தொல்லியல், கல்வெட்டுகள் மீதான காதல் பசுமைநடைப் பயணங்களில் துளிர்த்தது. ஒவ்வொரு மலையிலும் தமிழின் தொன்மை, பண்பாடு, வரலாறு என பல விசயங்களை அங்குள்ள கல்வெட்டுகள் மௌனமாக உணர்த்திக் கொண்டே இருந்தன. தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா பசுமைநடைப் பயணங்களை வரலாற்று வகுப்பாகவே மாற்றி எங்களை அவரது மாணவர்களாக்கிவிட்டார். இந்நடையில் இன்னும் கூடுதல் சிறப்பாக கல்வெட்டுகளைப் படியெடுத்துக் காட்டி செய்முறை வகுப்பையும் விருப்பமுள்ளதாக்கி விட்டார். கல்வெட்டை படியெடுத்து காட்டியபோது பள்ளி செல்லும் மாணவன் முதல் ஓய்வு பெற்ற முதியவர் வரை எல்லோருக்கும் புதிய அனுபவமாக அமைந்தது.
மாடக்குளம் கண்மாயில் உள்ள பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டை பசுமைநடையாக 2012-இல் சென்ற போது பார்த்தோம். 2016-இல் பசுமைநடை நாட்காட்டியை மாடக்குளத்தில் வெளியிட்டபோது நீர்நிறைந்திருந்ததால் கல்வெட்டைப் பார்க்க முடியவில்லை. இம்முறை 16.7.2107 அன்று கல்வெட்டைப் பார்த்ததோடு அதை படியெடுப்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.
ஒரு கல்வெட்டைப் பார்த்ததும் வாசிப்பது இலகுவானதல்ல. காலப்போக்கில் அதன்மீது படியும் தூசி, நீர், எண்ணெய், சுண்ணாம்பு போன்றவை அதை வாசிப்பதற்கு தடையாக அமைகின்றன. மேலும், ஒரு கல்வெட்டைப் படியெடுக்கும்போதுதான் அதை ஆவணப்படுத்த முடியும். அப்படி கல்வெட்டை படியெடுப்பதை படிப்படியாக சாந்தலிங்கம் அய்யா விளக்கினார்.
கல்வெட்டை படியெடுக்கத் தேவையான உபகரணங்கள் சில. மேப்லித்தோ தாள், இரும்பு பிரஸ், நார் பிரஸ், மை, மை ஒற்றி, ஒரு வாளித்தண்ணீர், குவளை. முதலில் நாம் படியெடுக்கப்போகும் கல்வெட்டை இரும்பு பிரஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் கல்வெட்டுகளின் மீது படிந்திருந்த புற அழுக்கு நீங்குகிறது. அதன்பிறகு நார்பிரஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வாளியிலுள்ள தண்ணீரை கல்வெட்டின் மீது ஊற்றும்போது கல்வெட்டு தெளிவாகத் தெரிகிறது.
நாம் எடுக்க வேண்டிய அளவிற்கு மேப்லித்தோ தாளை கிழித்து வைத்து கொள்ள வேண்டும். அதை நீரில் முக்கி கல்லின் மீது ஒட்ட வேண்டும். ஷூ பாலிஸ் போடுவதற்கு தேவையான பிரஸ் போல உள்ள பெரிய பிரஸ் கொண்டு தாளின் மீது மெல்லத் தட்ட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தாள் கல்வெட்டினுள் ஒட்டிவிடும். இதை கவனமாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கிழிந்துவிடும் அபாயமும் உள்ளது.
இந்தியன் இங்க், விளக்கு கரி, சிரட்டை கரி கொண்டு தயாரிக்கப்பட்ட மையை மையொற்றியில் தொட்டுத்தொட்டு கல்வெட்டின் மீது அழுத்த வேண்டும். கல்வெட்டு உள்ள பகுதி வெள்ளையாக மற்ற பகுதி கருப்பாக மாற அந்தச் கல்வெட்டு அழகாகத் தெரியும். காய்ந்ததும் அதை எடுத்துப் பத்திரப் படுத்த வேண்டும். மேலும், அதன் பின்னால் எந்த இடத்தில் எடுக்கப்பட்டது, என்று எடுக்கப்பட்டது போன்ற குறிப்புகளை விபரமாக எழுதி வைத்துக் கொள்வது நல்லது. கல்வெட்டு படியெடுத்தலை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்திலிருந்து வந்த ஆய்வு மாணவர்கள் இரண்டு பேரும் அய்யாவின் வழிகாட்டுதலில் பசுமைநடை பயணிகளுக்கு செய்து காட்டினர்.
மாடக்குளம் கல்வெட்டு சித்திரமேழி என்ற விவசாயக்குழுவினுடையது. இதன் மேலே ஒரு குடை, அதற்கு மேலே இரண்டு சாமரங்கள், அதன்கீழே இரண்டு புறமும் விளக்குகள், நடுவில் கலப்பை, விளக்கு அருகில் இரும்பு கருவிகள் அதன் கீழே ‘ஸ்வஸ்திஶ்ரீ இந்தக் குலமும் காலும் எண்திசை நாட்டு எரிவீரகணத்தான்’ என்பதை சொல்லும் வட்டெழுத்துக் கல்வெட்டு. அதனடியில் யானை மீது வீரனொருவன் செல்வது போன்ற சித்திரக்குறியீடு உள்ளது. யானை என்பது அத்திகோசம் என்ற யானைப்படையைக் குறிக்கும் குறியீடாக கருதலாம். கி.பி.5ம் நூற்றாண்டிலேயே பூலாங்குறிச்சி கல்வெட்டில் அத்திகோசம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யப்பட வேண்டிய இன்னொரு விசயம் இந்த ஊரிலுள்ள ஈடாடி அய்யனார் கோயிலில் யானை மீது அமர்ந்த கருப்புசாமி சிலை உள்ளது. இந்தக் கல்வெட்டை கண்மாயில் கண்டுபிடித்து படியெடுப்பதற்கு முன்பே இந்தச் சிலை உள்ளது நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. ஸ்வஸ்திஶ்ரீ என்பது மங்களமான வார்த்தை. இப்போது உ போட்டுத் தொடங்குவது போல அப்போது ஸ்வஸ்திஶ்ரீ பயன்பட்டிருக்கிறது.
கருப்பு வெள்ளைப் படங்களில் உறைந்த காலம் போல படியெடுத்த தாளில் கருப்பு வெள்ளையில் ஒளிர்ந்த எழுத்துச் சித்திரங்களில் எழுநூறு ஆண்டுகளுக்கும் மேலான காலம் உறைந்திருந்தது. பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு அருகே நின்று பார்த்தது மனநிறைவைத் தந்தது. பள்ளி, கல்லூரிகளில் வரலாறு வகுப்பறைகளில் முடங்கி முடைநாற்றமெடுக்க பசுமைநடைப் பயணங்களோ பல்துறை சார்ந்தவர்களை வரலாற்று மாணவராக, சூழலியல் ஆர்வலராக, நிழற்படக்கலைஞராக என பன்முகத்தன்மைகளை வளர்க்கும் அமைப்பாக உள்ளது.
மாடக்குளம் குறித்த முந்தைய பதிவுகள்