நாற்றங்கால் பள்ளி தொட்டு சமணப்பள்ளி வரை நான் கற்ற பள்ளிகள் ஏராளம். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பள்ளி புனித பிரிட்டோ மேனிலைப் பள்ளி. அங்கு இடம் கிடைப்பதே மிகச் சிரமம். அந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும், பத்தாம் வகுப்பும் படித்தேன். 50-வது பொன்விழா ஆண்டையொட்டி தொடர்ந்து பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. போகிபண்டிகையன்று (13.01.2018) ஒளிரும் நட்சத்திரங்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பிரிட்டோ பள்ளியில் படித்து சாதனைபடைத்த மருத்துவர்கள், பொறியாளர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்துறை சார்ந்தவர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.
பள்ளிக்கு நான் என் சகோதரர்களோடு சென்றேன். என்னுடன் வந்த தமிழ்ச்செல்வ அண்ணன் 1998ல் அங்கு பனிரெண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வில் பிரிட்டோ பள்ளியில் அதிகமதிப்பெண் பெற்ற மாணவர். பள்ளியில் நுழையும் போது உரையாற்றிக் கொண்டிருந்த குரல் மிகவும் நெருக்கமாகத் தோன்ற, நாங்கள் படித்த போது எங்கள் கதாநாயகனாய் திகழ்ந்த லூயிஸ் அமல்ராஜ் சார் பேசிக்கொண்டிருந்தார். எங்களுக்கு அறிவியல் ஆசிரியராய் இருந்த லூயிஸ் சார்தான் இப்போது பள்ளியின் தலைமையாசிரியர் எனும்போது பெருமகிழ்வாய் இருந்தது.
பள்ளியின் மையத்தில் போட்டிருந்த அரங்கு மிகப்பெரிதாய், புதிதாய் இருந்தது. நாங்கள் படித்தபோது அங்கு மேற்கூரை எதுவும் இல்லை. திங்கள்கிழமைதோறும் பிரேயரின்போது மேடையை நோக்கி மாணவர்கள் வந்து நிற்பதை மேலிருந்து பார்த்தால் சிலுவை போலிருக்கும். உட்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டேயிருக்க மனம் முழுக்க படித்த நாட்களை நோக்கி பின்சென்றது.
பெத்தானியாபுரத்தில் இறங்கி பாபுசங்கர் கல்யாண மண்டபம் வழியாக இறங்கி நடந்து செல்வோம். பள்ளியில் நிறைய புதுநண்பர்கள் கிடைத்தனர். கடைசிபெஞ்ச் என்பதால் ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பை படித்துவிட்டு மீண்டும் ஒருமுறை எங்களோடு படிக்க வந்த நண்பர்களோடு பழக்கமானது. ஒவ்வொரு ஆசிரியரும் பாடத்தை நடத்தியதோடு மட்டுமல்லாமல் ஒழுக்கம், வாழ்க்கை என மேம்பட உதவினார்கள் என்றால் அது மிகையாகாது.
நான் பிரிட்டோ பள்ளியில் படித்தபோது எங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்த தமிழாசிரியர் சுப்பிரமணிய ஐயா, பிரிட்டோ ரொட்ரிகோ(ஆங்கிலம்), எஸ்.ஆர்.ஏ (கணிதம்), லூயிஸ் அமல்ராஜ்(அறிவியல்), திவ்யானந்தம்(சமூக அறிவியல்), ஜீவானந்தம் (உடற்கல்வி) என எடுத்தனர். பத்தாம் வகுப்பில் ஜி.இருதயராஜ் சார் ஆங்கிலமும், சமூக அறிவியலும் எடுத்தார். மற்றவர்கள் ஒன்பதாம் வகுப்பில் எடுத்தவர்களே. யாகப்பன் ஐயாதான் தலைமையாசிரியராக இருந்தார். மிகவும் கண்டிப்பானவர்.
வெள்ளை சட்டை, செர்ரி வண்ண காற்சட்டையும் யூனிபார்ம். கண்டிப்பாக உடற்கல்வி பாடவேளையில் அரைகாற்சட்டையும் பள்ளி இலட்சினை பொறித்த பனியனும் போட்டு வர வேண்டும். இல்லாவிட்டால் உடற்கல்வி ஆசிரியர்கள் பூசை வைப்பார்கள். அதிலும் எல்லோரும் சேர்ந்து ஒன்-டூ, ஒன்-டூ என்று சொல்லி இரண்டு குழுக்களாக பிரியும்போது சிலநேரம் யாராவது ஒருத்தன் குழப்பினாலும் மொத்தமாக மொத்துவிழும். ஆனாலும், குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால் மறுநாள் முழுப்பரிட்சையே இருந்தாலும், கடைசிப்பாடவேளை உடற்கல்வி என்றால் விளையாடத்தான் செல்ல வேண்டும். கூடைப்பந்தாட்டமும், கைப்பந்தும், பேஸ்பாலும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் பிரிட்டோவில் இருந்தனர். பள்ளிக்கும் வீட்டுக்குமான தொலைவு அதிகமென்பதால் கூடைப்பந்தில் சேர முடியவில்லை.
நிகழ்ச்சியின் இடைவேளையில் எல்லோருக்கும் பொங்கல் வழங்கினார்கள். என்.சி.சி. ஆசிரியராக இருந்த தன்ராஜ் சார், சுப்பிரமணிய அய்யாவை நானும் அண்ணனும் பார்த்து பேசினோம். கிறிஸ்டோபர் சாரைப் பார்த்தேன். நான் படித்தபோது என்னோடு படித்த நண்பர்கள் யாரும் வரவில்லை. பத்தாம் வகுப்பு படித்த கட்டிடத்தருகே நிழற்படம் எடுத்துக்கொண்டோம். அங்கு படிக்கும் நாட்களில் படம் எதுவும் எடுக்கவில்லை, ஹால்டிக்கெட்டுக்கு தவிர. பத்தாம் வகுப்பு முழுப்பரிட்சைக்கு முன்பு ஓரியூரில் உள்ள அருளானந்தர் தேவாலயத்திற்கும், ராமேஸ்வரத்திற்கும் அழைத்துச்சென்றனர். தேர்வு எழுதும் கலையை கற்றது பிரிட்டோ பள்ளியில்தான்.
பள்ளியிலிருந்து வரும்போது கரும்புச்சாறு வாங்கிக் குடித்தோம். அந்தக் கரும்புவண்டிக்காரர் நான் படித்தபோதிருந்தே கரும்புச்சாறு விற்றுக்கொண்டிருக்கிறார். அவரிடம் கேட்டபோது 20 வருடங்களுக்கு மேலே இருக்கும் என்றார். நான் 1998ல் இருந்து 2018 வரையிலான நாட்களில் அந்த வீதி வழியாக செல்லும் நாட்களில் அவரிடம் கரும்புச்சாறு வாங்கிக்குடித்து பழைய நினைவுகளுக்குள் செல்வது வழக்கம். ஆம், நண்பர்களே! கரும்புச்சாறின் ஒரு மிடறு நம்மை 20 வருடங்களுக்கு முன் கொண்டு செல்லும் ஆற்றல் கொண்டது.
பி.கு: “நீதியும் அன்பும் நிலைத்திடவே” என்பது இப்பள்ளியின் குறிக்கோள் சொற்றொடர். வசீகரமிக்க கிறித்துவத் தமிழில் சொன்னால் “விருதுவாக்கு”
பள்ளி நினைவுகள் எப்போதும் போற்றிப் பாதுகாக்கப்படும் பொக்கிஷம் அல்லவா!
சிறப்பான பதிவு தோழரே..