விழவுமலி மூதூரில் நீர் சார்ந்த விழாக்கள்

Posted: ஓகஸ்ட் 19, 2015 in பார்வைகள், பகிர்வுகள்

chithiraithiruvizha

மதுரை ஆலவாய் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஆலம் என்றால் நீர்நிலை. ஆலவாய் என்றால் ‘நீர்நிலைகளுக்கு நடுவே அமைந்த ஊர்’ என்று மயிலை சீனி.வேங்கடசாமி கூறுகிறார். அந்தக்காலத்தில் வைகையையும், கிருதுமால்நதியையும் மாலை போல சூடியிருந்தது மதுரை. மதுரைக்கு அருகிலேயே திருவாலவாயநல்லூர் என்ற ஊர் இருப்பதோடு மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களின் பெயர்களும் நீர்நிலைகளோடு தொடர்புடையதாக இருப்பதைப் பார்க்கும் போது மதுரைக்கு  ஆலவாய் என்ற பெயர் பொருத்தமாக உள்ளதை அறியலாம்.

குளி(ர்)ப்பதற்கு பயன்படும் நீர்நிலை குளம் என்பதாகும். மாடக்குளம், தெப்பக்குளம், தல்லாகுளம், சொக்கிகுளம், ஆத்திகுளம், பீ.பீ.குளம், சம்பந்தர் ஆலங்குளம்,  கோசாகுளம், சம்பக்குளம், மருதங்குளம், செங்குளம், கரிசல்குளம்,   புளியங்குளம், வேடர்புளியங்குளம், கொங்கர்புளியங்குளம், தணக்கன்குளம், மாங்குளம், சொரிக்குளம், நாகணாகுளம், வலையங்குளம், முதலைக்குளம், ஊர்மெச்சிகுளம், ஊமச்சிகுளம், கட்டக்குளம், கோயில்குருந்தங்குளம், கொக்குளம், அய்யனார்குளம் என குளங்களைப் பெயர்கொண்ட ஊர்கள் மதுரையைச் சுற்றி உள்ளன.

ஏர்த்தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை ஏரி என்றழைக்கப்பட்டது. மதுரையில் தத்தனேரி, சிலையனேரி, உலகனேரி, தோடனேரி, தூயனேரி என ஏரியின் பெயர் கொண்ட ஊர்களும் உள்ளன. கல்வெட்டுகளில் சோழவந்தானுக்கு அருகிலுள்ள தென்கரையின் பெயர் சேந்தனேரி கட்டிக்கள்ளூர் என்றும், திருவாதவூர் கண்மாயின் பெயர் உலகளந்த சோழப்பேரேரி, யானைமலை நரசிங்கப்பெருமாள் கோயில் கல்வெட்டில் அப்பகுதியில் கலியனேரி என்ற ஏரி இருந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை ஊருணி என்றழைக்கப்படுகிறது. கருப்பாயூரணி, செக்காணூரணி. வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நீர்நிலையினை ஏந்தல் என்றழைத்தனர். கண்ணனேந்தல், கடச்சனேந்தல், செம்பியானேந்தல், லாடனேந்தல். நீர்நிலைகளுக்கு பொய்கை, கயம், ஊற்று, சுனை எனப் பல பெயர்கள் உண்டு. பொய்கைகரைப்பட்டி, புல்லூத்து, நாகர்ஊத்து, காக்காஊத்து,  திருச்சுனை என்ற ஊர்களும் உள்ளன.

kanmai

கண்ணாறுகளை உடையது கண்மாய். அதிலிருந்து நீரை வெளியேற்றும் பகுதிக்கு மடை என்று பெயர். வண்டியூர் கண்மாயின் மேற்குப்பகுதி மேலமடை என்ற பெயராலும், தென்கால் கண்மாய்க்கு அருகே மூலக்கரையும், வைகைக்கரையோரத்தில் மேலக்கால் என்ற ஊரும் உள்ளது.

பரிபாடலில் திருமருதப்பூந்துறை,  மருதோங்கு முன்துறை, திருமருத நீர்ப்பூந்துறை என வைகைக்கரையோரத்தில் படித்துறைகள் இருந்ததாக கூறப்படுகிறது. மருதத்துறையில் அமைந்ததால் மருதை எனப் பெயர் வந்ததாகவும் கூறுவர். இன்றும் மதுரையில் குருவித்துறை, பேச்சியம்மன் படித்துறை, ஓபுளா படித்துறை, கீரைத்துறை என படித்துறைகள் உள்ளன. இதில் கீரைத்துறை கிருதுமால்நதிக்கரையில் இருக்கிறது. (இன்று கிருதுமால்நதியை சாக்கடையாக்கிவிட்டோம்). கரையோரங்களில் உள்ள ஊர்களுக்கு வைகை வடகரை, தென்கரை எனப் பெயருள்ளது. அணைகளை மையமாகக் கொண்ட பெயர்களாக அணைப்பட்டி, கணவாய்ப்பட்டி, கல்லணை, சாத்தையாறு அணை என்ற ஊர் பெயர்கள் அமைந்துள்ளன.

வாவி என்ற சொல்லும் நீர்நிலையைத்தான் குறிக்கும். வாவிடமருதூர் என்ற ஊர் அலங்காநல்லூர்க்கு அருகில் உள்ளது. கிணற்றின் பெயர் கொண்ட காதக்கிணறு (காரைக்கிணறு), காரைக்கேணியும் மதுரையில் உள்ளது. அதைவிட கடலின் பெயரைக் கொண்ட பரவை எனும் ஊரும் இங்குள்ளது. வண்டியூர் தெப்பக்குளத்திற்கு திருமலைநாயக்கர் சமுத்திரம் என்ற பேரும் உண்டு.

poigai

மதுரை திருவிழாக்களின் பூமி. தினந்தோறும் திருவிழா காணும் மதுரையை சிலப்பதிகாரம் விழவுமலி மூதூர் என குறிப்பிடுகிறது. மதுரை வீதிகளில் சாமி ஊர்வலமும், சந்தனக்கூடுகளும், மாதா தேர்பவனியும், பால்குடங்களும், முளைப்பாரிகளும் என நாள்தோறும் ஏதாவது ஒரு பகுதி விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. சித்திரைத் திருவிழா தொடங்கி பங்குனித் திருவிழா வரை ஒவ்வொரு மாதமும் பெருவிழாக்களை கொண்டாடும் ஆலவாய் மாநகரில் நீர் சார்ந்த விழாக்கள் குறித்துப் பார்க்கலாம்.

சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வைக் காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வைகையில் கூடுகின்றனர். மீனாட்சியம்மன் கோயில், கூடலழகர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர்கோயில், திருமோகூர் கோயில்களில் தெப்பத்திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணிமூலத்திருவிழாவின் முக்கிய விழாவான புட்டுத்திருவிழா வைகை அணை வெள்ளத்தை அடைக்க சிவன் புட்டுக்கு மண் சுமந்த லீலையை மையங்கொண்டது. அழகர்கோயிலில் ஐப்பசி மாதம் அழகர் மலைமேலுள்ள சிலம்பாறு பாயும் தீர்த்தத்தொட்டிக்கு எழுந்தருளுவது தலையருவித் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. முதலையிடமிருந்து யானையைப் பெருமாள் காத்த கதையை அழகர்கோயில் மற்றும் திருமோகூர் கோயில்களில் கஜேந்திர மோட்சமாக கொண்டாடப்படுகிறது. திருமோகூர் காளமேகப்பெருமாள் கஜேந்திர மோட்சத்திற்கு யானைமலை நரசிங்கம் கோயில் தாமரைத்தடாகத்திற்கு வருகிறார்.

tho.paஆடிப்பதினெட்டாம் பெருக்கன்று நீர்நிலைகளை மக்கள் வழிபடுகின்றனர். ஆடிமாதத்தில் அழகர்மலைமீதுள்ள தீர்த்தத்தொட்டியில் நீராடி தங்கள் குலதெய்வங்களை வழிபடுகின்றனர். மேலும், ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றி வழிபடுவதும் மழை பொழிய மாரியம்மனுக்கு நன்றி செலுத்தத்தான். கண்மாய், மடைகளை காவல் காக்கும் தெய்வங்களுக்கும் ஆண்டிற்கொருமுறை கிராமங்களில் திருவிழா எடுக்கப்படுகிறது. சில கிராமங்களில் மீன்பிடித்திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. கார்த்திகை மாதத்தில் தீபமேற்றுவதும், சொக்கப்பனை கொளுத்தப்படுவதும் நெருப்பு சார்ந்த விழா போலத் தோன்றினாலும் அவை மழையை வழியனுப்பும் திருவிழாதான். மார்கழியில் வைத்த பூசணிப்பூ, செம்பருத்திப்பூ கொண்டு செய்த பூரொட்டிகளை தைப்பொங்கலையொட்டி மடைநீரில் விட்டு வழிபடும் வழக்கம் சில கிராமங்களிலுள்ளது. (திருக்கார்த்திகை மற்றும் தைப்பொங்கல் குறித்த கட்டுரையில் இச்செய்தியை தொ.பரமசிவன் அய்யா குறிப்பிடுகிறார்)  பங்குனி மாதத்தில் அம்மனுக்கு எடுக்கும் விழாக்களின் நிறைவுநாளன்று மஞ்சள் நீராட்டு நடைபெறுகிறது. முளைப்பாரிகளும் குளங்களில் கரைக்கப்படுகின்றன.

theppathiruvizha

நீர் சார்ந்த திருவிழாக்களின் மையமான நீர்நிலைகளின் இன்றையநிலை குறித்து பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. சமீபகாலமாக வைகையாற்றில் ஒரு தொட்டியில் அழகர் வந்து இறங்குவதைப் பார்க்கும் போது கண்ணீர் பெருக்கெடுக்கிறது. மீனாட்சியம்மன் எழுந்தருளும் வண்டியூர் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழாவிற்காக நீர் நிரப்புகிறார்கள். தெப்பக்குளங்களில் நீர் எடுத்த காலம் போய் விடும் காலம் வந்துவிட்டது. சமயங்களில் அதற்கும் வழியில்லாமல் தங்குதெப்பமாக சில ஆண்டுகள் தெப்பத்திருவிழா நடக்கிறது. சிலம்பாறு வந்து பாய்ந்த பொய்கைகரைப்பட்டி தெப்பம் இன்று எப்போது நிறையும் என்று அழகுமலையானுக்குத்தான் தெரியும். அதைவிட கூடல்அழகர்கோயில் தெப்பக்குளம் இருக்கும் இடம்கூட தெரியாமலிருக்கிறது. நகர்மன்றச் சாலையில் (டவுன்ஹால் ரோடு) இருக்கிறது என்றால் கொஞ்சம் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். தல்லாகுளம் பெருமாள்கோயில் திருமுக்குளம் தெப்பத்திற்கு வைகையிலிருந்து நீர்வர முன்பு வழியிருந்ததாம். ஆனால் இன்று வழிதெரியாமல் ஆக்கிவிட்டோம்.

கூடல்அழகரும், அழகுமலையானும், தல்லாகுளம் பெருமாளும் தெப்பக்கரையை சுற்றி வருகிறார்கள். ஆறு, குளம், கண்மாய், கால்வாய் என எல்லா நீர்நிலைகளும் நெகிழி பைகளால் மூச்சுவிட முடியாமல் தவிக்கின்றன. மக்கும் குப்பைகளுக்கு ஏன் மட்காத குப்பை மீது இத்தனை ஆசையென்று தெரியவில்லை.

ஆடிப்பெருக்கை ஆற்றங்கரைகளில் கொண்டாடிய நம் முப்பாட்டிகளும், கிணற்றடியில் கொண்டாடிய பாட்டிகளும், குழாயடியில் கொண்டாடிய அம்மாக்களோடு நீர்நிலைகள் நாதியற்றுப் போகத்தொடங்கிவிட்டன. தண்ணீர் பாட்டிலில் கிடைக்கும் என்றுதான் நம் அடுத்த தலைமுறையினர் அறிய வேண்டுமா?

நம் முன்னோர்கள் இயற்கையை வணங்கிக் கொண்டாடியதோடு அதைக் குறித்த அறிவும் கொண்டிருந்தனர். தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியங்கள் பலவற்றில் உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்பதை பாடலினூடாக சொல்லியிருக்கிறார்கள். மழை எப்படி பொழிகிறது என திருப்பாவையில் ஆண்டாள் சொல்கிறார். நாம் இன்று வானிலை அறிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நிலம், நீர், தீ, வளி, விசும்பொடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகமென்ப – தொல்காப்பியம்

palam

வைகையில் யானைக்கல் பாலத்திற்கும், ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்திற்கும் நடுவிலுள்ள மண்டபத்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருள காலிங்கராயன் வாணாதிராயன் கட்டியது. இன்று தூண்கள் சில விழுந்து சிதைவடைந்து தனித்து நிற்கிறது. திருமாலிருஞ்சோலை அழகர் மதுரையம்பதிக்கு வருவதே மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுக்கத்தான். அந்நிகழ்வு நடக்கும் தேனூர் மண்டபம் இடியும் நிலையில் உள்ளது. அதனால் அழகர் மண்டபத்திற்கு வெளியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தகரக்கொட்டையில் எழுந்தருளிச் செல்கிறார். இந்த இரண்டு மண்டபங்களையும் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்.

thenoormandabam

தெப்பத்திருவிழாக்களை வெறும் சடங்காக நிகழ்த்தாமல் நீர்நிலைகளைக் காக்க நாம் முன்வர வேண்டும். தெப்பக்குளங்கள் நிறைந்தால் நம் வீட்டு நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற சுயநலத்தோடு கூட இதைச் செய்யலாம். வையையில் புனல்விளையாட்டு பற்றி பரிபாடலில் உள்ளது என்று சொல்லி பெருமையடையாமல் நாமும் விளையாடும் சூழல் வரப் பாடுபடுவோம். வைகையில் வெள்ளம் வந்தபோது கரையடைக்க தென்னாடுடைய சிவனே வந்து மண் சுமந்தார் எனும் போது இன்று ஆறு, குளங்களில் நீர் நிறைய நாம் பணிசெய்ய வேண்டாமா?. வைகை ரயிலாகவே ஓடினால் நாளை குடிநீர்க்கும் முன்பதிவு செய்யவேண்டியிருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். கோயில் திருவிழாக்களின் போது தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கப்புகளில் கொடுப்பதைத் தவிர்ப்பது புண்ணியம் என்று உணர வேண்டும்.  ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என புறநானூற்றுப் பாடல் சொல்கிறது. எனவே, அடுத்த தலைமுறைக்கு இன்னீர் வழங்க அரசோடு, மக்களும் முன்வர வேண்டும். நீரின்றி அமையாது விழவு.

உதவிய நூல்கள்

பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்,

மாமதுரை – சொ.சாந்தலிங்கம், பொ.இராசேந்திரன்

inneer

(இக்கட்டுரை பசுமை நடை இயக்கம் நடத்திய ‘இன்னீர் மன்றல்’ விழாவில் வெளியிடப்பட்ட ‘நீரின்றி அமையாது உலகு’ நூலில் இடம்பெற்றுள்ளது)

Advertisements
பின்னூட்டங்கள்
  1. Hemapriya சொல்கிறார்:

    very informative… i will save this article for future reference. I will also share this with my friends who would enjoy knowing these facts

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s