மேற்கிலிருந்து வந்த செம்பரிதி

Posted: பிப்ரவரி 20, 2017 in பார்வைகள், பகிர்வுகள்

62

மதுரை ரயில்நிலையம் திருவிழாப் போல களைகட்டியிருந்தது. அவரை வழியனுப்ப ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.  அவரை அறியாதவர்கள் கூட கேட்டறிந்து வந்து வணங்கி நின்றார்கள். நீலநிற கவுனும், பழுப்புநிற சிகையும், கண்ணாடிக்கு உள்ளிருந்து தீர்க்கமான பார்வையும், உதட்டில் புன்சிரிப்புமாய் தன்னை நோக்கி வருபவர்களின் கரம் பற்றி நெகிழ்வோடு விடை கொடுத்துக் கொண்டிருந்தார் அவர். அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் பிறந்து பெண் கல்விக்காக தம் வாழ்வை அர்பணித்த கேட்டிவில்காக்ஸ் அம்மையார்தான் அவர். ரயில் புறப்படும் போது வாசலருகே வந்து நின்று கேட்டி அம்மையார் கையசைத்த போது அவரது பிரிவை எண்ணி எல்லோர் கண்களிலும் நீர் துளிர்த்தது.

ரயிலில் சன்னலோரம் அமர்ந்து நகரை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தார். நாற்பதாண்டு கால மதுரை வாழ்க்கை அவரையும் இந்நகரோடு நெருக்கமாக்கியிருந்தது. ரயில் மெல்ல நகர்ந்து செல்லச் செல்ல ஹார்வி(மதுரா) மில், கேப்ரன்ஹால் பள்ளி, வைகையாறு, செல்லூர் கண்மாய் அதைத் தாண்டி தொலைவில் தெரிந்த பனந்தோப்பையும் பார்த்துக் கொண்டே சென்றார். அந்த இடங்களுக்கும் அவருக்குமான தொடர்பு சொல்லுக்கடங்காது. ரயில் கரிசல்குளத்தைக் கடக்கும் போது பாத்திமா கல்லூரியைப் பார்த்த போது மதுரையில் பெண் கல்வி நன்றாக வேரூன்றிவிட்டதாக உணர்ந்தார்.

ரயில் முன்னே செல்லச்செல்ல அவர் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி நகர 1915இல் கார்த்திகை மாதத்தில் முதன்முதலாக மதுரைக்கு வந்த காட்சிகள் நினைவிற்கு வந்தன. மதுரையை நெருங்கும் போது கூடவே நாகம் போல நீண்டு தெரிந்த மலை, நீர்நிறைந்த கண்மாய்கள், வயலில் களை பறித்துக் கொண்டிருந்த பெண்கள், பெருக்கெடுத்து ஓடிய வைகைக் காட்சிகள் மெல்ல, மெல்ல நினைவுக்கு வந்தன. ஆற்றுப்பாளையம் பகுதியிலிருந்த பள்ளி நோக்கி சென்ற வழியில் பார்த்த வீடுகளிலெல்லாம் விளக்கேற்றி வைத்திருந்தார்கள். இரயிலை விட்டிறங்கி காரை வீடுகளிலிருந்து கூரை வீடுகள் வரை; வாசல், கிணற்றடி, மாட்டுக்கொட்டம், மரத்தடி வரை; வெண்கல விளக்குகளிலிருந்து மண்குழியாஞ்சுட்டி வரை விதவிதமான விளக்குகளை பார்த்துக்கொண்டே வந்தார். உடன்வந்த ஆசிரியையிடம் யார், என்ன என்று விசாரித்த பாட்டி ஒன்று கைகளை தூக்கி கேட்டியின் முகத்தருகே கொண்டு சென்று நெட்டி முறித்து ‘தாயி! மகராசியா இரும்மா!’ என வாழ்த்தியதையும், மொழி புரியாவிட்டாலும் மேல்முழுக்க சுருக்கங்களோடு பொக்கைவாய் சிரிப்போடு வாழ்த்திய பாட்டியின் கைகளை அன்போடு பிடித்துக் கொண்டதையும் நினைவுகூர்ந்தார் கேட்டி.

அச்சமயம் ரயில் மதுரையைக் கடந்திருந்தது. அருகிலிருந்த சகபயணியொருவர் ஆனந்தவிகடனை பக்கத்திலிருந்தவரிடம் காட்டி சில்பி வரைந்த சித்திரத்தைக் சிலாகித்துக் கொண்டிருந்தார்.

30.jpg

லேடிடோக் கல்லூரியிலிருந்து அவருக்கு கொடுத்த நினைவுப்பரிசை எடுத்து பிரித்துப்பார்த்தார். அதில் அவரே ஆச்சர்யப்படும்படி அவரது பல நிழற்படங்களும், அதற்குப் பக்கத்தில் அவரைக் குறித்த பலரது நினைவுகளும் எழுதப்பட்டிருந்தன. ஒவ்வொரு பக்கமாக திருப்பிப் பார்க்கும் போதும் காலம் கரைந்து ரயிலைவிட வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. மேரிநாய்ஸ் உடன் கேட்டி எடுத்த நிழற்படத்தைப் பார்த்ததும் கேட்டி கேப்ரன்ஹால் பள்ளிக்கு முதல்முதலாக சென்ற நாளுக்குள் நுழைந்தார். அப்போது அப்பள்ளி முதல்வராகயிருந்த சகோதரி மேரிநாய்ஸ் அவரை ஓடிவந்து கட்டிப்பிடித்து வரவேற்றதோடு, கடவுள் அனுப்பி வைத்த தேவதை எனச் சொன்னதையும் மறக்கமுடியுமா என்ன? கடவுளின் குரலை ஏற்று மிஷினரிக்கு சேவை செய்யத் தொடங்கி நாற்பதுக்கும் மேலான ஆண்டுகளை கடந்து பயணித்துக் கொண்டிருந்தார். ரயில் செல்லச் செல்ல வெயில் மெல்ல ஏறிக் கொண்டே வந்தது.

68_1.jpg

ஒவ்வொரு படங்களுக்கு பக்கத்திலும் அவரைப் பற்றி எழுதப்பட்ட வரிகளை வாசித்தார். ஆங்கிலத்தையும், கணிதத்தையும் கதைபோல, விளையாட்டு போல சொல்லிக்கொடுத்த அவரது கல்வி முறையால் அப்பாடங்கள் மீது விருப்பம் வந்ததை எழுதியிருந்தார் கேப்ரன்ஹால் பள்ளியின் முன்னாள் மாணவியொருவர். அதேபள்ளியின் ஆசிரியையொருவர் கேட்டியைப் பார்த்துத்தான் சேரிகளுக்கு சென்று சமூகசேவை செய்துவருவதாக எழுதியிருந்தார். கேட்டியிடம் பியானோ கற்ற ஓ.சி.பி.எம்.பள்ளி ஆசிரியை தனக்கிருந்த மனக்குழப்பத்தை அந்த இசை மீட்டதை குறிப்பிட்டிருந்தார். மதுரையில் முதன்முதலாக பள்ளிப் பேருந்தை கொண்டு வந்ததை பெருமையாக குறிப்பிட்டுருந்தார் நாய்ஸ் பள்ளி ஆசிரியையொருவர். பூனை போன்ற விலங்குகள் மீதான கேட்டியின் பாசம் தங்களையும் தொற்றிக் கொண்டதாக லேடிடோக் கல்லூரி மாணவி எழுதியதைப் படித்து மெல்ல புன்னகைத்துக் கொண்டார்.

63.jpg

ரயில் தடக்தடக்கென திருச்சி காவிரியாற்றைக் கடந்து கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் ஏதோ விழா போல மக்கள் கூடியிருந்ததைப் பார்த்தார். வைகையாற்றங்கரையில் புட்டுத்திருவிழா காட்சிகள் அவருக்கு நினைவுக்கு வந்தன. கேப்ரன்ஹால் பள்ளிக்கு சற்றுத்தொலைவில்தான் புட்டுத்தோப்பு மண்டபம் இருந்தது. அதைநோக்கி தம்பட்டமாடு, கோயில்யானை முன்செல்ல கைலாய வாத்தியம் இசைத்து அடியவர்கள் ஆடிவர சாமி உலாப்போவதைப் பார்த்ததுண்டு. அதைக்குறித்து மாணவிகளிடம் உரையாடியபோது புட்டுத்திருவிழா கதையை சொன்னார்கள். வைகையில் வெள்ளம் வந்து கரையடைக்க வந்த சிவனின் கதையை ரசித்துக் கேட்டார். அவருக்கு நாடகம், நடிப்பு இவைகளில் எல்லாம் விருப்பம் அதிகம். அதேவேளையில் ஆற்றில் வெள்ளம் வந்தால் அக்கரையில் உள்ள மாணவிகள் பள்ளிக்கு எப்படி வருவார்கள் என்ற அக்கறையும் மனதில் உதித்தது அப்போதுதான்.

ரயிலில் எதிரேயிருந்த ஒருவர் அருகிலிருந்தவரிடம் எம்.ஜி.ஆரின் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மதுரை வீரimg-20170209-wa0001ன் படங்களின் வெற்றியை பற்றி மகிழ்வாக பேசியபடி வந்தார். இந்த ஊர் மக்கள் நடிகர்கள் மீதும், திரைப்படங்கள் மீதும் கொண்டிருந்த அபிமானத்தை வியந்து பார்த்தார்.வேடிக்கை பார்த்தபடி வந்த கேட்டியின் நாசியில் மெல்ல பனங்கிழங்கு வாசம் அடித்தது. அந்த வாசம் அவரை தல்லாகுளம் அருகிலுள்ள பனந்தோப்பிற்குள் கொண்டு சென்றது.

மேரி நாய்ஸூம், கேட்டியும் கோரிப்பாளையம் வரை டி.வி.எஸ் பேருந்தில் சென்றது, அங்கிருந்து இறங்கி குதிரை ஜட்கா வண்டியில் ஜம்புரோபுரம் பகுதியை அடைந்தது, அப்பகுதியில் வாழ்ந்த மக்களிடம் உரையாடியது, மெல்ல பனந்தோப்பினூடாக நடந்து வந்து சொக்கிகுளம் கண்மாய்கரை அரசமரத்தடியில் அமர்ந்தது எல்லாம் அவர் நினைவிற்கு வந்தன. அங்கு வைத்துதான் அவர்கள் ஆற்றுக்கு வடபுறம் கட்ட வேண்டிய பள்ளி கல்லூரி குறித்து திட்டமிட்டார்கள். எதிர்பாராத விதமாக சில வருடங்கழித்து மேரிநாய்ஸ் காலமாக, கேட்டி வில்காக்ஸ் கேப்ரன்ஹால் பள்ளி தலைமைப் பொறுப்பேற்றார். தங்கள் கூட்டுக்கனவான பள்ளி கட்ட நிதி திரட்டப் பெரும்பாடு பட்டார். அமெரிக்காவிலிருந்து நிதி வருவதிலும் நிறைய சிக்கல்கள் இருந்ததால் பெரும் செல்வந்தர்களிலிருந்து முன்னாள் மாணவிகள் வரை தேடிச் சென்று சந்தித்து நிதி திரட்டிய நாட்கள் நினைவிற்கு வந்தன. ஓ.சி.பி.எம் பள்ளியை ஏற்படுத்தியதும், அதன்பின் ஆங்கிலவழியில் கற்க ஒரு மேலும் ஒரு பள்ளியையும் கட்டி அதற்கு சகோதரி நாய்ஸ் பெயரை வைத்ததுமான நினைவுகள் நிறைவை அளித்தன.

ரயிலில் கூட்டம், கூட்டமாக வேலைக்கு செல்பவர்கள் ஏறத் தொடங்கினர். அவர்களைப் பார்த்தபோது வேலை பார்க்கும் இடத்திற்கே ரயிலில் தொழிலாளர்களை அழைத்து வந்த மதுரை ஹார்விமில் நினைவு எழுந்தது. அக்காலத்தில் ஹார்வி மில் மதுரையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பணியாளர்கள் வசிக்க திருப்பரங்குன்றம் அருகே ஹார்வி பட்டி உருவாகி அவர்கள் வந்து போக வசதியாக ரயிலும் ஓடியது. அங்குதான் கல்லூரிகட்ட பெருநிதி அளித்த ஜேம்ஸ்டோக் – ஹெலன் டோக் தம்பதிகளை சந்தித்து உரையாடுவார்.

88

ரயிலில் சன்னலோரம் வேடிக்கை பார்த்தபடி வந்த கேட்டி ஊர்தோறும் கம்பங்களில் பல வண்ணங்களில் கட்சிக் கொடிகள் பறப்பதைப் பார்த்தார். அந்தக் கொடிகளைப் போல அவர் நினைவும் 1948ற்கு பறந்தது. இந்தியாவின் முதலாவது சுதந்திர தினக் கொண்டாட்டமும், லேடிடோக் கல்லூரி தொடங்கி ஒரு மாத நிறைவும் ஒன்றாக வந்த காலமது. மாணவியர் பல்வேறுவிதமான கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். பாரதியின் ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே போன்ற பாடல்களை பாடி ஆடினர். அதைப்பார்த்துக் கொண்டிருந்த கேட்டி தமிழகத்திற்கு முதன்முதலாக பாரதியின் பிறந்த தினத்தன்று வந்தது, காந்தி மதுரையில் அரையாடைக்கு மாறியது அக்கால பள்ளி மாணவிகளிடம் உரையாடியது, கேப்ரன்ஹால் பள்ளிக்கு அருகிலுள்ள திலகர் திடலில் தலைவர்கள் உரைவீச்சு நிகழ்ந்தெல்லாம் ஞாபகம் வந்தது. அவர் மாணவிகளிடம் உரையாற்றும்img-20170212-wa0018 போது சுதந்திரம் என்பது எல்லோருக்கும் சமமாய் விளங்க வேண்டும். பெண்களுக்கு கல்வி, சமத்துவமாய் அமைய வேண்டும் என்றார். எண்பது மாணவிகளும் அவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் கேட்டியின் உரைக்கு எழுந்து நின்று கரவொலியெழுப்பினர். அவர் நினைவைக் கலைக்கும் விதமாக ரயிலைப் பார்த்து கையசைத்து பள்ளிச் சிறுவர்கள் ஆரவாரம் செய்ததைப் பார்த்தார். காமராசர் முதல்வரான பிறகு ஏராளமானோர் பள்ளிக்கூடங்களுக்கு செல்லத்துவங்கிய காலம்.

121.jpg

மேற்கே சூரியன் ஆரஞ்சு பழம் போல கனிந்து நின்றது அவர் நினைவுகளைப் போல. லேடிடோக் கல்லூரியின் காலேஜ் ஹால் மேல்தளத்தில் நின்றபடி மாலை வேளைகளில் தொலைவில் மலைகளினூடாக மறையும் சூரியனை, கதீட்ரல் தேவாலயத்தின் சிலுவையை, சொக்கிகுளம் கண்மாயில் கூடடைய வரும் பட்சிகளின் அரவத்தை, குவிமாடங்களுடன் கோட்டை போன்ற ஓ.சி.பி.எம் பள்ளியின் மேல்தளத்தை பார்த்து ரசிப்பார். “பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்; வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல்” என்ற விவிலிய நீதியின் புதிய விளக்கமாய், தமது பொன்னையும் வெள்ளியையும்  இல்லாதவர் ஞானமும் கல்வியும் பெற செலவழிப்பதே வாழ்க்கையின் பொருள் என்பதாக உணர்ந்தார்.

img-20170209-wa0002

ரயில் சென்னைப் பட்டினத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அங்குலத்திலும் உறைந்த தொன்மமும், உயிர்ப்பின் துடிப்புமாய் இருந்தாலும் பழுத்த நிதானத்துடன் இயங்கும் மதுரை தமக்குள்ளும் ஏறிவிட்டதாகவே தோன்ற ஏக்க உணர்வும் எழுந்தது. மேற்கிலிருந்து வந்து கிழக்கில் சுடரேற்றி மீண்டும் மேற்குத் திசை ஏகிக் கொண்டிருந்தது செம்பரிதி

[Miss Katie wilcox – An Inspiration (Biography of the Founder) நூலில் உள்ள தகவல்களைத் தழுவி]

படங்கள் உதவி: மாதவன்

Advertisements
பின்னூட்டங்கள்
  1. ஆ. பாப்பா சொல்கிறார்:

    மொழிபெயர்ப்பில் எளிமையோடு அழகியலும் இணைந்து எழுத்திற்கு மெருகூட்டுகிறது. மூல நூலை வாசிக்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது. மனம் முழுமையும் கேட்டி அம்மையாரை நிரப்பிய நண்பருக்கு நன்றி கூறி அந்நியமாக்க மனமில்லை.

  2. அமர்நாத் சொல்கிறார்:

    அருமையான பதிவு

  3. முனைவர் ப இராசமாணிக்கம் சொல்கிறார்:

    கேட்டி அம்மையாரின் வ்ருகைக்கு முன்பிருந்த மதுரையையும் வளர்ச்சிப் பெற்ற மதுரையையும் துல்லியமாக ஆவணப் படங்களுடன் காட்டியிருக்கும் பதிவு இன்றையத் தலைமுறையினருக்கு மிகவும் அவசியமானதாகும்.ஊழிதோறும் தங்கள் பணி தமிழ் மொழிக்குத் தேவை என்பதைக் கூறி என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தங்களுக்கு உரித்தாக்கிக் கொள்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s