களத்துமேட்டுக் கதைகள்

Posted: ஏப்ரல் 8, 2017 in பார்வைகள், பகிர்வுகள்

CIMG1989

கிராமங்களில் அறுவடை காலங்களை கொண்டாட்டமான நாட்கள் எனலாம். வயல்களில் நெற்கதிர்கள் முற்றி சாய்ந்து அறுவடைக்கு தயாராய் நிற்கும். தை மாதத்திற்கு பிறகு சூரியனும் தன் பங்கிற்கு பொன்னிற ஒளியைப் பாய்ச்ச ஊரே மஞ்சள் பூசியது போல பொன்னிறமாக மாறியிருக்கும். ஊரெல்லாம் களமாக, தெருவெல்லாம் வைக்கோல் இழைஇழையாக கிடக்கும்.

CIMG1904

மந்தையிலும், மேற்கே சோனையா கோயில் தாண்டியும் சிமெண்ட் களம் ஒன்றிருந்தது. மற்றபடி ஒரே நாளில் நிறைய அறுவடையாகும் போது அய்யனார்கோயில் கிட்ட, வன்னிமரம் பிள்ளையார்கோயில் முன்னாடி, கீழஅய்யனார் கோயில்கிட்ட, சுடுகாட்டு முக்குல புதிய களங்கள் உருவாகும். களம் என்றால் நல்லா கூட்டி சாணி தெளிச்சு சுத்தமா வச்சுருப்பாங்க. கருதுகட்ட கொண்டுவந்து ஒண்ணுமேல ஒண்ணா அடைவாங்க.

CIMG1996

கருதடிக்க பச்சைக்கலர்ல ஒரு மிஷினோடு கூடிய வண்டி வரும். அது மேல ஏறி ஒருத்தர் உட்கார்ந்து கருதுகட்ட அவுத்து மிஷினுக்குள்ள விடுவாரு. வைக்கோல் பின்னாடியும் நெல்லு ஒரு பக்கமும் வரும். வைக்கல பிரிச்சு காயப்போடுவாங்க. நெல்ல மொத்தமா குமிச்சு தூத்துவாங்க. காத்தடிக்கும் திசையில சண்டெல்லாம் பறக்கும். கருக்காயெல்லாம் ஒரு பக்கம் குமிஞ்சு கிடக்கும். வயதான பாட்டிகள் குவிந்து கிடக்கும் கருக்காயை அள்ளி, புடைத்து, தூற்றி ஒரு படி நெல் பார்த்துவிடுவார்கள். கதிர் அறுக்கும்போது பாம்பை பார்த்துவிட்டால் அதை அடித்து அது சென்ற தூரம் வரையிலான கதிர்களை தனியாக கட்டி எடுத்து வைத்துக்கொள்வார்கள்.

மரக்கால் என்ற அளவையில்தான் கூலி கொடுப்பார்கள். ஒவ்வொரு குழுவும் கொத்து என்று அழைப்பார்கள். காவல்தெய்வங்களின் பெயரில் அல்லது அந்தக் கொத்தனாரின் பெயரில் கொத்து அழைக்கப்படும். பள்ளிக்கூடங்களில் கதிரறுப்பு நாட்களில் சில மாணவர்கள் விடுமுறை எடுத்து வயல்வேளைகளுக்கு போய்விடுவார்கள். மந்தைக் களம் முழுக்க நெல்கட்டுக்கட்டாக கிடக்கும். காயப்போட்ட வைக்கோலில் நடப்பது, வைக்கோல் போரில் ஏறி விளையாடுவது கொண்டாட்டமான விசயம். டீக்கடைகளில் மொச்சை, சுண்டல் மசால் சேர்த்து விற்பார்கள். பழைய சோத்துக்கு தொட்டுச் சாப்பிட்டா சுவையாருக்கும்.

CIMG2021.JPG

மந்தைக்களத்தில் கதிரடிக்கும் போது அந்த வண்டி இரைச்சலும், நெல்லிலிருந்து வரும் தூசியும் வெளியெங்கும் பரவும். அதனால் வகுப்பறை சன்னல்களை அடைத்துவிடுவோம். ஐஸ்வண்டிக்காரர்கள் மந்தையில் உலவுவார்கள். கைவைத்த பனியன் போட்டு பனையோலையில் செய்த வட்டத் தொப்பி போட்டு இடுப்பில் துண்டி கட்டிய வயதான ஐஸ் வண்டித் தாத்தா வருவார். அவரிடம் நெல்லைப் போட்டு ஐஸ்வாங்குவார்கள். பிராந்திபாட்டில் 50 பைசாவிலிருந்து 75 பைசா வரை போகும். ஒரு ஐஸ் வாங்கலாம். அவர் வண்டியில் பஸ் ஹாரன் பழசு ஒன்றை பொருத்தி இருப்பார். மேலும், சைக்கிளுக்கு காத்தடிக்கும் பம்பை வண்டியிலேயே கட்டியிருப்பார். அவருடைய பெயர் தெரியவில்லை. கருப்பான அவரது முகம் நினைவில் நிற்கிறது.

P_20160403_102324.jpg

ஒரு முறை கதிரடித்து கருக்காய் கொட்டிக் கிடந்ததில் ஊர்த்திருவிழாவையொட்டி தீ வைத்திருந்தார்கள். (எருதுகட்டிற்காக களத்து பகுதிகளை சுத்தமாக்க). என்னுடைய நண்பர்கள் எருதுகட்டு விழாவிற்கு ஊரிலுள்ள பெரிய ரசிகர் மன்ற ஆட்களை போல தாங்களும் போஸ்டரை  பரிட்சை பேப்பரில் தயார் செய்து கலர் ஸ்கெட்சில் எழுதி ஆங்காங்கே ஒட்டினார்கள். நான் கமல் ரசிகரானாலும் நண்பர்களுடன் சென்றேன்.  என்னுடைய நண்பனான எங்க மாமா பையன் கருக்காய் எரிந்து கிடந்ததில் சாம்பல் என நடந்து போய்விட்டான். அதில் அனல் இருந்திருக்கிறது. காலில் பட்டு புண்ணாகி நடக்க முடியாமல் ஆக ரசிகர் மன்றத்தினர் ஓடிவிட்டனர். நான் அவனை கைத்தாங்கலாக பிடித்து கூட்டுட்டு போனேன். அவனும் ரஜினி ரசிகர் இல்லை, விஜயகாந்த் ரசிகர். மறக்க முடியாத நினைவுகள். இன்று ஊரில் எதற்கெடுத்தாலும் ப்ளக்ஸ் வைக்கிறார்கள்.

CIMG1992.JPG

எங்க அம்மாச்சி ஒருமுறை களத்துமேட்டில் கரும்புக்கு காவலாக இரவில் தங்கியிருந்த போது எங்க தாத்தா டிராக்டர் வரவில்லையெனத் தேடி ஊருக்குள் வந்திருக்கிறார். கரும்புக்கு காவலாய் இருந்த ஆச்சி நடுநிசியில் சோனையா கோயிலிலிருந்து மேலே ஒளிவெள்ளமாக வெண்புரவியில் சலங்கை ஒலிக்க சோனையா வானத்தில் பறந்து சென்றதாக கூறினார். புனைவா அல்லது அவரது கனவா எனத் தெரியவில்லை. ஆனால் கிராமத்து மக்களின் மனநிலையில் அது நடந்த காட்சிதான். இது போன்ற நிறைய கதைகள் வகுப்பில் உலவும். நெல்லைச் சுற்றி சாம்பக்கோடு போடுவார்கள் ஒரு குறியீடு போல. ஒரு முறை அமானுஷ்ய கதையொன்று எங்க பள்ளி மாணவர்களிடையே பரவியது. அம்பாரமாய் குவித்து வைத்த நெல் மேலிருந்து கீழாக குறைந்து யாரோ ஒருவருடைய வீட்டில் போய் விழுந்ததாக சொன்னார்கள். அப்படி வரவைக்க வேண்டுமானால் மந்திரவாதியிடம் போய் மாந்திரீகம் கற்று இரவில் பன்றியாய் மாறி கண்மாயில் மலத்தை தின்று அந்த சக்தி பெற்றதாக கூறுவர். அந்தக் கதையை இப்போது நினைத்துப் பார்க்கும்போது படுசுவாரசியமாக இருக்கிறது.

CIMG3486

அறுவடைக்காலங்களில் பள்ளிவிட்டதும் கதிர் பிறக்கப் போவார்கள். கதிர் அறுத்துச் சென்ற வயல்களில் உள்ள உதிரிகளை பொறுக்கி எடுத்து வீட்டில் வந்து கொடுத்து நெல்லை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். நான் ஒருமுறை கதிர்பொறுக்கி அதில் கிடைத்த நெல்லை கடையில் போட்டு கலர் வாங்கிக் குடித்திருக்கிறேன். நெல் அளந்து கூலிபோட்ட பிறகு ஏகாளி, குடிமகன்ககளுக்கு ஓரிரு மரக்கால் நெல் போடுவார்கள். இறுதிப் பயணத்தன்று முன்னின்று வருபவர்களல்லவா?

P_20160326_080422

வயக்காட்டுக்கு தாத்தாக்கு சோறு கொண்டு போனது, வைக்கோல் போரில் ஏறிவிளையாடியது, நெல்லு அவிக்கிறத வேடிக்கை பார்த்தது எல்லாம் கடந்தகாலமாகிவிட்டது. திருவிழாக்காலங்களில் சாமிக்கு விதைப்பு போடுவாங்க. மந்தைக்கு கொண்டு வந்து சாமிமேல் போடும் நெல் அவரது கழுத்து வரை இருந்த காலம் போய் இன்று காலடியையே தொடத் திணறுகிறது.

P_20160403_100121_1

இன்று ஊரில் முன்னைப் போல விவசாயம் இல்லை. கதிரடிக்க பெரிய வண்டி வந்து வயலிலேயே இறங்கி விடுகிறது. அடிப்பகுதி நிலத்துக்கு, நடுப்பகுதி மாட்டுக்கு, நுனிப்பகுதி மனிதனுக்கு என்று இருந்த நிலை மாறிவிட்டது. ந.முருகேசபாண்டியனின்  “கிராமத்து தெருக்களின் வழியே” என்ற நூலின் வாயிலாக நானும் பார்த்த நினைவுகளைத் தொகுத்து வைக்க எழுதிய பதிவு. நன்றி.

CIMG1987.JPG

(பதிவிலுள்ள கோயில்பாப்பாகுடி கிராமப் படங்கள் கடந்த 5 ஆண்டுகளுக்குள் எடுத்தவை)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s