உண்டாங்கல்லு

Posted: பிப்ரவரி 28, 2016 in பார்வைகள், பகிர்வுகள்

undangal

மலைகளுக்கு சிறகுகள் இருந்ததாக ஒரு கதை உள்ளது. மலைகள் எல்லாம் பெரும் சிறகுகளோடு கூட்டங்கூட்டமாக பறவைகளைப் போல வலம் வந்து கொண்டிருந்தன. அதுவும் மதுரையைச் சுற்றி ஏராளமான மலைகள் பறந்து கொண்டிருந்தன. ஒரு மலை யானை போல ஆடியாடிப் பறந்தது. இன்னொரு மலை பாம்பு போல வளைந்து நெளிந்து பறந்தது. இன்னொரு மலை பசுப்போல அமைதியாக பறந்தது. இன்னொரு மலை கரடிப் போல சுற்றித் திரிந்தது. பெரிய உண்டாங்கட்டிப் போல ஒரு மலையும், சின்ன உண்டாங்கட்டிப் போல ஒரு மலையும் மேலே பறந்து திரிந்தது. அப்படி மலைகள் சுதந்திரமாகப் பறந்து திரிந்த வேளையில் இயற்கை தெரியாமல் மனிதனைப் படைத்துவிட்டது. கெட்ட சகுனம்போல மலைகள் தங்கள் சிறகுகளை இழந்து தரையில் விழுந்துவிட்டன. இப்போது அப்படிக் கிடப்பவைதான் நாம் பார்க்கும் மலைகள். நாயகன் கமல்ஹாசனிடம் கேட்பது போல மனிதன் நல்லவனா? கெட்டவனா? எனக் குழம்பி நிற்கிறது இயற்கை.

நம்பிக்கையின் கீற்று மூன்றாம்பிறைபோல ஆங்காங்கே ஒளிவிடத்தானே செய்கிறது. மலைகளை எல்லாம் வெட்டி வீசி வியாபாரம் செய்து கொண்டிருக்கையிலே ஒரு குழு அதைக் காக்க மலைகளை நோக்கி மாதந்தோறும் பயணிக்கிறது. இந்த முரண்தான் இந்த உலகத்தை காத்து நிற்கிறது.

mudhalaikulam

ஏற்கனவே சென்ற நடுமுதலைக்குளம் விக்கிரமங்கலம் உண்டாங்கல்லு மலையைக் காண பசுமைநடைக்குழு இம்முறை பிப்ரவரி 14 அன்று சென்றது. மலைகளின் காதலர்கள் மலைக்குத்தானே செல்ல வேண்டும். இத்தனைக்கும் அன்று நல்ல முகூர்த்ததினம் வேறு. அப்படியிருந்தும் 200பேர் கிட்ட வந்திருந்ததைக் கண்டு உண்டாங்கல்லே அசந்துபோனது. அதிகாலை மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம் முன்பாக பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எங்களுக்கு முன்னாலேயே வந்து நின்று கொண்டிருந்தார். அவரைப் போல சீடு மாணவமணிகளும் ஆறுமணிக்கு முன்னரே வந்திருந்தனர். அந்தப் பள்ளிப்பிள்ளைகளின் உற்சாகம்தான் மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.

2012 பிப்ரவரி 26ந்தேதி பசுமைநடையாக விக்கிரமங்கலம் சென்றிருந்தோம். நாலு வருடங்களுக்கு பிறகு மீண்டும் உண்டாங்கல்லு நோக்கிச் சென்றபோது கொஞ்சம்தான் அப்பகுதி மாறியிருக்கிறது. அதுவே மனதிற்கு நிறைவாயிருக்கிறது. செக்காணூரணி தாண்டிய பிறகு வழிநெடுக வயல்கள் வரவேற்கத்தொடங்கின. முன்பு சென்றபோது அறுவடையாகி இருந்த வயல்வெளிகளைக் கண்டது ஞாபகம் வந்தது. படுகையை முன்னரே சென்று கொஞ்சம் சுத்தம் செய்து வைக்கலாம் என்று நானும் நண்பன் கந்தவேலும் முன்னரே உண்டாங்கல்லு நோக்கிச் சென்றோம்.

vayal

அழகான சிறுகுளத்திற்கருகே உண்டாங்கல்லு மலை அமைந்துள்ளது. அந்த மலையின் நிழல் நீரில் விழுவது காட்சிக்கவிதை. நீரில் மிதக்கும் மலையை பார்த்துக்கொண்டேயிருக்கலாம். மலையடிவாரத்தில் வயல்களில் நெல் விளைந்து நின்றது. தென்னமரங்களிடையே உள்ள வரப்புகளில் ஏறி மலையின் மீது ஏறினோம். ஆளரவற்றிருந்த அந்தப் பகுதியில் பல அரிய பறவைகளைப் பார்த்தேன். பெயர்தான் தெரியவில்லை. மலையின் மீது கொஞ்சம் ஏறியதும் நண்பன் கந்தவேலை வருபவர்களுக்கு உதவியாக விட்டுவிட்டு மலையின்மீது தனியே ஏறிச்சென்றேன். ட்ட்ரி… ட்ட்ரி… என்ற சத்தத்தோடு நீண்ட கால்களைக் கொண்ட வெள்ளை நிறப்பறவையொன்று பறந்தது. அது ஆள்காட்டிப்பறவையென்று அறிந்துகொண்டேன். சரி, நாம் வருவதை மற்றவர்களுக்கு அறிவிக்கிறது எனப் புரிந்துகொண்டேன். உண்டாங்கல்லின் ஓரிடத்தில் மட்டும் ஏறிச் செல்வது கொஞ்சம் சிரமம். எப்படியோ தொத்தி ஏறிப் போய்விட்டேன். படுகையைக் கண்டபோது குடிமகன்களின் கைங்கர்யம் கண்டு நொந்துபோனேன். அப்புறம் அந்தக் கண்ணாடி பாட்டில்களை அப்புறப்படுத்திவிட்டு படுகையில் இருந்த குப்பைகளை சுத்தம் செய்தேன். வவ்வாலின் எச்சங்கள்தான் அதை அகற்றிவிட்டு மலையிலிருந்து தொலைவில் தெரிந்த வயல்களையும் மலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். கீழே பசுமைநடை நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி வந்து கொண்டிருந்தனர். சிறுவர்கள் ஆளுக்குமுதலாய் வந்து அவ்வளவுதானா இன்னும் ஏறணுமா எனக் கேட்டு அசத்தினர். எல்லோரும் வந்து படுகைகளை அங்குள்ள கல்வெட்டுக்களை பார்த்தும் படம்எடுத்தும் கொண்டனர். இத்தனை பேர்களை உண்டாங்கல் மலை இன்றுதான் பார்த்திருக்கும்.

பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் உற்சாகமாக வரவேற்புரையைத் தொடங்கினார். மேலும், பசுமைநடையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கந்தவேலின் பிறந்தநாளை எல்லோருக்கும் அறிவிக்க எல்லோரும் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பினர். கந்தவேலை பசுமைநடைப் பயணிகள் எல்லோருக்கும் தெரியும். அனைவரையும் வழிநடத்தி மேலே ஏற்றிவிடுவதிலும் அதைப்போல முடிந்தவுடன் எல்லோரையும் மலையைவிட்டு இறக்கிவிடுவதிலும் இவருடைய குரல் ஓங்கி ஒலிக்கும்.

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா நடுமுதலைக்குளம் விக்கிரமங்கலம் உண்டாங்கல்லு மலையின் தொல்வரலாற்றை வழக்கம்போல எளிமையாக எடுத்துரைத்தார்.

santhalingam.JPG

விக்கிரமங்கலம் சின்ன உண்டாங்கல்லு மலையிலுள்ள சிறுபொடவில் காணப்படும் தமிழ்பிராமிக் கல்வெட்டு வேம் பிற் ஊர் பேர்அய்அம் சேதவர். வேம்பத்தூர், மானாமதுரை செல்லும் வழியிலுள்ள சிறிய ஊர். அந்த ஊரில் பல கவிஞர்கள் வாழ்ந்துள்ளனர். வேம்பத்தூர் நாராயணன் என்பவர் திருச்சி மலைக்கோட்டையிலுள்ள குடைவரைக்கோயிலில் 100 பாடல்களை அந்தாதி வடிவில் பாடியிருக்கிறார்.  சிராப்பள்ளி அந்தாதி என்று பெயர். அவர் குடைவரைக் கோயிலை கல்பந்தல் என்கிறார். பல்லவ மன்னன் மகேந்திரன் கட்டிய குடைவரையிது. அதேபோல வேம்பத்தூரைச் சேர்ந்த மாம்பலக்கவிச்சிங்கராயர் சேதுபதிசபையில் பரிசுகளைப் பெற்றிருக்கிறார். இம்மலையிலுள்ள கல்வெட்டில் காணப்படும் வேம்பத்தூர் அந்த ஊரைத்தான் குறிக்கிறதா அல்லது இந்தப் பக்கம் இருந்து இப்போது பேச்சில்லா கிராமமான வேறு எந்த ஊரையும் குறிக்கிறதா எனத் தெரியவில்லை. ரெவின்யூ ரெக்கார்டில் மட்டும் பேர் இருக்கும், ஊரில் மக்கள் யாரும் வசிக்க மாட்டார்கள் அது போன்ற ஊர்களை பேச்சில்லா ஊர்கள் என்பார்கள்.

vikramangalam

நடுமுதலைக்குளம் உண்டாங்கல்லு மலையில் காணப்படும் கல்வெட்டில் இந்த ஊரைச் சேர்ந்தவர் ஒரு படுகை வெட்டிக்கொடுத்ததை அறியமுடிகிறது.

சமீபத்தில் இலங்கைக்கு மாணவர்களுக்கு வகுப்பெடுக்க சென்றிருந்தேன். இலங்கையில் தமிழ்பிராமிக் கல்வெட்டுக்கள் இரண்டாயிரம்கிட்ட உள்ளது. ஆனால், அவையெல்லாம் பவுத்தக்கல்வெட்டுக்கள். ஒரு சில கல்வெட்டுக்களில் சமணம் சார்ந்த சொற்கள் வருகின்றன. சிங்களம் அங்கு பத்தாம் நூற்றாண்டிற்கு பிறகுதான் வருகிறது. சிங்கள எழுத்துக்கள் படம்படமாக இருக்கும். அங்குள்ள தமிழ்பிராமிக்கல்வெட்டுக்களை காணும் போது ஒருகாலத்தில் தமிழகமும் ஈழமும் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கலாம்.

மேலும், அய்யா சொன்ன கல்வெட்டுத்தகவல்களையும், சேரன் பாண்டியன் வழித்தடங்களைப் பற்றியும் படங்களிலும், முந்தைய பசுமைநடைப் பதிவிலும் காண்க.

vikram

எல்லோரும் மலையிலிருந்து மெல்ல இறங்கினோம். மலையின் மறுபுறம் உள்ள குன்றின் அடிவாரத்தில் அனைவரும் உணவருந்தினோம். பசுமைநடை வெளியீடான மதுர வரலாறு, நீரின்றி அமையாது விற்பனைக்கு வைத்திருந்தோம். புதிய பயணிகள் அவைகளை வாங்கி வைத்துக் கொண்டனர்.

தொகுப்பு படங்கள் உதவி – செல்வம் ராமசாமி

Advertisements
பின்னூட்டங்கள்
  1. கவி தா (@kavitha129) சொல்கிறார்:

    நான் அங்கு போனதில்லை ஆனா கஸ்பா முதலைக்குளம் வழியாகப் போன பொழுது பார்த்திருக்கேன்
    படம் பிடித்திருக்கேன் சட்டியைக் கவிழ்த்து வைத்தாற் போல இருக்கும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s