ஆயிரத்தொரு ஆலவாய் இரவுகள்

Posted: மார்ச் 18, 2018 in பார்வைகள், பகிர்வுகள்

எஸ்..ரா

எஸ்.ராமகிருஷ்ணன் உரை – புட்டுத்தோப்பு – மதுரை

எல்லோருக்கும் வணக்கம். தொடர்ந்து பசுமைநடையை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு வரும் முத்துக்கிருஷ்ணனுக்கும், உறுதுணையாக இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், அதில் கலந்து கொள்ளக்கூடிய உங்கள் எல்லோருக்குமே என்னுடைய மனம்மிகுந்த அன்பையும், பாராட்டுதலையும் தெரிவிச்சுக்கிறேன். ஆயிரத்தோரு அராபிய இரவுகள்னு ஒரு புத்தகம் இருக்கு. அதை வாசிச்சுருக்கீங்களான்னு தெரியல. ஆனா அந்தக் கதை உங்க எல்லோருக்கும் தெரியும். அது என்னான்னா அலிபாபாவும் நாற்பது திருடர்களும்னு ஒரு திரைப்படம் பார்த்தோம் இல்லையா? அதுல வர்ற அலிபாபா ஆயிரத்தோரு இரவுக்கதைகள்ல வர்ற நாயகன். அந்தக் கதை நடக்கக்கூடியது பாக்தாத் நகரத்துல. ஆனா அந்த தமிழ்ப்படம் பார்த்த யாருக்கும் இது ஒரு அராபிய கதைனோ, அதுல வர்ற அலிபாபா வந்து பாக்தாத் நகரத்துல வசிக்கிறவன்னோ, அதுல வர்ற திருடர்கள்லாம் அராபிய தேசத்தைச் சேர்ந்த திருடர்கள்னு நமக்குத் தெரியாது. எம்.ஜி.ஆர் நடிச்ச படம். அதுல நடிச்சவங்களையெல்லாம் நமக்கு தெரியும். அதுல எம்.ஜி.ஆர் பேர் அலிபாபா. அவ்வளவுதான். உலகம் முழுக்க எல்லாராலையும் வாசிக்கப்பட்ட உலகத்தோட தொன்மையான புத்தகம் வந்து ஆயிரத்தோரு அராபிய இரவுகள்ன்ற புத்தகம். அந்தக் கதைகள் பாக்தாத்ன்ற நகரை மையமாக வச்சு எழுதப்பட்டது. அந்த நகரத்தோட ஆயிரம் இரவுகளைச் சொல்ற கதைதான் அது.

எஸ்.ராமகிருஷ்ணன்

நான் வந்து காரியாபட்டி பக்கத்துல இருக்கிற மல்லாங்கிணறுன்ற கிராமத்தைச் சேர்ந்தவன். என்னுடைய 8 வயதிலிருந்தே மதுரைல சுத்தி திரிஞ்சிட்டு இருக்குறேன். நான் வந்து மாட்டு வண்டில மதுரைக்குள்ள வந்துருக்குறேன். மாட்டுவண்டிய கொண்டு வந்து வண்டிப்பேட்டைல போட்டுட்டு, எங்க ஊர்லயிருந்து மல்லிகைப்பூ கொண்டுவரங்களோடு வருவேன். நண்பர்களோட மதுரைல சுற்றிக்கொண்டிருக்கிறேன். இங்கதான் படிச்சேன். இந்த நகரம் என் வாழ்க்கையோட ஒரு முக்கியமான ஒரு அங்கம். தமிழ் இலக்கியத்துல அதிகம் பேசப்பட்ட, இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மையம் எதுன்னா மதுரைதான். தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செஞ்சாங்க. மூன்று பேரும் சிறப்பானவர்களா இருந்தாலும் ஒரு சேரனோ, சோழனோ தன்னை தமிழன்னோ, தமிழ் மையத்தை உருவாக்குபவனாகவோ, நான் ஒரு தமிழ்ச்சங்கத்த நிறுவுவேன்னோ சொல்லல. பாண்டிய மன்னர்களுக்குத்தான் அந்த எண்ணம் இருந்தது. அதை உருவாக்குனாங்க. கவிஞர்களை உருவாக்கி கூடவே வச்சுருந்தாங்க. தமிழ்படைப்புகளை உருவாக்குவதற்கு பெரிய அளவு துணை செஞ்சாங்க. தன்னை வந்து திரும்பித்திரும்பி தமிழ் இனத்தோட அடையாளத்தோட பொருத்திக்கிட்டாங்க. தமிழ் இலக்கிய வரலாறு படித்தால் தெரிகிறது, தென்பகுதி. குறிப்பா மதுரையும் மதுரையிலிருந்து தெற்கு தமிழ் இலக்கியத்துக்கு கொடுத்த கொடை மிகப்பெரியது. தமிழின் முக்கியமான ஆளுமைகள் பலரும் தென்பகுதியில இருந்து உருவாகி வந்தவங்கதான். பாரதி உள்ளிட்ட தமிழ் இலக்கியத்திற்கு பெரும் தொண்டாற்றிய நகரம்.

இந்த நகரத்துக்கு உள்ள இன்னொரு சிறப்பு. அது கதையாக கூட இருக்கலாம். இந்த நகரத்துலதான் கடவுள் ஒரு கவிதை எழுதிட்டு நான் ஒரு கவிஞர்னு அறிமுகம் ஆகிட்டாரு. வேறு எந்த நாட்லயும் கடவுள் தனக்கு கவிதைலாம் பிடிக்கும், கவிதைலாம் கேட்கக்கூடியவரா இருப்பாரு. தானே கவிதை எழுதிக் கொண்டு வந்து நானொரு கவிஞன் என்னுடைய கவிதைய அங்கிகரிங்கன்னு கேட்ட நகரம். அதுனால கடவுளே கவிஞராக வந்த நகரம்னு மதுரைக்கு ஒரு பெரிய பேருண்டு. இந்த நகரத்தில் எல்லோருக்குமே இயல்பாகவே தமிழ் மீதும், தமிழ் மொழியின் மீதும், இலக்கியத்தின் மீதும் ஆசையும் விருப்பமும் உண்டு. அவர்கள் தமிழின் இனிமையை கொஞ்சம் கவித்துவமான தமிழை பேசக்கூடியவர்களா இருப்பாங்க.

நான் வந்து இந்த பாக்தாத் நகரத்தை பற்றி ஆயிரத்தோரு அராபிய இரவுகள்ல எழுதியது போல மதுரையினுடைய ஆயிரம் பகல்களை எழுத விரும்புகிறேன். ஏன்னா மதுரையினுடைய பகல்கள் வந்து ஆயிரம் எழுதலாம். அவ்வளவு இருக்கு. இந்த நகரம் இரண்டு தலைகள் கொண்ட ஒரு நகரம். மதுரை வந்து ஒருபக்கம் தூங்கிட்டு இருந்தா இன்னொரு பக்கம் முழிச்சுட்டு இருக்கும். முழுக்க தூங்குற நகரம் கிடையாது. நகரத்துல ஒரு பகுதி மக்கள் வேற ஏதோ பணிகள் செஞ்சுகிட்டு இருப்பாங்க. அப்ப அவர்கள் தூங்குற நேரத்துல இன்னொரு பகுதி வேலை செஞ்சுட்டே இருப்பாங்க. பகலும் இரவும் இயங்கிட்டே இருக்கக்கூடிய ஒரு நகரம். இந்த நகரத்தினுடைய ஒவ்வொரு பகுதியும் சிறப்பானது.

தனியான வாழ்க்கைமுறை, தனியான பண்பாடு இருக்கு. மதுரைக்கு தனித்துவமான சில விசயங்கள் இருக்கு. அவங்க ஒரு மனிதரை வரவேற்குற விதம், உபசரிக்கிற விதம், அவருக்காக அவருடைய சுகதுக்கங்களுக்காக தன்னை ஒப்புக்கொடுத்துக்கிறது எல்லாத்துலயும் இந்த நகரம் முக்கியமானது.

குறிப்பாக வரலாற்றுல எல்லாக் காலகட்டத்துலயும் மதுரை முக்கியமான அரசு மையமாக இருக்கிறது. இன்றைக்கும் கூட தமிழக அரசியலை தீர்மானிக்கப்போவது யார், எந்த இடம்னு யோசிச்சா அதுல மதுரைக்கு முக்கியமான இடம் இருக்கு. அரசியல், கலை, வரலாறு, சினிமா எல்லாத்துலயும் மையமா இருக்கக்கூடிய இந்த மதுரை. ஏதோ ஒரு இடத்துல அதனோட பழமைய அறியாம இருக்கு. அதனுடைய இவ்வளவு பெரிய தொடர்ச்சிய தூக்கிப் பிடிக்காம இருக்கு. இன்னொரு வகைல சொல்லப்போனா லண்டன் போல, பாக்தாத் போல உலகின் முக்கியமான நகரங்களில் தான் ஒன்று அப்படின்னு நிமிர்ந்து நிற்காமல் – அதற்கு காரணம் அந்த நகரத்தினுடைய மக்கள். அந்த நகரத்தினுடைய பண்பாடை, வரலாறை பெரிதாக கருதாமல் இருக்குறது. கூடுதலாக அந்த நகரத்தைப் பற்றி அவர்களே தெரிந்து கொள்ளாமல் இருப்பது. யாரோ வெளியூர்காரங்கள அழைச்சுட்டு வந்து இப்படி இராமாயணச்சாவடிய காட்டுனா சரி. ஏன்னா, அவனுக்கு இராமாயணச்சாவடி தெரியாது. ஆனா மதுரைல இருக்கிறவங்கள அழைச்சுட்டு வந்து இராமாயணச்சாவடி காட்டுறோம்னா என்ன பண்ணிட்டு இருக்கோம். எல்லோரும் தொலைக்காட்சி முன்னால உட்கார்ந்துட்டு நாளெல்லாம் பார்த்துட்டு இருக்கோம். ஒருவேளை இந்த ராமாயணச்சாவடிய தொலைக்காட்சில காட்டுனா இங்க வரவே மாட்டோம். நமக்கு பக்கத்துவீட்டுக்காரர் கூட தொலைக்காட்சில வந்தாத்தான் நமக்கு அறிமுகம் ஆகிறார். ஆனா அப்படி இருக்கக்கூடாது நண்பர்களே! உங்களுடைய நேரத்தை இந்த நகரத்துக்கு கொடுங்க.

பழையகஞ்சி

நான் எப்பவுமே சொல்லுவேன். என்னை உருவாக்குனது இந்த நகரம். இந்த நகரத்துக்கு ஏதோ ஒரு வகைல நான் கடமைப்பட்டிருக்கேன். ஏன்னா எனக்கு கல்வி கொடுத்திருக்கு, எனக்கு நண்பர்களை கொடுத்திருக்கு, நான் பசியோடு அலைந்து திரிந்த நாட்களில் சாப்பாடு கொடுத்திருக்கு. எல்லாம் தாண்டி என்னுடைய கலை இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு கொடுத்திருக்கு. என்னுடைய எழுத்துக்கு ஆதாரமா இந்த நகரம் இருக்குன்னா நான் என்ன செய்யப் போகிறேன். உங்களுக்கும் அப்படித்தான? உங்களை உருவாக்க இந்த நகரம் எவ்வளவு பயன்பட்டிருக்கும்? இந்த நகரத்துக்கு என்ன செய்யப் போறீங்க. அதுக்கு முதல் கட்டம் இந்த நகரத்தை நாம தெரிந்து கொள்வது. யாரோ ஒரு வெள்ளைக்காரன் இங்க வந்து நகரத்தைப் பற்றி தெரிஞ்சுட்டு போய் எழுதுறான். இங்க ஒரு கோயில் இருக்கு, இந்த நகரம் இப்படி கட்டப்பட்டிருக்கு அப்படின்னு. நகரத்தில் உள்ளவர்களுக்கும் அவ்வளவுதான் தெரியும்னா? கூடுதலா தெரியனும்ல.

புட்டுத்தோப்பு மண்டபம்.jpg

அப்ப இந்த நகரத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு ஒரு நூல் கூட தமிழ்ல இதுவரை வெளியாகவில்லை. எவ்வளவு எழுத்தாளர்கள் இருக்கிறோம். எவ்வளவு ஆய்வாளர்கள் இருக்குறாங்க. இந்த புத்தகத்த உங்களுக்கு கைல கொடுத்துட்டா போதுங்க. இதான் மதுரை. இதுல மதுரையோட வரலாறு இருக்கும். பண்பாடு இருக்கும். சமூகம் இருக்கும். புகைப்படங்கள் இருக்கும். ஆவணம் இருக்கும்னு ஒரு விரிவான ஒரு நூல். ஒருத்தர் இதை செய்ய வேண்டாம். ஒரு அமைப்பு செய்யலாமே அல்லது ஒரு பல்கலைகழகம் செய்யலாமே அல்லது சங்கம் வளர்த்த நகரம் தானே. ஒரு சங்கத்தை உருவாக்குனா இன்னொருமுறை மதுரைக்காக இந்தப் பணியை செய்யலாம் இல்லையா. அப்படி செய்யணும்றதுதான் என்னுடைய பெரிய கனவு. இந்த நகரத்தினுடைய தொன்மையை உலகத்துக்கு காட்டனும் அப்படின்னுட்டு. நான் ஒரு நூல் படிச்சேன். உலகின் 5 முக்கிய நகரங்கள் அப்படின்னு. அதில் அந்த 5 நகரங்களைக் குறித்து விரிவா ஆய்வு செய்து எழுதியிருக்காங்க. அந்த நகரங்கள் எல்லாம் உலகத்தினுடைய வரலாற்றை உருவாக்குவதில் என்ன பங்காற்றியிருக்கு. அப்படி மதுரையும் பங்காற்றியிருக்கு. தமிழினுடைய இலக்கியம், தமிழினுடைய சமயம், தமிழினுடைய பண்பாட்டு வரலாற்று விசயங்கள் மதுரைக்கு இருக்கக்கூடிய இடம் மிக முக்கியமானது. தனித்து நாம அறிவதற்கான நூல் இல்ல. சின்னச்சின்ன புத்தகங்கள்ல நிறைய தகவல்கள் இருக்கு. நிறைய வெளியீடுகள் இருக்கு. இன்னும் சொல்லப்போனா டூரிஸ்டுக்காக அப்பப்ப போடப்பட்ட நூல்கள் நிறையா இருக்கு. ஆய்வு நூல்கள் போதுமான அளவு எழுதப்படவில்லை.

இன்னொரு பக்கம் சங்க காலத்துல இருந்து எழுதப்பட்ட தமிழ் இலக்கியத்தினுடைய மையமாக இருந்த இந்த மதுரை, நவீன காலகட்டத்துல அதிகம் எழுதப்படலை. உதாரணத்துக்கு மதுரைல சுரேஷ்குமார் இந்திரஜித் இருக்காரு, கர்ணன் இருக்காரு. முன்னோடி ஜி.நாகராஜன் இருந்தாரு. இப்படி எத்தனையோ முக்கியமான படைப்பாளிகள் இருந்தாலும் மதுரை போதுமான அளவுக்கு எழுதப்படல. மதுரை அதிகமான அளவு திரைப்படத்துல காட்டப்பட்டுருக்கு. ஆனா, தவறா காட்டப்பட்டுருக்கு. மதுரையைப் பற்றி இருக்கக்கூடிய தவறான எண்ணத்துக்கு சினிமாதான் மிக முக்கியமான காரணம். ஏன்னா அத எடுத்த யாரும் மதுரைக்காரன் கிடையாது. இல்லைன்னா மதுரக்காரன கூட வச்சுட்டு இது மாதிரி மதுரையைப் பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்குவான். மற்ற ஊர்களில் ரவுடிகளே கிடையாதா? எல்லோரும் சாந்தமாக வசிக்கிறார்களா? அந்த நகரங்களுக்கெல்லாம் அப்படி இல்ல. ஆனா மதுரைக்கு அப்படியொரு பிம்பத்தை உருவாக்கிட்டே இருக்காங்க.

உண்மையில் திரைப்பட உலகம் இந்த மதுரை நகரத்தைத்தான் தன்னோட பரிசோதனை மையமா வச்சுருக்கு. சினிமா உருவான நாளிலிருந்து இன்று வரை ஒரு சினிமா வெற்றி பெறுமா இல்லையான்றத சினிமா உலகம் எதை வச்சு தீர்மானிக்கப்படுதுன்னா மதுரைல அந்தப்படம் ஓடுதா, ஓடலையான்றத வச்சுத்தான். இப்பக்கூட அப்படித்தான். திரைப்படம் வெளியான உடனே முதல்ல காலைல மதுரைக்குத்தான் போன் அடிப்பாங்க. மதுரையில படம் ஓடுதுன்னா படம் டேக்ஆப் ஆகிரும். மதுரைல ஓடாதுன்னு சொல்லிட்டா அவ்வளவுதான். எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் உட்பட. இந்த மக்கள் ஏத்துக்கிட்டா கொண்டாடுவாங்க. நிராகரிச்சா தூக்கி எறிஞ்சுடுவாங்க. அது எந்த பெரிய நடிகரா இருந்தாலும் சரி. அவர்கள் மீது இருக்கக்கூடிய அன்பால், அவர்கள் பெயரால் மன்றங்களை உருவாக்கி அவர்களை பெரிய நாயகர்களாக்கி சமூக அந்தஸ்தை வழங்கியது இந்த நகரம்தான். எல்லா பிரபல நடிகர்களுக்கும் முதல் மன்றம் இந்த ஊர்லதான் தொடங்கப்பட்டுருக்கு. ரொம்ப ஆச்சர்யம். நான் படிக்கைல இந்த ஊர்ல புருஸ்லீக்கு மன்றம் ஆரம்பிச்சாங்க. உலகத்துலயே புருஸ்லிக்கு வேற எங்கயும் மன்றம் இருக்குமான்னு தெரியாது. இப்ப இருக்கும். கராத்தே பள்ளிகள் இருக்குறதால். புருஸ்லிக்கு என்டர் தி டிராகன் ஓடிக்கொண்டிருக்கும் போது சிம்மக்கல்ல மன்றம் ஆரம்பிச்சாங்க. புருஸ்லிக்கு, ஜாக்கிசானுக்கு ரசிகர் மன்றம் இருந்தது. அவங்கல்லாம் யாரு? சாமான்ய மக்கள். தங்கள் அன்பை வெளிப்படுத்துற விதமா ரசிகர் மன்றம் ஆரம்பிச்சாங்க. திரைப்பட நடிகர்கள் எல்லோரும் அவங்களோட மன்றத்தை மதுரைல தொடங்கணும்னுதான் விரும்புவாங்க. இப்படி சினிமாவுக்கு ஒரு நினைவு இருக்கு. இன்னொரு புறம் இலக்கியத்துக்கு ஒரு நினைவு இருக்கு. மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் படிச்சா அதுல வர்ற ஆறு இது இல்லன்னு தோணும். ஆறு ஓடும்போது பூக்களை தன் மேல் போர்த்திக்கொண்டு ஓடியது. பூக்கள் நிறைந்து ஓடக்கூடிய, ஆண்டுமுழுவதும் ஓடிக்கொண்டே வைகையும், அந்த வைகைல ஓடக்கூடிய படகுகளும், அந்த கரைல வாழக்கூடிய மக்களும், அவர்களுடைய வாழ்க்கையில் எப்போதும் பாட்டுக்கேட்டுக் கொண்டே இருப்பதையும், ஆண் பெண் என எல்லோரும் அவ்வளவு பொலிவாக இருக்குறாங்க. இந்த நகரம் வந்து கொண்டாட்டத்தினுடைய, உற்சாகத்தினுடைய நகரமா இருக்கு. மதுரைக்காஞ்சி படிச்சுட்டு திரும்பிப்பார்த்தா இப்ப இதை ஆறுன்னு சொன்னாத்தான் தெரியும். நம்ம காலகட்டத்துல எல்லாத்தையும் பறிகொடுத்துருக்குறோம்.

ராமாயணச்சாவடி.jpg

எனக்கு ஒரு பெரிய வருத்தம் உண்டு. உலகத்தமிழ் மாநாடு இந்த நகரத்துல நடந்தது. அதற்கு முன்னாடி வரைக்கும் மதுரை அப்படியே பழமையாத்தான் இருந்தது. அதுதான் மதுரைக்கு வந்த முதல்மாற்றம். பெரிய ஆர்ச் கட்டி, இந்த நகரத்துக்குள்ள பல்லாயிரம் மக்களை நிரப்பி, நகரத்தினுடைய பழமையை சீர்கெடுத்தது. கண்ணைமூடிப் பார்க்குறதுக்குள்ள கடந்த 30 வருசத்துக்குள்ள நகரம் முழுக்க கை வைக்கப்பட்டுருக்கு. இது எல்லாவற்றையும் பதிவு செய்யணும்தானே?

குறிப்பா நினைவுகளை எழுதுவதுதானே இலக்கியம். நீங்க உங்களுடைய நினைவுகளை உங்க பிள்ளைகள்ட்ட விட்டுப் போறீங்க. உங்க குடும்பத்துக்குகிட்ட விட்டுட்டு போறீங்க. உங்க காலத்துக்கு அப்புறம் அந்த நினைவுகள் அவர்களால் தொடரப்படும். ஒருவேளை தொடரப்படாம போயிரும்ன்ற பயத்துல உங்க பேர்களை வச்சுடுறீங்க. குறைந்தபட்சம் பேர்களாவது நிக்குமேன்னு. உங்க நினைவுகள் உங்க பிள்ளைகள் தவிர்த்து யாராலும் தொடரப்படாது. அதுவும் கொஞ்ச காலத்துக்குத்தான். அதற்கப்புறம் தொடரப்படாது. நீங்க தேடி சேகரித்த உங்க வாழ்க்கை அனுபவங்கள், நண்பர்கள் என எல்லாமே முக்கியந்தானே. ஒரு மனிதன் இறக்கும் போது அவனுடைய எவ்வளவு ஆயிரம் நினைவுகளும் இறந்து போவது எவ்வளவு பெரிய துயரம். இன்னைக்கு எவ்வளவோ வசதி வந்துருச்சு. ஆனால், நான் என்னுடைய நினைவுகளை ஷேர் இட் வழியாக, புளூடூத் வழியாக அனுப்பலாம்னா முடியவே முடியாது. நான் பட்ட அத்தனை கஷ்டங்களும், அத்தனை வருத்தங்களும், அத்தனை சந்தோஷங்களும் என் நினைவுகள்தான். என் நினைவுகளைச் சொன்னால் கேட்டுக்குவீங்க. ஆனா கடத்தவே முடியாது. அதிலும் கூட பிள்ளைகளுக்கு அந்த நினைவுகளே தெரியாது. நாம சொல்லித்தரவே இல்ல. குடும்பத்துக்கே இப்படின்னா ஒரு நகரத்துக்கு, ஒரு வீதிக்கு, ஒரு நிலத்துக்கு அதனுடைய நினைவுகளை யார் காப்பாத்துவாங்க.

சுந்தர்காளி

உங்களுடைய வீதிகளின் நினைவுகளை யார் காப்பாத்த போறாங்க. உங்க ஊரினுடைய நினைவுகளை யார் காப்பாற்றா போறாங்க. தனி நபர்களைப் போல இந்த வீதிகளும், நகரமும் ஏக்கத்தோடு தானே இருக்கும். என்னை நீயாவது ஞாபகம் வச்சுக்கப்பான்னு தாத்தா பேரனைப் பார்த்து சொல்ற மாதிரித்தான் இந்த நகரம் உங்களைப் பார்த்து சொல்லிட்டேயிருக்கு. நீங்க பார்க்குற மாதிரி நான் கிடையாது. சீரும் சிறப்புமா இருந்த நகரம் சொல்றதாத்தான் நான் நினைக்குறேன். எழுத்தாளன்ற முறையில நான் அந்தக் கடமையை செய்யனும் விரும்புறேன். இந்த நகரத்தினுடைய பகல், இரவுகளை எழுதனும். குறிப்பாக நான் உலகத்தினுடைய எத்தனையோ நாடுகளுக்கு போயிருக்குறேன். மதுரையினுடைய இரவுகளுக்கு நிகரே கிடையாது. நிஜமா. ஒரு முழு இரவும் நீங்க மதுரைக்குள்ள சுற்றிப்பாருங்க.

நாங்க கல்லூரில படிக்குற காலத்துல நிறைய நாட்கள் விடியவிடிய மதுரைக்குள்ள சுத்திக்கிட்டே இருப்போம். ஒவ்வொரு அரைமணி நேரமும் வேறு இயக்கம். வேறுவேறு. ஒண்ணும் வேணாம். நீங்க குடிக்குற டீ, இரவு ரெண்டு மணிக்கு குடிக்குற டீ வேற. அதுலயும் அந்த மாஸ்டர் கடையை தான் கடையா நினைப்பான். சின்ன உணவகங்கள்ல இருந்து ஆரம்பிச்சு இந்த நகரத்துல இருக்குற எல்லா எளிய மனிதர்கள்ட்டயும் பேரன்பு வெளிப்படும். அது பகல்ல வெளிப்படும். பகல்ல சந்தை போல மனிதர்கள் வந்து போய்ட்டே இருக்காங்க. இரவுலயும் வெளிப்படும். இரவுல இந்த நகரத்துக்குள்ள யார் யாரெல்லாம் வாறாங்க.

அப்ப இவ்வளவு பெருமைமிக்க இந்த நகரத்தினுடைய பகல்களையும், இரவுகளையும் எழுதனும்னு நினைக்குறேன். அது என் பால்யத்தோடு தொடர்புடையது. நான் பார்த்த திருவிழாலாம் இன்னைக்கு இல்ல. இன்னைக்கு இருப்பது வெறும் தொலைக்காட்சில லைவ்ல பார்க்குற மாதிரி ஒரு பத்து நிமிஷத்துல அழகர் இறங்கி ஓடுற விசயம் இல்ல. அந்த மக்கள் வர்றதும், கூடுறதும், அதுக்காக வீடுகள் தயாராகுறதும், மக்கள் உறவினர்களை வரவழைச்சு ஒன்றாக கூடி மகிழ்ந்து ஏதோ ஒரு வகைல நீர் கொடுத்த கொடைதானே அது. நீர் இல்லாமப் போகப்போக அந்த திருவிழாவுல உற்சாகம் குறையுது. அப்ப ஆறு வழியா நீர் ஓடி அது வழியா ஒரு பண்பாடு உருவாகி அந்த நகரம் வளர்ந்து அது வழியாக தமிழ் வளர்ந்தது எல்லாம்.

நாம் ஒவ்வொருத்தரும் அதற்கு ஒரு சிறு பங்க செலுத்துவோம்னு சொல்றேன். உங்க வீதியினுடைய கதையை, உங்களுடைய நிலத்தினுடைய கதையை யாருக்காகவது கடத்துங்க, பதிவு செய்ங்க. கொண்டு வாங்க. எல்லோரும் பேசும்போது இந்த நகரத்தினுடைய எழுச்சி உருவாகும். ஒரு எழுத்தாளானாக என் முன்னோடிகள் எல்லாம் இந்த நகரத்தை பத்தி நிறைய எழுதியிருக்காங்க. எழுதும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை எழுதிருக்காங்க. ஒரு பருந்து பார்வைல இந்த நகரத்த விமானத்துலருந்து வரும்போது பார்க்குறோம். இந்த நகரம் வந்து கட்டிடங்களா மட்டும் இருக்கு. பசுமையான ஒரு மதுரை இல்ல. மருத மரங்கள் அடர்ந்த பழைய மதுரைய பிரிட்டிஸ்காரங்க காலகட்டத்துல இந்த புகைப்படம் எடுத்துருக்காங்க. அந்த புகைப்படங்கள் இருக்கு. இப்பக்கூட மருது ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கார் மதுரை பற்றி. ‘காக்கைச் சிறகினிலே’ பத்திரிகை இந்த மாத இதழ்ல. மதுரைல வந்து இங்க தங்கியிருந்த பிரிட்டிஸ்கார புகைப்படக்கலைஞரா இருந்த Georges Gaste இருந்த பற்றி எழுதியிருக்கிறார். அவர் வந்து எப்படி புகைப்படம் எடுத்துருக்கார்ன்னு அந்த புகைப்படங்கள், ஸ்டுடியோ எல்லாமே பதிவு செய்துருக்கார்.

பாதுகாக்கப்பட வேண்டியது நம் நினைவுகளை, காட்சிகளை அதுக்கு சாட்சியாக இருக்க கூடிய மனிதர்களை, அதுக்கு சான்றாக இருந்தவர்களை எழுதணும் நினைக்கிறேன். எழுதணும் நினைக்கும்போதுதான் பெரிய சிரமமாயிருக்கு. பார்த்த அனுபவங்களை அப்படியே எழுதுனா அது பத்தாது. ஆய்வு செய்யணும். நீங்க எப்படி கூடி இந்த வரலாற்றை தெரிஞ்சுகிறிங்களோ நானும் இந்த வரலாற்றை படிச்சுட்டுருக்கேன்.

இந்த ஊர் மீனாட்சியை மையங்கொண்டு இருந்தாலும் இன்னொருபக்கம் கிறிஸ்துவ சமயத்தினுடைய பெரும் பங்களிப்பு இருக்கு. அவர்கள் மருத்துவமனைகள், பள்ளிகள், தேவாலயங்களை உருவாக்கிருக்காங்க. நிறைய ஷேரிட்டி இருந்துருக்காங்க. மதுரை மிஷன் மாதிரியான பெரிய மிஷினரியே இயங்கிருக்கு. அவர்கள் யார்? எப்படி வந்தார்கள்? முழுவரலாறும் தெரியணும். நாம அந்த இடங்களையும் பார்க்கலாம், தெரிஞ்சுக்கலாம். அந்த இடங்கள்ல இருக்கக்கூடிய கலைபண்பாட்டு விசயங்களைப் பார்க்கலாம். இங்கயிருக்குற இடைக்காட்டூர்ல உள்ள கிறிஸ்துவ தேவாலயம் வந்து லிஸ்பன்ல இருக்குற தேவாலயத்தைப் போலவே உருவாக்கப்பட்ட தேவாலயம். ரெண்டையும் நான் பார்த்துருக்கேன். அங்க இருக்குற தேவாலயத்தோட வெறும் புகைப்படத்தை பார்த்து இங்க கட்டியிருக்காங்க. இன்ஜினியர் வந்து செய்யல. தேவாலயத்தினுள்ள இருக்குற கண்ணாடி ஜன்னல்கள் எல்லாமே இத்தாலில இருந்து கொண்டு வரப்பட்டது. அங்க இருக்குற பியானோ உட்பட. எல்லாமே வெளிநாட்ல இருந்து வந்தது. அப்ப நம்ம பக்கத்துலயே இந்துக் கோயில்கள், கிறிஸ்துவக் கோயில்கள் அதனுடைய பாரம்பரியம், இஸ்லாமிய மக்களோட பாரம்பரியம்னு. இந்த நகரம் பல்வேறு சமயங்களுடைய, பல இனங்களுடைய கூட்டு பண்பாட்டு மையமா இருக்கு. உணவுக்கு பேர் போனதா இருக்கு. பண்பாட்டுக்கு பேர் போனதா இருக்கு. உடைக்கு பேர் போனதா இருக்கு. எல்லாம் தாண்டி இங்க வாழக்கூடிய மனிதர்களின் மனதிலிருக்கக்கூடிய அன்பை உணர்ந்தவன்.

நாம் எல்லோரும் செய்ய வேண்டிய பணி அது. நிச்சயமா அத ஒரு நாவலா எழுதுறதுக்கு முயற்சி பண்ணிட்டே இருக்குறேன்.  உணர்வுப்பூர்வமா நம்ம சொந்த வாழ்க்கைகிறதால நாம திரும்பி எழுதுறதுக்கு சிரமமா இருக்கு. அது எழுதத் தொடங்கிய மறுநிமிடம் நினைவுகள்ல வந்துவிடுகிறது. அந்த நண்பர்கள் இல்லையே, இடங்கள்லாம் இல்லையேன்ற மனவருத்தம் எழுதவிடாம பண்ணிருது.

மெல்ல வயதுதான் நண்பர்களே! நமக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசான். எதையெல்லாம் நாம வாழ்க்கைல வேணாம்னு நினைக்குறோமோ அது எல்லாவற்றையும் வயசு செய்ய வைக்கும். எதெல்லாம் உங்களோட இளமைல வந்து செய்யக்கூடாதுன்னு நினைச்சீங்களோ அதையெல்லாம் வயது செய்ய வைக்கும். வயது மனிதருக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆசான். கொஞ்சம் கொஞ்சமா மனிதன் வாழ்வினுடைய முழுமையை அடையும்போது எல்லாவற்றையும் பக்குவத்தோடும் நிதானத்தோடும் செய்ய பழக்கம் உருவாகுது. ஒரு தெளிவு உருவாகுது. அவனால செய்யமுடியுது. நானும் என் வயதை கடந்து கொண்டே வந்து கொண்டேயிருக்க இருக்க எனக்கு தெரியுது. அவரசம் இல்ல, பதட்டப்பட வேண்டியதில்ல. எதை விட்டுட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை. எத செஞ்சாலும் பதட்டப்படாம நிதானமா செய்யலாம்.

மற்றபடி இந்த நகரத்தினுடைய தொன்மையை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லுங்கள். பதிவு செய்யுங்க. எல்லோர்க்கும் எல்லா வடிவத்துலயும் ஊடகங்கள் வந்துருக்குன்றதால எல்லோருமே செய்தியாளர்கள்தான். எந்த பத்திரிகையும் தேடி அலைய வேண்டாம். நீங்களும் நானும்தான் செய்தியாளர்கள். இதைத் தொடர்ந்து சிறப்பாக செய்யக்கூடிய முத்துக்கிருஷ்ணனுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படங்கள் உதவி – பிரசாத், ரகுநாத், சூரியா பரமேஸ்வரி, கார்த்திகேயன்

தொடர்ந்து பசுமைநடையில் பயணித்து வந்தபோதும் இந்த நடையில் கலந்து கொள்ள இயலாமல் போனது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசிய ஒலிப்பதிவை அனுப்பிய தோழர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கு நன்றி. மதுரை குறித்த அற்புதமான உரையாற்றிய எஸ்.ரா.விற்கு நன்றி. எழுத்தாக்கத்தில் குறைகள் இருந்தால் என்னையே சாரும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s