அறியப்படாத தமிழகம் – தமிழகம் அறிய வேண்டிய புத்தகம்

Posted: திசெம்பர் 17, 2017 in பார்வைகள், பகிர்வுகள்

அறியப்படாத தமிழகம்நம் வீட்டு நூலகத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம், நாம் தினசரி வாசிக்க வேண்டிய புத்தகம், நாம் சந்திக்கும் நபர்களுக்கு பரிசளிக்கக் கூடிய புத்தகம் எனப் பல வகைகளிலும் முக்கியமானதாக ஒரு நூலைச் சொல்ல முடிந்தால் அது தொ.ப.வின் “அறியப்படாத தமிழகம்”தான். தொ.பரமசிவன் அய்யாவிடம் பெரியார் குறித்தும் பேசலாம் – பெரியாழ்வார் குறித்தும் பேசலாம், சங்க இலக்கியம் குறித்தும் பேசலாம் – சங்கர மடம் குறித்தும் பேசலாம் என்பதுதான் அவரது தனிச்சிறப்பு. தொ.ப.வின் நூல்களைத் தேடித் தேடி வாங்கி வாசிப்பதும், அதை நாலுபேரிடம் கொண்டு சேர்ப்பதும் நமது கடமை.

நம்முடைய அடிப்படைத் தேவைகள் குடிநீர், உணவு, உடை, இருப்பிடம் ஆகும். இவைகளை நாம் பயன்படுத்துகிறோமே தவிர அவற்றைப் பற்றிய தெளிவு நம்மிடம் இல்லை. அவைகளைக் குறித்த தெளிவை இந்நூல் உங்களுக்கு ஏற்படுத்தும். உதாரணமாக தண்ணீர் என்பது பொதுவான சொல்லாக இருந்தாலும் அது பயன்படும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடுவதை ஒரு பத்தியில் அழகாகச் சொல்கிறார்.

“நீர் என்பது வானத்திலிருந்து வருவது என்பதனால் அதனை ‘அமிழ்தம்’ என்றே வள்ளுவர் குறிப்பிடுவார். நீர் நிலைகளுக்குத் தமிழர்கள் வழங்கி வந்த பெயர்கள் பல. சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை ‘குளம்’ என்பதாகவும், உண்பதற்கு பயன்படும் நீர்நிலை ‘ஊருணி’ எனவும், ஏர்த்தொழிலுக்கு பயன்படும் நீர்நிலை ‘ஏரி’ என்றும் வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை ‘ஏந்தல்’ என்றும், கண்ணாறுகளை உடையது ‘கண்மாய்’ என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர்”

தொ.பரமசிவன்‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என தமிழ் குறித்த முதல் கட்டுரையிலேயே நம்மை அசத்தி விடுகிறார். அதைத்தொடர்ந்து இந்நூலில் தமிழர் உணவு, உணர்வும் உப்பும், உணவும் நம்பிக்கையும், எண்ணெய், சோறுவிற்றல், பிச்சை, தெங்கும் தேங்காயும், உரலும் உலக்கையும், சிறுதெய்வங்களின் உணவு, வீடும் வாழ்வும், தமிழர் உடை, உறவுப்பெயர்கள், தாலியும் மஞ்சளும், சங்கும் சாமியும், தைப்பூசம், தீபாவளி, துலுக்கநாச்சியார், பழையகுருமார்கள், மதமும் சாதியும், பல்லாங்குழி, தவிடும் தத்தும், தமிழக பௌத்தம், சமணம், அஞ்சுவண்ணம், பேச்சு வழக்கும் இலக்கண வழக்கும் என இதுபோன்ற பல தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் நாம் அறியாத பல தகவல்களைக் கொண்டுள்ளது.

“உரையாடும் போது அவரிடமிருந்து தெறிக்கும் கருத்துக்களும் சான்று மேற்கோள்களும் வாழ்ந்து பெற்ற பட்டறிவும் உடனுரையாடுபவரை மலைப்பில் ஆழ்த்துபவை” என நூல் முன்னுரையில் ஆ.இரா.வேங்கடாசலபதி கூறுகிறார். அதை நானும் ஒருமுறை அனுபவிக்க நேர்ந்தது. தொ.ப.வின் வீட்டில் இன்றைய கல்வி முறை குறித்து பேசிக் கொண்டிருந்த போது “இப்ப எங்க Teaching இருக்கு. எல்லாமே Coachingதான்” என்றார். தன் கருத்தை எளிமையாய், வலிமையாய் சொல்லும் ஆற்றல் தொ.ப.விடம் உண்டு.

நிறைய விசயங்களைப் பார்த்திருப்போம் அல்லது கவனிக்காதபடி கடந்திருப்போம். தொ.ப. அது போன்ற விசயங்களை எடுத்துரைக்கும் போது நாம் அசந்து போகிறோம். கொஞ்சம் குண்டான பெண்களை குந்தாணி என கேலி பேசுவார்கள். அந்த சொல் எங்கிருந்து வந்ததென பார்த்தால் உரல் மேல் உலக்கை கொண்டு குத்தும் போது தானியங்கள் சிதறாமல் இருக்க வைக்கும் வட்டப் பலகைகைக் குறிக்கிறது. தலையும், காலும் இல்லாமல் இருக்கும் அந்தப் பலகைதான் குந்தாணி. அதுபோல தலையும் காலும் தெரியாதளவு குண்டான பெண்களைத் தான் குந்தாணி எனச் சொல்கிறார்கள் என “உரலும் உலக்கையும்” கட்டுரையில் சொல்கிறார்.

அதேபோல உறவுப்பெயர்கள் குறித்து எழுதும் போது தம் பின் பிறந்தவன் என்ற சொல்லிலிருந்து தம்பி என்ற சொல் வந்ததாக குறிப்பிடுகிறார். இந்த புத்தகம் வாசிக்கையில் எனக்கு தோன்றிய ஒரு சொல் அத்தாச்சி. அண்ணன் மனைவியை மதினி என்று அழைப்பதைப் போல மதுரைப் பகுதிகளில் அத்தாச்சி என்று சொல்வார்கள். கணவன் மனைவிக்கு தாலி கட்டுகையில் உடன் சாட்சியாய் நின்றவள் என்பதால் அத்தாச்சி என அழைக்கிறார்கள் என எனக்குத் தோன்றியது. இப்படி இந்நூல் நம்மை பண்பாட்டுத் தளத்தை நோக்கி கொண்டு சேர்க்கிறது.

பல்லாங்குழி குறித்த கட்டுரை அந்த விளையாட்டின் பின்னுள்ள பல விசயங்களை தெளிவு படுத்தியது. நாலு காய்கள் ஒரு குழியில் சேரும் போது அதை பசு என எடுத்துக் கொள்வது குறித்து சொல்லும் போது நம் முன்னோர்கள் முன்பு கால்நடைகளையே பண்டமாற்றாக முதலில் கொடுத்திருந்ததை எடுத்துக் காட்டுகிறார். “பேச்சு வழக்கினைத் தன் அடிப்படையாக ஆக்கிக் கொண்ட காரணத்தால்தான் தமிழிலக்கணம் இன்றுவரை கட்டுடைபடாமல் தன்னைக் காத்து உயிர்ப்பாற்றல் மிக்கதாக விளங்குகிறது’ என்ற தொ.ப.வின் கருத்தை நாம் உள்வாங்கி நம் மொழி இலக்கணத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

பீட்டர் பாண்டியன் குறித்த கட்டுரை அந்த ஆங்கிலேயர் மீதான மரியாதையை ஏற்படுத்துகிறது. சமணம் குறித்த கட்டுரை மலைகளையும், தொல்தலங்களையும் நோக்கி பயணிக்க வைத்தது. தைப்பொங்கல் போல தீபாவளி தமிழர் பண்டிகையே அல்ல என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். கறுப்பு என்ற வண்ணத்தின் மீதுள்ள இன்றைய வெறுப்பை “கறுப்பு” கட்டுரை அடித்து வெளுக்கிறது. கருப்பின் கண் மிக்குள்ளது அழகு.

பண்பாட்டு அசைவுகள்பண்பாட்டு அசைவுகள் நூல் ‘அறியப்படாத தமிழகம்’ மற்றும் ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ என்ற தொ.ப.வின் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளை உள்ளடக்கிய நூலாகவும் வந்துள்ளது. அறியப்படாத தமிழகம் தனிநூலாகவும் காலச்சுவடு வெளியிட்டு உள்ளது. இதில் அறியப்படாத தமிழகம் நூறுபக்கங்கள் இருக்கும். இதில் கிட்டத்தட்ட 50 தலைப்புகளில் இரண்டு – மூன்று பக்க அளவு கொண்ட ஒரு கட்டுரை உள்ளது. அந்த சிறிய கட்டுரைக்கு பின்னால் தொ.பரமசிவன் அய்யாவின் உழைப்பும், கள ஆய்வும் நிறைந்திருப்பதை நாம் வாசிக்கையிலேயே உணர முடியும்.

பண்பாட்டு அசைவுகள் கட்டுரையில் அவர் குறிப்பிடும் விசயம் நம்மை அசைத்துவிடுகிறது. இப்படி ஒவ்வொன்றாய் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் வாசிக்கும் ஆர்வத்தை வழியிலேயே தடுத்தது போலாகிவிடும். உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா? என விளம்பரங்கள் கேட்பது போல நான் உங்களிடம் கேட்கிறேன் ‘உங்ககிட்ட அறியப்படாத தமிழகம் இருக்கா?

(நவம்பர் சஞ்சிகை சிற்றிதழில் வந்த கட்டுரை)

நன்றி – முருகராஜ்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s