நினைவுகளின் சுவட்டில் – வெங்கட் சாமிநாதன்

Posted: மார்ச் 11, 2018 in பார்வைகள், பகிர்வுகள்

யாருடைய வாழ்க்கையிலும் சுவாரஸ்யமான சம்பவங்களும், மனிதர்களும் எதிர்ப்பட்டிருப்பார்கள். அவர்களைப் பற்றி கொஞ்சம் சிரத்தையெடுத்து எழுதினால் நல்ல சிறுகதைகள் நமக்குக் கிடைக்கும். – க.நா.சு

காலமானநினைவுகளின் சுவட்டில் - வெ.சா.jpg எழுத்தாளர் – விமர்சகர் வெங்கட் சாமிநாதன் 75வது வயதில் தனது வாழ்க்கையை திரும்பிப் பார்த்து எழுதிய கட்டுரைகளே ‘நினைவுகளின் சுவட்டில்’. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டங்களைப் பற்றி வாசிக்கையில் நமக்கு பல சுவாரசியமான விசயங்களும் கிடைக்கின்றன. நிலக்கோட்டை, மதுரை, கும்பகோணம் போன்ற ஊர்களின் அக்கால நிலையை ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காணும் வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது.

நினைவுகளின் சுவட்டில்நிலக்கோட்டையில் தாய்மாமா வீட்டில் எட்டாம் வகுப்பு வரை படிப்பு, பின் மதுரை சேதுபதி பள்ளியில் ஓராண்டு, அதன்பிறகு சொந்த ஊரான உடையாளூரில் தங்கி கும்பகோணத்தில் படிப்பு, எஸ்.எஸ்.எல்.சி முடித்து வடக்கே ஜம்ஷெட்பூர், ஹீராகுட் அணைக்கட்டு பணி வரை வெங்கட்சாமிநாதன் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, மறக்க முடியாத சில மனிதர்களை, நினைவில் நின்றவைகளைத் தொகுத்திருக்கிறார்.

“என் இரண்டாம் வயதிலிருந்து இருபத்துநான்காம் வயதுவரை முறையே என்னை எடுத்து வளர்த்து கல்வியும் தந்து, ஆளாக்கி ஆதரவும் அளித்த நிலக்கோட்டை பாட்டி, மாமா, என் பெற்றோர்கள். ஜம்ஷெட்பூர் மாமா மற்றும் ஹிராகுட் எஸ்.என்.ராஜாவுக்கு” இந்நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார். இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கையில் நமக்கும் அவர் வாழ்வில் இந்நபர்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நிலக்கோட்டையில் பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றி கிடைத்த வருமானத்தில் ஒரு பெரிய குடும்பத்தை கட்டிக் காத்த வெங்கட்சாமிநாதனது தாய்மாமா, ஜெம்ஷெட்பூருக்கு அவரை வரவழைத்து தட்டச்சு, சுருக்கெழுத்து, ஓவியம் என பல விசயங்களில் அவரை சிறப்புற செதுக்கிய அம்பி மாமாவும் நம் மனதை கவர்கிறார்கள்.

சுதந்திரம் பெறுவதற்கு முன் மதுரைக்கு வந்த காந்தியடிகளைப் பார்க்க நிலக்கோட்டை ஊரே திரண்டு அம்மையநாயக்கனூர் ரயில்நிலையம் சென்று மகாத்மாவைப் பார்த்த அனுபவங்களை வாசிக்கும் போது அக்கால மனிதர்கள் காந்தி என்ற மனிதர் மீது வைத்திருந்த மதிப்பை அறிந்து கொள்ள முடியும். அதேபோல பெரியார், அண்ணா போன்றவர்களைப் பார்த்த அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார். அண்ணாவின் எளிமை, அவரது நல்ல குணங்கள் மீது வெங்கட்சாமிநாதனுக்கு ஈர்ப்பு இருந்ததை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். தமுக்கம் மைதானத்தில் அருணா ஆசஃப் அலி பேசியதைப் பார்த்ததை குறிப்பிடுகிறார். மேலும், கும்பகோண வீதிகளில் எழுத்தாளுமைகள் உலவிய வீதிகளில் தான் அலைந்து திரிந்ததை பெருமிதத்தோடு பதிவு செய்திருக்கிறார்.

மதுரையில் தங்கியிருந்த நாட்களில் அத்தை வீட்டிலிருந்து பார்த்த திரைப்படங்கள், சுற்றிய வீதிகள், கொலு சமயத்தில் சென்ற கோயில்களை எல்லாம் நினைவில் வைத்திருக்கிறார். பாரதியார் பணியாற்றிய பள்ளியில் படிக்கிற பேறு கிடைத்ததை ஞாபகத்தில் வைத்திருக்கிறார். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள சொந்த ஊரான உடையாளூரில் தங்கி மூன்று ஆறுகளைக் கடந்து கும்பகோணத்திற்கு வந்து படித்து போன பசுமையான நினைவுகளை வாசிக்கையில் நமக்கு அந்த காலம் காட்சியாய் கண்முன் தெரிகிறது.

நிலக்கோட்டையிலிருந்து அம்மையநாயக்கனூர் போய் அங்கிருந்து கும்பகோணம் சென்ற ரயில் பயணம், பிறகு படிப்பு முடிந்து கும்பகோணத்திலிருந்து சென்னை போய் அங்கிருந்து ஜெம்ஷெட்பூர் சென்ற பயண அனுபவங்களை சுவாரசியமாக எழுதியிருக்கிறார். அக்காலத்தில் அம்மையநாயக்கனூர் – கும்பகோணம் என பயணச்சீட்டு எடுத்தால் கட்டணம் கூடுதல், அதனால் அவரது மாமா பாதிதூரம் வரை எடுத்து பின் திருச்சி போல ஓரிடத்தில் திரும்பவும் பயணச்சீட்டு எடுத்து பயணித்ததை சொல்கிறார். திராவிடக்கட்சிகள் அக்காலத்தில் நடத்திய வாசக சாலைகள் பலரை வாசிக்க தூண்டியதை இக்கட்டுரைத் தொகுப்பு வாசிப்பதினூடாக அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், சீக்கியர்கள், பஞ்சாபியர்கள் என அவருக்கு பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

வெங்கட்சாமிநாதன்

வெங்கட்சாமிநாதன் பணி முடிந்ததும் அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து மாலை நேரங்களில் மாதத்திற்கு பாதிநாட்கள் டெல்லியில் நடக்கும் பல்வேறு வகையான நிகழ்வுகளுக்கும் சென்றிருக்கிறார். 1988ல் ஒருவிபத்தில் கால் அடிபட இந்தப் பயணங்கள் நின்றுவிட்டன. ஓவியம், சிற்பம், இசை, நாட்டார் வழக்காறு, இலக்கியம் என பல துறைகளில் தன் கருத்துகளை தைரியமாக எடுத்துரைப்பவராக வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நூலை வாசிக்க கொடுத்த நண்பர் சஞ்சிகை முருகராஜ்க்கு நன்றி.

அகல் வெளியீடு – விலை 170 ரூபாய்

நன்றி – புகைப்படங்கள்: சேதுபதி அருணாசலம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s