ஆலவாயின் எழில் கபாலி மலையிலிருந்து…

Posted: ஜனவரி 15, 2016 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

மாடக்குளம்

மதுரை ஆலவாய் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஆலம் என்றால் நீர்நிலை. ஆலவாய் என்றால் ‘நீர்நிலைகளுக்கு நடுவே அமைந்த ஊர்’ என்று மயிலை சீனி.வேங்கடசாமி கூறுகிறார். அந்தக்காலத்தில் வைகையும், கிருதுமால்நதியும் மாலை போல சூடியருந்தது மதுரை. மதுரையைச் சுற்றி ஏராளமான கண்மாய்களும், குளங்களும் இருந்துள்ளன. அவைகளில் தற்போது பாதிக்கும் மேல் ஆக்கிரமிப்பில் உள்ளது தனிக்கதை.

மதுரையில் உள்ள மாடக்குளம் கண்மாய் முக்கியமான நீர் ஆதாரமாக திகழ்கிறது. மாடக்குளம் அழிந்தால் மதுரையில் பாதி அழியும் என ஒரு சொலவடை உண்டு. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் சென்னையின் செம்பரம்பாக்கம் ஏரிபோல. சமீபத்திய சென்னை வெள்ளத்திற்கு பிறகான பசுமைநடை என்பதால் இம்முறை நீர்நிலைகளை அத்தியாவசியத்தை உணரும் பொருட்டு மாடக்குளம் கண்மாய்க்கு அருகிலுள்ள கபாலிமலைக்கு பசுமைநடையாக 10.01.2016 அன்று சென்றோம்.

பழங்காநத்தம் வழியாக மாடக்குளம் சென்றோம். மாடக்குளம் கண்மாய் கடல்போல நிரம்பியிருந்தது. வாகனங்களை மலையடிவாரத்தில் நிறுத்திவிட்டு குழுவாக மலையேறினோம். 500 க்கும் மேற்பட்ட படிகள். 200க்கும் அதிகமானோர் வந்திருந்தனர். மேலும், பசுமைநடைக்கு இம்முறை வெளிநாட்டிலிருந்து மதுரை லேடிடோக் கல்லூரிக்கு வந்திருந்த மாணவியர் 50 பேர் கிட்ட வந்திருந்தனர். எல்லோருக்கும் அந்த மலையும், கண்மாயும் உற்சாகத்தை தந்தது.

DSC_0894

DSC_0896

மலைமீது ஏறியதும் எல்லோருக்கும் ஏறிய களைப்பை போக்கும் விதமாக மதுரை 3600 கோணத்தில் காட்சி தந்தது. ஒருபுறம் தென்கால் கண்மாயும் திருப்பரங்குன்ற மலையும், திருக்கூடல்மலையும், பசு மலையும் மிக அருகில் தெரிந்தது. மறுபுறம் சமணமலை, நாகமலையும் தொலைவில் சிறுமலைத்தொடரும் தெரிந்தது. வயக்காடுகளை விட கான்கிரீட் காடுகள் நிறைய தெரிந்தன. எட்டாம்பிறைபோல மாடக்குளம் நிரம்பியிருந்ததைப் பார்த்ததும் சங்கப்புலவர் கபிலரின் பாடல்வரி நினைவுக்கு வந்தது. சங்கப்புலவர் கபிலர் நம்ம மதுரை திருவாதவூரில் பிறந்தவர்தான்.

மாடக்குளம்

அறையும் பொறையும் மணந்த தாய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தென்நீர்ச் சிறுகுளம் கீழ்வது மாதோ
தேர்வன் பாரி தன் பறம்பு நாடே.
– கபிலர்

கபாலிமலை

எல்லோரும் கபாலீஸ்வரி கோயிலுக்கு அருகில் கூடினோம். பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எல்லோரையும் வரவேற்றார். சென்னை வெள்ளத்திற்கு அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து செய்த நிவாரணப் பணிகள் குறித்து கூறினார். மேலும், அகரம், தி இந்து, புதியதலைமுறை இணைந்து நடத்திய யாதும் ஊரே கருத்தரங்கிற்கு சென்று வந்ததை பற்றியும் குறிப்பிட்டார். முதல்முறையாக எத்தனைபேர் வந்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது பெரும்பாலானோர் கைகளை உயர்த்தினர். பசுமலை மீதுள்ள நட்சத்திர உணவகத்தை விட அதிக நட்சத்திர அந்தஸ்து கொண்டது இம்மலை. ஆனால், நாம்தான் இலவசமாக கிடைப்பதால் இதை வந்து பார்த்து பயன்படுத்துவதில்லை. உங்கள் வீட்டிற்கு வரும் உறவினர்களை ஷாப்பிங் மால்களுக்கு அழைத்துச் சென்று காட்டுவதைவிட இதுபோன்ற மலைகளுக்கு அழைத்து வந்து காட்டுங்கள். உணவு எடுத்து வந்து குடும்பமாக அமர்ந்து உண்டு செல்லுங்கள் என்றார். மாடக்குளம் குறித்த கைப்பிரதி எல்லோருக்கும் வழங்கப்பட்டது. வெளிநாட்டிலிருந்து வந்த மாணவியருக்கு ஆங்கிலத்திலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து ஒரு துளி.

DSC_0925

மதுரை நகரைக் குறிக்கும் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுக்களில் மதுரோதய வளநாட்டில் மாடக்குளக்கீழ் மதுரை என வழங்கப்படுகிறது. மாடக்குளக்கீழ் மதுரை, மாடக்குளக்கீழ் திருப்பரங்குன்றம், மாடக்குளக்கீழ் அரியூர், மாடக்குளக்கீழ் குலசேகரபுரம், மாடக்குளக்கீழ் கொடிமங்கலம் என்று பல கிராமங்கள் குறிப்பிடப்படுகின்றன. இதன் மூலம் ‘குளக்கீழ்’ என்பது ஒரு நாட்டுப்பிரிவு வகையைச் சேர்ந்தது எனக் கருதலாம்.
மாடக்குளத்தை அடுத்து கிழக்கில் பழங்காநத்தம் என்னும் ஒரு பகுதி உள்ளது. இதன் பெயரே இது பழங்காலத்திலேயே மக்களின் குடியிருப்புப் பகுதியாகத் திகழ்ந்தது என்பதைக் குறிக்கும். பழங்கால நத்தம் என்பதே பழங்காநத்தம் என மருவியுள்ளது எனலாம்.

திருப்பரங்குன்றம்
எல்லோரும் மலையிலிருந்து மதுரை மாநகரை கண்டு களித்தனர். பனிமூட்டம் லேசாக விலகி மீனாட்சியம்மன் கோயில் கோபுரம் அழகாய் மிளிர்ந்தது. நிழற்படங்களை எடுத்து அங்கிருந்து கீழே இறங்கினோம். மலையடிவாரத்தில் இருந்த மரத்தடியில் கூடினோம். அந்த ஊரைச் சேர்ந்த பெரியவர் ஒருவரிடம் உரையாடிய போது மாடக்குளம் கண்மாய் நிறையாமல் சில வருடங்களாக விவசாயம் பொய்த்து போனது. சமீப காலமாக போராடி மாடக்குளத்தை நிறைத்திருப்பதாகவும் அதனால் தற்போது 200 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடைபெறுவதாகவும் அதன்மூலம் பெண்களுக்கு நிறைய வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

வயலும் வாழ்வும்

DSC_0952

DSC_0961
வெள்ள நிவாரணப் பணியில் பசுமைநடையுடன் இணைந்து செயல்பட்டதோடு பொருட்களை வைக்க இடம் கொடுத்த அரவிந்த் கண்மருத்துவமனை நிர்வாகிகளுள் ஒருவரான சித்ரா அம்மாவிற்கு பசுமைநடையின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. பசுமைநடையிலிருந்து 2016 நாட்காட்டி வெளியிடப்பட்டது. 12 மாதங்களுக்கும் 12 படங்கள். ஒவ்வொரு படமும் பசுமைநடையின் சாதனையை பறைசாற்றும். யானைமலை மீது, திருப்பரங்குன்ற மலைமீது, சித்தர்மலை மீது 250க்கும் அதிகமானோர் கலந்து கொண்டது பசுமைநடை பயணங்களில்தான் சாத்தியம் என்பதை அந்தப் படங்கள் உணர்த்தின. ஒரு நாட்காட்டியின் விலை 50 ரூபாய். எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது. திருச்சியில் இருந்து நண்பர் சுரேந்தர் இந்நடைக்கு வந்திருந்தார். எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல்முகாம் மூலம் பழக்கமான நண்பர். மேலும், என்னுடன் பணிபுரியும் நண்பர் சாலமன் இம்முறை வந்திருந்தார். அவர் எடுத்த படங்களைத்தான் இந்தப் பதிவில் பயன்படுத்தியுள்ளேன்.

DSC_0955

DSC_0966

நாட்காட்டி
மாடக்குளம் கண்மாயில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லில் காணப்பட்ட கல்வெட்டை காண பசுமைநடையாக முன்பு வந்தபோது மாடக்குளம் கண்மாயும், தென்கால் கண்மாயும் நீரின்றி வறண்டு கிடந்தது. இம்முறை நிறைந்துகிடந்த நீரைப் போல மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. நீர்நிலைகளை நாம் ஹெலிகாப்டரில் பறந்துபார்க்கும் வாய்ப்பு கிடைப்பது சாத்தியமில்லாத விசயம். ஆனால், அதைவிட அற்புதமான காட்சியாக அதைக்காண இயற்கை நமக்கு அளித்த கொடைதான் மலைகள். திருப்பரங்குன்ற மலைமீதிருந்து, யானைமலைமீதிருந்து, சமணமலைமீதிருந்து, சித்தர்மலைமீதிருந்து நீர்நிலைகளைப் பார்த்தது அருமையான வாய்ப்பு. எல்லோரும் வாய்ப்பு கிட்டும்போது நம் ஊரை, நம்மைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை இதுபோன்ற மலைமீதிருந்து பார்க்க வேண்டும்.

உதயகுமாரின் மாடக்குளம் நினைவலைகளோடு கூடிய பசுமைநடைப் பதிவையும் படித்துப் பாருங்கள். சுவையாக சிறுகதை போல பரிமாறியிருக்கிறார்.

பின்னூட்டங்கள்
 1. yarlpavanan சொல்கிறார்:

  2016 தைப்பொங்கல் நாளில்
  கோடி நன்மைகள் தேடி வர
  என்றும் நல்லதையே செய்யும்
  தங்களுக்கும்
  தங்கள் குடும்பத்தினருக்கும்
  உங்கள் யாழ்பாவாணனின்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

 2. முத்துக்கிருஷ்ணன் சொல்கிறார்:

  நண்பர் சுரேந்திர மட்டுமே அல்லாமல் இந்த நடையில் 30% பேர் புதியவர்கள், அவர்கள் அனைவரும் கைதூக்கிய அந்த காட்சி தான் இந்த பசுமை நடையின் ஆக மறக்கமுடியா தருணம். வழக்கம் போல் அல்லாமல் இந்த நடை புதிய பல காட்சிகளை நமக்கு வழங்கியது, அவைகளின் வழியே உயிர்ப்பான எழுத்தும் சாத்தியமாகி உள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s