சென்மேரீஸ் தேவாலயத்தில் பாஸ்கு விழா

Posted: ஓகஸ்ட் 30, 2015 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள்

CIMG1939

CIMG1950மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாக தூய மரியன்னை தேவாலயம் விளங்கி வருகிறது. திருமலைநாயக்கர் காலத்தில் சிறுதேவாலயமாக இருந்ததை கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தேவாலயமாக எடுத்துக் கட்டியுள்ளனர். பிரெஞ்சு மற்றும் கோதிக் கட்டடக்கலையில் கட்டப்பட்ட இத்தேவாலயம் வானிலிருந்து பார்க்கும்போது சிலுவை வடிவில் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற நாட்களில் ஏராளமானோர் வருகின்றனர். ஈஸ்டருக்கு முதல்வாரம் குருத்தோலை ஞாயிறன்று இரவு பாஸ்கு விழா நடைபெறுகிறதென நண்பர் மூலம் அறிந்தேன். இயேசுவின் இறுதிகாலப் பாடுகளை நாடகமாக நிகழ்த்தும் நாடகவிழாதான் பாஸ்கு. இடைக்காட்டூரில் பாஸ்குவிழா பெரிய திருவிழா போல நடக்குமாம். ஒருமுறை செல்ல வேண்டுமென மனதில் நிறுத்திக்கொண்டேன்.

29.03.15 அன்று பாஸ்கு விழா காணச்சென்றபோது சென்மேரீஸ் தேவாலயம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. மிகப்பெரிய மெழுகுவர்த்திகளை ஊன்றி கட்டியதுபோல தூண்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. உள்ளிருந்த சொரூபங்களை பார்த்துக்கொண்டே சென்றேன். மெழுகுவர்த்தியின் மஞ்சள் ஒளி கசிந்துகொண்டிருந்தது. ஜஸ்டின் அரங்கம் நாடக விழாவிற்கு தயாராகிக் கொண்டிருந்தது. மக்கள் நாடகம் பார்க்க திரளாக வந்திருந்தனர். மேடைக்கு அருகிலும், தேவாலய ஓரங்களிலும் போடப்பட்டிருந்த நாற்காலிகளிலும், மண்தரையிலும் ஏராளமானோர் அமர்ந்திருந்தனர்.

CIMG1953

CIMG1941கிராமங்களில் திருவிழாக்காலங்களில் வள்ளி திருமணம் போன்ற நாடகங்கள் நிகழ்த்துவது ஞாபகத்திற்கு வந்தது. நகரத்தில் நாடகம் பார்க்க எவ்வளவு பேர் வருவர்? எப்படி நடக்கிறது? எனப் பார்க்கவே பாஸ்குவிழாவிற்கு சென்றிருந்தேன். கிறிஸ்துவக்கல்லூரியில் பணியாற்றுவதால் ஆண்டுதோறும் கிறஸ்துமஸ் சமயத்தில் இயேசு பிறப்பு குறித்த காட்சிகளை நாடகமாகப் பார்த்திருக்கிறேன். மக்களோடு சேர்ந்து கொஞ்சநேரம் நாடகம் பார்த்துச் செல்லலாமென சென்றிருந்தேன். என்னுடன் பள்ளியில் படித்த பால்யகால நண்பன் சண்முகவேலும் வந்திருந்தான்.

CIMG1947நாடகம் தொடங்கியது. ஒரு குடிகாரன் தான் குடிப்பதற்காக பிள்ளைகளின் படிப்பை நிறுத்தி வேலைக்கு அனுப்பி அவர்கள் சம்பாதிக்கும் காசில் குடித்துக் கொண்டிருந்தான். பிள்ளைகள் படிக்க விரும்புகின்றன. அவனோ குடிக்க விரும்புகிறான். அடுத்த காட்சி அருகிலுள்ள மேடையில் தொடங்குகிறது. சமூகவலைத்தளம் மூலம் நட்பான ஒரு பெண்ணை இரண்டு இளைஞர்கள் சந்திக்க காத்திருக்கிறார்கள். அவள் வந்ததும் அரவாணியெனத் தெரிகிறது. காமவெறி தலைக்கேறியிருப்பதால் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். பிறகு அந்தப் பெண் கதறும் காட்சி நம் நெஞ்சை உருக்கியது. வாங்கிய கடனுக்கு மேலும் வட்டி கட்டியவரை கந்துவட்டிக்காரன் வந்து கொடுமைப் படுத்துகிறான். காசைக்கட்டச் சொல்லி அடிக்கிறான். அவர் மன்றாடிக் கேட்கும் போதும் அவர்களிடம் இரக்கம் துளிர்க்கவில்லை.

CIMG1956

CIMG1937பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் ஒரு மேடையில் மொத்தமாக நின்று ஆண்டவரை நோக்கி கதறுகிறார்கள். மற்றொரு மேடையில் அட்டூழியக்காரர்கள் அவர்களை கேலி செய்து அலப்பறை செய்கிறார்கள். சட்டென்று ஒரு ஒளி அவர்களை வீழ்த்துகிறது. மேடைக்கு மேல் அரங்கத்தில் வெளிச்சம் தோன்றுகிறது. புகை மண்டலமாக வானில் தேவதூதர்களோடு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து காட்சி தருகிறார். அப்போது அங்கிருந்து போட்ட வாணவேடிக்கை அட்டகாசமாகயிருந்தது. வேதாகமத்திலிருக்கும் வசனங்களை ஆண்டவர் சொல்கிறார்.

நாடகம் பார்க்கும்போது நம்மையறியாமல் ஒரு கணம் இக்காட்சி திகைப்பிற்குள்ளாக்கியது. எல்லாச் சமயங்களிலும் அதர்மம் மேலோங்கும் போது கடவுள் தோன்றுவாரென நம்பப்படுகிறது.

இயேசு சிலுவை சுமந்து கஷ்டப்பட்டுச் செல்லும் காட்சியைக் காண விரும்பவில்லை. அதுபோல் வந்த திரைப்படங்களையும் பார்த்ததில்லை, பார்க்க விரும்புவதில்லை. மனதிற்கு மிகுந்த சங்கடத்தைக் கொடுக்கும் என்பதால் நானும், நண்பனும் கிளம்பினோம். நண்பருக்குத் தெரிஞ்சவங்க குருத்தோலை கொண்டுவந்து கொடுத்தாங்க. இருவரும் அதை வாங்கி சிலுவை போலச் செய்து இருசக்கர வாகன முகப்பில் கட்டிக்கொண்டோம்.

CIMG1948

இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் மலைப்பிரசங்கம் பகுதி எனக்கு மிகவும் பிடிக்கும். பசுமைநடைப் பயணங்களினூடாக மலைகளுக்கு பயணிக்கும் போதெல்லாம் இயேசுவின் மலைப்பிரசங்கம் ஞாபகத்திற்கு வரும். தீய செயல்கள் மிகும்போது மட்டுமல்ல, நல்ல செயல்கள் மிகும்போதும் ஆண்டவர் உயிர்த்தெழுவார் என நம்புகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s