சமண மலையடிவார ஆலமரத்தடியில் இயற்கைத் திருவிழா

Posted: ஓகஸ்ட் 6, 2015 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள்

FL20Green8_jpg_1571828g

ஆலமரங்களுக்கடியில் நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்தனர். குளக்கரைகளிலும் சமணமலையடிவாரத்திலும் குழந்தைகள் மகிழ்ச்சியாய் விளையாடித் திரிந்தனர். நாடகமேடையருகில் பெருஞ்சமையல் நடந்துகொண்டிருந்தது. சாலையின் மறுபுறம் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் காத்திருந்தனர். மலையை காவல் காத்து நிற்கும் கருப்புச்சாமியும் குதிரையில் அமர்ந்து காற்றலைகளில் வரும் மதுர வரலாறையும் சூழலியல் குறித்த உரைகளையும் கேட்டுக்கொண்டிருக்கிறார். சில வருடங்களாக இம்மலையடிவாரம் தன்னை இயற்கைத்திருவிழாவோடு இணைத்துக்கிடக்கிறது. அப்படியென்னத் திருவிழா என்கிறீர்களா? வாருங்கள் பசுமைநடையாக.

947302_10201324070719963_1087338239_n

மதுரைக்கு அரணாக, அழகாகயிருந்த யானைமலையை கலைப்பார்வையோடு சிலர்பார்த்து படுத்திருக்கும் யானையை நிப்பாட்ட முடிவு செய்தனர். கலைப்பார்வையா? காமாலைப் பார்வையா? என்று உணர்ந்த மக்கள் போராடி மலையை மீட்டனர். அச்சமயத்தில் உயிர்மையில் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அம்மலை குறித்து எழுதிய கட்டுரையைப் படித்த மதுரைவாசிகள் நிறைய பேர் யானைமலையின் தொல்லெச்சங்களைக் காண விழைந்தனர். அதன்பின் ஐம்பதிற்கும் மேலானோர் யானைமலை சென்று வந்துள்ளனர். மதுரையில் இதுபோலுள்ள இடங்களுக்குத் தொடர்ந்து செல்ல வேண்டுமென்றபோது எண்ணம் ஏற்பட்டபோது பசுமைநடை முகிழ்தது. அந்நடை குறித்த தகவல் அடுத்தமாத உயிர்மையில் வர நானும் அதில் இணைய விரும்பினேன்.

மதுரை நகர்மன்றச்சாலையில் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனை பார்த்தபோது அவரிடம் பசுமைநடையில் என்னையும் இணைத்துக்கொள்ளச் சொல்லி என் அலைபேசி எண்ணையும் கொடுத்தேன். அதன்பின் 14.11.2010ல் பசுமைநடையாக கீழக்குயில்சமணமலை செல்வதாக குறுந்தகவல் வந்தது. நானும், சகோதரனும் அதிகாலை கிளம்பிச் சென்றோம்.

CIMG2335

சமணமலையடிவாரத்திலிருந்து செட்டிப்புடவிற்கு பசுமைநடையாகச் சென்றோம். அங்கு சமணம், தமிழிக்கல்வெட்டுகள், மகாவீரர் குறித்தெல்லாம் அங்கு பேசிய ஆளுமைகளின் வரலாற்று உரையை தொல்தலத்தில் கேட்டபோது இந்த மலைவகுப்பை தவறவிடக்கூடாதென உள்ளத்தில் கெவுலி அடித்தது. ஒவ்வொரு நடையும் ஒரு திருவிழாப் போல பசுமைநடையில் தொடர்ந்து பயணித்து வருகிறேன்.

379169_160621200700113_1382093118_n

1396750_737035019659264_618051_oகீழக்குயில்குடி சமணமலை, கொங்கர்புளியங்குளம், முத்துப்பட்டி பெருமாள்மலை, விக்கிரமங்கலம் உண்டாங்கல்லுமலை, நடுமுதலைக்குளம், சித்தர்மலை, திருப்பரங்குன்றம், யானைமலை, திருவாதவூர், அரிட்டாபட்டி, மாங்குளம் மீனாட்சிபுரம், கருங்காலக்குடி, கீழவளவு, வரிச்சூர் குன்னத்தூர், திருவேடகம், பேரையூர், சதுர்வேதிமங்கலம், சிவரக்கோட்டை, புதுமண்டபம், இராயகோபுரம், இராமாயணச்சாவடி, செல்லத்தம்மன் கோயில், புட்டுத்தோப்பு மண்டபம், திருமலைநாயக்கர் மஹால், விளக்குத்தூண், பத்துத்தூண் என ஏராளமான இடங்களுக்கு பசுமைநடையாகச் சென்றிருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் மதுரையைத் தாண்டி கோவில்பட்டி கழுகுமலை, சங்கரன்கோயில், திருமலாபுரம், வீரசிகாமணி, புதுக்கோட்டை கொடும்பாளூர், குடுமியான்மலை, திருமயம், தாண்டிக்குடி என மேற்குத்தொடர்ச்சி மலைகள் வரை பசுமைநடைப் பயணம் நீண்டது.

1502581_718252498219860_131053346_o

10847168_881766641868444_6472887997307946411_o

பசுமைநடையின் சிறப்பு என்னவென்றால் சாதி, மதம், மொழி, இனம் என எந்த எல்லைக்குள்ளும் சுருங்கிக்கொண்டதில்லை. கூலித்தொழிலாளி முதல் பெருமுதலாளிகள் வரை இந்நடையில் கலந்து கொள்கின்றனர். ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்வாக அமையாமல் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொள்வது பசுமைநடையின் பெருஞ்சிறப்பாகும்.

10676230_10203119926255229_4661305522881399322_n

பசுமைநடைப் பயணங்களில் 25 வது நடையை விருட்சத்திருவிழாவாகவும், 40 வது நடையையும் பாறைத்திருவிழாவாகவும் கீழக்குயில்குடி சமணமலையடிவாரத்தில் கொண்டாடினோம். பசுமைநடைக்குழு அங்கத்தினர் என்பதையும் தாண்டி மலையடிவாரத்தில் நடந்த விருட்சத்திருவிழா இன்னும் மனதை விட்டு அகலவில்லை.

greenwalk_04

விருட்சத்திருவிழாவிற்கு முதல்நாளே எல்லோரும் சமணமலையடிவாரத்தில் கூடி வேலைகளை பகிர்ந்து செய்யத் தொடங்கினோம். அதில் மறக்கமுடியாத நிகழ்வு அன்றிரவு தங்கியதுதான். ஆலமரத்தடிக்காற்று இதமாக வீசியது. மலை இருளில் பதுங்கிக் கொண்டது. விளக்கு வெளிச்சத்தில் கருப்பு கோயிலைப் பார்த்த போது கருப்பு குதிரைகளைப் பூட்டி ஊர்வலம் கிளம்பிக் கொண்டிருந்தார். அமானுஷ்யக் கதைகள் முளைக்கும் வேளையில் அன்றாடக் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தோம். நேரம் மெல்ல மெல்ல நகர்ந்து ஆகஸ்ட் 25ற்கு வந்துவிட்டது.

image003(2)

11822715_10204837096583414_8553559688952627097_nவிருட்சத்திருவிழா போல பாறைத்திருவிழா சிறப்பாக நிகழ வேண்டியிருந்தது. எதிர்பாராத கணத்தில் வந்த தீர்ப்பால் கொஞ்சம் வண்ணம் குலைந்து போனது. ஆனாலும், அன்றைய தினத்தில் அவ்விழா நடந்ததே பெரும்சிறப்புதான். அதற்கடுத்து வெள்ளப்பாறைப் பட்டியில் கொண்டாடிய பொங்கல்விழாவும், தாண்டிக்குடி வரலாற்றுக் கண்காட்சி திறப்புவிழாவும் பசுமைநடைப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளாகும்.

நீர்நிலைகளைக் காக்கும் பொருட்டும், நீர் சார்ந்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும் நோக்கிலும் பசுமைநடையின் 50வது நடை ‘இன்னீர் மன்றல்’ ஆக கொண்டாடவிருக்கிறோம். ஆகஸ்ட் 16ஆம் தேதி கீழக்குயில்குடி சமணமலை அடிவாரத்தில் தாமரைக்குளத்திற்கு அருகிலுள்ள பெரிய ஆலமரத்தடியில் விழா நடைபெற உள்ளது. அறிஞர்களின் உரைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், தொல்லெச்சங்களை நோக்கிய நடை, புத்தக வெளியீடோடு சிறப்பாக நிகழவிருக்கிறது. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

படங்கள் உதவி – பசுமைநடை நண்பர்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s