கோரிப்பாளையம் தர்ஹாவில் சந்தனக்கூடு

Posted: பிப்ரவரி 26, 2015 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

CIMG1234

CIMG1868விழாக்களின் போது வீதிகளுக்கு அழகு கூடி விடுகிறது. விதவிதமான கடைகள், வண்ணமயமான பதாகைகள், அழகழகான தோரணங்கள், கூட்டங்கூட்டமாக மக்கள் என எல்லா விழாக்களும் பெரும்பாலும் ஒன்று போலவே இருக்கின்றன. கோரிப்பாளையம் தர்ஹாவில் சந்தனக்கூடு விழாவன்று மாலை சுற்றித்திரிந்த நினைவலைகளைப் பதிவு செய்கிறேன்.

பள்ளிவாசல் தெருவில் நுழைந்ததுமே விழாவின் நறுமணம் வீசியது. தள்ளுவண்டியில் சூடாகப்போட்டுக்கொண்டிருந்த வடைகளைப் பார்த்ததும் நாவூறியது. ஒரு மிளகாய் பஜ்ஜியும், கீரைவடையும் வாங்கித்தின்றேன். கொஞ்சம் தெம்பாகயிருந்தது. தர்ஹாவை நோக்கி நடந்தேன். சந்தனக்கூடு விழாவிற்கு சுவரொட்டிகளும், பதாகைகளும் வரவேற்றன.

விளையாட்டுச்சாமான் விற்பவர்கள், இஸ்லாமியப்பாடல்கள் – மார்க்க விளக்கங்கள் அடங்கிய குறுந்தகடு விற்பவர்கள், அரேபிய உருது எழுத்துகளில் குரான் வசனங்களை கொண்ட ஸ்டிக்கர்கள், மெக்கா மெதினா படங்களை விற்பவர்கள், பர்தா விற்பவர்கள், மதுரைப் புகழ் ஜிகர்தண்டா விற்பவர்கள், அதிரசம் சூடாகப்போட்டு விற்பவர்கள், மந்திரிக்க போகிறவர்கள் வாங்கிச்செல்லும் ஊதுபத்தி சர்க்கரை போன்ற பொருட்களை விற்பவர்கள் என அனைவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சென்றேன்.

யானை

தர்ஹாவின் வாசலில் நின்றுகொண்டிருந்த யானையின் நெற்றியில் பிறைச்சந்திரன் மிக அழகாக வரையப்பட்டிருந்தது. அதன்பின்னால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு அடியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். தர்ஹா வாசலில் செண்டைமேளம் இசைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த இசையும், ஆட்டமும் உள்ளுக்குள் ஒத்திசைவான அதிர்வை ஏற்படுத்தியது. சந்தனக்கூடு இரவு பதினொரு மணிக்கு ஊர்வலமாக வருமென பதாகைகளில் போட்டிருந்தது. நடனமாடும் குதிரை வாசலருகே குதித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அழகான வெண்புரவி.

CIMG1236

ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் சுல்தான் சம்சுதீன் அவுலியாக்களின் உரூஸ் என பதாகைகளில் போட்டிருந்தது. கோரிப்பாளையம் தர்ஹாவில் அடக்கமானவர்களின் நினைவாக சந்தனக்கூடு விழா நடக்கிறது என அறிந்தேன். (உரூஸ் என்றால் சந்தனக்கூடு) மேலும் போட்டாபோட்டி கவ்வாலி போன்ற கலைநிகழ்ச்சிகள் எல்லாம் தினசரி இரவுகளில் நடைபெறுகிறது.

தர்ஹாவினுள் நுழைந்தேன். பலவருடங்களுக்குப் பிறகு கோரிப்பாளையம் தர்ஹாவிற்குள் வருகிறேன். தர்ஹாவில் ஏராளமான பேர் தங்கியிருந்தார்கள். குரான் மற்றும் இஸ்லாம் தொடர்பான புத்தகங்கள் விற்கும் கடை வாசலுக்கருகில் உள்ளது. மந்திரிப்பவர்கள், மந்திரிக்க வந்தவர்கள் என தர்ஹாவிற்குள் ஒரே கூட்டம். உள்ளே ஒரு சுற்று சுற்றி வந்தேன். அங்கு அடக்கமான இறையடியார்களை வணங்கினேன். ஏராளமான பேர் பிணி தீர்ப்பதற்காக வந்து காத்திருக்கிறார்கள். சுண்டல் வாங்கி தின்றுகொண்டே தர்ஹாவின் கட்டடக் கலையை ரசித்துப்பார்த்துக் கொண்டிருந்தேன். மனோகர் தேவதாஸ் வரைந்த சித்திரம் மனதில் நிழலாடியது.

தர்ஹாவிலிருந்து வெளியே வரும்போது சற்று இருட்டியிருந்தது. சாம்பிராணி போட்டு வர ஒரு வாகனம் தயாராக நின்று கொண்டிருந்தது. டேப் இசைப்பவர்கள் எல்லாம் தர்ஹா வாசலில் நின்று இசைத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் மந்திரிப்பதற்காக கிராமங்களுக்கு வரும்போது பார்த்திருக்கிறேன்.

CIMG6575

கோரிப்பாளையம் சந்தனக்கூடு குறித்து அறிந்து கொள்வதற்காக எழுத்தாளர் அர்ஷியா அவர்களை சந்தித்தேன். தர்ஹா, பள்ளிவாசல், சந்தனக்கூடு, வழிபாடு, நம்பிக்கை குறித்தெல்லாம் பேசினார். நாங்கள் நின்று பேசிக்கொண்டிருந்த நரிமேடு சோனையார் கோயில் தெரு பகுதி கூட முன்பு சுல்தான் நகர் என்று அழைக்கப்பட்டது என்றார்.

பள்ளிவாசலுக்கும், தர்ஹாவுக்கும் சற்றே வித்தியாசம் உள்ளது. பள்ளிவாசல் என்பது பிராத்தனை செய்யும் கூடம். தர்ஹாயென்பது மதத்திற்காக, சமயத்திற்காக சேவை செய்தவர்கள், மரணித்தவர்களின் நினைவிடமாகும். மரணமடைந்தவர்களின் நினைவாக எல்லா தர்ஹாக்களிலும் ஒருநாளைத் தேர்ந்தெடுத்து சந்தனக்கூடு விழா நடத்துகிறார்கள். கோரிப்பாளையம் தர்ஹா பாண்டியர்காலத்தைச் சேர்ந்தது. அந்தக்காலத்திலேயே நிறைய விலை கொடுத்து இந்த இடத்தை வாங்கியிருக்கிறார்கள். நாயக்கர்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று தர்ஹாவில் உள்ளது. நோய் தீரும் வரை தர்ஹாவில் வந்து தங்கியிருப்பவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். தெற்குவாசல் சின்னக்கடைத்தெரு முகைதீன் ஆண்டவர் தர்ஹாவில் நடைபெற்ற சந்தனக்கூடை மையமாக வைத்து அம்பாரி என்னும் சிறுகதை எழுதியிருப்பதாக எழுத்தாளர் அர்ஷியா சொன்னார். மேலும், அவர் கோரிப்பாளையம் குறித்து நாவல் ஒன்றை எழுதி வருகிறார். சந்தனக்கூடு விழாவிற்கு இந்துக்களும் திரளாக வருகிறார்கள். மதங்கடந்து மனிதம் போற்றும் இதுபோன்ற விழாக்களைப் போற்றுவோம்.

Advertisements
பின்னூட்டங்கள்
  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு. நன்றி சித்திரவீதிக்காரன். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s