திலும், மதுமலரனும் பல்விளக்காமல் எதுவும் தொட மாட்டோமென சொல்லிவிட்டனர். நண்பர்கள் எல்லோரும் வர அங்கு தங்கியிருந்தவர்கள் குளிக்க அங்கிருந்த தொட்டியை நோக்கிச் சென்றோம். ஊரில் தண்ணீர் தட்டுப்பாடு. குளிக்குமிடத்தில் உள்ள தொட்டி தண்ணியைப் பிடிக்க கூட்டம். பெண்கள் வேறு வந்ததால் தயங்கிக்கொண்டே நின்றோம். பிறகு கூட்டம் குறைய குளித்துவிட்டு வந்தோம். வாகனங்களை நிறுத்த கந்தவேலுடன் நின்று வழிகாட்டினேன்.

முறுக்கு

பசுமைநடைக்குழுவினர் எல்லோரும் வந்து ஊருக்குள் மக்களை அழைக்க சென்றனர். விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை நண்பர்கள் கொஞ்சப்பேர் ஏற்றுக்கொண்டனர். உணவை கொண்டுவந்து பள்ளியில் சேர்க்கும் பணியை கொஞ்சப்பேர் செய்தோம். எல்லோரும் வர சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பமானது. வெளிநாட்டு மாணவிகள் கொஞ்சப்பேர் பொங்கல்விழாவிற்கு சிறப்புவிருந்தினர்களாக வந்திருந்தனர். உதயகுமார் விளையாட்டுப்போட்டிகளை ஒருங்கிணைத்து நல்லதொரு வர்ணனையாளரானார். சிறார்களுக்கான பலூன் உடைத்தல், முறுக்கு கடித்தல் போன்ற போட்டிகள் நடந்தன.

சிறப்புவிருந்தினர்

இளவட்டக்கல்

அதற்கடுத்து இளைஞர்களுக்கான இளவட்டக்கல் தூக்கும் போட்டி தொடங்கியது. கொஞ்சப்பேர் முயற்சித்தார்கள். வெள்ளப்பாறைப்பட்டியைச் சேர்ந்த ஆண்டியண்ணன் சரியாகத் தூக்கி வீசிக்காட்டினார். ஆனால், வேறு யாராலும் அந்தக்கல்லை அவரைப் போல் தூக்கி வீச முடியவில்லை. பெண்களுக்கான பாட்டிலில் நீர் நிரப்பும் போட்டிகள் நடந்தது. உற்சாகமாக பசுமைநடைப்பயணிகளும், அந்த ஊர் மக்களும் கலந்து கொண்டனர். பினைகாஸண்ணன் நாட்டுப்புறப்பாடல்களைப் பாடி மக்களை மகிழ்வித்தார்.

நீர்நிரப்பும்போட்டி

பாறைக்கு மறுபுறம் அழகான கோலமிட்டு பொங்கல் வைத்தனர். கரும்புகளை மூன்றாகச் சேர்த்து ஆங்காங்கே அழகாய் கட்டி வைத்திருந்தோம். பொங்கல் பொங்கியதும் எல்லோரும் ஆலமரத்தடியில் கூடினார்கள். பாறையிலும், கலையரங்கத்திலும் நின்று நிறையப் பேர் நிகழ்வை பார்த்தார்கள்.

வழிபாடு

வெள்ளப்பாறை

பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பொங்கல் விழா கொண்டாட கிராமத்தை நோக்கி வந்ததை குறித்து பேசினார். மேலும், இந்த ஊரில் ஒரு அரசு அலுவலர் கூட இல்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் கூறினார். இனிவரும் தலைமுறை கற்று மேலே வர வேண்டுமென என நம்பிக்கையை ஊட்டினார். வெள்ளப்பாறைப்பட்டி மக்களுக்காக வடபழஞ்சி ஊராட்சி மன்றத்தலைவர்க்கு பசுமைநடை சார்பாக சில கோரிக்கைகளை வைத்தார். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா பொங்கல் குறித்தும், கிராமங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுர வரலாறு நூல் பரிசாய் வழங்கப்பட்டது. உதவிய இளைஞர் குழாமிற்கு காற்றின் சிற்பங்கள் நூல் பரிசாய் வழங்கப்பட்டது.

உரைநிகழ்வு

காற்றின் சிற்பங்கள்

சர்க்கரைப்பொங்கல்பசுமைநடைப்பயணிகளுக்கும், ஊர்மக்களுக்கும் காலை உணவாகச் சர்க்கரைப் பொங்கல், வெண்பாங்கல் சாம்பார் சட்னியுடன் வழங்கப்பட்டது. விழா முடிந்ததும் முட்டி உடைக்கும் போட்டி தொடங்கியது. பசுமைநடை ஒருங்கிணைப்பாளர் ஹூபர்ட் குருஸ் அண்ணன் முட்டி உடைக்கும் போட்டியை கண்ணைக் கட்டித் தொடங்கினார். ஒவ்வொருவரும் பலதிசை நோக்கி பயணிக்க மந்தைக்களமே மகிழ்ச்சியில் பொங்கியது. ஒவ்வொருவருக்கும் படங்களில் இருந்து நகைச்சுவையான வசனங்களும், உற்சாகமூட்டும் பாடல்களும் போட்டனர். அந்த ஊரைச் சேர்ந்த இளைஞரொருவர் முட்டியை உடைத்தார்.

முட்டிஉடைத்தல்

போட்டிகள் முடிந்ததும் பள்ளியில் பசுமைநடை ஒருங்கிணைப்பாளர்கள் கூடி அன்றைய நிகழ்வை குறித்து உரையாடினோம். ஓவியர் ரவி அவர்கள் வரைய நிறைய குறிப்புகள் கொடுத்தார். கொஞ்சம் வரைந்தும் காட்டினார். என்னோடு வந்த செந்தில் பசுமைநடைக்குழுவோடு ஒன்றிவிட்டான். மதியம் தக்காளிசாதம் சாப்பிட்டு கிளம்பினோம் மறக்க முடியாத நினைவலைகளோடு.

வெள்ளப்பாறைப்பட்டி

படங்கள் உதவி – அருண் போட்டோகிராஃபி, ஓவியன் போட்டோகிராஃபி, ஷாஜி போட்டோகிராஃபி

Advertisements
பின்னூட்டங்கள்
  1. B.Udayakumar சொல்கிறார்:

    Iravai Uranga cheithuvittu – Kavithai Vari…

    Katturaiyil ennai “Nallathoru” Varnanaiyaalar ena Varniththirupatharku nandrigal pala…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s