சின்னக்கடைத்தெரு முஹைதீன் ஆண்டவர் சந்தனக்கூடு

Posted: பிப்ரவரி 19, 2016 in பார்வைகள், பகிர்வுகள்

மதுரையில் உள்ள தர்காக்களில் தெற்குவாசல் சின்னக்கடைத்தெரு முஹைதீன் ஆண்டவர் தர்கா புகழ்பெற்றது. தினந்தோறும் இங்கு வந்து மந்திரித்து முஹைதீன் ஆண்டவரை வழிபட்டுச் செல்வோர் ஏராளம். இஸ்லாமியர்களோடு இந்துக்களும் ஏராளமானோர் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த விசயம். முஹைதீன் ஆண்டவரை சிறப்பிக்கும் பொருட்டு ஆண்டிற்கு ஒருமுறை சந்தனக்கூடு மற்றும் கந்தூரி விழா நடைபெறுகிறது. சந்தனக்கூட்டிற்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

CIMG5337

சந்தனக்கூடு அன்று தெற்குமாரட் வீதியும், சின்னக்கடைத்தெருவும் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. சாலையோரங்களில் திருவிழாக்கடைகள் நிறைந்து காணப்படுகிறது. ஜிகர்தண்டா தொடங்கி பிரியாணி வரையிலும், பெண்களுக்கு அலங்காரப் பொருட்கள், சிறுவர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள், நேர்ச்சைக்கு கொண்டு செல்லும் பொருட்கள் என அந்த வீதியே நம்மை கவர்ந்து இழுத்துச் சென்றுவிடுகிறது.

CIMG5319

தர்ஹாவை நெருங்கும் முன்பே சாம்பிராணிப் புகை நம் நாசியைத் தொட்டு வரவேற்கிறது. தர்காவும், பள்ளிவாசலும் வண்ண, வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. சந்தனக்கூடு, சாம்பிராணி போடும் வண்டி, பெரிய மரக்கப்பல் ஊர்வலத்திற்கு தயாராய் நிற்கிறது. மரக்கப்பலை கீழவெளிவீதி வெற்றிலை மண்டி வியாபாரிகள் 1942ல் செய்துகொடுத்திருக்கிறார்கள். வீதியெங்கும் மக்கள் வெள்ளம். தெற்குவாசல் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் என்பதால் இன்னும் கூட்டம் அதிகமாகியது.

CIMG5331.JPG

சுடச்சுட சித்தரத்தை, பனங்கற்கண்டு போட்ட தேங்காய் பாலை வாங்கி ஒரு சிலர் குடித்து கொண்டிருந்தனர். அதற்கு அருகிலேயே ஆவி பறக்க கரைந்து கொண்டிருக்கும் பெரிய ஐஸ்கட்டி, நன்னாரி சர்பத், ரோஸ்மில்க் புட்டிகளோடு இருந்த வண்டியில் ஜிகர்தண்டா வாங்கிக்குடித்துக் கொண்டிருந்தனர் சிலர். தள்ளுவண்டியில் கீரைபோண்டா, உருளைக்கிழங்குபோண்டா, மிளகாய் பஜ்ஜி, பருப்பு வடை, உளுந்தவடை என சூடாகப் போட்டு தட்டுக்களில் தட்டிக்கொண்டிருந்ததை சின்னச்சின்ன தட்டுக்களில் வாங்கி சட்டி, சால்னாவோடு வயிற்றுக்குள் தள்ளிக்கொண்டிருந்தனர் சிலர்.

பூ விற்கும் அக்காமார்கள் ‘அக்கா! மல்லிப்பூ முழம் பத்துரூபாக்கா வாங்கிக’கா’ எனக் கூவிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் தங்களுக்கும் ஊர்வலம் வரக்காத்திருக்கும் சந்தனக்கூட்டிற்கும் பூக்களை வாங்கிகொண்டிருந்தனர் பெண்கள். பூக்கடைக்களுக்கு அருகிலேயே சர்க்கரை, பத்தி, சாம்பிராணியோடு நேர்ச்சை பொருட்களை வைத்து சர்க்கர பாத்தியா வாங்கிட்டு போகச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

பெரிய மூங்கில் கழியின் உச்சியில் வட்ட வட்டமாய் அழகாய் புல்லாங்குழல்களை அடுக்கி அதை ஊதிப்பாடியபடி விற்றுக்கொண்டிருந்தனர் வடநாட்டு இளைஞர்கள். கையில் வைத்து வானை நோக்கி சின்னச் சின்ன பாராசூட்டுகளை விட்டு சிறுவர்களை கட்டி ஈர்த்துக்கொண்டிருந்தனர் சிலர். விளக்கொளியில் தங்கத்தை விட மின்னிக்கொண்டிருந்தன தோடுகளும், சிமிக்கிகளும். அதை விசாரித்துக்கொண்டிருந்தனர் பெண்பிள்ளைகள். நாகூர் ஹனிபாவின் பாடல்கள், இஸ்லாம் இனிய மார்க்கம் போன்ற சி.டி.கள் ஒருபுறம், வளைந்து நெளிந்து அழகாய் அரபு எழுத்துகளில் மின்னும் குரான் வரிகள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒருபுறம் விற்றுக்கொண்டிருந்தார்கள். எல்லாக்கடையிலும் கூட்டம்.

CIMG5334

ஆங்காங்கே தென்னம்பாளையில் செய்த கப்பல்களை நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்காக விற்றுக்கொண்டிருந்தனர். தென்னம்பாளையின் நடுவில் ஒரு கம்பை வைத்து அதன் இருபுறமும் சரிகை நூல்களை கட்டி அடியில் வண்ண காதிதமொட்டியிருந்த அந்தக் கப்பல்கள் ஒவ்வொன்றும் அழகாய் இருந்தன. சந்தனக்கூடு மின்விளக்கொளியில் வண்ணமயமாய் நின்றது. அதற்கு எதிரில் தர்காவுக்கு சற்றுத்தள்ளி நின்றுகொண்டிருந்த சாம்பிராணி போடும் வண்டியில் சாம்பிராணி வாங்கிக் கொடுத்தேன். யானையில் குழந்தைகளை ஏற்றிக்காட்டுவதுபோல குழந்தைகளை அந்த சாம்பிராணிப் புகையில் காட்டி வாங்கிக்கொண்டிருந்தனர் பெற்றோர்கள். டேப் இசைத்துக் கொண்டு அல்லாவின் நாமத்தை பாடிக்கொண்டிருந்தனர் இறையடியார்கள்.

தர்காவினுள் நல்ல கூட்டம். வாசல் பந்தல்கால்களில் வாழைமரம் கட்டி பனையோலை கட்டி அலங்காரம் செய்திருந்தனர். திருவிழா மண்டகப்படி ஞாபகம் வந்தது. தர்காவினுல் நுழைந்தால் கோயில் முன்மண்டபங்களைப் போல திராவிடக் கட்டடக்கலையோடு இருந்தது. அன்றும் மந்திருக்க வந்தவர்கள் மந்திரித்து தாயித்துக் கட்டிக்கொண்டிருந்தனர். உள்ளே ரோசாப்பூ மாலையால் அலங்கரித்திருந்தனர். எல்லோரும் தங்கள் வேண்டுதல்களை முஹைதீன் ஆண்டவரிடம் சொல்லிக் கொண்டிருந்தனர். தர்காவுக்கு வலதுபுறம் தொழுகைப் பள்ளிவாசல் உள்ளது.

CIMG5330

சின்னகடைத்தெரு அலுமினிய சாமான்கள் விற்பனைக்கு பெயர் பெற்ற இடம். இங்கு தேனீர்கடைகளுக்கு தேவைப்படும் பாய்லர்கள், இரும்பு அடுப்புகள் கிடைக்கும். வீட்டின் முன்னால் மாட்டப்படும் தபால் பெட்டிகள், அலுமினிய உண்டியல்கள், மின்மோட்டார்களுக்கேற்ற அலுமினிய மூடிகள், அரிவாள்மனைகள், இரும்பு அடுப்புகள் ஒவ்வொரு கடையிலும் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. சின்னக்கடைத்தெரு பெரியகடைத்தெருவானது போல மாறிவிட்டது. இந்த சந்தனக்கூடும், கந்தூரியும் மக்கள் மனதில் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தெற்குவாசல் சந்தனக்கூடு திருவிழாவை எஸ்.அர்ஷியா ஏழரைப்பங்காளி வகையறா நாவலில் மிக அருமையாக பதிவு செய்திருக்கிறார். வாசித்துப்பாருங்கள். வாய்ப்பிருந்தால் வந்து பாருங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s