ஆறாட்டு (தீர்த்தவாரி) என்ற சொல்லைக் கேட்டவுடன் கேரள மாநிலத்தில் திருச்சூரில் யானை ஊர்வலத்துடன் நடைபெறும் ஆறாட்டுத் திருவிழாவே நினைவுக்கு வரும். தமிழ்நாட்டிலும் குளம், ஆறு, கடல் முதலிய நீர்த்துறைகளுக்குத் திருமேனிகளை எடுத்துச் சென்று நீராட்டும் வழக்கம் உள்ளது. இந்த ஆறாட்டு பெரும்பாலும் தைப்பூச நாளிலும், மாசி மகத்திலும் நடைபெறுகின்றது. தமிழகத்தின் ஆற்றங்கரைகள் அனைத்திலும் ஒன்றிரண்டு தைப்பூச மண்டபங்கள் அல்லது துறைகள் உள்ளன.
– தொ.பரமசிவன்
மதுரை வைகை ஆற்றின்(?) நடுவே மையமண்டபம் யானைக்கல் தரைப்பாலத்திற்கு மேற்கே அமைந்துள்ளது. பாலத்தைக் கடக்கும்போதெல்லாம் அந்த மண்டபத்தைப் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் எழும். எனக்கும் வெகுநாட்களாக அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் இருந்தது.
மாமதுரை போற்றுவோம் நிகழ்வில் மூன்றாம் நாள் வைகையைப் போற்றுவோம் நடந்தது. அதையொட்டி அம்மண்டபத்தைப் போய்பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. ஆனால், அம்மண்டபத்தின் வரலாறு, தொல்லியல் தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆசையை சமீபத்தில் சென்ற பசுமைநடை தீர்த்து வைத்தது.
ஓவியர் மனோகர் தேவதாஸ் தன்னுடைய “எனது மதுரை நினைவுகள்” நூலில் மையமண்டபம் குறித்த தனது நினைவுகளை பகிர்ந்து உள்ளதோடு அதைக்குறித்த அழகான சித்திரம் ஒன்றை வரைந்திருக்கிறார். அதில் அவர்கள் அக்காலத்தில் இம்மண்டபத்திலிருந்து கீழே மணலில் குதித்து விளையாடும் காட்சி காணக்கிடைக்கிறது. அதே போல ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருப்பு வெள்ளை படத்திலும் இம்மண்டபம் அழகாகயிருக்கிறது.
மதுரை அண்ணாமலைத் திரையரங்கம் முன்பு எல்லோரும் கூடினோம். அங்கிருந்து எல்லோரும் வைகையாற்றின் நடுவே அமைந்துள்ள மைய மண்டபம் நோக்கி நடந்தோம். திருமலைராயர் படித்துறையிலிருந்து திருவாப்புடையார் கோயில் பகுதியை இணைக்கும் பால வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானோர் முதன்முறையாக வைகை மைய மண்டபத்திற்குள் வருவதால் ஒருவித ஆர்வத்தோடு அதைப் பார்த்தனர். எத்தனை நாளாக பாலங்களில் செல்லும்போது பார்க்க வேண்டுமென்ற ஆவலோடு இருந்தார்களோ!
பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தனது உரையை வைகை அடைந்துள்ள சீரழிவுகளில் தொடங்கிப் பேசினார். “காவிரி பிரச்சனை உச்சத்தில் பந்த்கள், கடை அடைப்புகள் நடைபெறும் வேளையில் நாம் இங்கு கூடியிருக்கிறோம். நீர் சார்ந்த பிரச்சனைகளை மையமாகக் கொண்டு பசுமைநடை தனது 50வதுநடையை இன்னீர் மன்றல் என்ற விழாவாக ஆயிரம் பேரைக் கொண்டு அறிஞர்களை அழைத்து வந்து நடத்தினோம். மனிதகுலம் நிலைத்திருக்க தண்ணீர் அவசியம். மதுரையின் ஊர்ப்பெயர்களைப் பார்க்கும் போது நிறைய குளங்கள் இருப்பதை அறிய முடிகிறது. தல்லாகுளம், சொக்கிகுளம், பீ.பீ.குளம் என. நாம் இப்ப எல்லாக் குளங்களையும் அழித்துவிட்டோம். நவீன நாகரீக வரலாற்றைப் பார்க்கும்போது அரசாங்கமும் தனியாரும் போட்டி போட்டு குளங்களை எல்லாம் அழித்துவிட்டோம்.
மதுரையில் கே.கே.நகர் போன்ற பகுதிகளில் விசாரிக்கும் போது 500 அடி, 600 அடி என ஆயிரம் அடியை நோக்கி தண்ணீரை உறிஞ்சத் தொடங்கிவிட்டோம். நல்ல தண்ணி மட்டுமல்ல உப்புத்தண்ணியையே லாரிகளில் வாங்கி மாதம் மூவாயிரம் செலவளிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. வைகை மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி துவரிமான் – சமயநல்லூர் வரை ஆறாக இருக்கிறது. நம் கற்பனையில் ஆறு என்றால் தோன்றக்கூடிய நாணல், மணல் எல்லாம் பார்க்கலாம். மதுரைக்குள் நுழைந்ததுமே அதை நாம் சாக்கடையாக மாற்றி வைத்திருக்கிறோம். இலக்கியத்தில்தான் வைகை ஆறாக ஓடுவதைப் படிக்க முடிகிறது. எனக்கு விபரம் தெரிந்து இதில் நீர் ஓடி நான் பார்த்ததில்லை. ஆற்றை வெள்ளம் வரும்போது தண்ணீர் வரும் வடிகாலாக மாற்றி வைத்திருக்கிறோம். இந்த ஒட்டுமொத்த நகரத்தின் சாக்கடையை அள்ளிட்டு போவதல்ல அதன் வேலை. நாம் இன்று மிகப்பெரிய வளர்ச்சி, நாகரீகம் அடைந்துட்டோம் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையில்லை. ஆற்றை குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன. இம்மண்டபத்தின் வரலாற்று வகுப்புக்குள் நாம் செல்லலாம்”.
வைகை மையமண்டபத்தின் தொன்மை குறித்து வரலாற்றுப் பேராசிரியர் கண்ணன் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்.
மதுரைக்கு புதிதாக வருபவர்களும், வெளிநாட்டவர்களும் ஆற்றின் நடுவே அமைந்துள்ள இந்த மைய மண்டபத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றனர். மதுரை தெப்பக்குளத்தின் நடுவே அமைந்துள்ள மைய மண்டபம் போன்று இம்மண்டபமும் மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
வைகையாற்றில் நடுவே யானைக்கல் பாலத்திற்கு மேற்கே மையமண்டபம் என்றழைக்கப்படும் தீர்த்தவாரி மண்டபம் அமைந்துள்ளது. கி.பி16 அல்லது 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இம்மண்டபம் நாயக்கர் கால கட்டடக்கலையை பிரதிபலிக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் (சிவன்), மீனாட்சி உற்சவ மூர்த்தங்கள் வைகையாற்றில் இறங்கி தீர்த்தவாரி கொண்டாடுவதற்காக இம்மண்டபம் கட்டப்பட்டதாக தெரிகிறது.
மையமண்டபம் நான்கு பத்திகளை கொண்டுள்ளது. நடுவே உள்ள பத்தி அகலமாகவும் பக்கவாட்டிலுள்ள பத்திகள் குறுகலாகவும் உள்ளன. இம்மண்டபத் தூண்களில் தெய்வ உருவங்கள், விலங்கினங்கள் மற்றும் துறவிகளின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தில் நான்கு வகையான தூண் அமைப்புகள் காணப்படுகின்றன. ஆற்றில் வெள்ளம் போகும்போதும் சேதமடையாத அளவிற்கு நல்லதொரு அடித்தளத்தை கொண்ட இம்மண்டபம் ஆற்றில் மணல் அள்ளுதல், பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் தற்சமயம் மிகவும் சிதைந்து காணப்படுகிறது.
மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து தீர்த்தவாரிக்கு இறைவனும் இறைவியும் இங்கு வந்ததற்கு சான்றாக இம்மண்டபத்திற்கு தென்கிழக்கே உள்ள கிணறு மீனாட்சியம்மன் கோயிலால் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பால்குடம் எடுப்பவர்கள் இந்த கிணற்றுக்கு அருகில் இருந்துதான் கிளம்பிச் செல்கிறார்கள்.
பிற்காலப்பாண்டியர் காலத்தில் (கி.பி.1293ல்) பாண்டியர்களின் குறுநிலத்தலைவனான கங்கைகொண்ட சூரியத்தேவன் வாணாதிராயன் காலிங்கராயன் மதுரையில் திருவாலவாய் நாயனார் திருநாட்களில் தீர்த்தமாடி எழுந்தருள வைகையாற்றங்கரையிலேயே “காலிங்கராயன் திருமண்டபம்” கட்டுவித்தான் என்ற தகவலை கல்வெட்டொன்று தெரிவிக்கிறது. ஆனால் அம்மண்டபம் வைகையாற்றில் இன்று நமக்கு காணக்கிடைக்கவில்லை. இருப்பினும் நாயக்கர்காலத்தில் சுந்தரேஸ்வரர் ஆற்றில் தீர்த்தமாடி எழுந்தருள இம்மண்டபம் கட்டப்பட்டதாக தெரிகிறது. இங்குள்ள இரண்டு கயல்களின் புடைப்புச் சிற்பத்தைப் பார்க்கும்போது இது விசுவநாதநாயக்கர் காலத்தில் (16நூற்றாண்டு) கட்டப்பட்டிருக்கலாம் என யூகிக்க தோன்றுகிறது. இம்மண்டபத்தின் முகப்பிலுள்ள சிம்ம உருவங்கள், ராமர் சிலைகள் இவைகளை வைத்துப் பார்க்கும் போது இவை நாயக்கர்கால கட்டடக்கலையென அறிய முடிகிறது.
வண்டியூர்க்கு அருகில் உள்ள தேனூர் மண்டபமும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. அந்த மண்டபத்திற்கு அழகர் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கிறார். ஆரப்பாளையம் அருகில் வைகைக்கரையில் அமைந்துள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில் ஆண்டுதோறும் புட்டுத்திருவிழா வெகுசிறப்பாக ஆவணிமாதம் கொண்டாடப்படுகிறது.
சிதம்பரம் நடராஜர் மாசிமகத்தன்று கடலாடச் செல்வதற்கு கிள்ளை என்ற ஊரிலுள்ள கடற்கரைக்குச் செல்கிறார். சோழமன்னர்கள் காலத்தில் தலைவனொருவன் சாலை அமைத்து நன்னீர் குளங்களை வெட்டிவைத்துள்ளனர். அதைக் குறித்த கல்வெட்டில் மூன்று நன்னீர் குளங்கள் தொட்டான் என்று உள்ளது. 12ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட அக்குளங்கள் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வரும் போது நாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பரிபாடலில் பாடப்பட்ட வைகையைப் பாதுக்காக்க வேண்டாமா? வைகையிலிருந்து சுருங்கைகள் அமைத்து மீனாட்சியம்மன் கோயில் தெப்பக்குளத்திற்கு நீர் கொண்டு போனதற்கான தடயங்கள் உண்டு. இன்றளவும் மாசி மகத்திற்கு வரும் மீனாட்சி சுந்தரர் திருமலைராயர் படித்துறையிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் எழுந்தருளி ஆறாட்டு செய்து கிளம்புகின்றனர். நூறாண்டுகளுக்கு முன்பு இம்மண்டபத்தில் எழுந்தருளியிருக்கலாம் என்று தெரிய வருகிறது.
பேராசிரியர் கண்ணன் பேசியதைத் தொடர்ந்து அந்த மண்டபத்தை சிறப்பாக பராமரித்து வரும் அந்தப் பகுதி மாமன்ற உறுப்பினர்க்கு ‘மதுர வரலாறு – நீரின்றி அமையாது’ நூல் வழங்கப்பட்டது. அவர் அம்மண்டபத்தை தனிப்பட்ட ஆர்வத்தினாலும் பாதுகாத்து வருகிறார். அம்மண்டபத்தின் பின்னாலுள்ள மூன்று பெரிய கிணறுகள் இருந்ததாகவும் அவை தற்போது தூர்ந்து போய் விட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், மண்டபத்தின் பின்னாலுள்ள மரங்களை வைத்து பராமரித்து வருவதாகவும் கூறினார்.
பசுமைநடை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான உதயகுமார் “வைகையாற்றின் கரைகளில் மக்கள் இறங்கும்படியான இடங்களில் குப்பைகள் அதிகமாக உள்ளதாகவும், அதே போல ஆற்றின் நடுவே பாலங்கள் உள்ள இடங்களிலும் ஆறு மிகவும் சீரழிந்து உள்ளதாகவும்” குறிப்பிட்டு பேசினார்.
எல்லாரும் அம்மண்டபத்திலுள்ள சிற்பங்களையும், பழமையான கட்டடக்கலையையும் கண்டு களித்தோம். பேராசிரியர் கண்ணன் அவர்களோடு மேலதிகமான வரலாற்றுத் தகவல்களை உரையாடினோம்.
வைகை ஆற்றில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கொண்டு வந்து போட்டிருந்த விநாயகர் சிலைகளைக் கண்டு வருத்தமாகயிருந்தது. ஏற்கனவே, ஆறு பாழாகி கிடக்கும் வேளையில் ரசாயனப் பூச்சும், நல்ல களிமண்ணினாலும் செய்யாத இந்த சிலையால் ஆறும், நீரும் மேலும் கெடத்தானே செய்யும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பெண்கள் கலந்து கொள்ள முடியுமா? அந்த ஊர்வலத்தில் பக்தி இருக்கிறதா? அதில் வரும் இளைஞர்களின் ஆவேசத்தையும் அவர்களின் தலையில் கட்டியுள்ள வண்ணக் கொடிகளையும் பார்க்கும்போது அச்சமாக இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். களிமண்ணில் பிள்ளையார் செய்து சாதாரணமாக கிடைக்கிற எருக்கம்பூவையும், அருகம்புல்லையும் போட்டு வழிபடுவது எவ்வளவு நன்றாக இருக்கிறது. சிந்திக்க வேண்டிய விசயம்.
பசுமைநடை முடிந்து வைகை யானைக்கல் தரைப்பாலத்தில் வந்த முளைப்பாரி ஊர்வலத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வீடு திரும்பினோம். வைகையை மட்டுமல்ல, மற்ற ஊர்களிலுள்ள நீர்நிலைகளையும் காப்பது நம் கடமை என்று சொல்வதைவிட அத்தியாவசியத் தேவை.
படங்கள் உதவி – பாடுவாசி ரகுநாத், சாலமன், பாபு, செல்வம் ராமசாமி, கூகுள்
நீரின்றி அமையாது உலகு… நம்மைப் போன்ற மனிதர்களால் அழியும் உலகு…
[…] வைகை மையமண்டபம் […]
மிக அற்புதமான பதிவு