பட்டவன் கதைப்பாடல்

Posted: ஜூலை 23, 2016 in பார்வைகள், பகிர்வுகள்
CIMG0578

பட்டவர்கள்

மா. கிருஷ்ணசாமியும் மலையாளச் சாமியும் காண்க. அதில் குறிப்பிட்டது போல வீரண மணியமும், முத்திருளாண்டி மணியமும் கிழக்குச் சீமையிலிருந்து சிறுவாலை சமீனிடம் காவல் வேலை பார்க்க வரும் வழியில் அரியூரிலும், கோயில் பாப்பாகுடியிலும் தங்கிவிட நேர்வது. காவல் பணியில் உயிர்விட்டு “பட்டவர்”களாகி விடுகிறதை வருணிக்கும் கதைப்பாடல் இங்கே:

பெரிய மணியமும் சின்ன மணியமும் மதுரை வருதல்

ஆதி கிழக்கு அகமுடையான் சீமை

சிவகங்கைப் பூமி சேதுபதி நன்னாடு

குந்திகுளமாம் குடியிருந்த ராயன்திடல்

பழையனூர் காடு பாறை மணல்மேடு

ஆற்றங்கரையும் அலங்காரமேடையும்

நந்தவனமும் நல்லதண்ணிப் பூங்காவும்

தென்னஞ் சோலையும் தீம்புனல் வாழையும்

வண்ண மருங்கில் வளம்பெற்ற கீழ்நாடு

வாழையும் மஞ்சளும் இடைவிடாது நெருங்கிய மாநகரம்

ஆலமரச் சோங்கு அடர்ந்திருக்கும் நந்தவனம்

தென்னைமரச் சோங்கு சேர்ந்திருக்கும் நந்தவனம்

மாவிளையும் கொய்யா மாதுளம் பண்ணைகளும்

மயில்கள் நிறைந்திருக்கும் மங்கள நாடு

குயில்கள் நிறைந்திருக்கும் குந்திகுள நாடு

சித்தர்கள் போற்றிவரும் செல்லவனக் காடு

பக்தர்கள் போற்றிவரும் பாறைவனக் காடு

பாறைவனக் காடுவிட்டு பகவானே வாரும் ஐயா

நீச்சல் குளமும் நிறைகுளத்து ஐயனும்

திருப்புவன கோட்டை புஸ்பவனக் காடுவிட்டு

மீனாட்சி பட்டிணத்தில் மேன்மைபெற வேண்டுமென்று

பழைய சொக்கநாதரை பணிந்துமே நான் வணங்கி

புட்டுத்தோப்பு மைதானம் எங்கள்

பாட்டன் தங்கியிருக்கும் நாளையிலே

தேசத்துக்கு அதிபதியாம் சிறுவாலை செமிந்தாராம்

காவலுக்கு வேண்டுமென்று அன்புடனே தான் அழைத்தார்

காவலுக்கு வந்த மகன்

கதை உரைப்பேன் இந்நேரம்

வீரண மணியம் அரியூர் சென்றது

இவ்வாறு புட்டுத்தோப்பு விட்டு சிறுவாலை செல்லும் வழியில் அப்பனும் மகனும் ஆளுக்கொரு திசையில் ஆளுக்கொரு பெட்டியைச் சுமந்துகொண்டு பிரிந்துவிட்டார்கள்.

இருளப்ப சுவாமியுடன் 21 தெய்வங்கள் அடங்கிய பெட்டியைச் சுமந்துகொண்டு அப்பன் வந்து சேர்ந்தது அலங்காநல்லூர் ரஸ்தா அரியூர் மந்தை ஐயன் படிவாசல். வீரண மணியம் பெட்டியை இறக்கி வைத்துவிட்டு அங்கிருந்த கோனாரிடத்தில் போய் வந்த விவரத்தைச் சொல்லி தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு பெட்டியைத் தூக்க பெட்டி கிளம்பவில்லை. இருளப்பனை வருந்தி அழைத்து வழிகேட்கும் வேளையில் இந்த ஆலயத்தில் இங்குதான் இருப்பேன் என்று சாமி சொல்லிவிட்டது. அந்த இடத்திலேயே பெட்டியை வைத்துவிட்டு கோனாரும் மணியமும் சிறுவாலை சென்று ஜமீந்தாரை வணங்கி நடந்த விவரத்தைச் சொன்னார்கள். அதைக் கேட்டு ஜமீந்தார் அவர்கள் “அரியூர் எங்கள் ஊர்தான்; கோனாருக்குக் காவலாய் இருந்து நாங்கள் மதுரைக்குச் செல்லும்போது வழியனுப்ப வேண்டும். உங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தருகிறோம். இருளப்ப சுவாமியை வணங்கி அந்த ஊரில் காவல் புரிந்து வாருங்கள்” என்று பணித்தார்.

 

ஐயன் படி வாசல் அரியூர் மந்தை

நீண்ட கரையும் நெடுங்கரையும் பாசானம்

பள்ளமடைப் பாசனம்

பகவான் இருக்கும் பாறை மணல்மேடு

ஊருக்குத் தென்கிழக்கே உசந்த தேர் மேடும்

பாறைத் திடலும் பக்கத்து மேடும்

உச்சித் திடலும் உசந்த தேர்மேடும்

காரைக்கிணறும் கட்டிடமும் தான் இருக்க

ஊறாக் கிணறும் உயர்ந்த பனை மரமும்

கட்டிடத்தில் நீ இருந்தால்

கலியுகத்தில் பேர் இல்லையென்று

மாளிகையில் நீ இருந்தால்

மாநிலத்தில் பேர் இல்லையென்று

அரண்மனையில் நீ இருந்தால்

அதிகாரம் தெரியாதென்று

இருளன் இருக்க இண்டஞ்செடிக்காடு

கருப்பன் இருக்க கருவேலம் பண்ணையும்

முகுந்தன் இருக்க மூங்கில் வனச் சோலையும்

தாயார்1 இருக்க சங்கஞ் செடி மேடையும்

மாதா2 இருக்க மாவலிங்கம் பண்ணையும்

ஐந்துவண்ணச் சோலையிலே

அமர்ந்திருக்கும் நாளையிலே

மலை3யை வடக்கே வைத்து

மாமலை4யைத் தெற்கே வைத்து

குளத்தை வடக்கே வைத்து

குத்த வைத்தார் முன்நாளில்

(1 – ராக்காயி; 2 – இருளாயி; 3 – அழகர்மலை; 4 – நாகமலை)

கோயில் பாப்பாகுடியும், சின்ன மணியம் இங்கு வந்து சேர்ந்ததும்

pillaiyarஆற்றில் எழுந்தருள வரும் வழியில் பூப்பல்லக்கு சோடிக்க அலங்காநல்லூரில் தங்கியிருந்த அழகர்பெருமானைத் தரிசிக்க அந்தணர் குடும்பம் அடங்கிய ஒரு கூட்டம் வந்துகொண்டிருந்தார்கள். வகுத்த மலையிலிருந்து வைகை நோக்கி ஓடிக்கொண்டிருந்த ஓடையில் நீரருந்திவிட்டுப் பார்க்கையில் அந்தணரின் குழந்தையைக் காணவில்லை. தேடிப்பார்த்து கிடைக்காமல் போகவே அவர்கள் அலங்காநல்லூருக்குச் சென்றுவிட்டார்கள். அன்றிரவு விநாயகர் ஒரு பெரியவரின் கனவில் தோன்றி “குழந்தை அதே இடத்திலேயே இருக்கிறது. காலையில் வந்து பாருங்கள்” என்று கூறினார்.

காலையில் வந்து பார்க்கும்போது அந்த இடத்தில் அழகர்பெருமான், இலட்சுமி, விநாயகர், கருப்பசாமி ஆகியோர் சிலைகளும், குழந்தையும், குழந்தையின் தாய், தகப்பன் வடிவில் இருவரும் இருந்தார்கள். வந்தவர்கள் எல்லோரையும் வணங்கி என்ன விவரம் என்று கேட்டார்கள். மனித ரூபத்தோடு இருந்தவர்கள் சிறுவாலை ஜமீந்தார் இங்கு வருவார்; அவரிடம் விவரத்தைக் கூறுங்கள் என்று கூறிவிட்டு மறைந்தனர்.

perumal enru sollapadum silaiஜமீந்தார் பல்லக்கில் வரும் வழியில் சந்தனம், பன்னீர் மணம் வரவே கூட்டத்தையும் பார்த்து என்ன விவரம் என்று கேட்டார். இவர்கள் நடந்ததைச் சொல்ல அங்கேயே தங்கி இருந்து பூசைகள் செய்துவரும்படி அந்தணரைப் பணித்தார். இப்படித்தான் கோயில்பாப்பாகுடி உருவானது.

புட்டுத்தோப்பு விட்டு புறப்பட்டுத் தகப்பனைப் பிரிந்த சின்ன மணியம் என்ற முத்திருளாண்டி மணியம் சிறுவாலைக்கு வழிகேட்க வகுத்த மலையைக் காட்டி வழி சொன்னார்கள். வரும் வழியில் அந்தணர் குடியிருந்த கோயில் பாப்பாகுடியில் பெட்டியை இறக்கிவைத்துவிட்டு அந்தணரிடம் நீரருந்திவிட்டு பெட்டியைத் தூக்க பெட்டி கிளம்பவில்லை. அந்தணர் ஆதரவுசொல்லி ஜமீந்தார் அவர்கள் வருவார்கள். அவரிட்த்தில் தெரிவிக்கலாம். எங்களுக்குக் காவலாக இருந்து வாருங்கள் என்று சொன்னார்.

Siruvaalai and other places பெயருடன்

ஜமீன்தார் வந்தவர் தந்தை அரியூரில் இருக்கும் விவரத்தைச் சொன்னார். சின்ன மணியம் அரியூர் சென்று தாயையும் தகப்பனையும் பார்த்து நடந்த விவரத்தைத் தெரிவித்து இருவரும் ஆளுக்கொரு இடத்தில் இருந்துவந்தார்கள். சிலகாலம் கழித்து அவர்களும் இங்கு வந்துவிட இருவரும் காவல் புரிந்து வந்த காலத்தில் கள்வர்களால் துன்புறுத்தப்பட்டு உயிரைத் தியாகம் செய்தார்கள்.

saamikal ellam

கோயில் சிறந்திருக்கும் கோயில்பாப்பாகுடி நகரில்

பார்ப்பனர்கள் வசித்துவந்த பாப்பாகுடி நகரில்

காவலுக்கு வந்த மகன்

கதை உரைப்பேன் இந்நேரம்

ஊர்காக்க வந்த மகன்

உயிரைத் தியாகம் கொடுத்தார்

பாதுகாக்க வந்த மகன்

பறிகொடுத்தான் தன் உயிரை

காவலுக்கு வந்த மகன் கயவர்களால்

ஐயன் படி வாசலிலே அமர்ந்தான் சிலையாக

அந்த வழிவம்சங்கள் அடிபணிந்து பாடுகின்றோம்

 

கம்மாக் கரையிலே அய்யனாராம்

கரைக்கும் கீழே பட்டவனாம்

அப்பனும் மகனும் இரண்டு பேரும்

ஐயன் பெருமாளைத் தான் வணங்கி

சோணைக் கருப்பனைத் தான் வணங்கி

ஊரைச் சுற்றியே காவல் புரிந்தார்கள்

காவலும் நல்லா புரிந்தவராம்

கணக்குள்ள எங்கள் மந்திரியாம்

பாரதம் மெத்தப் படித்தவராம்

பதவுரைகளும் சொன்னவராம்

முத்துக்குறிகளும் பார்த்தவராம்

முன்னே நடந்ததைச் சொன்னவராம்

கேட்ட குறிகளைச் சொன்னவராம்

கிருபை உடனே காத்தவராம்

பேரும் புகழும் பெற்றவராம்

பிள்ளைக் குறை தீர்க்க வந்தவராம்

சத்தியம் தவறாத உத்தமராம்

சஞ்சலங்கள் பல தீர்த்தவராம்

ஊருக்கு நன்றாய் உழைத்தவராம்

உயிரைத் தியாகம் செய்தவராம்

மூலக்கரையில் வீரபத்திரனாம்

முன்னே இருந்தது பெருமாளாம்

ஓடைக்கரையிலே அம்மச்சி ஆத்தாள்

உண்மை விளங்குதாம் குருநாதசாமி

எங்கள் குலத்தின் தெய்வங்களை

என்றுமே நாங்கள் போற்றிடுவோம்

CIMG0560

இவைபோக “பூதலத்தை ஓரடியால் அளந்த ரூபமானவா” என்று தொடங்கி சரணத்துக்குச் சரணம் “ராம ராம ராமனே” என்று முடியும் ராம தோத்திரப் பாடலையும் கிருஷ்ணசாமி பாடுவார். அதில்

“தானம் செய்தும் அறிகிலேன் தவங்கள் செய்தும் அறிகிலேன்

ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன்” என்றெல்லாம் உருக்கமாக வரும். அடிக்கடி “ஈசனே, சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே” என்று முடியும் பாடலையும் பாடுவார்.

(கைகளைத் தட்டி இவர் பாடுவதைக் கிண்டல்செய்து அவரைப் பார்க்கும் இடங்களில் பட்டப்பெயர் போல கை தட்டி ஒலியெழுப்பிப் புண்படுத்தியவர்களும் ஊரில் உண்டு என்பதையும் குறிப்பிட வேண்டும்)

இதே ஊரில் வேறு சாதிகளைச் சேர்ந்த இன்னும் சில பெரியவர்களிடம் இதே கதையின் வேறு வடிவங்கள், இன்னும் சில சாமிகளைப் பற்றிய வேறு சில கதைகள் இருக்கக்கூடும். இவரிடமே இன்னொரு தருணத்தில் பாடக்கேட்டு எழுதியிருந்தால் சில வார்த்தைகள் மாறியிருக்கலாம். சில சரணங்கள் கூடியிருக்கலாம்.

அன்னாருக்கு அஞ்சலி.

 

பின்னூட்டங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s