சித்திரை வீதிகளில் பசுமைநடை

Posted: ஏப்ரல் 12, 2015 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள்

11096641_1240912545919817_5526773557664965535_n

இம்முறை பசுமைநடையாக கிழக்குகோபுரத்திற்கு எதிரேயுள்ள புதுமண்டபத்திற்கு என்னை உயிர்ப்பிக்கும் சித்திரை வீதிகளின் வழியே சென்றோம். அந்த இடத்தின் கலைச்செல்வங்களைக் கண்டும், அதன் வரலாற்றை அறிந்து கொண்டதோடு, பாதியோடு நின்று போன இராயகோபுரத்தின் மீதேறிப் பார்க்கவும் வாய்த்தது.

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா மீனாட்சியம்மன் கோயில் குறித்து சொன்ன தகவல்களை சித்திரை வீதிகளைச் சுற்றிக் கொண்டே பார்க்கலாம்.

கீழஆவணிமூலவீதியிலிருந்து சித்திரை வீதிகளை நோக்கி நடக்கத் தொடங்கினோம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் இராஜகோபுரம் எங்களை வரவேற்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு கோயில் இருந்ததையும், தினந்தோறும் சாமி வீதியுலா சென்றதையும் சங்க இலக்கியப் பாடல்கள் வழி அறியலாம். ஆலவாய் அண்ணல், ஆலவாய் நம்பியென்றே சிவனை ஏழாம் நூற்றாண்டளவில் எழுதிய பாக்களில் குறிப்பிடுகிறார்கள். அப்போது மீனாட்சியம்மனுக்கு தனி சன்னதி இல்லையென்பதை ‘அங்கயற்கண்ணியுடன் உறையும் ஆலவாய் அண்ணல்’ என்ற வரியினூடாக அறியலாம். ஜடாவர்மன் குலசேகரன் காலத்தில்தான் மீனாட்சியம்மனுக்கு தனி சன்னதி கட்டப்பட்டது.

11143587_10204127198596408_1489839534159568110_n

எப்போதும் பரபரப்பாக திருவிழாக் கோலம் பூண்டிருக்கும் கிழக்குச் சித்திரை வீதியில் இராஜகோபுரம், புதுமண்டபம், மதுரைவீரன் கோயில், பதினெட்டாம்படிக்கருப்புசாமி கோயில், காந்தி பூங்கா, அம்மன்சன்னதி நுழைவாயில் எல்லாமிருக்கிறது. கிழக்குகோபுரம் பதின்மூன்றாம்நூற்றாண்டு தொடக்கத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பெற்றது. சுந்தரபாண்டியன் கோபுரமென்று அழைக்கப்பட்டது. இக்கோபுரமே கோயிலின் பிரதான நுழைவாயிலாக இருந்திருக்கிறது. கோயிற்பணியாளர்களுக்கான வரிவிதிப்பு ஒரு காலத்தில் ஏற்படுத்தப்பட்டபோது அதை எதிர்த்து ஒருவர் இக்கோபுரமேறி உயிர்துறக்க அதன்பின் பொதுமக்கள் அதிகம் இதைப் பயன்படுத்துவதில்லை. மேலும், திருமலைநாயக்கரின் மனைவியரால் கட்டப்பட்ட அஷ்டசக்தி மண்டபம் வழியாகவே சாமிகளும், சனங்களும் சென்று வருகிறார்கள். அஷ்டசக்தி மண்டபத்திற்கு எதிரேயுள்ள நகரா மண்டபம் மங்கம்மாள் காலத்தில் கட்டப்பெற்றது.

கிழக்கு கோபுரத்திற்கெதிரே அமைந்துள்ள புதுமண்டபம் திருமலைநாயக்கரால் கட்டப்பெற்றது. இம்மண்டபத்தில் புத்தகக்கடைகள், தையற்கடைகள், கிராமதெய்வக்கோயில்திருவிழாக்களுக்குத் தேவையான பொருட்கள் விற்கும் கடைகள், தையற்கடைகள், பாத்திரக்கடைகள் எல்லாம் அமைந்துள்ளது. கிழக்குச் சித்திரை வீதியிலிருந்து தெற்கு சித்திரை வீதியில் நுழையும் போது புதுத்தளிர்களோடு அரசமரம் நம்மை வரவேற்றது. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வருபவர்கள் பெரும்பாலும் தெற்குக் கோபுரம் வழியாகத்தான் கோயிலுக்குள் வருவார்கள். இக்கோபுரம் சிராமலைச் செவ்வந்திச் செட்டியாரால் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமான சிலைகளைக் கொண்ட அழகான கோபுரம். இந்த வீதியில் உள்ள வெள்ளியம்பல மண்டபத்திற்கு பங்குனி மாதம் நடைபெறும் கோடைத்திருவிழாவின் போது தினந்தோறும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வந்து செல்வார்கள். வெள்ளியம்பலத்தில் பள்ளியொன்று செயல்படுகிறது. தெற்குச் சித்திரைவீதியில் பன்னீர்சோடா அல்லது ஐஸ்கிரீம் வாங்கித் தின்று செல்வது என் வழக்கம். நிழற்படக்கலைஞர் அருணோடு கோபுரங்களை எந்த இடத்தில் இருந்து பார்த்தால் நன்றாகத் தெரியும் என விசாரித்து வைத்துக் கொண்டேன். உதயகுமாருடன் பேசிக் கொண்டே மேற்குச் சித்திரை வீதியை அடைந்தோம். கிழக்கே சூரியனிருப்பதால் மிக ரம்மியமாக காட்சியளித்தது.

11112580_10204127195436329_7877601344138637299_n

நான் பெரும்பாலும் சித்திரைவீதிகளுக்கு மேற்கு கோபுரம் வழியாகத்தான் சென்றிருப்பேன். டவுன்ஹால் ரோடு வழியாக வந்து சிலநாட்கள் நியூசெஞ்சுரிபுக்ஹவுஸை எட்டிப்பார்த்துவிட்டு சித்திரை வீதி வந்தடைவது வழக்கம். மேலக்கோபுரத்தை பார்த்துக் கொண்டே நடந்து வருவது சுகமான விசயம். கி.பி.1336ல் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பெற்றது இக்கோபுரம். கல்வெட்டில் பாடலோடு உள்ளது. மேலச் சித்திரைவீதியும், வடக்குச் சித்திரை வீதியும் இணையுமிடத்தில் காப்பி குடித்துவிட்டு, வடை வாங்கித் தின்பதும் நண்பரோடு வரும்போது வழக்கமான விசயம். வடக்குச் சித்திரை வீதி ரொம்ப அமைதியாகயிருக்கும். பெரும்பாலானவர்கள் இவ்வீதி வழியாக வரமாட்டார்கள். வடக்குகோபுரம் முனிஸ்வரரைப் பார்க்க நானும், நண்பனும் பாலிடெக்னிக் படிக்கும் போது அடிக்கடி வருவோம். அங்கு வேண்டி அவன் பிறந்ததால் அவனுக்கு முனியசாமி என்ற பெயரை வைத்துவிட்டார்கள்.

11040889_10204127197396378_5807599748681356850_n

வடக்குகோபுரம் முத்துவீரப்பநாயக்கர் காலத்தில் தொடங்கி வெகுநாட்களாக கட்டப்படாமல் கிடந்ததால் மொட்டைக் கோபுரம் என்று அழைக்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் வயிநாகரம் செட்டியார் குடும்பத்தாரால் திருப்பணி செய்யப்பட்டு நிறைவு பெற்றது. இக்கோபுரத்திற்கு காவலாக முனிஸ்வரர் இருக்கிறார். மதுரையில் பிறந்த குழந்தையைப் பெரும்பாலும் முப்பதாம்நாள் மொட்டைகோபுரம் முனியிடம் தூக்கிவருவது மக்கள் வழக்கம். என் மகள் மதுராவும் வடக்குச் சித்திரை வீதிக்குத்தான் முதலில் வந்தாள். வடக்கு மற்றும் மேற்கு சித்திரை வீதிகளில் கலைப்பொருள்கள் விற்கும் கூடங்களும், எது எடுத்தாலும் பத்து ரூபாய் என வீட்டு உபயோகப் பொருள்கள் விற்கும் கடைகளும் உள்ளது.

11100160_10204127195876340_1401179473880895842_nவடக்கு கோபுரத்தை கட்டிய வீரப்ப நாயக்கர்தான் கோயிலில் கொடிமரம் இருக்கும் கம்பத்தடி மண்டபத்தை கி.பி.1583ல் கட்டியிருக்கிறார். அதைப் பற்றி தெலுங்கு மற்றும் தமிழில் கல்வெட்டுகள் உள்ளது. அதில் உள்ள சிலைகளை வயிநாகரம் செட்டியார் குடும்பத்தினர் திருப்பணி செய்துள்ளனர். சாமிசன்னதி நோக்கிச் செல்லும் போது உள்ள நந்தி மிகப்பழமையானது. பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது என சாந்தலிங்கம் அய்யா சொன்னார். அய்யாவிடம் கோபுரத்திலுள்ள சுதைச் சிற்பங்கள் குறித்து கேட்டுக் கொண்டு வந்தேன். நுழைவாயில் வரைதான் கல்கட்டிடம். அதன்பின் மேலே கோபுரம் முழுக்க செங்கல்கற்களால் கட்டப்பட்டு மேலே சாந்துபூசி சிலைகள் வடிக்கப்பட்டதைச் சொன்னார். ஆச்சர்யமாகயிருந்தது. பேசிக்கொண்டே புதுமண்டபம் வந்தோம்.

10418498_10204127247437629_3679850314738946411_n

உலகின் எல்லா வீதிகளும் மதுரையை நோக்கியே வருகின்றன. மதுரை வீதிகளில் சுற்றியலைபவர்கள் பாக்கியவான்கள். ஆலவாய் அழகனான சிவனே சித்திரவீதிகளில் சுற்றித்திரிபவர்களின் முன்னோடியாகத் திகழ்கிறார். சித்திரை வீதிகளில் நடக்கும்போது இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படும். தாயின் கர்ப்பத்தில் உறைந்திருந்த போதிருந்த பாதுகாப்பு உணர்வுதான் சித்திரவீதிகளில் சுற்றும்போதும் கிட்டுகிறது. இந்தியாவின் தேசியமலரான தாமரை போலமைந்த வீதிகளைக் கொண்ட மதுரை உலகத்தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமாகத் திகழ்ந்து வருகிறது. எத்தனை ஊர்களுக்கு மதுரை போல் அழகான வீதிகள் வாய்த்திருக்கிறது எனத் தெரியவில்லை. நான்கு பக்கமும் கோபுரத்தை நோக்கி செல்லும் வீதிகளில் நடக்க நடக்க மனது இலகுவாகிறது.

காலை நேரத்தில் மதுரை வீதிகளில் நடப்பது சுகமான விசயம். அதிலும் சித்திரைவீதிகளில் பசுமைநடை நண்பர்களோடு நடப்பது கொண்டாட்டமான விசயம். என்னை சித்திரவீதிக்காரனாக்கிய வீதிகளில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டே வலம் வந்தது மகிழ்வான விசயம். மதுரையைப் பற்றி எவ்வளவோ எழுதியிருக்கிறார்கள், பேசியிருக்கிறார்கள். ஆனாலும், மதுரை ஆழிபோல அள்ள அள்ள வற்றாத செல்வங்களைக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்தது அதிலொரு துளிதான்.

10432085_10204127244597558_6346468006210018350_n

பசுமைநடைப் பயணங்களினூடாக மதுரையைச் சுற்றியுள்ள மலைகள், தொன்மையான இடங்கள் எனப் பல இடங்களுக்கு இதுவரை தொடர்ந்து பயணித்திருந்தாலும் இம்முறை சென்ற நடை மனதை விட்டு நீங்காத நடையாக அமைந்தது. எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் சீரிய முயற்சியால் இந்நடை சாத்தியமானது.

 படங்கள் உதவி – அருண், பாலசந்திரன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s