சோ.தர்மனின் ‘தூர்வை’

Posted: செப்ரெம்பர் 27, 2017 in பார்வைகள், பகிர்வுகள்

குமுக்காய்த் தளிர்த்து மஞ்சளாய்ப் பூத்துக் குலுங்கிக் குடையாய் நிற்கும் பெரிய கருவ மரத்தின் அடியில் அவர்கள் வட்டமாய் உட்கார்ந்திருந்தார்கள்.

‘தூர்வை’ நாவலிலிருந்து

Thoorvai Coverநாவலை வாசிக்கும்போதே நாம் நம்மை மறந்து வட்டமாய் அமர்ந்திருக்கும் அந்தக் கூட்டத்தில் ஒருவராகி விடுகிறோம். கரிசல் காட்டின் வெம்மையும், நீர்மையும் நம் மேல் அப்பிக் கொள்ளும் அளவிற்கு சோ.தர்மன் என்ற கதைசொல்லியின் கதையில் மயங்கிக் கிடக்கிறோம்.

கரிசல் மண் கந்தக பூமியான கதை. விவசாயத்தை விட்டு சம்சாரி தீப்பெட்டித் தொழிற்சாலையின் காவலாளியாய் போனதை சொல்லும் கதை. ஆனால், கதை அதை நோக்கி வலிந்து செல்லாமல் இயல்பாய், அழகாய் காட்டோடை போல சிலுசிலுத்து நம்மை ஈர்த்தபடி ஓடுகிறது.

நாவல் வாசித்து நெடுநாள் ஆனபின்னும் மினுத்தான் – மாடத்தி தம்பதிகள் நம் மனதில் நிற்பார்கள். மாடத்தி போல ஒரு பெண் எல்லா கிராமங்களிலும் இருக்கிறாள். எல்லா பெரிய மனிதர்களும், எளிய மனிதர்களும் அவள் ஆலோசனை கேட்டு நடக்கிறார்கள். அவளை மனதார வாழ்த்துகிறார்கள், வணங்குகிறார்கள். இந்நாவலில் மாடத்தி இறக்கும் வரிகளை வாசிக்கையில் கண்கள் துளிர்ப்பதை நாம் தடுக்க இயலாது.

மாடத்தி

கிராமம் சாதியம் சார்ந்ததுதான். ஆனால், மக்களுக்கிடையே அதைத் தாண்டியுள்ள இணக்கத்தை இந்நாவல் பதிவு செய்கிறது. அதற்கு அத்தாட்சியாய் ஒரு சம்பவம். தன் வீட்டில் வேலைக்கு வந்தவனுக்கும் சொத்தை எழுதி வைக்கச் சொல்லும் மாடத்திமினுத்தான், அதை மகனுக்கும் தெரியாமல் பதிந்து வேலுத்தேவரிடம் கொடுத்து வைக்கும் மினுத்தான், மினுத்தான் இறந்த அன்று அதைக் கொண்டு வந்து சேர்க்கும் வேலுத்தேவர் மகன், அதை வாங்கிய மினுத்தானின் மகன் (பெரியசோலை) குருசாமியிடம் கொடுக்கும் காட்சி மானுடத்தின் உயிர்ப்பிற்கான காட்சியாய் திகழ்கிறது.

விவசாயக் குடிகளுக்கு பொழுதுபோக்குதான் என்ன? மடத்தில் கதையளப்பது, சிலம்பம் பழகுவது, ஒயில்கும்மி ஆடுவது, ஆடுபுலி ஆட்டம் ஆடுவது, அதையுந்தாண்டி நேர்த்திக்கடன் தீர்க்க வண்டி கட்டி குடும்பம் குடும்பமாய் போவது. இவையெல்லாம் இன்று நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். முன்னெல்லாம் எங்க கிராமத்திலேயே காலைல ‘வெளிய’ ஆறேழு பேர் சேர்ந்து பேசியபடி போய் காலைக்கடன்களை முடித்துவிட்டு, மோட்டரில் குளித்துவிட்டு வருவார்கள். இன்று எல்லாம் மாறிவிட்டது.

இந்நாவலில் வரும் பேய்க்கதைகளை வாசிக்கையில் பள்ளி நாட்களுக்கு இழுத்துச் சென்றது நினைவு. வகுப்பில் பேய்க்கதைகள் பற்றி பேசத் தொடங்கினால் ஆளுக்கு ஒரு கதை சொல்வார்கள். பக்கத்துல பார்த்தேன், சாமி கயர பார்த்து ஓடிருச்சு’ என. இதுபோல மடத்தில் இருக்கும் பெரிசு சொல்லும் கதைகள் வெகு சுவாரசியம். (அதை அப்படியே வாசித்து பதிந்து வைத்திருக்கிறேன்) பேய்க்கதை சொல்லும் பெருசையே பயங்காட்டி கழியவிடும் குசும்பன்கள் அந்த ஊரில் இருக்கிறார்கள். முன்னெல்லாம் மாலையில் பிரியும் போது காலைல பார்க்கலாம் எனச் சொல்ல மாட்டார்கள். ஏன்னா, விடியும்முன் பேய் அவங்க மாதிரியே போய் எழுப்பி கூட்டிட்டு போய் கொன்றுவிடும் என்ற பயம் இருந்தது.

மினுத்தானின் அண்ணன் மகனாக வரும் முத்தையா சோறு கண்ட இடம் சொர்க்கம் என ஊர்சுற்றிக் கொண்டு எல்லோரையும் கலகலப்பாக பேசி, வேடிக்கைகள் காட்டி சிரிக்க வைப்பவன். எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பவர்கள் உள்ளுக்குள் கவலைகளை மறைத்து வைத்திருப்பார்கள் என்பதற்கு ஏற்ப ரெண்டு மூணு கல்யாணம் பண்ணியும் தனிக்கட்டையாய் வாழும் முத்தையாதான் இந்நாவலில் எனக்குப் பிடித்த கதாபாத்திரம்.

சண்டைச்சேவல் வளர்க்கும் பழக்கம், நரியோடு பேசி சோறு போடும் கிழவி, பருத்தி திருடுபவன், புதுப்பணக்காரன், போலி சண்டியர், விவசாயம் பொய்ப்பது, இரண்டு கிராமங்களுக்கிடையிலான தண்ணிச் சண்டை, கருவேலமரத்தை தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்கு வெட்டிக் கொடுத்து பணம் பார்ப்பவர்கள், பதினி-கள்ளு இயல்பாய் புழங்கியது, கம்மஞ்சோறு கேப்பக்கஞ்சிக்கு ஏங்கிய காலம் / ஏங்கவிட்ட காலம் எல்லாம் நாவலினூடாக பதிவாகியிருக்கு.

நல்ல சிலம்பாட்டக்காரன் புலிவேடமிட்டு இரட்டை வால் கட்டி வருவதைப் பற்றி ‘புலியாட்டம்’ கட்டுரைத் தொகுப்பு முன்பு வாசித்திருக்கிறேன். அதேபோல இந்நாவலில் பக்கத்துஊர்த் திருவிழாவில் ஒருவன் இரட்டைவால் கட்டி வருகிறான். சிலம்பவாத்தியார் ராமு அவனோடு சண்டையிட்டு ஜெயிக்கிறார். கடைசியில் அடிபட்டு தோற்றவன் அவரது சீடனின் சீடன்.

சோ.தர்மன்

வாசிக்க, வாசிக்க கரும்புச்சாறு போல ஈர்க்கும் சொல்நடை. எம்புட்டு நாளாச்சு இப்படி ஒரு கதை வாசித்து என வியக்க வைத்து விடுகிறார் சோ.தர்மன். இந்நாவலுக்கு முன்னுரை எழுதிய கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் – கி.ரா. அத்தனை அழகாய் நாவலைப் பற்றி பேசுகிறார். கதைசொல்லிகளின் நடையில் கட்டுண்டு கிடக்கிறோம் நாம்.

சுழலும் உருளையில் மாறும் ஊர்களின் கதையை சோ.தர்மன் தான் வாழ்ந்த உருளைக்குடியின் கதையின் வாயிலாக சொல்கிறார். மாற்றங்கள் எல்லாம் ஏற்றங்களை நோக்கியல்ல, வீழ்ச்சியை நோக்கி எனும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கு. என்ன ஆனாலும் வாழ்வெனும் பெருநதி அடித்துப் போகிற போக்கில் போய்த்தானே தீரணும்.

நன்றி: ஓவியங்கள் மனோகர்

Advertisements
பின்னூட்டங்கள்
  1. Latha சொல்கிறார்:

    அருமையான பகிர்வு. கரிசல் காட்டு மக்களின் எளிய வாழ்க்கையைப் போகிற போக்கில் இயல்பாகச் சொல்லிப் போவது தான் ஆசிரியரின் வெற்றி .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s