கதிரறுப்புத் திருவிழா

Posted: ஏப்ரல் 14, 2016 in பார்வைகள், பகிர்வுகள்

kathirarupu mandabam

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவிற்குப் பிறகு பெருவிழாவாகத் தெப்பத்திருவிழா கொண்டாடப்படுகிறது. எல்லாத் திருவிழாக்களும் தீர்த்தவாரியுடன் நிறைவுறுமாறு கொண்டாடுவது வழக்கம். ஆனால், மதுரைத் தெப்பத்திருவிழாவில் தீர்த்தவாரிக்கு மறுநாள் புனர்பூச நட்சத்திரத்தன்று சிந்தாமணியில் கதிரறுப்புத் திருவிழாவும், திருமலைநாயக்கர் பிறந்த பூச நட்சத்திரத்தன்று தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது. இவ்விரு விழாக்களையும் ‘இராஜ உற்சவம்’ என கோயில் தலவரலாறு சொல்கிறது.

meenakshi

sivan

சிந்தாமணியில் கதிரறுப்புத் திருவிழாவிற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் செல்கின்றனர். மதுரையை ஆளும் பேரரசி தங்கள் கிராமத்திற்கு எழுந்தருளுவதால் அந்த ஊரில் அதைப் பெருவிழாவாக கொண்டாடுகின்றனர். தங்கப்பல்லக்கில் பிரியாவிடையுடன் சுந்தரரும், மற்றொரு தங்கப்பல்லக்கில் மீனாட்சியம்மனும் வருகின்றனர். கோயிலிலிருந்து சிந்தாமணி வரை மக்கள் ஆங்காங்கே நின்று இறைவனை வழிபடுகின்றனர்.

sinthamani

nathasvaram

அரிசி ஆலைகளும், அப்பளம் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த ஊரில் அதிகம். மீனாட்சி சுந்தரரை மேளதாளத்தோடு அழைத்துச் செல்கிறார்கள். மக்கள் எல்லோரும் திரளாக வந்து வரவேற்பு கொடுப்பதுபோல ஊர் ஆரம்பத்திலேயே கூட்டம் கூடிவிடுகிறது. கரும்பு, ஈச்சமரத்தின் ஓலை, பாக்குக்காய், கூந்தற்பனை இவைகளை கொண்டு திருக்கண்களை அழகுபடுத்தி வைத்திருந்தனர். ஒவ்வொரு திருக்கண்களிலும் சாமி எழுந்தருளியதும் பொங்கல், புளியோதரை, சுண்டல் வழங்குகிறார்கள்.

mandabam

thirukan

பலூன்காரர்களும், ஐஸ்வண்டிக்காரர்களும் நிறையப் பேர் வந்திருந்தனர். கதிரறுப்பு விழா நடக்கும் மண்டபத்தைச் சுற்றி ஏராளமான கூட்டம். கதிரறுப்பு நடக்கும் மண்டபத்திற்கு எதிரேயுள்ள திடலின் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறுவயல் போல நிலத்தை தோண்டி அதில் விளைந்த கதிர்களை ஊன்றி வைத்துள்ளனர். அதற்கு மேலே சுவரில் சொக்கர் படியளந்த சொர்க்க பூமி என்று போட்டிருக்கிறார்கள்.

kathir

கதிரறுப்பு மண்டபத்தில் தங்கப்பல்லக்கில் இருந்து சாமியை இறக்கி அங்குள்ள மண்டபத்திற்கு கொண்டு செல்கிறார்கள். அங்கு வைத்து ஆராதனைகள் ஆரம்பமாகிறது. ஊர்மக்கள் வரிசையாக வந்து சாமி கும்பிட்டுச் செல்கிறார்கள். கோயிலிலிருந்து கொண்டு வரும் ஈட்டி போன்ற கருவியை கோயில் பட்டர் கொண்டு செல்ல கதிர் அறுக்கிறார்கள். அவர் அறுத்து முடித்தவுடன் கூட்டம் அடித்து பிடித்து மீதமுள்ள கதிர்களை பறிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதன்பிறகு வெயில்தாழ மீண்டும் கோயிலுக்கு கிளம்புவார்கள்.

baloon

karubuசைவம் நிலவுடமை சார்ந்த மதம். மீனாட்சியம்மன் கோயிலுக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளதாக திருக்கோயில் மலரில் போட்டிருக்கிறார்கள். பண்பாட்டு அசைவுகள் நூலில் உள்ள தாலாட்டுப் பாடல் நினைவுக்கு வந்தது. அதில் மீனாட்சி நெல் விதைப்பது, சொக்கர் காத்திருப்பது, அழகர் சீர்கொடுப்பது பற்றியெல்லாம் வருகிறது. அதிலிருந்து சில வரிகள்.

மதுரைக்குத் தெற்கே

மழை பெய்யாக் கானலிலே

தரிசாக் கிடக்குதுன்னு – மீனாள்

சம்பாவ விட்டெறிஞ்சா

அள்ளி விதை பாவி – மீனாள்

அழகு மலைத் தீர்த்தம் வந்து

வாரி விதை பாவி – மீனாள்

வைகை நதித் தீர்த்தம் வந்து

சம்பா கதிரடித்து – சொக்கர்

தவித்துநிற்கும் வேளையிலே

சொர்ணக்கிளிபோல – மீனாள்

சோறுகொண்டு போனாளாம்

நேரங்கள் ஆச்சுதென்று – சொக்கர்

நெல்லெடுத்து எறிந்தாராம்

அள்ளி எறிந்தாராம்

அளவற்ற கூந்தலிலே

மயங்கி விழுந்தாளாம் – மீனாள்

மல்லிகைப்பூ மெத்தையிலே

சோர்ந்து விழுந்தாளாம்

சொக்கட்டான் மெத்தையிலே…

Advertisements
பின்னூட்டங்கள்
  1. KTS சொல்கிறார்:

    Thiruk kan means what?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s