மதுரை மீதான காதல் ஆதிகாலத்தொடர்பு. சித்திரை வீதிகளின் மீதும், சித்திரங்களின் மீதும் பால்யத்திலிருந்தே விருப்பம் இருந்தாலும் அது காதலாய் உருவெடுக்க ஓவியர் மனோகர் தேவதாஸ் அவர்களது கோட்டோவியங்களே காரணம். அவரைக் குறித்து ஆனந்தவிகடனில் படித்தபோது அவர் மீதான ஈர்ப்பு அதிகமானது. அவரது GREEN WELL YEARS வாங்கி வாசிக்க விரும்பினேன்.
ஆனால், முந்திக்கொண்டது MULTIPLE FACETS OF MY MADURAI. 2வது மதுரை புத்தகத்திருவிழா சமயம் அந்தப் புத்தகத்தில் உள்ள படங்களோடு வரவேற்பு பதாகைகள், விழா அறிவிப்புகள் வர அந்தப் புத்தகத்தை வாங்க விரும்பினேன். (அச்சமயம் அந்தப் புத்தகத்தின் விலை என் ஒருமாதச் செலவுக்கான தொகை) புத்தகம் ஆங்கிலத்தில் இருந்தாலும் அதிலுள்ள படங்கள் என்னை ஆட்கொண்டதால் வாங்கினேன். நேரங் கிட்டும்போதெல்லாம் அவருடைய சித்திரங்களைப் பார்ப்பதும், சில படங்களை வரைந்து பார்ப்பதும் வழக்கமானது. அதற்கடுத்து அவரது GREEN WELL YEARS எனது மதுரை நினைவுகள் ஆக தமிழில் வர, காத்திருந்தது ஒரு வகையில் நல்லதாய் போனது.
சில மாதங்களுக்கு முன் அரவிந்த் கண் மருத்துவமனையில் நடந்த ஓவியர் அ.பெருமாள் ஐயாவின் நூற்றாண்டு விழாவிற்கு மனோகர் தேவதாஸ் வருவதாக அழைப்பிதழில் பார்த்தேன். நாட்களை குறித்து வைத்துக் கொண்டு மூன்று நாளும் சென்று பார்த்தேன். அங்கு மனோகர் தேவதாஸ் அவர்கள் வரைந்த ஓவியங்களைப் பார்க்க முடிந்ததும், ஓவியங்கள் தொடர்பான அவரது பவர்பாயிண்ட் பார்த்ததும் மறக்க முடியாத நிகழ்வு. அவர் வரைந்த சித்திரங்கள் குறித்து சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். MULTIPLE FACETS OF MY MADURAI புத்தகத்தில் அவருடைய கையெழுத்துக் கேட்டேன். கண்பார்வை இப்போது மிகவும் பாதிப்படைந்திருந்தால் கையொப்பம் இட வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்துக் கொடுக்கச் சொல்லி கையெழுத்துப் போட்டுக்கொடுத்தார். நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் ஒருசேர என்னைச் சூழ்ந்தது. மூன்றாம் நாள் நிகழ்வின்போது மனோகர் தேவதாஸ் அவர்களிடம் என்னை சித்திரவீதிக்காரன் என அறிமுகப்படுத்தியதோடு நிழற்படம் எடுக்கவும் பசுமைநடை நண்பர் உதயகுமார் உதவினார். என் வாழ்வில் மறக்க முடியாத பொன்னான தருணங்களில் இதுவும் ஒன்று.
Thank you for your blog and continue your service
[…] மனோகர் தேவதாஸ் […]