இன்னீர் மன்றலில் தொ.பரமசிவன்

Posted: ஓகஸ்ட் 15, 2016 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

2J0A0209

தொன்மையான இடங்களை நோக்கி மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை பயணித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பசுமைநடைக் குழுவின் ஐம்பதாவது நடையை இன்னீர் மன்றல் என பெருவிழாவாக ஆகஸ்ட் 14, 2015இல் மதுரை கீழக்குயில்குடி சமணமலையடிவாரத்திலுள்ள ஆலமரத்தடியில் நடத்தியபோது பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அய்யா பேசிய உரைத் தொகுப்பு.

எல்லோருக்கும் வணக்கம். ஆலமரத்தடியில் கூடியிருக்கிறோம். இந்த இடத்தோடு எனக்கு நாற்பது ஆண்டுகளாகத் தொடர்பு உண்டு. ஏனென்றால், இந்தப் பக்கத்திலே இருக்கிற ஆழ்வார் நகர் காலனியிலே இரண்டாண்டுகள் குடியிருந்தேன். அப்போது இருசக்கர வண்டியிலே வந்து மாலைநேரங்களிலே தனிமையாக புகைபிடித்துச் செல்வது வழக்கம். கூட்டம் ஒரு இன்பம் என்பது போல, அந்தத் தனிமையும் ஒரு இன்பம். மலையிலுள்ள மாதேவிப் பெரும்பள்ளியின் அடித்தளத்தை மேலே பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதை கண்டுபிடித்து Dr.வேதாச்சலம் படியெடுக்கிறபோது அதற்கு நானும் உதவி செய்தேன். அங்கிருந்த வட்டெழுத்துக் கல்வெட்டை தோண்டி மையூற்றிப் படியெடுக்கிறபோது நானும் உடன் இருந்தேன். அன்றிலிருந்து இந்த மலை எனக்கு ரொம்பப் பிரியமான மலை. செட்டிப்புடவிலே சிங்கத்தின் மீதிலே ஒரு பெண் தெய்வத்தைப் பார்க்கலாம். அது யட்சி. அவளுக்கு சிந்தாக்கியா என்று பெயர். மகாவீரருடைய யட்சி. அவதான் மகிஷாசுரமர்த்தினிக்கு முன்னோடி. அவள் என் கனவிலே கூட வருவது உண்டு. அவளை பற்றிய ஒரு தியான சுலோகப் பாடல் யாப்பருங்கலக்காரிகையில் வரும். “இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியின் எதிர்ந்த தானையை” என்று தொடங்குகிற அந்தப் பாடலைப் படித்துவிட்டு அந்த சிற்பத்தைப் பார்த்தால் சிற்பம் ரொம்ப அழகாத் தெரியும்.

2J0A0014

‘ஆல்’ என்ற வார்த்தைக்கே முதற்பொருள் தண்ணீர் என்பதுதான். ஐஸ்கட்டி மழை சிலநேரம் பெய்யும். சின்னப்பிள்ளைங்க ஓடி ஓடி பிறக்கியெடுக்கும். அதுக்கு என்னனு பத்திரிக்கைல பேரு போடுவாங்க? (கூட்டத்தினரை நோக்கி) ஆலங்கட்டி மழை. ‘ஆல்’ சொன்னா அதற்கு முதற்பொருளே தண்ணீர் என்பதுதான். தண்ணீரை நம் முன்னோர்கள் எவ்வளவு போற்றியிருக்கிறார்கள். கோயில் கட்டும் போது சில விசயத்த பார்த்துத்தான் செய்வான். மூர்த்தி, தலம், தீர்த்தம். இந்த மூன்றையும் பார்த்துத்தான் செய்தான். தண்ணீர் இல்லாத இடத்தில் பெருங்கோயில்கள் கட்ட முடியாது, கட்ட மாட்டார்கள். அதற்கு நல்ல அடையாளம் என்னன்னு கேட்டா இன்னை வரைக்கும் கோயில் கிணறுகளிலே தண்ணீர் வற்றியது கிடையாது. கோயில் பாழடைஞ்சு போயிருக்கும். ஆனா, அந்தக் கோயில் கிணற்றைப் போய் பார்த்தீங்கண்ணா, தண்ணீர் வற்றியிருக்காது. நிலத்தடி நீரை கண்டுபிடிப்பதிலே அவர்களுக்கு அவ்வளவு பெரிய ஆர்வம் இருந்திருக்கிறது. நம்முடைய முன்னோர்களுடைய இந்த அறிவையெல்லாம் நாம தொலைச்சுட்டோம். இப்படி நிறைய அறிவை தொலைச்சுட்டோம்.

நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் பற்றிக்கூட நமக்கு தெரியாம போச்சு. நம்ம தெருவுல குடியிருக்கிறவங்கள பத்தி நமக்கு தெரியாம போச்சு. நம்முடைய அப்பா காலத்திலே, தாத்தா காலத்திலே இப்படி இருக்காது. புதுசா ஒருத்தர் குடி வந்தாலே யாரு அந்தப் பையன் குறுக்க நெடுக்க போறான் யாரு? நாலாவது வீட்டுக்கு குடியிருக்க வந்துருக்கான் வாடகைக்கு. அதுபோல நம்மை சுற்றியிருக்கிற உயிர்வகைகளையும், பயிர் வகைகளையும் நாம தெரிஞ்சுகிட்டதே இல்ல. சமய சஞ்சீவின்னு ஒரு வார்த்தையை நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. இராமாயணத்திலே இலக்குவன் போர்களத்திலே மயக்கம் போட்டு விழுந்துட்டான். இவனை காப்பாற்றுவதற்கு சமய சஞ்சீவி (life saving drug) வேணும். அனுமன அனுப்புறாங்க. அவன்தான் காற்றினுடைய மகன். பறந்துபோயி அந்த மலைல மூலிகை எதுன்னு கண்டுபிடிக்க முடியாம அந்த மலையையே தூக்கிட்டு வந்துட்டான்.

2J0A0017

என்னிடத்திலே ஒரு மருத்துவர் – ராஜநாகக் கடிக்கு மருந்து கண்டுபிடித்த மருத்துவர் – என்னிடத்திலே சமயசஞ்சிவின்னா என்னான்னு கேட்டார். உயிர் போற சமயத்துல காப்பாத்துற மருந்துன்னேன். சீந்தில் என்ற ஒரு சொல்லை கேள்விப்பட்டுருக்கீங்களான்னார். நான் கேள்விப்பட்டிருக்கேன். சீந்தீல் என்பது ஒரு வகை கொடி. திருவள்ளுவமாலையிலே அதைப்பற்றிய பேச்சு இருக்கிறது. தஞ்சைமாவட்டத்திலே சீந்தில் கொடியை அறுத்துக் கொண்டு வருகிற சீந்தில் வலையர் என்றே ஒரு சாதி இருக்குன்னேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம். வீட்டுக்கு வாங்கன்னு கூட்டிட்டு போனார். வேப்ப மரத்துல ஒரு கொடிய தொங்கப்போட்டுருந்தார். ஒரு அங்குல கணம் இருக்கும். தண்ணீர் இல்ல மண்ணோட சம்மந்தமே இல்ல. அதுபாட்ல வளருது. இது தாங்க சீந்தில் கொடி. இதை கண்டுபிடிக்க முடியாம அனுமன் போய் மலையைத் தூக்கிட்டு வந்தான்னார். இந்த அறிவை எல்லாம் நாம தொலைச்சுட்டோம்.

சித்த மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் வந்து எனக்கு நன்றி சொன்னார். எனக்கு ஏன்னு புரியல. ஏன்னு கேட்டேன்?. ஐந்து வருசத்துக்கு முந்தி வந்து உங்க கிட்ட கொல்லி மலைல உள்ள தாவரங்களை ஆராய்சி பண்ணப்போறேன்னு சொன்னேன். ஏன் கொல்லிமலை போறீங்க? இந்த வல்லநாட்டு மலைல ஆய்வு பண்ணுங்கன்னு சொன்னீங்க. நான் இப்ப ஆய்வு முடிச்சுட்டேன். கற்தாமரைன்ற ஒரு தாவரம் இருந்ததை கண்டுபிடித்ததுதான் என் ஆய்வில் பெரிய விசயம்னார். இப்படி நிறைய விசயங்களை நம் முன்னோர்கள் கற்றுத்தந்தத நாம மறந்துட்டோம்.

2J0A9813

நான் அழகர்கோயிலைப் பற்றி ஆய்வு செய்தவன். அங்கே மாடு மேய்க்கிற பையன்கள் மலைல அருவிக்கு போகிற வழியில சின்னச்சின்னக் கொட்டைகளை வி(ற்)ப்பாங்க. பத்து பைசாக்கு மூணு அந்தக் காலத்துல, 1977ல. நான் ஒரே ஒருநாள் நம்பிக்கை இல்லாம தேள்கடிக்குன்னு ஒன்ன வாங்கிட்டு போனேன். மூணு கொட்டை பத்து பைசான்னு. நம்ம ஆமணக்கு விதை மாதிரி இருந்துச்சு. வாங்கிட்டு போன மறுநாளே ஒரு அம்மா தேள்கடிச்சுருச்சுன்னு கைய உதறிட்டே வந்துச்சு. இங்க வான்னு சொல்லி இந்தக் கொட்டைய உடச்சு கல்லுல தேச்சு லேசா அந்தக் கடிவாயில வச்சா, நம்ப முடியல ஐந்து மணித்துளிகளிலே தேள்கடி குணமாகிருச்சு. அடுத்து அழகர் கோயில் போறப்பலாம் அந்தக் கொட்டையும் தேடுவேன், பையன்களையும் தேடுவேன் காணல. இப்படி ஏராளமானதை நாம தொலைச்சுட்டோம். தொலைத்தோம் என்கிற ஞானம் இல்ல பாருங்க அதான் பெரிய கொடுமை. தொலைச்சுட்டோம்கிறதயாவது ஒத்துக்கணும்.

சித்தமருத்துவக்கல்லூரியில வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஒரு பேராசிரியருக்கு டி.வி.சாம்பசிவம் பிள்ளைங்கற பேர் தெரியல. 20,000 மூலிகைகளைப் பற்றி எழுதியிருக்கிறார். ஆமணக்குலயே பத்து வகையைப் பத்தி எழுதியிருக்கார். அவரு ஒரு போலீஸ்காரருங்க. 1930ல சித்தா மெடிக்கல் டிக்சனரின்னு தமிழ்நாடு அரசு வெளியிட்டுருக்கு. நல்ல வேளை சித்த மருத்துவத்துல ஆர்வமும், நம்பிக்கையும் உடைய அன்பழகன் அந்தத்துறைக்கு அமைச்சரா வந்து படியெடுத்து புத்தகமா போட்டார். 5 தொகுதி 6 புத்தகம். 7500 ரூபாய். ஆனா, அது கையில இருந்தா எந்த நோய்க்கும் மருந்து கண்டுபிடிச்சுரலாம். அது பற்றி மருத்துவக்கல்லூரி பேராசிரியர்களுக்கே தெரியல.

என்னிடம் ஜியோடெக்னாலஜி பேராசிரியர் சந்திரசேகர் பேசுறப்ப நான் அவர்ட்ட சாம்பசிவம்பிள்ளையோட அகராதி கேள்விப்பட்டிருக்கீங்களான்னு கேட்டேன். அவர் எழுந்து நின்று கை குலுக்கினார். அவர் சொன்னார். அதப்பத்தி என்னிடம் பேசுன முதல் ஆசிரியர் நீங்கதான். நான் அதவச்சு 2 Ph.D முடிச்சுட்டேன். அவர் செயற்கை ஊற்று தயாரிச்சவர். ஜியோடெக்னாலஜி பேராசிரியர், பாசில் Fossil என்று சொல்லப்படுகிற தொல்லெச்சங்களில் ஆர்வமுடையவர்.

இப்படி நிறைய தொலைச்சுட்டோம். மதுரைல இருக்குற நிறைய குளங்களத் தொலைச்சுட்டோம். எழுகடல் தெப்பக்குளம், கிருஷ்ணராயர் தெப்பக்குளம் இதுலயெல்லாம் தண்ணியிருந்து பார்த்தவங்க கம்மி. வண்டியூர் தெப்பக்குளத்திலேயே தண்ணியில்ல. மீனாட்சி தெப்பமாட வருதுன்னு சொன்னா வைகையாத்துலயிருந்து சாக்கடை நீரை அதிலே தேக்குறாங்க. ரொம்ப கொடுமையா இருக்கு. கடவுள் நம்பிக்கையில்லனாக் கூட அதப்பாத்தா இரத்தக்கண்ணீர் வருது. மீனாட்சி இந்தப் பாவிங்கள மன்னிக்கவே மாட்டாள் அப்படின்னு.

2J0A9847

நிறைய பச்சோந்திகள காணோம்னு சொன்னாங்க. அதுங்கதான் அரசியல்வாதிகளாவும், அமைச்சர்களாகவும் நம்ம தலை மேல ஏறி உட்கார்ந்துருக்காங்க. சிட்டுக்குருவிய காணோம். இராஜபாளையம் நாயைக் காணோம். இப்படி காணாமல் போன உயிரினங்களோட பட்டியலைக் கேட்டா அய்யா தியோடர் பாஸ்கரன் சொல்வாரு. இப்படி என்னத்தல்லாம் தொலைச்சுருக்கோம்னே நமக்கு தெரியாதுன்னா நாம தொலைப்பதற்கான தகுதியுடையவர்கள் மீட்டெடுப்பதற்கான தகுதியுடையவர்கள் இல்ல. என் பேனா தொலைஞ்சு போச்சுன்னு அதைக் கண்ட பிறகுதான தேடுவேன். தொலைஞ்சுதுங்ற நினைவேயில்லா நாம பேசாம போயிட்டேயிருப்பேன். மூணுநாள் கழிச்சு தேடுனா எங்க தொலைச்சோம்னு தேடிட்டு இருப்பேன்.

வரலாறு நெடுகிலும் இப்படி நிறைய சொலைச்சுட்டோம். சமணம் பற்றிய ஞானத்தை தொலைச்சுட்டோம். சுந்தர்காளி சொன்னதுபோல Post modernism சொல்றீங்கல்ல, பின்நவீனத்துவம். சமணர்களோட அனேகாந்தவாதம்தான். இதை சியாத்வாதம் சொல்வாங்க. Nothing is Static அதான். Valentine Danielனு ஒருத்தர், Fluid Signs ன்னு ஒரு முக்கியமான புத்தகம் எழுதியிருக்காரு. அதிகமாக மேற்கோள் காட்டப்படும் பாட்டு இருக்கே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா’ அது Post modernism. எதுவும் ஒன்றாக இருப்பதில்லை, எதுவும் திடமாக இருப்பதல்லை, எல்லாமே மாற்றங்களுக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறது. மாற்றங்கள் இயற்கையானவை. இந்தத் தத்துவத்தை முதலில் சொன்னவர்கள் அவங்கதான். அந்த பாட்டோட உட்பொருள் அனேகாந்தவாதம்தான். எதுவும் ஒன்றாக இருப்பதில்லை, எதுவும் திடத்தன்மையோடு இருப்பதில்லை. இது சமணர்கள் தந்த கொடை.

2J0A9869

அன்னதானம், ஞானதானம், அபயதானம், ஔசததானம். இந்த நாலும் இல்லேன்னா யுனெஸ்கோவே இல்லங்க. எல்லாவற்றிலும் பெரிய விசயம் அபயதானம். அஞ்சி வந்தவங்களுக்கு புகலிடம் கொடுப்பது. சிபி சக்ரவர்த்தி கதையெல்லாம் அங்க பிறந்ததுதான். அதான் அம்னெஸ்டி இன்டெர்நேஷனல் வச்சுருக்காங்கல்ல அங்க அஞ்சி வந்தவங்களுக்கு புகலிடம் கொடுப்பது, அகதிகளோடு உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிப்பது. அஞ்சினான் புகலிடம்னு சில ஊர்களை வைத்திருந்தார்கள் பழைய மன்னர்கள். அந்த ஊர் எல்லைக்கு போயாச்சுனா வலியவர் எளியவரை மெலிவு செய்ய முடியாது. தென்மாவட்டங்கள்ல பூதப்பாண்டி. ஜீவானந்தம் பிறந்த ஊர்.

லங்கணம் பரம ஔஷதம். பட்டினியே சிறந்த மருந்து என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி காட்டியதும் அவங்கதான். சங்ககாலத்துக்கு முற்பட்ட காலத்துல இருந்து சமணர்கள் வாழ்ந்து வந்த இடங்கள். இந்த மலைல உள்ள கல்வெட்டுல விசேசம் என்னுனு கேட்டா ஏழாம் நூற்றாண்டுல சம்பந்தர் சமணத்த அழிச்சுட்டார்ன்னு சொன்னது பொய்.

சம்பந்தர் அழிச்சுட்டார்னு சொன்னதுக்கு அப்புறமும் ஊர் ஊருக்கு சமணத்தை திரும்ப எடுத்துக்கட்டியதில் அச்சணந்தின்ற பெரியவர் ரொம்ப முக்கியமான ஆள். நிறைய சமணக்குகைகள்ல பக்கத்துல passport size அவர் சிலை வெட்டியிருப்பாங்க. கீழே “அச்சணந்தி செயல்”ன்னு ஒரு வார்த்தை இருக்கும். நிறைய ஊர்கள்ல இது இருக்கு. இங்கே அச்சணந்தியின் அம்மா. அந்தம்மா பேரு குணவதி. குணவதி, குணபாலன், குணசீலன், குணசீலி, தனபாலன் போன்ற பெயர்களும் குணம் சம்பந்தப்பட்ட, ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பெயர்கள் மக்கள் பெயர்கள் எல்லாம் சமணம் சார்ந்தவை. ‘அச்சணந்தி தாயார் குணவதியார் செய்வித்த திருமேனி’ன்னு ஒரு கல்வெட்டு இருக்கு. வட்டெழுத்து கல்வெட்டு. அச்சணந்தியோட அம்மாவும் சமணக்கொள்கைல ஈடுபாடா இருந்து அவங்களும் திருமேனி அமைப்பதற்கு உதவியிருக்கிறார்கள் என்பதற்கு அது அடையாளமாக உள்ளது. ‘அச்சணந்தி தாயார் குணவதியார் செய்வித்த திருமேனி’. உங்களையெல்லாம் அழைச்சுட்டுப் போய் காட்டணும் ஆசை. காலம் கடந்துவிட்டது.

DCIM100MEDIADJI_0031.JPG

சமணத்துக்கு நாம நிறைய கடன் பட்டிருக்கிறோம். வள்ளுவர்கூட சமணர்தான். சமணத்துக்கும் பௌத்துத்துக்கும் உள்ள முக்கியமான வித்தியாசத்த வள்ளுவர் சொல்லிக் கண்டிக்கிறார் பௌத்தர்கள. கொன்னாப்பாவம் தின்னாத் தீரும்கிறது பௌத்தம். கொலை பண்ணக் கூடாது, புலால் சாப்பிடலாம். கொல்லவும் கூடாது சாப்பிடவும் கூடாதுன்றது சமணம். நீ பத்து மணிக்கு கறி வாங்க வருவேன்னுதான ஆறு மணிக்கு அவன் கடைய திறந்து ஆடு அறுத்தான். வள்ளுவர் சமணர். சமணர்கள் எந்த அளவுக்கு அதிலே ஆர்வமா இருக்காங்கன்னு சொன்னா பையன புரோட்டாக்கடை பக்கம் பாத்தேன்னு சொன்ன பையனுக்கு பொண்ணு கிடைக்காது. அந்த ஒரு அறத்தை மட்டும் உயிரினும் மேலானதாக பாதுகாக்குறாங்க. எல்லா உயிர்களுக்கும் வாழ்வதற்கான உரிமம் உண்டுனு ஒத்துக்கிட்டது அவங்கதான்.

இந்த மலை உச்சியிலே தரைத்தளத்திலே ஒரு கல்வெட்டு இருக்கு. கன்னட மொழி கல்வெட்டு. சிரவணபெளகொலாலயிருந்து இங்க வந்த சமணத்துறவிய பாம்பு கடிச்சு இறந்து போனாரு. நான் தொல்லியல் துறைல வந்தவங்கட்ட கேட்டேன். பாம்ப அடிச்சிருப்பாங்கல்லன்னு, அடிக்கமாட்டாங்க. அதனோட இருக்கைக்கு ஓர் அர்த்தம் உண்டு. கடிச்சுருந்தா கூட அவங்க அடிச்சுருக்க மாட்டாங்க. அது பாட்டுக்கு தப்பிப்போயிருக்கு.எல்லா உயிர்களும் இருப்பதற்கு ஓர் அர்த்தம் உண்டு என்று ஒத்துக்கொண்ட உன்னதமான தத்துவம் நவீனம் சார்ந்தது அல்ல சமணம் சார்ந்தது.

இதுவொரு நல்ல விழாவாக பசுமைநடை விழாவை நான் பார்க்கிறேன். இவையெல்லாம் நமது சொத்துக்கள். நாம பாதுகாக்கணும். பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை இந்த பசுமைநடை செய்து வருகிறது. வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s