கரிசல்காட்டு காற்றலைகளில் நாயன சஞ்சாரம்

Posted: மார்ச் 5, 2015 in பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

sanjaram1

வேறு எந்த வாத்தியத்தைவிடவும் கிராமத்து மக்களுக்கு நாதஸ்வரம் கேட்பதே பிடித்தமானதாக இருக்கிறது. அந்த இசையை, தங்களின் மண்ணின் இசையாகவே விவசாயிகள் நம்பினார்கள். கரிசலின் தொல்நினைவுகளை எல்லாம் நாதஸ்வரம் மீட்டுத் தருவதாகவே கருதினார்கள்.

எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் வாசிக்கையில் பழகிய மனிதர்களோடு நமக்குப் பிடித்த ஊரில் அலைவதைப் போலிருந்தது. சஞ்சாரம் நாவலைக் குறித்து பதிவெழுதத் திண்ணையில் அமர்ந்தபோது காற்றலைகளில் ‘அங்க இடி முழங்குது.. கருப்பசாமி தங்க கலசமின்னுது’ பாடல் வரிகளைத் தொடர்ந்து வரும் நையாண்டி இசை காதில் ஒலித்தது நல்ல நிமித்தமாகயிருந்தது.

சஞ்சாரம் (5)மனித மனத்தில் நற்குணங்களைப் போன்றே வன்மம், ஆணவம் போன்ற உணர்ச்சிகளும் புதைந்திருக்கிறது. நேரங்கிட்டும் போது வெளிப்பட்டு நம்மைப் படுத்தியெடுத்துவிடுகிறது. நையாண்டி மேளம் இசைக்கும் போது ‘அத அடி இத அடி’ என ஆணவமாக வந்து சொல்லி அதட்டுபவர்கள் கொஞ்ச நேரத்தில் இசைக்கேற்ப ஆடியாடி இசைக்கு பொட்டிப் பாம்பாகிவிடுகிறார்கள். ‘நான்’ என்ற எண்ணம் அற்றுப் போகும்போது காற்றில் சருகு போலாகிவிடுகிறது மனம். இசை இதுபோன்ற எல்லா மாயங்களையும் செய்யும். வேடிக்கை பார்ப்பவர்கள் கூட ஆட வேண்டுமென்ற உணர்வைத் தருவது நையாண்டிமேள இசை.

சஞ்சாரம் நாவல் வெளியீட்டு விழாவிற்கு சென்றுவந்ததைக் குறித்தும், அந்நாவல் வாசிப்பனுபவம் பற்றியும் அண்ணனிடம் அலைபேசியில் உரையாடும் போது 280வது பக்கத்திலுள்ள ஒரு வரியைக் குறிப்பிட்டுச் சொன்னார். அதை ஏன் கேக்குறே, பாப்பாகுடியில் வாசிக்கப் போயிருந்தோம், வேற ஒரு கீர்த்தனையும் வாசிக்க விடலை, ஆளுக்கு ஒரு சினிமா பாட்டு கேட்கிறான், ஒரே சண்டை உடனே எனக்கும் சஞ்சாரம் வாசிக்கணும் போலிருந்தது. ஏன்னா எங்க ஊரு பேரும் பாப்பாகுடிதான். அது மாதிரி சினிமா பாட்டா கேட்டு ‘அத அடி, இத அடி’ன்னு உயிர எடுப்பாங்ங.

நாதஸ்வரம் வாசிக்கும் இசைக்கலைஞர்களின் வாழ்க்கைப் பாடுகளினூடாக கரிசல்காட்டு ஊர்கள், நாதஸ்வர சக்ரவர்த்திகள், மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சமூகத்தில் புறையோடிப்போயிருக்கும் சாதியப் பாகுபாடுகள் எனப் பல விசயங்களை சஞ்சாரம் நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். எஸ்.ரா பிறந்த வளர்ந்த ஊர்ப்பக்கத்துக் கதையென்பதால் நம்மையும் கரிசல்காடுகளுக்குள் அழைத்துச் செல்கிறார்.

சஞ்சாரம் (2)முதல்அடி ரத்தினத்தின் பிடறியில் விழுந்தது

சூலக்கருப்பசாமி வேட்டைக்கு போவதற்கு யார் வில் எடுத்துக் கொடுப்பது என்ற அதிகாரங்களுக்கிடையேயான போட்டியில் சம்மந்தமில்லாமல் நாயனகாரர் ரத்தினத்தின்மீது அடி விழுவதோடு நாவல் தொடங்குகிறது. இதைப் பார்த்த இளம்நாயனகாரனான பக்கிரிக்கு கோவம் வருகிறது. பக்கிரி எதிர்க்க இருவரையும் கட்டி வைத்து அடிக்கிறார்கள். இரவில் பூசாரி அவிழ்த்துவிட தப்பித்துச் செல்லும் போது பந்தலில் தீ வைத்துவிட்டு கொடுமுடியிலுள்ள அக்கா வீட்டுக்கு பக்கிரியும், ரத்தினமும் செல்கிறார்கள். இறுதியில் காவலர்கள் வந்து பக்கிரி கைதாவதோடு கதை நிறைவுறுகிறது.

நாவலினூடாக வரும் மக்களிடம் செவிவழியாய் புழங்கும் கதைகள் நம்மை கட்டிப் போட்டுவிடுகின்றன. கரிசல்காட்டு பக்கம் பிடிபட்ட திருடனுக்கு ஏழுநாள் ஏழுவீட்டுச் சாப்பாடு தண்டனையாக தர அவன் நாலு நாளிலே மனம் மாறி விடுகிறான். பசியோடு இருக்கும் குடும்பத்தை நினைக்கிறான். ஊரில் உள்ள பாட்டி சொல்லும் வரி மனதை நெகிழ்த்தி விடுகிறது. மனுசனுக்குக் கொடுக்கிற தண்டனையிலே எது பெரிசு தெரியுமா, பிடிக்காதவங்க கொடுக்கிற சோற்றைத் திங்குறதுதான். பிறகு அந்த திருடனுக்கு கொஞ்சம் உணவுப் பொருட்களையும் கொடுத்தனுப்புகிறார்கள்.

கரிசல்கிராமங்களில் வரும் ஊரோடிப்பறவைகள் மக்களிடம் மண்ணு வேணுமா? பொன்னு வேணுமா? எனக்கேட்க மண்ணைக் கேட்டபோது மழை பெய்ய வைத்து ஊரைச் செழிப்பாக்குகின்றன. அடுத்து வரும் ஊரோடிப் பறவைகளிடம் மக்கள் நிறைவில் பொன் வேண்டுமென கேட்க தரையிறங்காமல் தத்தளிக்கின்றன. மழையில்லாமல் ஊரே வறண்டு விடுகிறது. இறுதியில் வரும் ஒரு ஊரோடிப் பறவையிடம் மண் கேட்க அது ஒரு துளி நீரைத் தருகிறது. அந்நீரில் துளிர்க்கும் வேம்பு கரிசலின் மரமாகிறது. அதன்பிறகு ஊரோடிப் பறவைகள் வருவதேயில்லை. மக்களுக்கு நாதஸ்வர இசை, ஊரோடிப் பறவைகளின் றெக்கையடிப்பை நினைவூட்டுகிறது.

மாலிக்காபூர் படையெடுத்து வந்தபோது எல்லோரும் ஓடிவிட அரட்டானம் சிவன் கோயிலில் தனியே நாதஸ்வரம் வாசிக்கும் லட்சய்யாவின் கதை நம்மை வியப்பிலாழ்த்துகிறது. நாதஸ்வர இசைக்கு மயங்கும் மாலிக்காபூர் அவரை அழைத்துக் கொண்டு டெல்கி கில்ஜியிடம் கூட்டிச் செல்ல லட்சய்யாவின் இசையில் வரும் பிரிவின் துயரம் எலுமிச்சை வாசனையாய் பரவுகிறது. மாலிக்காபூர் இறக்க வடக்கே பெரும் குழப்பம் நிலவுகிறது. லட்சய்யா கொலை செய்யப்படுகிறார். அதன்பின் வடக்கே நாதஸ்வரம் செல்லமுடியவில்லை என்ற கதை நம் நாதஸ்வரத்தின் பெருமையை பறைசாற்றுகிறது. இது நடந்த கதையா, புனைவா எனத் தெரியவில்லை என எஸ்.ரா. குறிப்பிடுகிறார்.

சஞ்சாரம் (4)நாதஸ்வர இசைச்சக்கரவர்த்திகளாக வாழ்ந்த மேதைகளை நினைவூட்டுகிறார்கள் கதையினூடாக வரும் ஒதியூர் கண்ணுச்சாமி, சாமிநாதபிள்ளை, தன்னாசி போன்றவர்கள். பெரும் இசை மேதைகள் தங்களுக்கு விருப்பமான நேரங்களில் நாத மழையாய் பொழிகிறார்கள். மற்றவர்களை தங்கள் இசைக்காக காத்திருக்க வைக்கிறார்கள். ஆனால், நையாண்டி மேளக் கலைஞர்கள் தவிலையும், நாயனத்தையும் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய நிலையிலிருக்கிறார்கள். அரசியல் பிரச்சாரம், திருமணவீடுகள், கோயில் விழாக்கள் என எங்கு சென்றாலும் அவமதிப்புக்கும், அலைக்கழிப்புக்கும் உள்ளாகிறார்கள். பேசிய தொகையை கொடுப்பதில்லை, பந்தியில் எல்லோருடனும் சமமாய் உணவருந்த விடுவதில்லை, சாதியப்பாகுபாடுகள் என வலியை சுமந்து கொண்டு இசையோடு வாழ்கிறார்கள்.

சஞ்சாரம் (3)மருதூர் மடத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்து இசை கற்றுக் கொள்ளும் ஹாக்கின்ஸ் திருவிழாவில் மல்லாரி வாசிக்க விரும்புகிறார். தமிழ்ப்பெண் ஒருவரை காதல்மணம் புரிந்து மடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். இஸ்லாமியராகயிருந்தாலும் கோயிலிலிருந்து ஒலிக்கும் நாதஸ்வர இசைக்கு மயங்கி அதைக்கற்று பின்னாளில் அதேகோயிலேயே கச்சேரி செய்யுமளவு உயரும் அபு இபுராஹிம், போலியோவினால் கால்கள் தளர்ந்தாலும் மனந்தளராத இசைக்கலைஞர். மேலும், இசைக்கு மொழியோ, மதமோ என குறைவில்லையென்பதற்கு இவர்கள் வாழ்க்கை ஒரு சான்றாக அமைகிறது.

ஒருமுறை ரத்தினம் குழுவினரை ஒருவன் நாதஸ்வரம் வாசிக்க வெளிநாடு அழைத்துச் செல்கிறான். அந்த பயணத்தில் அவர்கள் படும் அலைக்கழிப்புகள் ஏராளம். லண்டனில் குளிரில் கார்ஷெட்டில் தங்க வைப்பது, இங்க வாசிச்சா நிறைய தருவாங்கன்னு பார்ட்டி நடக்கிறயிடம், ஷாப்பிங்மால்னு வாசிக்கச் சொல்லி கடைசியில் ஊருக்குப் போய் பணம் தருகிறேன்னு சொல்லி ஏமாற்றி விடுகிறான். கலைக்கு மரியாதையில்லாமல் கண்டவனெல்லாம் ஏய்க்கும் நிலையில் வாழ்க்கிறார்கள்.

தவிலையும், நாதஸ்வரத்தையும் பலமணிநேரம் சுமந்து கொண்டு காற்று, மழை, வெயிலென அலைகிறார்கள். மணிக்கணக்கில் வாசித்து வலிதீர குடிக்கிறார்கள். விழாக்கால நாட்கள் தான் வேலை, மற்ற நாட்களில் ரொம்ப சிரமப்படுகிறார்கள். எப்போதும் கடன்பட்டு கஷ்டப்படும் தவில்கலைஞர் தண்டபாணி நான்கு பெண்பிள்ளைகளை வைத்துக் கொண்டு சிரமப்படுகிறார். இப்படித்தானிருக்கிறது நிலைமை.

சஞ்சாரம் (1)நையாண்டி மேளக்காரர்கள் பாடு இப்படியென்றால் கரகாட்டம் ஆடும் பெண்களின் நிலை இன்னும் மோசம். பார்க்கிறவர்களின் வக்கிரங்களுக்கு பலியாவதுடன், கூப்பிட்டால் வரணும் என நினைப்பவர்களிடையே மானத்தோடு வாழப் போராடுகிறார்கள். இக்கதையில் வரும் ரஞ்சிதம் மற்றும் மல்லிகா என்ற கரகாட்டப்பெண்களுக்கு வாசிக்கப் போகும் ரத்தினமும் பக்கிரியும் அவர்கள் படும் பாட்டைப் பார்த்துவிட்டு காசு வாங்கிக் கொள்ளாமல் வந்துவிடுகிறார்கள்.

சிகரெட் காலி அட்டைகளை சேகரிக்க அருப்புக்கோட்டைக்கு போனது குறித்த பக்கிரியின் பால்யகால நினைவுகள் என்னையும் இளம்பிராயத்திற்கு அழைத்துச்சென்றது. அண்ணாநகரில் சில்லாக்கு விளையாடியதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது என் நெற்றியில் எதிர்பாராதவிதமாக வந்து தெறித்த சில்லாக்குக்கல் இன்று வரை சுவடாய் இருக்கிறது. அந்த வயதில் தீப்பெட்டி படம், பிலிம், குண்டு இவையெல்லாம் அதிகம் சேர்ப்பதுதான் பெரிய விசயமாகத் தோன்றியது. வயதாக வயதாக இன்று ஏதேதோ பெரியவிசயமாகி நம்மை அச்சுறுத்துகிறது.

நாதஸ்வரக்கலைஞர்களின் வாழ்க்கையை நமக்குப் படம் பிடித்துக் காட்டும் சில திரைப்படங்கள் தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன், பருத்திவீரன். அதில் தில்லானா மோகனாம்பாள் சிவாஜிகணேசன் குழுவினர் நாவலில் வரும் இசைச்சக்கரவர்த்திகளைப் போன்றவர். மற்ற இரண்டு படங்களில் வரும் இசைக்கலைஞர்கள் நாவலில் வரும் ரத்தினம், பக்கிரி குழுவை நினைவுபடுத்துகிறார்கள். ஊரோரம் புளியமரம் மற்றும் பொங்கல் வைக்கும் காட்சிகளில் நையாண்டி மேளத்தை மிக அருமையாகப் பதிவு செய்திருக்கிறார் அமீர். உன்னை நினைத்து படத்தில் வரும் சுந்தர்ராஜன் கதாபாத்திரமாகத்தான் ரத்தினம் வாசிக்கும்போது மனதில் தோன்றினார்.

Sanjaramநாவலை வாசித்ததும் மல்லாரியும், மோகனமும் கேட்க வேண்டுமென்ற ஆவல் வந்தது. பழனி பாதயாத்திரை செல்லும் போது மலையைச் சுற்றி வரும் போதுள்ள இசைப்பள்ளிகளில் தவில் கற்ற வேண்டுமென்று விரும்பியிருக்கிறேன். தொலைநிலைக்கல்வி வழி என்னோடு தமிழ் இளங்கலை படித்த நண்பனொருவன் மதுரை இசைக்கல்லூரியில் நாதஸ்வரம் படித்துக் கொண்டிருந்தான். வகுப்பிற்கு செல்லும் நாட்களில் கோயில் மற்றும் விழாக்களில் வாசிக்கச் சென்ற அனுபவத்தைச் சொல்லுவான். மேலும், அவன் எஸ்.ராமகிருஷ்ணன் பிறந்த மல்லாங்கிணற்றைச் சேர்ந்தவன். இப்போது அவனுடைய அலைபேசி எண்  இருந்தால் சஞ்சாரம் பற்றியும் நாதஸ்வர ராகங்கள் பற்றியும் அவனோடு பேசணும் போலிருக்கிறது. சமீபத்தில் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் கொஞ்சம் பார்த்தேன். இப்படி நாவல் வாசித்திலிருந்து மனம் தொடர்ந்து சஞ்சாரம் செய்து கொண்டேயிருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் மற்ற நாவல்களைப் போல சஞ்சாரமும் மனதிற்கு மிக நெருக்கமான நாவலாகிவிட்டது.

சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை வெளியீடு – விலை 370 ரூ

Advertisements
பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  கொட்டும், பீப்பியுமாய் கொண்டாட்டம் துள்ளும் நையாண்டி இசை நமது நாடி நரம்பு என்பு குருதியில் எங்குமிருப்பது. ‘கறங்…கறங்’ என்று உருமியும் இணையும்போது இன்னும் கிறங்கடிக்கும். ஒருமுறை எங்கள் ஊர் திருவிழாவில் சுபகாரியத்துக்கு உருமி வாசிப்பதா என்று சலம்பல் பண்ணி வந்தவரை வாசிக்கவே விடாமல் செய்துவிட்டார் ‘ஒருநாள் சண்டியர்’ ஒருவர்.

  தமிழிசை என்றாலே தஞ்சாவூர் என்பதான முன்முடிவுகளைப் புரட்டிப்போடுவது இந்நூல் என்பது முதலிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது.

  அவமானத்தையே சன்மானமாக அளித்து அலைக்கழிக்கும் அதே சமூகம் கலைஞர்களின் கிருத்துருவங்களையும் அவர்களின் உன்னத இசைக்காக சகித்துக்கொள்கிறது.

  நாவலில் ஊர்கள் அவ்வவற்றின் தனித்தன்மைகளோடு, நிலவியல், பருவ மாறுபாடுகளுடனும், காலமாற்றங்களுடனும் சிறப்பிடம் பெறுகின்றன. கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, கல்லூரணி, கொக்காடி, குருவாடி, சாயல்குடி வழியாக மூக்கையூர் வரை சென்று வந்திருந்ததால் நாவல் அந்த நினைவை மீட்டெடுப்பதில் புலன்களில் ஒரு அசைபோடுதல் நிகழ்கிறது. நான்கு வழிச்சாலை இன்னும் வராத ஊர்கள் பேறுபெற்றவை. ஏனெனில் சொந்த அடையாளம் அவர்களுடையதே.

  புனைவா, நடப்பா என்ற மயக்கம் தரும் யதார்த்த நிகழ்வுகள், அற்புதங்களும், வினோதங்களும் நிரம்பிய மாயப்புதிர்கள் என்று நூலில் எல்லாம் உண்டு.

  சஞ்சாரத்தைப் படித்துக்கொண்டிருந்த அதே சமயத்தில் கே.ஏ.குணசேகரனின் குறவன் குறத்தியாட்டம் என்ற பழைய ஆய்வு நூலொன்றையும் வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த நூலின் ஆய்வுக்குறிப்புகளை இந்த நாவலின் தொடர்ச்சியாகவும், விரிவாகவும் காட்சிப்படுத்திக்கொள்ள முடிந்தது.

  போன வாரத்தில், வாசிப்பவர்களை வீட்டில் உள்ளவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதுபற்றி இணையதளத்தில் ஒரு சிறுகதையும், வீடில்லாப் புத்தகங்கள் தொடரில் ஒரு கட்டுரையும் எஸ்ரா எழுதியிருந்தார். அப்படி நூல்விரும்பா நல்லுள்ளங்களிடம் எஸ்ராவின் நிமித்தம், சஞ்சாரம் போன்ற நாவல்களை வாசிக்கத் தருவது நல்ல பலனளிக்கும். கதை அவர்களை இழுத்துக்கொண்டு விடும். அடுத்தடுத்துப் படிக்கிறார்களோ இல்லையோ குறைந்தபட்சம் இலக்கியத்தைத் தங்களுக்கு நெருக்கமானதாகவும், மரியாதையோடும் பார்ப்பார்கள்.

 2. underscoreprem சொல்கிறார்:

  நாவலை உடனே படிக்கத் தூண்டும் பதிவு… உங்கள் ஓவியங்களும் அருமையாக உள்ளது. பகிர்விற்கு நன்றி!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s