இயற்கை வளங்கொழிக்கும் சிவரக்கோட்டை

Posted: பிப்ரவரி 8, 2015 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

குன்று

எழுதிப் படிக்க அறியாதவன்தான்

உழுது ஒழச்சு சோறு போடுறான்…

எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி

நல்லா நாட்டைக் கூறு போடுகிறான் – இவன் 

சோறு போடுறான் – அவன்

கூறு போடுறான்.

 – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

அதிசயம், ஆச்சர்யம். ஆனால், முற்றிலும் உண்மை. விசயம் என்ன என்கிறீர்களா? அரசு தரிசு நிலமெனச் சொல்லும் நிலத்தில் துவரை, பருத்தி, வரகு, சோளம், குதிரைவாலி போன்ற உணவுதானியங்களும் நித்ய கல்யாணி, அவுரி போன்ற மருந்துச்செடிகளும் வளர்வதைக் கண்டபோது ஆச்சர்யமாகத்தானே இருக்கும்? எங்கே இந்த இடம் உள்ளதென கேட்கிறீர்களா?

மதுரை திருமங்கலத்திற்கு அருகில் உள்ள சிவரக்கோட்டை எனும் கிராமம்தான் அந்த அதிசயபூமி. புதிய கற்காலக்கருவிகள் கிடைத்த ஊர், பாண்டிய மன்னன் கோட்டை கட்டி தங்கிய ஊர், கமண்டல ஆறு – குண்டாறு பாயும் ஊர், இயற்கை விவசாயம் செழித்த ஊர் எனப் பல பெருமைகளைக் கொண்ட சிவரக்கோட்டை இன்று சிப்காட் தொழிற்பேட்டைக்காக அழியும் விளிம்பில் மூச்சுத்திணறி நிற்கிறது.

விடைபெறுதல்

பசுமைநடையாக இம்மாதம் பிப்ரவரி முதல் தேதியன்று சிவரக்கோட்டை சென்றிருந்தோம். நான்குவழிச்சாலையிலிருந்து வயக்காடுகளை நோக்கி அழைத்துச் செல்ல டிராக்டர் ஏற்பாடு செய்து தந்தனர் அந்த ஊர் மக்கள். வாழ்க்கையில் நிறைய மேடு பள்ளங்களைக் கடந்துதான் வாழ வேண்டுமென்ற பாடத்தை டிராக்டரில் ஏறிச் சென்ற போது கற்றேன். கொஞ்சம் வீடுகளைத் தாண்டி வண்டி வயக்காடுகளுக்குள் நுழைந்ததும் நித்ய கல்யாணி பூக்கள் நம்மை வரவேற்றன. கண்ணுக்கு குளிர்ச்சியாக நித்ய கல்யாணியின் வண்ணம் ஈர்த்தது.

துவரங்காடு

துவரைக்காடுகளுக்கு முன் டிராக்டரில் இருந்து இறங்கி மெல்ல நடந்தோம். முதன்முதலாக துவரை மற்றும் பருத்திக் காடுகளுக்குள் நடக்கும் வாய்ப்பு கிட்டியது. எனக்கு மிகவும் பிடித்த சாம்பார் செய்ய பயன்படும் இந்த துவரைக் காடுகளை அழித்து அந்த சிப்காட் வந்து என்ன புடுங்கப் போகிறது என்ற கோபம் முளைத்தது? சோளத்தட்டைகளை எடுத்து விளையாடிக்கொண்டே நடந்தோம். பசுமைக்காடுகளுக்குள்ளான அந்தப் பயணம் அருமையாகயிருந்தது.

ஊரணி

தொலைவில் சிறுகற்குன்று தெரிந்தது. வழியில் இருந்த ஊரணியில் நிறைய பறவைகள் உலாவின. தூக்கணாங்குருவிக்கூடு நிறையப் பார்த்தோம். ஊரணி தாண்டி சிறுகுன்றின் மீது சென்றாயப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கோயில் சுவற்றின் நிழலடியில் அமர்ந்தோம். இந்தப் பசுமைநடைப் பயணத்தில் நாணல் நண்பர்கள் மற்றும் இறகுகள் அமைப்பைச் சேர்ந்த நண்பர்களும் கலந்து கொண்டனர்.

முத்துக்கிருஷ்ணன்

பசுமைநடை அமைப்பாளர் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று  அந்த இடத்தைக் குறித்துப் பேசினார். சிவரக்கோட்டையில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள், மண்பாண்டங்கள் தொல்லியல் அகழாய்வில் கிடைத்துள்ளன. அவையெல்லாம் தஞ்சாவூர் மற்றும் மதுரை அருங்காட்சியகங்களில் உள்ளன. பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் கிட்டியுள்ளது இதன் தொன்மையை நமக்குச் சொல்கிறது. இந்த ஊரைச்சுற்றியுள்ள பகுதிகளில் நாயக்கர்கால பட்டயங்கள் செப்பேடுகள் கிடைக்கப்பெற்று தனியே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பாண்டிய மன்னன் தங்கியிருந்த மண்ணால் கட்டப்பட்ட கோட்டையொன்று இந்த ஊரிலிருந்தை அகழாய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். சுவரால் அமைந்த கோட்டை என்ற பெயர் மருவி சிவரக்கோட்டையானது. சிவரக்கோட்டை என்றால் தெலுங்கில் கடைசிக் கோட்டை என்றும் சொல்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வரும் கமண்டல ஆறு, குண்டாறு எல்லாம் இந்த பூமியை வளமாக்கின.  கோட்டை இருந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள கிணற்றில் கல்வெட்டுகள் காணப்படுகிறது என்கிறார்கள். அந்த கல்வெட்டுகள் இன்னும் வாசிக்கப் படவில்லை. இந்த ஊர் குறித்து ஆய்வு செய்து எம்.பிஃல் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் இருவர் பெற்றுள்ளனர்.

ஆனந்தவிகடன்

ஆனந்தவிகடன் இந்தாண்டு நம்பிக்கை நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த டாப்10 நாயகர்களில் ஒருவரான சிவரக்கோட்டை ராமலிங்கம் அய்யாவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள ஏராளமான விசயங்கள் உள்ளது. பள்ளிப் படிப்பை பூர்த்தி செய்யாத அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நிறைய தகவல்களைப் பெற்று அரசு சொல்லும் பொய்யான வாதங்களை அரசு ஆதாரங்களைக் கொண்டே முறியடித்து வருகிறார். எல்லாம் முன்ன மாதிரி இல்ல என அங்கலாய்க்கும் நகர்ப்புறவாசிகள் இருப்பதை காக்க போராடும் சிவரக்கோட்டை ராமலிங்கம் அய்யா போன்றவர்களைப் போல போராட கற்க வேண்டும்.

சிவரக்கோட்டை ராமலிங்கம்

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் உரையைத் தொடர்ந்து சிவரக்கோட்டை ராமலிங்கம் அய்யா எங்களோடு சிவரக்கோட்டை குறித்தும் தனது போராட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். பாண்டிய மன்னன் தோல்நோயினால் அவதிப்பட்டு வந்தபோது இரண்டு ஆறுகள் சேருமிடத்தில் ஒரு மண்டலம் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வந்தால் குணமாகுமென்று கேள்விப்பட்டு இங்கே வந்து கோட்டை கட்டி இருந்திருக்கிறார். பாண்டியனின் படைகள் தங்கிய இடம்தான் செங்கப்படை. வடக்குப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலைக் கட்டி அதற்கு மானியமாக நிலங்களை எழுதி வைத்திருக்கிறார். சிவரக்கோட்டை, செங்கப்படை, கரிசல்காளம் பட்டி, சுவாமிமல்லம்பட்டி பகுதியிலிருந்து 2500 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முன்னாள் அரசு திட்டமிட்டது. சிங்கம் தன்னை எதிர்க்கும் நாலு மாடுகளைப் பிரிக்கும் கதைப்போல செங்கப்படையை மட்டும் விட்டுவிட்டார்கள். இப்போது மற்ற மூன்று ஊர்களிலுள்ள 1500 ஏக்கர் நிலம் சிப்காட்டிற்கு எடுக்கப் போகிறார்களாம். பல்லாண்டுகளாக விவசாயம் நடந்த பூமி, அரசே பலருக்கு விவசாயம் செய்ய மானியம் வழங்கிய பூமியை இன்று தரிசு என்கிறார்கள்.

சிப்காட்டிற்கு 40 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். அதை வைகையில் இருந்து எடுக்கப் போகிறார்களாம். வைகையே வறண்டு கிடக்கும் போது என்ன செய்யப் போகிறார்கள். இங்குள்ள நன்னீர் ஆதாரங்களைத்தான் நாசமாக்கப் போகிறார்கள். கமண்டல ஆறு பாய்ந்த போது கடலாடி வரைப் போகும். இங்குள்ள பத்து ஊரணிகளை நீரைத்தான் உறிஞ்சப் பார்க்கிறார்கள்.

பயணம்

துவரை, வரகு, சோளம், கேப்பை, குதிரைவாலி, பாசிப்பயறு என பல்வகையான தானியங்களும், அதைத் தவிர பல்லுயிரினங்களான மான், மயில், காட்டுப்பன்றி, பலவகையான பூனைகள் மற்றும் ஏராளமான பறவைகளும் இங்கு மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகிறது. அவை தின்றது போக உள்ளதைத்தான் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். நச்சு உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை வேளாண்மை செய்து வருகிறோம். இங்குள்ள மண்ணை ஆய்வு செய்த போது 80% மணிச்சத்து, 60% சாம்பல் சத்து உள்ள மண்ணை மலடென்று சொல்கிறார்கள். தஞ்சை விவசாயிகளே தண்ணீர் இல்லாமல் தத்தளித்த போது மழையால் பயிர் செய்து நிறைவாக வாழ்ந்து வருகிறோம். இந்த போராட்டத்திற்கு நம்மாழ்வார் அய்யா வந்திருக்கிறார். மேதாபட்கர் வந்திருக்கிறார். அவர் மூலமாகத்தான் ஹைக்கோர்ட்டில் முறையீடு செய்தோம். பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் எங்களுடன் போராட வந்தார்கள். ஊடகங்கள் எங்களுக்கு ஆதரவாக பேருதவி செய்து வருகின்றன. பல்லுயிர்கள் வாழும், இயற்கை வளங்கொழிக்கும் எங்கள் ஊரை பழமையோடு காக்க வேண்டுமென்பதே தன் லட்சியமென சொன்னார் ராமலிங்கம் அய்யா.

ரவீந்திரன்

பறவைகளை கண்டறிந்து அவற்றை ஆவணப்படுத்தி வரும் இறகுகள் அமைப்பைச் சேர்ந்த இரவீந்திரன் அவர்கள் எங்களோடு உரையாடியதிலிருந்து: இந்த பூமி மனிதர்களுக்கானது மட்டுமில்லை. பல்லுயிரியத்திற்குமானது. 1970களில் இப்பகுதியில் பயணிக்கும் போது தூங்கிக்கொண்டிருந்தாலும் சிவரக்கோட்டை வரும்போது முழித்துவிடுவோம். ஏனென்றால் இப்பகுதியில் ஏராளமான மயில்களை அப்போது சாலைகளில் காண முடியும். அந்த தொடர்புதானோ என்னவோ இப்போது இந்த பணியில் என்னை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. நாணல் நண்பர்கள் மற்றும் இறகுகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து மதுரை இயற்கை சந்திப்பு தொடங்கியிருக்கிறோம். மதுரையிலுள்ள கண்மாய்களைக் காப்பதும், பறவைகளைக் கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறோம். இந்த ஊரில் அதிகமான பறவைகள் காணப்படுகின்றன. ஆறாவது முறையாக இங்கு வருகிறோம். ஒவ்வொருமுறை வரும்போதும் ஐம்பதிலிருந்து அறுபது வகையான பறவையினங்களைக் காணமுடியும். இன்று மட்டும் 47 பறவை இனங்களைப் பார்த்துப் பதிவு செய்திருக்கிறோம். இயற்கை சூழல் வாய்ந்த இந்த இடத்தை கான்கீரிட் சமாதியாக நாம் விடக்கூடாது. பிற்கால சந்ததிக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகளை அன்று காலஇயந்திரத்தில் ஏறி நம்மால் சரி செய்ய முடியாது. பறவைகள் அழியும் போது பூச்சிகள் பெருகி விவசாயம் தடைபடும். இது போன்ற ஏராளமான பிரச்சனைகள் உள்ளது. இந்த ஊரில் நன்னீர் சூழல் நன்றாக உள்ளது. அதை சிப்காட் போன்ற தொழிற்பேட்டைகள் உறிஞ்சி பின் கழிவு நீரை குண்டாற்றில் சாக்கடையாக கலந்து விடுவார்கள். அதுபோன்ற மோசமான சூழலுக்கு இது போன்ற இடங்கள் உள்ளாகாமலிருக்க நாம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்றார்.

பசுமைநடை

பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அதற்கடுத்து பேசியபோது இங்குள்ள பறவைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக இப்பகுதியிலேயே வசித்து வருபவை. வலசையாக வெளிநாட்டிலிருந்து வருபவை அல்ல. இதைப்பற்றி திருமங்கலத்தில் வாழும் சூழலியலாளர் இயற்கை விவசாயி பாமயன் அவர்கள் நிறைய பேசியும் எழுதியும் வருகிறார். அவர் சங்க இலக்கியத்தில் இப்போது காணப்படும் பறவைகளின் பெயர்கள் குறித்து உள்ளதை குறிப்பிடுகிறார். சிட்டுக்குருவியினங்களை அழிய  செல்போன் டவர்கள், மாறிவரும் வீடுஅமைப்பு என நாமும் ஒரு காரணமாகிவருகிறோம்.

எனக்கு வலசை சிற்றிதழ் கூட்டம் கீழக்குயில்குடி ஆலமரத்தடியில் நடந்தபோது எழுத்தாளர் முருகேசபாண்டியன் சொன்ன விசயம் ஞாபகத்திற்கு வந்தது. எங்கிருந்தோ பறவைகள் இங்கு வந்து கூடு கட்டி முட்டையிட்டு செல்கிறதென்றால் அதுதானே அதன் சொந்த ஊர். அதை எப்படி வெளிநாட்டுப் பறவையென்று சொல்ல முடியுமென்று. யோசிக்க வேண்டிய விசயம்தானே.

சென்றாயப்பெருமாள்கோயில்

அங்கிருந்த சென்றாயப் பெருமாள் கோயிலைப் போய் பார்த்தோம். பழமையான கோயிலாக உள்ளது. அங்கிருந்த ஊரணிகளில் உள்ள அல்லி பூக்களைப் பார்க்கப் பார்க்க பரவசமாகயிருந்தது. எல்லோருக்கும் இட்லி வழங்கப்பட்டது. நாங்கள் டிராக்டரில் அமர்ந்தே உண்டோம். அருமையாகயிருந்தது. அங்கிருந்து டிராக்டரில் ஊருக்குள் சென்றோம். வழியில் சுண்டலை தொண்ணையில் வைத்து வழங்கினார்கள். சிவரக்கோட்டை மக்களும், ராமலிங்கம் அய்யாவும் விருந்தோம்பலில் எங்களைத் திளைக்க வைத்துவிட்டார்கள். வழிநெடுக வயல்களில் துவரையும், பருத்தியும், நித்யகல்யாணியும் எங்களைப் பார்த்து தலையசைத்து விடைகொடுத்தன. அவற்றின் எதிர்காலம் என்ன என்ற கேள்விக்குறியோடு அங்கிருந்து கிளம்பினோம்.

சிவரக்கோட்டை

ஒவ்வொரு நடையையும் தன் நிழற்படக்கருவியால் அழகாய் அள்ளியெடுக்கும் அருணை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அருண் எடுத்த பசுமைநடைப் படங்களை பார்க்கும் போது அந்த இடங்களின் அழகு இன்னும் அதிகமாகிறது. இந்தப் படங்கள் பின்னாளில் உங்களை அங்கு அழைத்துச் செல்லும் என நம்புகிறேன். நன்றி அருண்.

உலகின் தலையாய தொழிலாக திருவள்ளுவர் சொல்லும் விவசாயத்தை விடவா தொழிற்பேட்டை அவசியம்? மக்கள் உயிருக்கு உலை வைக்கும் அணுஉலைகள் தேவையா? கேப்பையில் நெய் எடுக்கும் கதையாக விவசாய நிலங்களை அழித்து எடுக்கும் மீத்தேன் யார் வயிற்றை நிரப்பும்? கடவுளின் துகளை கண்டறிவது அல்ல அறிவியல். உலகே கடவுளாக நிறைந்திருக்கிறது என உணர்வதே அறிவியல். அறமற்ற அறிவியல் ஆபத்தானது.

Advertisements
பின்னூட்டங்கள்
 1. ranjani135 சொல்கிறார்:

  உங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது. நேரம் இருக்கும்போது வந்து பார்க்கவும்.
  http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_11.html

 2. maathevi சொல்கிறார்:

  இயற்கையுடன் ஒன்றிஇருக்கும் இடங்களை அழிப்பது வருத்தமானது.

 3. v.subramanian சொல்கிறார்:

  paditthen.rasitthen.eyarkai valangal evvalavu intha paguthiyilivvalavu .
  erukkum endru ethir parkkavillai.
  .ezhuthum nadaiyum nilarpad angalum arumai.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s