தெப்பக்குளம் மைய மண்டபத்தின் உச்சியிலிருந்து

Posted: மார்ச் 29, 2017 in பார்வைகள், பகிர்வுகள்

Theppakulam.jpg

2016ல் பசுமைநடையாக மையமண்டபம் சென்ற போது அதன் உட்சென்று உச்சி மாடம் வரைப் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். தெப்பக்குளத்தின் நடுவே அழகிய தீவு போல மையமண்டபம் அமைந்துள்ளது. அதன் நான்கு மூலைகளிலும் சிறிய மண்டபங்களும், நடுவே பெரிய குவிமாடங்களுடன் கூடிய கோபுரம் அமைந்துள்ளது. மையமண்டபம் பார்ப்பதற்கு பல்லவர்கட்டிடக்கலையில் எழுந்த மாமல்லபுரம் கடலோர கோயில் போல உள்ளதாக மனோகர் தேவதாஸ் ‘எனது மதுரை நினைவுகள்’ நூலில் கூறுகிறார்.

மையமண்டபத்தின்CIMG0314 நான்கு வாயில்களிலும் யானைச் சிற்பங்களை இருபுறமும் கொண்ட படிகள், நடுவே உள்ள மண்டபத்தூண்களில் நாலுபக்கமும் அரசனும் அரசியும் வணங்கியபடி நிற்கும் சிலைகள், அதன் ஒரு மூலையில் மேலே ஏறிச் செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன.

மொகலாயக் கட்டிடக் கலை அமைப்பில்
மாடங்கள் அமைந்துள்ளன.

CIMG0305தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பக்குளங்களுள் மதுரை தெப்பக்குளமும் ஒன்று. திருவாரூர், மன்னார்குடி தெப்பக்குளங்களைவிட பரப்பளவில் கொஞ்சம் குறைந்திருந்தாலும் மதுரை தெப்பக்குளத்தின் மையமண்டப எழில் தமிழகத்தில் வேறு எந்த தெப்பக்குளங்களுக்கும் இல்லை. தென்வடலாக 1000 அடியும், கீழ்மேலாக 950 அடியும் உள்ளது. ஏறத்தாழ மீனாட்சியம்மன் கோயிலுக்கு நிகரான பரப்பளவைக் கொண்டது. 20 அடி ஆழமும், 115 கன அடி கொள்ளளவும் கொண்டது இத்தெப்பக்குளம். பக்கத்திற்கு மூன்று படித்துறைகளைக் கொண்டு மொத்தம் பனிரெண்டு படித்துறைகளை இத்தெப்பக்குளம் கொண்டுள்ளது. மேற்கே முக்தீஸ்வரர் கோயிலும், வடக்கே மாரியம்மன் கோயிலும் உள்ளன. இது ‘மாரியம்மன்’ தெப்பக்குளம் என்றும் அழைக்கப்பட்டாலும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்திருவிழாவிற்கு எழுந்தருள திருமலைநாயக்கரால் கட்டப்பட்டது. மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து நாலு கிலோமீட்டர் தொலைவில் கிழக்கே அமைந்துள்ளது.

Theppakulam maadangal 4.jpg

இறைவனை நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று ஆறாட்டு விழா, தெப்பத்திருவிழா நடத்துவது நம் முன்னோர் மரபு. அதிலும் அவ்விழாக்கள் முழுநிலவு பொழியும் பௌர்ணமி நாட்களையொட்டி வருவது இன்னும் சிறப்பு. திருமலைநாயக்கர் பிறந்த தை பூசத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்திருவிழாவிற்கு இக்குளத்திற்கு எழுந்தருளுகின்றனர். முக்குறுணி பிள்ளையார் இந்த தெப்பக்குளம் தோண்டும் போது கிடைத்ததாகவும், இங்கு மண் எடுத்து திருமலைநாயக்கர் அரண்மனை கட்டியதாகவும் கதை உலவுகிறது.

பசுமைநடையாக இரண்டுமுறை தெப்பக்குளம் சென்றிருக்கிறோம். ஒரு முறை சென்ற போது தெப்பத்திருவிழாவிற்காக நீர் நிரப்பத் தொடங்கியதால் மையமண்டபம் செல்ல முடியாமல் படித்துறையிலேயே ‘காற்றின் சிற்பங்கள்’ நூலை வெளியிட்டு வந்தோம். அச்சமயம் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா பேசிய உரையிலிருந்து சிறுபகுதி.

Theppakulam maadangal.jpg

வண்டியூர் தெப்பக்குளம் என இத்தெப்பக்குளம் அழைக்கப்படுகிறது. வண்டியூர் என்ற பெயர் அழகர்கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் அழகர்கோயில் தேரோட்டத்திற்கு தானமாக வழங்கிய ஊர்களில் வண்டியூருக்கும் மதிச்சயத்திற்கும் இடையிலுள்ள சாத்தமங்கலமும் ஒன்று. முத்துப்பட்டியில் உள்ள தமிழ்பிராமிக் கல்வெட்டொன்றில் விந்தையூர் சையளன் என்ற வரி உள்ளது. இதில் உள்ள விந்தையூர் வண்டியூரைக் குறிக்கலாம் என்பது வரலாற்று அறிஞர்களின் யூகமாகும்.

Theppakulam maadangal 3.jpgதிருமலைநாயக்கர் அரண்மனை கட்ட தோண்டிய இடத்தில் இத்தெப்பத்தை வெட்டியதாகக் கூறுவர். திருமலைநாயக்கர் பிறந்த தைமாதம் பூச நட்சத்திரத்தன்று மீனாட்சிசுந்தரேஸ்வரருக்கு தெப்பத்திருவிழா நடத்தினார். அந்நாளில் தெப்பத்தேரில் மீனாட்சிசுந்தரேஸ்வரர் மூன்றுமுறை தெப்பத்தை வலம் வருவர். ஆண்டுதோறும் தெப்பத்திருவிழா நடத்த தானமாக திடியன்புத்தூர் என்ற ஊரை வழங்கியுள்ளார். மேட்டுப்பட்டி சித்தர்மலையில் உள்ள தமிழ்பிராமிக்கல்வெட்டில் காணப்படும் திடியில் என்ற ஊர்தான் திடியன்புத்தூர்.

Theppakulam maadangal 2.jpg

அக்காலத்தில் தெப்பக்குளங்கள் நீராதாரத்திற்காக வெட்டப்பட்டன. கோயில்களில் தினந்தோறும் இறைவனுக்கு திருமஞ்சனம் செய்ய நீர் எடுக்க கோயில்களுக்கு உள்ளேயே தெப்பக்குளங்களை வெட்டினர். பொதுவாக சிவன் கோயில்களில் உள்ள தெப்பத்திற்கு சிவகங்கை என்றும், பெருமாள் கோயில்களில் உள்ள தெப்பத்திற்கு புஷ்கரணி என்றும் பெயர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள தெப்பக்குளத்திற்கு பொற்றாமரைக் குளம் எனப் பெயர். தெப்பக்குளங்கள் வெட்டப்படுவதற்கு முன்பு கோயிலில் ஈசான மூலையில் கிணறு இருக்கும். ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பெருமாளுக்கு சாற்றும் மாலையை சூடி கோயில் கிணற்றில்தான் அழகு பார்த்ததாக கூறப்படுகிறது. தஞ்சாவூரில் இறைவனை வைகாசி பிரம்மோத்ஸவத்திற்கு ஆற்றங்கரைகளுக்கு கொண்டுவந்து ஒருநாள் இரவு தங்க வைத்து விழா எடுத்து சிறப்புசெய்வர்.

முக்தீஸ்வரர் ஆலயம் தெப்பக்குளத்தின் மேற்குகரையில் அமைந்துள்ளது. ஐராவதேஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் இக்கோயிலின் பெயராலேயே அருகிலுள்ள ஊர் ஐராவதநல்லூர் என்றழைக்கப்படுகிறது. ஐராவதம் இந்திரனின் வெள்ளையானையைக் குறிக்கும். காந்திஜெயந்தியன்று காந்திமண்டபத்தில் சூரிய ஒளி விழும்படி கட்டியுள்ளனர். இக்கோயிலில் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்தில் சிவலிங்கம்மேல் சூரிய ஒளி படும்படி கட்டியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

நான் தியாகராஜர் கல்லூரியில் 73-75ல் முதுகலைப் படிப்பு படித்தபோது மழைநீரால் இத்தெப்பம் நிரம்புவதைப் பார்த்திருக்கிறேன். கீழவாசல் பகுதியில் பெய்யும் மழைநீரெல்லாம் இத்தெப்பத்திற்குள் வந்து விழும்படி அமைத்திருக்கிறார்கள். யாளி, சிம்மம் என அழகாக அந்த தண்ணீர் விழும் தூம்பை வடிவமைத்திருக்கிறார்கள். இப்போது வைகையிலிருந்து நீர் கொண்டு வரப்படுகிறது.

இரண்டாவது முறை போனபோதுதான் மைய மண்டபத்தின் உச்சிக்குப் போனது. அப்போது பேராசிரியர் சுந்தர்காளி அந்த இடம் குறித்த வரலாற்றுத் தகவல்களையும், திருவிழாக்கள் பற்றியும் உரையாற்றினார். பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தெப்பக்குளத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

Theppakulam Maiyamandapam.jpg

இந்தாண்டு (2017) தெப்பத்திருவிழாவின் போது குளத்தினுள்ளே நீர் இல்லாததால் தங்கு தெப்பமாக அமைந்தது. திருவிழாப் பார்க்க வந்த மக்கள் தெப்பத்திற்குள் இறங்கி புற்தரைகளில் குடும்பம், குடும்பாக அமர்வது, பின் அங்கிருந்து மையமண்டபம் சென்று ஒருமுறை சுற்றிப் பார்ப்பது என அலைந்து கொண்டிருந்தனர். மையமண்டபத்தைச் சுற்றி நடைபாதை மட்டும் விட்டு கம்பி வேலி போட்டுள்ளனர்.

Theppakulam No Water.jpg

மதுரையிலுள்ள எல்லாக்கோயில்களிலும் தெப்பக்குளம் இருந்தாலும் தெப்பக்குளம் என்றாலே இந்தத் தெப்பக்குளத்தைத்தான் எல்லோரும் சொல்லுவர். மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாக இத்தெப்பக்குளம் திரைப்படங்களில் தொடர்ந்து காட்டப்பட்டு வருகிறது. அந்தத் தெப்பக்குளத்தோடான எனது நினைவுகள் பால்யத்திலிருந்து தொடர்கிறது. எங்கப்பா அருகிலுள்ள மாடல் ஹைஸ்கூலில் படித்திருக்கிறார். பாதிநாள் பள்ளிக்கூடம் போகாமல் தெப்பக்குளம் மையமண்டபத்தைச் சுற்றி விளையாடித் திரிந்ததை கூறுவார். தெப்பக்குளத்திலிருந்து அனுப்பானடி செல்லும் வழியில் எங்க சித்தப்பா வீடு இருந்தது. விடுமுறைக்கு செல்லும் போதெல்லாம் மாலை நேரங்களில் முக்தீஸ்வரர் கோயிலுக்கு செல்வதும், தெப்பக்குள சுற்று சுவரில் அவ்வப்போது அமர்ந்து வேடிக்கை பார்ப்பதும் வழக்கம். தம்பியுடன் ஓரிரு முறை மையமண்டபம் சென்றிருக்கிறேன். அடிகுண்டு விளையாடுபவர்கள், சும்மா வெட்டிப் பொழுது போக்குபவர்கள் என ஒரு கூட்டமே அங்கு இருக்கும்.

100CASIO

பாலிடெக்னிக் படிக்கும்போது சிலைமானிற்கு தெப்பக்குளம் வழியாகத்தான் பேருந்து செல்லும். அப்போதெல்லாம் தெப்பக்குள மையமண்டபத்தை பார்த்துக் கொண்டே செல்வது வழக்கம். கணிதப்பாடத்தை உடன்படித்த நண்பன் அழகுபாண்டிக்கு மையமண்டபத்தில் வைத்து ஒருமுறை சொல்லிக்கொடுத்தேன். அதன்பின் கல்லூரியில் உடன்பணிபுரியும் நண்பர்களுடன் தெப்பக்குளத்தில் படகுசவாரி ஏற்பாடு செய்திருந்த போது அதில் ஏறி மூன்று முறை வலம் வந்தது மறக்க முடியாத நினைவு.

பசுமைநடையாக சென்ற போது தெப்பக்குளத்தை சுற்றி வருகையில் சாந்தலிங்கம் அய்யா சொன்ன விசயம் ஞாபகத்திற்கு வருகிறது. வெளிநாட்டிற்கு சென்ற அவரது நண்பர் அந்த ஊரின் பழமையான இடத்தைப் பார்க்க பணம் கட்டி சென்றிருக்கிறார். அவர்கள் ஓரிடத்திற்கு கூட்டிப்போய் காட்டிய போது நமது தெப்பக்குளத்தைவிட சுமாரான அமைப்பிலிருந்த குளத்தைத்தான் காட்டினார்களாம். இதைத்தான் இவ்வளவு பணம் கட்டி வந்து பார்த்தோமா என நொந்துபோனாராம் அந்த நண்பர்.

ஆனால், இத்தனை அழகு கொண்ட தெப்பக்குளங்களை நாம் எந்தளவு பராமரிக்கிறோம்? பாதுகாக்கிறோம்?

தெப்பத்திருவிழா

வைகை மையமண்டபம்

காற்றின் சிற்பங்கள்

Advertisements
பின்னூட்டங்கள்
  1. Radhakrishnan Gopalsami pillai சொல்கிறார்:

    I was in Madurai in the year 1966-1972.At those time the Teppakulam was always full and I have seen the Theppathiruvizha.The massive water tank without water is really unfortunate.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s