அழகர் மலைதிரும்பல் (வழி: திருவிழான்பட்டி)

Posted: ஜூன் 7, 2015 in பார்வைகள், பகிர்வுகள்

thirushtichothi

அழகர் மலையிலிருந்து வரும்போது வரவேற்கச் செல்வதுபோல மலைக்குத் திரும்பும்போதும் அவருடன் செல்ல வேண்டுமென்ற ஆசையை இந்தாண்டு நிறைவேற்றினேன். அதிகாலை விடியலில் திருவிழான்பட்டியில் திருமாலிருஞ்சோலையழகன் தரிசனம் கிட்டியது. திருவிழா நாயகனை திருவிழான்பட்டியில் பார்த்தது எவ்வளவு பொருத்தமாகியிருக்கிறது. அங்கிருந்து அழகரோடு அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, பொய்கைக்கரைப்பட்டி என அழகர்கோயில் வரை உடன் சென்றோம்.

திருவிழான்பட்டி

கனகாம்பரம்வழிநெடுக கிராமங்கள் அழகரை வரவேற்க திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. மக்கள் அழகரை வரவேற்க வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறார்கள். அழகர் வரும்முன் அந்த ஊர் எல்லையில் வேட்டுப் போடுகிறார்கள். அதிர்வேட்டு போடுவதற்கென்றே தனியாக ஆட்கள் அழகருடன் வருகின்றனர். அதையறிந்ததும் மக்களின் திருக்கண்களும், மண்டபத்திருக்கண்களும் சுறுசுறுப்பாகிவிடுகின்றன. ஒலிபெருக்கியில் ‘வாராரு வாராரு அழகர் வாராரு’ பாடல் இடைவிடாமல் ஒலிக்கத்தொடங்கிவிடுகிறது. அழகரைக் கண்டதும் இளவட்டங்கள் ஆட்டம்போடுகிறார்கள்.

திருக்கண்தோரணம்

திருக்கண்களை நொங்கு, மாங்காய், ஈச்சங்காய், தென்னங்குலை, தென்னங்குருத்து, வாழைமரம் என கிராமத்துபாணியில் மிக அழகாக அலங்கரித்து இருந்தார்கள். கிராமத்திருவிழா போல ஊரே திரண்டிருக்கிறது.

தின்பண்டம்

காராச்சேவு

திருவிழாக்கடைகள்

சாலையோரங்களில் பூந்தி, அல்வா, காரசேவு, லட்டு, மிச்சர் என திண்பண்டங்கள் பல வண்ணங்களில் காத்திருக்கிறது. பீம்புஸ்டி அல்வாக்கடைகள் போட்டிருந்தார்கள். அவர்களிடம் இந்த அல்வாவின் சிறப்பு குறித்து கேட்ட போது நயம் கோதுமையில் செய்வதாகச் சொல்லி சுவைத்துப் பார்க்க கொஞ்சம் கொடுத்தனர். அருமையாகயிருந்தது. திருவிழாக்கள்தோறும் கடைகள் போடுவதாகச் சொன்னார்.

பீம்புஸ்டிஅல்வா

சர்க்கஸ்காட்சிகள் திருவிழாவை முன்னிட்டு அந்த ஊரில் நடக்கிறது. கனகாம்பரம் சூடிய பெண்களையும், ராமம் போட்ட ஆண்களையும் அதிகம் காணமுடிகிறது. அவர்களது எளிமையே அம்மக்களின் அலங்காரமாக அமைகிறது. அப்பன் திருப்பதியிலுள்ள திருக்கண்களில் எழுந்தருளும் அழகர் அப்பன்திருப்பதி கோயில் முன்புள்ள மண்டபத்திற்கு வருகிறார். அங்கு வைத்து வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் மரியாதை செலுத்த அவருக்கு அங்கு பரிவட்டம் கட்டுகிறார்கள்.

அப்பன்திருப்பதி

அங்கிருந்து மக்கள் வெள்ளத்தில் விடைபெற்று அழகர் கள்ளந்திரி நோக்கி வருகிறார். அழகர்கோயிலைச் சுற்றியுள்ள மக்கள் திருவிழாப் பணிகளை காலங்காலமாகச் செய்துவருகின்றனர். திரியெடுத்து வருவதும், குடை பிடித்து வருவதும் கள்ளந்திரி மக்களின் பணி, சீர்பாதம்தாங்கிகளாக அழகரை சுமந்து வருவது பொய்கைகரைப்பட்டிகாரர்களின் பணி, உண்டியல் வண்டி கொண்டுவருவது வலையபட்டிகாரர்கள் பணியெனப் பிரித்து வைத்து அழகுமலையானுக்குச் சேவை செய்கிறார்கள்.

பாறைத்திட்டு

கள்ளந்திரி

கள்ளந்திரிக்கு முன்புள்ள பாறைத்திட்டுக்களில் மக்கள் அழகருக்காக காத்துக்கிடக்கிறார்கள். கள்ளந்திரி மந்தையிலும் ஏகப்பட்ட கூட்டம். அழகர் வந்ததும் ஊரே மகிழ்ச்சியில் திளைக்கிறது. அங்கிருந்து கள்ளந்திரிப் பாலம் தாண்டி அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாட்டுவண்டியில் அழகர்கோயில் உண்டியல்கள் வந்து கொண்டிருந்தது. பொய்கைகரைப்பட்டியில் உள்ள கடைசி மண்டபத்திலிருந்து அழகர் கிளம்பும் போது குலுக்கி எடுத்துவிட்டார்கள். மேனி நமக்கு சிலிர்க்கிறது. அழகர்கோயிலுக்கு முன்புள்ள வர்ணிப்பாளர்கள் சங்கத்தில் அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் வர்ணிப்பு பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது.

இரணியன் வாசல்

வண்டிப்பாதை

அழகர்கோயில் நுழைவாயிலிலிருந்தே அழகரை வரவேற்க ஏகப்பட்ட கூட்டம். மக்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டே அழகாபுரிக்கோட்டை, இரணியன் கோட்டையை கடந்து பதினெட்டாம்படிக்கருப்பு வாசலுக்கு வருகிறார். அங்கிருந்து வண்டிவாசல் வழியாக நுழைய அவர்மேல் பூமாரி பொழிய வரவேற்கிறார்கள். பூசணிகளை எடுத்து அழகரை சுற்றி வந்து திருஷ்டி கழிக்கிறார்கள். அழகர் திருக்கல்யாணமண்டபத்தின் இடதுபுறமாக சுற்றி வந்து கோயிலுக்குள் நுழைகிறார். ஆடிமாதம்தான் தீர்த்தமாடி கோயிலுக்குள் வருவாரென்ற தீட்டு எனும் புனைவை தாண்டி அழகர் தம் இருப்பிடம் போய் சேர்கிறார். என்னுடன் நண்பர் குமரப்பனும், தென்காசியிலிருந்து நண்பர் தெய்வதயாளனும் உடன் வந்தனர். மறக்கமுடியாத நினைவலைகளைச் சுமந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

Advertisements
பின்னூட்டங்கள்
  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அழகர் மலைதிரும்பல் (வழி: திருவிழான்பட்டி) = சித்திரவீதிக்காரன் = அருமை எனது பக்கத்தில் பகிர்கிறேன். திருவிழாவிற்கு நம்மையும் அழைத்துச் சென்று விட்டார், கிராமங்களில் பயணிக்கிறோம். நன்றி திரு சுந்தரே சிவம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s