எக்ஸ்டஸி – சரவணன் சந்திரன்

Posted: மார்ச் 27, 2018 in பார்வைகள், பகிர்வுகள்

ecstasyபாண்டிகோயிலில் கெடாவெட்டி எட்டு புத்தகங்கள் வெளியிட்ட சரவணன் சந்திரன் எழுதிய புத்தகங்களில் எக்ஸ்டஸியும் ஒன்று. புத்தக வெளியீட்டு விழாவிற்கு நானும், சகோதரரும் சென்றிருந்தோம். சோ.தர்மன், எஸ்.அர்ஷியா, முருகேசபாண்டியன் போன்ற ஆளுமைகள் பலர் கலந்து கொண்டு அவ்விழாவில் பேசினர். புத்தகங்களைக் குறித்து சரணவன் சந்திரன் பேசக்கூடாது என்பதை பேசிய அனைவரும் பேசினர். சிறப்பாக நடந்த இவ்விழா மதிய உணவோடு நிறைவடைந்தது.

சரவணன் சந்திரன் பன்முகத்தன்மை கொண்ட ஒரு மனிதர். ஹாக்கி விளையாட்டுவீரர், ஊடகவியலாளர், எழுத்தாளர்,மீன் அங்காடியாளர், விவசாயி. ஜி தமிழ் தொலைக்காட்சியில் வந்த சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி தொடங்கியவரும் இவரே. வெளிநாடுகளில் வேலை பார்த்திருக்கிறார். இப்போது பழனி அருகே கொய்யாத்தோப்பு வாங்கி விவசாயம் செய்து வருகிறார். சரவணன் சந்திரன் ஓராண்டில் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் 84 கட்டுரைகளை தேர்வு செய்து நூலாகத் தொகுத்திருப்பவர் மதுரையைச் சேர்ந்த இளங்கோவன் முத்தையா.

புத்தகவெளியீடு

அன்றாட நிகழ்வுகளைக் குறித்த கட்டுரைகள் என்றாலும் அவரது அனுபவங்கள், மனித வாசிப்பு இவையே இக்கட்டுரைகளுக்கு உயிரூட்டுகிறது. இதிலுள்ள பல கட்டுரைகள் நான் அறியாத பல செய்திகளை தந்தது. நான் சமீபமாக தொலைக்காட்சி, நாளிதழ் போன்ற ஊடகங்களுக்கு அப்பால் போய்விட்டதால் நிறைய புதிய தகவல்களாகத் தெரிந்தது. எக்ஸ்டஸி தொகுப்பிலிருந்து ஒரு சில கட்டுரைகளை குறித்து இப்பதிவில் காணலாம். மேலும் அறிந்து கொள்ள கிழக்கு பதிப்பகம் வெளியீட்டுள்ள இந்நூலை வாங்கி வாசியுங்கள்.

மழை பொய்த்து பூமியின் அடிவரை போர்வெல் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கர்நாடகாவில் 20,000க்கும் மேலான ஆழ்துளைக் கிணறுகளை ரீசார்ஜ் செய்ததை குறித்து அறியும் போது நம் தமிழகத்திலும் இதுபோன்ற முயற்சிகள் நடக்காதா என்ற இவரது அவா நம்மையும் தொற்றிக் கொள்கிறது. குளங்கள், ஏரிகளில் படிந்த வண்டல் மண்ணை விவசாயிகள் அள்ளிக் கொள்ளலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு நல்ல விசயம் என்கிறார். அதேபோல் ஆழ்துளைக் கிணறு ரீசார்ஜ் செய்ய அரசு உதவினால் நன்றாகயிருக்கும். வயிற்றில் பால் வார்ப்பார்களா?

சமையலறையில் உலவும் போலிகள் என்ற கட்டுரை வாசித்ததும் நாம் எதை வாங்குகிறோம் என்ற பயம் வந்துவிட்டது. கிராமப்புறங்கள், சுற்றுலாத்தலங்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் போலிகளால்  6000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்ற அளவிற்கு போய்கொண்டிருக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப் தொடங்கி கேமரா வரை அச்சுஅசலாக போலிகளை உருவாக்குகிறார்கள். வாங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்.

இஸ்ரோ விஞ்ஞானியே ஒரு லட்சங்கிட்ட சம்பளம் வாங்கும் போது அதைவிட நூறுமடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள், பல கோடி ரூபாயில் உருவாகும் குப்பையான படங்கள் குறித்து பேசும் ‘ஆடத்தெரியாதவனுக்கு தெரு கோணலாம்’ என்ற கட்டுரை. தமிழகம் உருப்பட பத்து யோசனைகளை ஒரு பத்திரிகையில் கேட்ட போது தமிழ் திரைப்படங்கள் இரண்டரை மணிநேரத்திற்கு பதிலாக ஒன்றரை மணிநேரம் எடுத்தால் நன்றாகயிருக்கும் என குக்கிராமத்தலிருந்து ஒருவர் கட்டுரை அனுப்பியிருக்கிறார். இதனால் நேரவிரயம், பணவிரயம் குறைவாகிறது.

saravanan chandran.jpg

பயணம், ஊர்சுற்றல் என வீட்டைவிட்டு வெளிக்கிளம்புவதை இரண்டாகப் பிரிக்கிறார் சுந்தர ராமசாமி. இதில் இரண்டாவது வகையான ஊர்சுற்றல் இலக்கின்றி பயணிப்பதைக் குறிக்கும். குண்டாச்சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டாமல் பல ஊர்களுக்கு பயணிக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறது ‘துண்டை உதறித் தோளில் போட என்ன தயக்கம்?’ என்ற கட்டுரை. சரவணன் சந்திரன் தைமூர் தொடங்கி பல தேசங்களுக்கு பயணித்த அனுபவங்களை ஆங்காங்கே புத்தகத்தினுள் காண முடிகிறது.

‘கடலும் சாக்கடையும்’ என்ற கட்டுரை நம் சமூகம் கடலை எப்படி சாக்கடையாக மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதைச் சொல்கிறது. அணு உலைகள் ஒருபக்கமென்றால் கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் தொடங்கி ஏராளமான பல விசயங்கள் மீன்பிடித்தொழிலையே பாதித்துள்ளது. ஒருபுறம் தைமூர் கடலில் இவர் தெரியாமல் எச்சில் துப்பிய பொழுது அதை அந்த ஊர் இளைஞர்கள் கண்டு காண்டானதை சொல்கிறார். மறுபுறம் நம் ஊர் முதலாளி ஒருத்தர் எல்லா ஆலைக்கழிவுகளையும் கடலில் கொண்டு சேர்க்கும் திட்டத்தை விவரித்தையும் சொல்கிறார்.

மனிதர்களிடையே சகிப்புத் தன்மை குறைந்து வருவதை ‘காதல் கொலைகளும் கல்விப் புலங்களும்’ என்ற கட்டுரை எடுத்துரைக்கிறது. காதலில் தோல்வி அடைந்தவர்கள் எதிர்பாலினத்தை பழி வாங்குவதை பார்க்கும்போது அச்சமாகயிருக்கிறது. தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற மனநிலை மோசமானது. வீடுகளிலேயே சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. எல்லோரும் ஒருவித வன்மத்தோடயே இருக்கிறார்கள்.

சல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழகத்தின் ஒருமித்த குரல், ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகான தமிழக அரசியல், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு விலை வைக்க முடியாத சூழல், அதிக வாடகையால் சுயதொழில் செய்ய முடியாத நிலை,  மாசிக்கருவாடு செய்வது எப்படி?, அன்றாடம் நாம் பயன்படுத்தும் மருந்துகளைக் கொண்டு போதையேற்றும் இளைய தலைமுறை, தொழில் தொடங்க வட்டிக்கு வாங்கி சீரழியும் நிலை, கல்விச்சாலைகள் தொடங்கி சிறைச்சாலைகள் வரை நீளும் சாதிவெறி போன்ற பலவிசயங்களைக் குறித்த கட்டுரைகள் நம்மை பல தளங்களில் யோசிக்க வைக்கிறது.

எங்கோ இருப்பவர்களைக் கூட அருகிலிருப்பதைப் போல உணரச்செய்யும் எக்ஸ்டஸி என்ற வினையூக்கியின் பெயர் கொண்ட இத்தொகுப்பு நம்மையும் ஈர்க்கிறது.

சித்திரவீதிக்காரன்

பின்னூட்டங்கள்
  1. முத்துசாமி இரா சொல்கிறார்:

    எக்ஸாட்லி குறித்த சிறப்பான நூலறிமுகம். கிழக்குப் பதிப்பக வெளியீடு. குறித்துக் கொண்டேன். படிக்க வேண்டும்.

முத்துசாமி இரா க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s