கண்மாய்க்கரைக் கதைகள்

Posted: மார்ச் 19, 2017 in பார்வைகள், பகிர்வுகள்

IMG-20170226-WA0015

ஒரு கிராமத்தை வளமான கிராமம் என்று சொல்வதற்கு ஆதாரமாக அங்குள்ள நீர்நிலையைச் சொல்லலாம். கண்மாய், குளம், ஊருணி, பொய்கை, ஏந்தல், ஏரி, தாங்கல், ஓடை போன்ற நீர்நிலைகள்தான் கிராமங்களின் உயிர்நாடி. மதுரைக்கு அருகிலுள்ள எங்கள் கோயில்பாப்பாகுடி கிராமத்தில் ஒரு பெரிய கண்மாயும், ஒரு சின்னக்கண்மாயும் உள்ளன. காளியம்மன் கோயில் அருகே ஒரு ஊருணியும் உள்ளது. பெரிய கண்மாயின் கலிங்கிலிருந்து வெளியேறும் நீர் ஓடையாகச் செல்கிறது.

IMG-20170226-WA0004

எங்க ஊர் கண்மாய் நிரம்புவதற்கு வயிற்றுமலையிலிருந்து வரும் நீரும், மழைநீரும்தான் காரணிகள். ஆடிமாதத்தில் வைகையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிடும்போது அலங்காநல்லூரிலிருந்து கால்வாய் வழியாக எங்கள் பகுதிக்கும் தண்ணீர் வரும். கண்மாயில் நீர்வரத் தொடங்கினாலே ஊருக்குள் உற்சாகம் வரத்தொடங்கிவிடும். தண்ணி எங்ஙன வருது? எனப் பார்க்கும் நபர்களிடம் விசாரித்துக் கொள்வார்கள். விடியலில் எழுந்து போய் கண்மாயைப் பார்த்து அந்த வெட்டுப் பள்ளம் தாண்டிருச்சு, பெரிய மடை வந்துருச்சு, இனிச்சபுளி வந்துருச்சு என பேசிக்கொள்வார்கள். பாளம்பாளமாக விரிந்து காய்ந்து கிடந்த கண்மாயில் புதுவெள்ளம் வரும் போது ஊரே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும்.

கண்மாயில் தண்ணி வந்துவிட்டால் பள்ளிக்கூடப் பசங்களுக்கு ஒரே கொண்டாட்டமாய் இருக்கும். கிணற்றில், மோட்டரில் குளிப்பதைவிட்டு கண்மாயில் குளிப்பார்கள் என்று சொல்வதைவிட கும்மாளம் அடிப்பார்கள் என்று சொல்லலாம். நகர்புறத்திலிருந்து கிராமத்திற்கு சென்றதால் எனக்கு நீச்சல் தெரியாது. புளியமரத்திலேறி தாவிக் குளிப்பவர்களை பொறாமையாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். கண்மாயில் தண்ணீர் வந்தவுடன் வயக்காட்டில் விதைத்தவர்கள் முறை வைத்து தண்ணீர் பாய்ச்சுவார்கள். மடை வழியே பாயும் நீரில் நிறையப் பேர் குளிப்பார்கள், கொஞ்சப்பேர் துவைப்பார்கள்.

IMG-20170226-WA0008

தண்ணீர் நிரம்பி எங்க ஊர் கண்மாய் எல்லையான வரிசைப் பனையைத் தொட்டால் பார்க்க கடல்மாதிரி தெரியும். கரையை வந்து தழுவும் அலைகளைப் பார்த்துகொண்டே அமர்ந்திருப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் எங்க ஊர் கண்மாயின் நடுவே நிறைய நாட்டுக்கருவேல மரங்கள் நிறைந்திருந்தன. வேடந்தாங்கல் போல மாலை நேரங்களில் கொக்குகள் அக்கருவேலமரங்களில் பூப்போல வீற்றிருக்கும். கூடடையும் பறவைகளின் ஒலி நீரலைகளில் வந்து நம் காதை வருடும். பெரிய நாரை, கொக்கு, மடையான், பாம்புதாரா போன்ற பறவைகள் நிறைய வரும். ஆட்காட்டி குருவியும் கண்மாய்க்குள் நாம் வருவதைப் பார்த்து டிட்டிட்ரீட் என கத்திக் கொண்டே திரியும். அப்போதெல்லாம் ஒருசிலர் கவட்டை வாரில் மண்ணுருண்டைகளை வைத்து கண்மாய்க்கரைகளில் மறைந்திருந்து அடைய வரும் பறவைகளை நோக்கி வீசுவர். அவர்கள் குறியில் சிக்கிய பறவைகளை பிடித்து அங்கேயே சுட்டுத்தின்றுவிட்டு கிளம்புவர்.

கல்லுத்துறைப்புளி என்ற இடத்தில் முன்பு படித்துறை இருந்திருக்கிறது. இன்று அந்தப் பெயர் மட்டும்தான் அங்கிருக்கிறது. அதுபோல துணி துவைப்பதற்கான துறையும் ஒன்றிருந்திருக்கிறது. இப்போது கண்மாய் இருப்பதே மகிழ்வாய் இருக்கிறது. மதுரையில் பல கண்மாய்கள் அரசு – தனியார் ஆக்கிரப்பில் போய்விட்டது. எங்க ஊர் தண்ணீர் குடிக்க மிகவும் இனிதாக இருக்கும். நாங்கள் தங்கியிருந்த கூரைவீட்டிற்குள் ஒரு கிணறு இருந்தது. கண்மாய்க்கரையை ஒட்டி அமைந்திருந்ததால் தண்ணி வரும் போது மூன்று உறை, நாலு உறை எட்டி மோக்கும் அளவிற்கு நிரம்பிநிற்கும். மார்கழி முடிய விவசாயப் பணிகளும் குறைய, தை-மாசியில் நீர் வற்றத் தொடங்கிவிடும். மீன் குத்தகைக்கு எடுத்தவர்கள் தண்ணீரை மாற்றி மாற்றி மீன்களைப் பிடிக்கத் தொடங்குவர். கண்மாய்கரைகளில் உள்ள மரத்தடிகளில் மீன் வாங்க வெளியூரிலிருந்தெல்லாம் ஆட்கள் வரத் தொடங்குவர்.

IMG_20160925_172620.jpg

கண்மாயில் நீர் வற்றத் தொடங்கியதும் கண்மாய்க்குள் செடி போட ஆரம்பித்துவிடுவார்கள். கண்மாயில் காத்துப்போட்ட இடங்களில் வெள்ளரி, பாகற்காய், கீரை வகைகளை போடுவார்கள். அவர்கள் காத்துவைத்த எல்லைக்குள்ளேயே சின்னக்கிணறு தோண்டி ஏற்றம் அமைத்து நீர் இறைப்பார்கள். ஆடு, மாடுகளை கண்மாய்க்குள் மேய்ப்பார்கள். புல் முழங்கால் உயரத்திற்கு வளர்ந்துநிற்கும். கண்மாய் பார்ப்பதற்கு பெரிய விளையாட்டு மைதானம் போலிருக்கும். பள்ளி மாணவர்கள் நிறையப் பேர் கிரிக்கெட் விளையாடுவார்கள். நானும் கொஞ்சகாலம் போய் விளையாடினேன். பிறகு, அந்த விளையாட்டு நமக்கு சேராததால் விட்டுவிட்டேன்.

என்னுடைய நெருங்கிய நண்பன் வீட்டில் ஆடுகள் இருந்தன. அதை மேய்க்க அவன் கண்மாய்க்குள் செல்லும் போது மாலை வேளைகளில் நானும் அவனுடன் செல்வேன். இரண்டு பேரும் பேசிக்கொண்டே மேற்கேயிருந்து கிழக்கு நோக்கி ஆடுகளோடு வருவோம். வெள்ளாடுகள் வெளையாட்டு பிடித்தவை. திடீரென அங்கிட்டு இங்கிட்டு ஓடும். என் நண்பன் ஓடிப்போய் பத்தி அவைகளை ஒரு வழிக்கு கொண்டு வருவான். கருவேல மரத்தடியில் படுத்துக் கிடப்பது, செடியில் பறித்த வெள்ளரிக்காய்களைத் தின்பதெல்லாம் சுகமான நினைவுகள்.

IMG_20160925_170305.jpg

ஒருமுறை என்னுடன் படித்த நண்பர்கள் எல்லாம் சேர்ந்து கண்மாய்க்குள் கூட்டாஞ்சோறு ஆக்கினோம். ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு பொருட்களை வாங்கினோம். சிலபேர் சமைக்க, சிலபேர் வெட்டியாய் சுற்றித் திரிந்தோம். அன்று என் நண்பன் வைத்த சாம்பார் அத்தனை ருசி. இன்று அவன் பெரிய சமையல் கலைஞனாகிவிட்டான். நாட்டுக்கருவேல மரங்களை வெட்டினார்கள். கண்மாய் பொலிவிழந்துவிட்டது. அதன்பிறகு பறவைகள் வரத்தும் குறைந்தது.

எங்க பள்ளிக்கூடத்திற்கு அருகில்தான் சின்னக்கண்மாய் இருந்தது. வெங்காயத்தாமரைச் செடிகளாக முளைத்துக் கிடக்கும். பின் கொஞ்சம் கொஞ்சமாக கண்மாய் சிறிதாகி சின்னக்கண்மாய் தெரு என்றாகிவிட்டது. காளியம்மன் கோயில் அருகே உள்ள குளம் (ஊருணி) மழை பெய்தால் நிரம்புகிறது. இல்லாவிட்டால் வானம் பார்த்துக் கிடக்கிறது. நாங்கள் பள்ளியில் படித்த நாட்களில் அக்குளத்தின் கரையிலிருந்த வேப்ப மரத்தின் வேர்களில் அமர்ந்துதான் கதையடித்துக் கொண்டிருப்போம். அதெல்லாம் இப்பொழுது கனவுக்காட்சிகளாகிவிட்டது.

IMG_20160925_164833.jpg

எங்க ஊர் திருவிழாவிற்கு சாமி செய்ய பிடிமண் கொடுப்பதற்கு ஊர் மடையிலிருந்து கைப்பிடி மண் எடுத்து கொடுப்பார்கள். அதேபோல திருவிழாவின் மூன்றாம் நாள் எருதுகட்டு விழா நடைபெறும். மாடுகளை வைக்கோலில் சுற்றிய வடத்தில் கட்டி விளையாட விடுவார்கள். சல்லிக்கட்டு போல ஏறுதழுவதலாய் இல்லாமல் மாடோடு ஒரு விளையாட்டாய் இருக்கும். அப்போது வடம் காய்ந்து போனால் அதை கண்மாய் நீரில் முக்கி எடுத்துக் கொண்டு வருவார்கள். சில வருடங்களாக எருதுகட்டும் சல்லிக்கட்டுத் தடையால் நடைபெறவில்லை. கண்மாயில் நீரும் வரவில்லை.

எங்க கிராமத்திற்கு அருகிலுள்ள அதலைக் கிராமத்தில் சித்திரைத் திருவிழாவையொட்டி அங்குள்ள இராமலிங்கசாமி கோயிலில் திருவிழா நடக்கும். அதைப் பார்ப்பதற்கு கண்மாய்க்குள் இறங்கி நடந்துபோவோம். ஓடையைத்தாண்டி அதலை சென்று சாமி கும்பிட்டு அரும்பு, உப்பு வாங்கிப் போட்டுட்டு பொரி வாங்கித் தின்று கொண்டே வருவோம். இப்போது ஷேர் ஆட்டோக்கள் ஆட்களை அள்ளிப்போட்டு செல்கிறது. கண்மாயில் கொண்டு வந்து பாத்திரம் கழுவியதாக எங்கம்மா சொன்ன இடங்கள் என்னுடைய காலத்தில் பீக்காடாகிவிட்டது. கழிப்பிட வசதி அப்போது எல்லா வீடுகளிலும் இல்லாத காலம்.

IMG-20170226-WA0014

நிறைய கிராமங்களில் வயக்காடுகள் எல்லாம் வீட்டடி மனைகளாகிவிட்டது. அதனால் தண்ணீரை கொண்டு வர எல்லோரும் முயற்சிப்பதில்லை. இப்போது தண்ணீர் வந்தால் மகிழ்ச்சி அவ்வளவுதான் என்றாகிவிட்டது. முன்னைப்போல கொண்டாட்டங்கள் குறைந்துவிட்டது. சமீபகாலமாக வயல்வெளிகள் – கண்மாய் பகுதிகளில் வேலை பார்ப்பவர்கள் கடைகளிலிருந்து தேனீரை பிளாஸ்டிக் கவர்களில் வாங்கி வருவதோடு, ஊற்றிக் குடிப்பதற்கு பிளாஸ்டிக் கப்பும் பயன்படுத்தி அதை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். அதோடு கண்மாய்கரைகளில் உள்ள கொஞ்ச மரத்தடிகளிலும் குடிமகன்கள் பாட்டில்களையும், பிளாஸ்டிக் கப்புகளையும் போட்டு போகின்றனர். மின்சார இணைப்புகளுக்கான வயர்களை கொண்டுவந்து ஆளரவமற்ற கண்மாய்க்கரைகளில் எரித்து செம்புக்கம்பியை எடுக்கின்றனர். வெளியூரிலிருந்து வரும் இளவட்டங்கள் பறவைகளை சுடுவதற்கு துப்பாக்கியோடு வருகின்றனர். இதுபோன்ற சில மோசமான சம்பவங்கள் எங்கள் ஊரில் மட்டுமல்ல, சுற்றியுள்ள எல்லா கிராமங்களிலும் நடக்கிறது.

IMG_20160116_183218.jpg

1990களிலிருந்து இன்றைய நிலைவரை நான் பார்த்தவைகளை இக்கட்டுரையில் பதிவு செய்திருக்கிறேன். என்னைவிட கண்மாய் தண்ணீரில் கண்சிவக்க ஆடியவர்களிடம் கேட்டால் இன்னும் ஆயிரம் கதைகள் இருக்கும். நாட்டுப்புறக்கலைகளின் முடிவில் பாடுவதுபோல பாடி முடிக்கிறேன். நாடு செழிக்க வேண்டும். நல்ல மழை பெய்ய வேண்டும். கண்மாய் கழனியெல்லாம் நிறைய வேண்டும். மக்கள் மனம் மகிழ வாழ வேண்டும்.

நன்றி: கிராமத்துத் தெருக்களின் வழியே, ந. முருகேச பாண்டியன்

படங்கள் – கோவில்பாப்பாகுடி கண்மாய், மதுரை மாவட்டம்

இதைப் படித்துவிட்டு அதே ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவர் பகிர்ந்துகொண்ட நினைவுகள்:

கூட்டாஞ்சோறும் குட்டாணிப் பிஞ்சுகளும்

கண்மாய்க்கரைக் கதைகளைப் படித்தபிறகு எனக்கும் சிலவற்றைச் சொல்லவேண்டும் என்று தோன்றிவிட்டது. சிறுபிள்ளைகளாக இருந்த நாங்கள் கதைகள் கேட்டதே இந்தக் கண்மாயில்தான்.  காத்துப்போட்ட இடத்தில் செடி போட்டிருக்கும் அம்மாச்சிக்கு களை வெட்ட, காய் பிடுங்க, கால்நடைகளிடமிருந்து காவல் காக்க உதவியாக இருக்குமென்று கூடச் செல்வோம். தூக்குப் போணியில் கொண்டு சென்ற தண்ணிச்சோறையும் வெஞ்சனத்தையும் சாப்பிட்டுவிட்டு நீச்சத்தண்ணியை குடித்துவிட்டு உட்காரும்போது கதை சொல்லச் சொல்லி ஆச்சியிடம் நச்சரிப்போம். “தேவதைக்” கதைகள் எல்லாம் நமக்கு அந்நியம். பேய்க்கதையோ, சாமி கதையோ சொல்லும். ராசா ராணி கதைகளும்தான். சில சமயங்களில் பாண்டிச் சாமியைப் பற்றியோ, இராக்காயி, பேச்சி பற்றியோ சொல்லும்போது அருள் இறங்கிவிடும். பயமாக இருக்கும்.

IMG-20170226-WA0013

கண்மாயில் நீர் வற்றும்போது அவரவர் காத்துப்போட்ட இடத்தில் போடப்படும் தோட்டம்தான் ‘செடி’.  அநாதிக் குச்சி, மழுமட்டைச் செடி என்று இகழ்ச்சியாகவும், ரேடியோப்பூச் செடி என்று செல்லமாகவும், நெய்வேலிக் காட்டாமணக்கு என்று பகட்டாகவும் அழைக்கப்படும் செடிகளால் இருபுறமும் எல்லை. கரையை ஒட்டியவாறு நீர் கடைசியாக வற்றி கரம்பை களியாக இருக்கும் இடத்தில் அம்மாசி மாமாவையோ கூசல் மாமாவையோ வைத்து ஒரு கிணறு. கடப்பாரையால் நான்கைந்து குத்துக் குத்தி நான்கடி பள்ளம் தோண்டினால் தண்ணீர் சுரந்துவிடும். அதுதான் கிணறு.  அதை ஒட்டி அரைக்கீரை, தண்டங்கீரை, சீமைப் பொன்னாங்கண்ணி என்று கீரைப்பாத்திகள். அதற்கு வடக்கே படர இடம் விட்டு சிறு குழி பறித்து இடப்பட்ட வெள்ளரி, பாகற்காய்ச் செடிகள். (பாகற்காயில் கசப்பே இல்லை என்று கொண்டாடுவதும், பாம்பேறிய வெள்ளரிப்பிஞ்சு கசக்கிறது என்று துப்புவதும் எங்கள் வழக்கம்). அதற்கும் மேலே தக்காளி, வெண்டை, தட்டாம் பயிறு. இடை இடையே ஆமணக்குச் செடிகள். கிழக்கு மேற்காக இருந்த ஒரு கால் குறுக்கத்தில் எள் விதைப்பதும் உண்டு. நிழலுக்கு ஒரு நாட்டுக் கருவேலமரத்தடி. பள்ளி இல்லாத கோடைப் பகல்கள் எங்களுக்கு இங்குதான் கழியும்.

செடியைப் பாதிக்காமல் களையை வெட்டுவதற்கென்று சிறிய அளவில் இருக்கும் கொட்டுவானை கொட்டு மண்வெட்டி என்று சொல்வோம். நறுக்கென்று ஆழமாக எதையும் வெட்டாது. சும்மா கொத்திக் கிளறிவிடுவதோடு சரி. ஒரு நாளில் எத்தனை முறை எதிர்ப்பட்டாலும் “மாப்ள, மாப்ள..எப்படி இருக்கீங்க” என்று மட்டுமே கேட்கும் மாமா ஒருவருக்கும் கொட்டு மம்பட்டி என்றுதான் பட்டப்பெயர்.

தண்ணீர் பிடித்து செடிகளுக்கு ஊற்றிவிட்டு, காய்கள் பிடுங்கிவிட்டு, களை வெட்டிவிட்டு உட்கார்ந்திருந்த ஒரு முன் பகலில்,  பதற்றமாக ஓடிவந்த சித்தி, “நம்ம குட்டாணி செத்துப்போயிட்டானாம்” என்று அழுதுகொண்டே சொன்னது. ஆச்சியின் தம்பிக்கு மகள் வயிற்றுப் பெயரன். வயிற்றுப்போக்கு. அது இருக்கட்டும். குட்டாணி என்பது வளனையாக நீளமாக வடிவாக இல்லாது கொழுக் மொழுக்கென்று இருக்கும் வெள்ளரிப்பிஞ்சின் பெயர். அந்தப்பயலும் அப்படித்தான் இருந்தான். என்ன செய்ய? சென்னையில் நீளமாக வடிவாக இருக்கும் வெள்ளரி சப்பென்று இருக்கிறது. நமது பகுதியில் குழம்புக்குப் போடும் குட்டாணிக் காய்களே அவ்வளவு சுவையாக இருக்கும். மண் வாகோ, நீர் வாகோ, யார் கண்டது?

வெள்ளரியின் பிஞ்சையும், காய்களையும் விட பழமே கவர்ச்சியானது. வெடித்த வெள்ளரிப் பழத்தின் கலப்படமில்லாத வெள்ளையில் பனைவெல்லத்தையோ, நாட்டுச் சர்க்கரையையோ தூவி நானும் அப்பாவும் பங்கு பிரித்துச் சாப்பிடுவோம். மற்றவர்களுக்கு அவ்வளவு விருப்பமில்லை. இந்த வெள்ளையைப் போலவே இன்னொரு கவர்ச்சியான நிறமும் கண்மாயில் உண்டு.  ஆடுகளுக்குப் பிரியமான கருவேல நெற்றுக்களின் வெளிர்மஞ்சள் பொன்னிறம். ஓடு உலர்ந்து கருஞ்சிவப்பாகவும் உள்ளே கூழ்ம நிலையில் மரகதப்பச்சையாகவும் இருக்கும் வேலம்பிசினும் கவர்ச்சியானதே.

ஆடு மாடுகளுக்குத்தான் கண்மாய் முதல் உரிமை. அவற்றை மேய விட்டுவிட்டு உட்கார்ந்து பேசிக்கொண்டே ஒட்டுப்புல்லை எடுத்து அடுத்தவன்(ள்) தலையில் தேய்த்துவிட்டால் அதன் சீப்பு போன்ற பற்களில் முடி சிக்கி எடுக்கவே வராது. இல்லாவிட்டால் பொடுதலைச் செடியின் இலையைப் பறித்து மறைவாக தலையில் வைத்து முறித்தால் பேன் குத்துவது போன்றே சத்தம் வரும். நன்றாக ஏமாற்றி விளையாடலாம். இங்கு ஒரு தகவல்: பொடுதலைக் குழம்பு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ‘கப்’பென்று நின்றுவிடும்.

கொஞ்சம் வளர்ந்துவிட்டால்தான் நாமே கதை பேச ஆரம்பித்துவிடுவோமே! அதிலும் பாலியல் கதைகளில்தான் ஈர்ப்பு. எட்டணாவுக்கு மட்டை ஊறுகாய் வாங்கி சுற்றி உட்கார்ந்து நக்கிக்கொண்டே ‘அன்று அந்தப் பொம்பளை கரையில் போனாள், கொஞ்சம்விட்டு இந்த ஆள் தரையில் போனான்’ என்று  கிசுகிசு பேச ஆரம்பித்துவிடுவோம். சில நாட்களில் ஊறுகாய்க்குப் பதிலாக உப்பு வைத்து அரைத்த புளியம்பிஞ்சுத் துவையல் அல்லது ஆட்டையைப் போட்ட பள்ளிக்கூடத்து அரிசியையும், கடைக்கொன்றாய் சுட்டுவந்த காய்கறிகளையும் போட்டுக் கூட்டாஞ்சோறு. பனம்பழம் சுடுவதும் உண்டு. ஏழு ஊருக்கு மணக்கும் பனம்பழத்தை பச்சையாகத் தின்றால் தலைவலி வரும் என்று பயம்.  கண்மாய்களின் பாலியல் கதைகளில் காதல் கதைகள், கட்டுக்கதைகள், சில மீறல்கள் மட்டுமில்லாமல் சில கடுமையான குற்றங்களும் நிகழ்ந்ததுண்டு என்பதை உணர முடிகிறது. கன்னத்தில் விழும் குழியைக் குறிப்பதற்கு இன்று திரைப்படங்களில் ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் அல்லவா? அதைத்தான் நாங்கள் ஆணும் பெண்ணும் சேர்வதைக் குறிக்கப் பயன்படுத்துவோம். வட்டாரத்திலேயே வழக்கிழந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

நாட்டுக் கருவேல மரங்களுக்கு இடையே கிளை பிரியும் ஒற்றையடிப் பாதைகளில் வண்டியோட்டி விளையாடுவோம்.  அப்போதுதான் ஊருக்குள் நுழையத் தொடங்கியிருந்த தொலைக்காட்சியின் தயவில் கிரிக்கெட் பித்து பிடித்துக்கொண்டது. பார்த்தது கொஞ்சம், தினத்தந்தியில் படித்தது கொஞ்சம், வானொலி வருணனையில் கேட்டது கொஞ்சம் என்று கற்றுக்கொண்டோம்.  என்னதான் கபில்தேவின் தீவிர வெறியன் என்றாலும் எல்.பி.டபிள்யூவுக்கு இன்றுவரை சரியான விதி தெரியாது. ஜிம்பாப்வேயில் இருந்த ஒரு வீரரை ஹாட்டன் என்றும் ஹவுட்டன் என்றும் எழுதுவார்கள். அவரது பெயராலான அடிமுறை பிரபலமாக இருந்தது. மால்கம் மார்ஷல், அம்புரோஸ், வால்ஷ், பேட்டர்சன் போன்ற வேகப்பந்து வேதாளங்கள் வீராவேசமாக பந்து வீசிக்கொண்டிருந்த உணர்ச்சிமயமான நாட்கள். மழுமட்டைக் குச்சியை வைத்து கண்மாயில் ஹாக்கியே விளையாடியிருக்கிறோம். தன்ராஜ் பிள்ளை என்ற பெயரைத் தவிர எதுவும் தெரியாது.

இப்படி பொறுப்பில்லாமல் சுற்றிக் கொண்டே திரிய நாம் என்ன கௌதம் வாசுதேவ் மேனோன் பட நாயகர்களா? விறகு யார் சேகரிப்பது? இந்தக் கருவேல மரங்கள் எல்லாம் அரசுக்குச் சொந்தம். வெட்டினால் வனக்காவலர் அரிவாளைப் பிடுங்கிக்கொண்டு சென்றுவிடுவார் – அது உரித்த வாழைப்பழத்தை ஒன்பது வெட்டு வெட்டும் பதத்தில் இருந்தாலும்.  ஆடுகளுக்காக சில கொப்புகளை வாங்கரிவாள் கொண்டு முறித்துப் போடுவார்கள். அது காய்ந்து தொங்கிக்கொண்டிருக்கும். அதை வெட்டிக்கொள்ளலாம். ஏற்கனவே வெட்டப்பட்ட மரத்தின் முண்டுகளையும் வெட்டிக்கொள்ளலாம்.  சாணம் அள்ளி சண்டு போட்டுப் பிரட்டி சரிவான பகுதியில் எருவாட்டி தட்டி வைக்கலாம்.

சரி, கரைக்கு வருவோம்.  ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ என்பார்கள். எனக்கு கடைசி வார்த்தையில் ‘ப’வுடன் ‘ஈ’காரம் சேர்வதே சரியென்று படுகிறது.  ஊரை ஒட்டிய கரையின் ஒரு சிறிய பகுதிதான் பெண்களுக்கான பொதுக்கழிப்பிடம். பொருத்தமாக பெரிய பீநாறி மரம் ஒன்று இருந்தது. இளக்காரமாகச் சொன்னால் தீக்குச்சி இதிலிருந்துதான் செய்கிறார்கள் என்று வக்காலத்து வாங்குவார்கள். ஆனாலும் மதிய நேரத்தில் தனியே போக முடியாத அந்த மரம் அமானுஷ்ய தன்மை கொண்டிருந்தது.  ஒரு வேளை அப்போதுதான் எண்டமூரி கதைகளைத் திருடிப் படிக்க ஆரம்பித்திருந்தேனோ என்னவோ? கரையில் ஆங்காங்கே பெருமரங்கள் உண்டு. வடகிழக்கு மூலையில் அத்தி மரம். அளவில் இல்லாவிட்டாலும் அரிதாக இருப்பதால் பெருமரம். இனிச்ச புளி, கல்துறைப் புளி, வடந்தாங்கிப் புளி என வயதேறிய ஜீவன்கள். இனிச்ச புளி வெறும் வாயில் தின்பதற்கென்றே படைக்கப்பட்டது. ஒருமுறை பச்சைப்பாம்பு ஒன்று பிடிபட்டது. பறந்து கண்ணைக்கொத்திவிடும் என்ற எண்ணத்தில் அடிபட்டது. அதன் நீளத்தைக் காட்ட இந்த இனிச்ச புளியின் அடிமரத்தைச் சுற்றித்தான் கட்டிவைத்திருந்தார்கள். நமது சித்தப்பாக்களுள் ஒருவர் நாண்டு கொண்டு செத்துப்போன அந்த இன்னொரு புளியை விட்டுவிடுவோம். இந்த வடந்தாங்கிப் புளி இருக்கிறதே. ஈரத்தில் நனைத்த எருதுகட்டு வடத்துக்கு இடம் கொடுத்ததேயன்றி என்ன தவறு செய்தது? அதற்கு ஏன் தீ வைத்தார்கள்?

கரையிலேயே நடப்பது சிரமந்தான். கொட்டம் இல்லாதவர்கள் ஆடுமாடு கட்டி வைத்திருப்பார்கள். குப்பையும் சாணமும் கொட்டிவைத்திருப்பார்கள். எருமைத் தட்டான், எம்.ஜி.ஆர் தட்டான், இரயில் தட்டான் பூச்சிகளையும், பொன்வண்டுகளையும், வண்ணப் பாப்பாத்திகளையும் பார்த்துக்கொண்டே  எண்ணைய்க் காய்ச்சிச் செடிகளையும், செந்தட்டிச் செடிகளையும் தவிர்த்து, சில டொப்பிப் பழங்களையும், பூனைப் புடுக்குச் செடியின் பூக்களையும் பறித்து விளையாடிக்கொண்டே குருநாங்ங்கோயில் தோப்புக்கு வந்துவிடலாம். சுக்குக் காய்ச்சி மாங்காய், செவ்வண்ணப் புரசைப் பூ இவையெல்லாம் கவரலாம். ஆனால் நல்லவையான நாகங்களும், கண்டங்கருவலைகளும் ஒருநேரம் போல் ஒரு நேரம் இருக்காது. ஆவாரம் பூ புடுங்கவோ, கூரைப் பூ புடுங்கவோ வந்திருந்தால் வந்த சோலியைப் பார்த்துவிட்டு சீக்கிரம் திரும்பிவிடவேண்டும்.  அதிலும் குமரி இருட்டான விடிகாலையில் அவை வயல்களில் இருந்து கண்மாய்க்குள் போகும். செங்கமங்கலான அந்தி நேரத்தில் கண்மாய்க்குள் இருந்து வயல்புதர்களுக்குத் திரும்பும்.

கரையின் அருமை வெள்ளம் வரும்போது தெரியும். செல்லூர் பகுதியின் கைத்தறி நெசவை காணாமல் போக்கிய வெள்ளம் ஒன்று 90களில் வந்ததல்லவா? அப்போது கரைகளில் திரைமோதி இப்பவோ அப்பவோ ஊருக்குள் புகுந்துவிடுவேன் என்று மிரட்டிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே கிராய் வெட்டிப்போட்டு உயரமாக்கியும் வேலைக்கு ஆகவில்லை. ஊருக்கு வெளியே கரையை வெட்டிவிடுவதென்று முடிவாயிற்று.  ஒரு சிறிய  திறப்புதான். சற்றைக்கெல்லாம் பிளந்து பெருக்கெடுத்து நான்கு பனைகளைச் சாய்த்து வளர்ந்த நெற்பெயரை வண்டல் மேவப் பாய்ந்து சூழ்ந்தது.

IMG_20160115_080813.jpg

கலிங்கு வரை செல்வதெல்லாம் கொஞ்சம் வயதான பிறகுதான் வாய்த்தது. இது அடுத்த கண்மாயில் இருப்பதுபோல கண்மாய் நிரம்பியபிறகு மறுகால் வழியும் தடுப்பணைக் கலிங்கு அல்ல. நீர் நுழையும் இடத்திலேயே  ஓடையில் திருப்பிவிடும் தரைமட்டக் கலிங்கு. இந்தக் கண்மாய் நிரம்பினால்தான் அடுத்தக் கண்மாய்க்குத் தண்ணீர் என்ற அடாவடி அல்ல.  சங்கிலித் தொடரின் அடுத்த கண்மாய்க்கும் சமமாகப் பகிரும் நியாய வடிவம்.

கண்மாயைப் பற்றிப் பேச ஆரம்பித்து இப்போதுதான் நீருக்கே வருகிறோம். பொதுப்பணித்துறை புள்ளிவிவரம் இந்தக் கண்மாய் ஐந்து கோடியே நாற்பது லட்சம் லிட்டர் நீர் கொள்ளும் என்கிறது. முன்னூற்றுச் சொச்சம் ஏக்கருக்குப் பாசன வசதி. மடைகள், மதகுகள், வாய்க்கால்கள் என்று ஊரே நீர்நாளங்களாலான பேருடல்.  கண்ணகியின் கால்தடத்தில் வந்துசேரும் மேற்கு மலைத் தொடரின் கொடை.

IMG-20170226-WA0006

நுரைத்து வரும் முதல் நீர் குளியலாடத் தகுந்ததன்று. கொஞ்ச நாள் சென்றால் இளநீச்சல், முங்குநீச்சல் போட்டு விளையாடலாம். புளியமரத்தின் உச்சிக்கொப்பிலிருந்து ‘சொர்க்’ பாயலாம். வாழைமரத்தைப் போட்டு களைப்பின்றி அக்கரைக்குப் போகலாம். சிவந்த கண்களை வைத்தோ, அரைஞாண் கயிற்றின் ஈரத்தை வைத்தோ வாத்தியார் கண்டுபிடித்தால் அடிவாங்கலாம். நீச்சல் தெரியாமல் ஓரிரு முறை பள்ளத்தில் விழுந்து வாயைப் பொளந்த நாமே இவ்வளவு சொன்னால் சலிக்கச் சலிக்க விளையாடியவர்கள் எவ்வளவு சொல்வார்கள்?

முக்குளிப்பான்களையும், முகவண்டுகளையும், வக்கா, நீர்க்காகங்களையும், அரிவாள் மூக்கன்களையும், கூழைக்கடாக்களையும் விருந்தோம்பும்  கண்மாய் அரிப்புழுக்களையும், அட்டைப் பூச்சிகளையும் நம்ம பக்கம் அனுப்பிவிடும். நமது வீட்டு கனகாம்பரம், சந்தனப்பிச்சிச் செடிகளையும், அவரை, புடலைக் கொடிகளையும் சாம்பல் தூவிக் காக்கவேண்டும்.

IMG_20160925_165038.jpg

இதெல்லாம் இன்று யாருக்கும் தேவையில்லை. நிறையும் வரை விளையும்; விளையும் வரை நிலங்களை விலைபேச முடியாது.   பொருளாதாரக் கணக்கு வழக்குகளின் நியாயத்தைப் புறந்தள்ள முடியாது. நிலத்தடி நீரை வைத்து நடக்கும் வேளாண்மை வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கும் ஆங்கே பொசியவெல்லாம் விடாது. சிந்தாமல் சிதறாமல் செடியின் வேருக்கே குழாய் வழி கொண்டு செல்வதுதான் அறிவியல். அதுவும் எத்தனை நாளோ? இன்றைக்குத் தேவையெல்லாம் நூறு நாள் வேலை கொடுக்க பொதுவான ஒரு இடம். புடுங்கிய ஆணியையே புடுங்கினால் போதும். ஒதுக்குப்புறமான ஒரு திறந்தவெளி மதுபானக் கூடம். அபாயகரமான கழிவுகளை கண்ணில் படாமல் அப்புறப்படுத்த ஒரு மூலை. ஆண்டுக்காண்டு அதிக தொகைக்கு மீன் ஏலம் விடவேண்டியிருக்கிறது. திலேப்பியா குஞ்சுகளுக்கு உணவாக ஏதோ கழிவுகளைக் கொண்டுவந்து கொட்ட வேண்டியிருக்கிறது. பானைப்பொறியோ, தூண்டில் கம்போ அண்டாமல் காவல் காக்க வேண்டியிருக்கிறது. போட்ட காசை எடுக்க தண்ணீரை வீணில் வற்றடித்து ஒருபோல வளர்ந்த கெண்டைகளைப் பிடிக்கவேண்டி இருக்கிறது.

IMG-20170226-WA0007.jpg

சில மாதங்களுக்கு முன்பு இராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரின் உரையைக் கேட்டேன். அங்குள்ள வறண்ட மலைகளில் தடுப்பணை கட்டி மழைநீர் சேகரித்து பசுமையாக்கிய தமது சாதனைகளைச் சொன்னார். அதில் “anicut” என்ற ஆங்கில வார்த்தை வந்தது. அது ‘அணைக்கட்டு’ என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து ஆங்கிலம் சென்றது. அது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அது வேளாண்பொறியியல் சார்ந்த ஒரு கலைச்சொல் என்று விளக்கினார்.   இன்னும் சில வருடங்கள் வழித்து நீர் மேலாண்மையின் அதிநுட்பமாக “Kanmoi” என்பதை பிறநாட்டார் கண்டுபிடிப்பார்கள். என்னவென்றே தெரியாமல் நமது சந்ததிகள் பாடங்களில் படிப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s