அழுகைக்கு கரைதல் என்றும் பெயர்

Posted: ஜூன் 3, 2018 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

மரணத்தில் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதமிருக்கவே செய்கிறது. அழுகையின் கதியும் மாறுபடுகின்றன. பெண் இறப்பின் போது, மண்சுவரில் பெய்யும் மழை போல நினைவுகளைக் கரைத்துக் கொண்டு ஓடுகிறது அழுகை. அதுவே, ஆணின் மரணத்தில் தகரத்தில் பெய்யும் மழை போல உரத்த ஒப்பாரி, ஓங்கிய அழுகை. அங்கே நினைவுகள் கரைவதில்லை, மாறாகத் தெறித்து விழுகின்றன. மயானம் பெண்களின் காலடி படாத உலகம்.

– எஸ்.ராமகிருஷ்ணன்

மலையாளத்தில் கல்பட்டா நாராயணன் எழுதிய ‘இத்ர மாத்ரம்’ என்ற நாவலை கே.வி.ஷைலஜா அவர்கள் மொழிபெயர்ப்பில் சுமித்ரா என தமிழில் வந்ததை பொங்கல் விடுமுறையில் செங்கோட்டை பேசஞ்சரில் வாசித்தபடி சென்றேன். சிறிய நாவலானாலும் என்றும் மனதில் நிற்கும் நாவலாகயிருந்தது அதன் கதை. அதற்கு எஸ்.ரா. எழுதிய முன்னுரையை தனிப்பதிவாகவே போடலாம். அத்தனை சிறப்பு. இத்ர மாத்ரம் என்ற பெயரில் இந்நாவல் மலையாளப் படமாக வந்துள்ளதை அறிந்து அதைத் தரவிறக்கிப் பார்த்தேன். ஸ்வேதா மேனன் சுமித்ராவாக சிறப்பாக நடித்திருக்கிறார். இந்நாவலை மீண்டும் எடுத்து வாசிக்க காரணம் மரணம். ஆம், சகோதரியொருவரின் அகால மரணமே மீண்டும் இந்நாவலை வாசிக்கத் தூண்டியது. இந்நாவல் 38 வயதான சுமித்ரா மரணத்திலிருந்து தொடங்குகிறது. மரண வீட்டிற்கு வரும் மனிதர்கள் வாயிலாக சுமித்ராவின் வாழ்க்கை உயிர்பெறுகிறது.

sumithra rapper

சுமித்ரா நாவல் கேரளாவின் வயநாட்டு கிராமமொன்றின் சித்திரமாக திகழ்கிறது. அங்கு விளையும் பயிர், அங்குள்ள வீடுகளின் அமைப்பு, அங்கு வாழும் மலைவாழ் மக்களான பணியர்களின் வாழ்க்கை என ஒவ்வொன்றையும் வாசிக்கும்போது நம்மையும் அப்பகுதிக்கே அழைத்துச் சென்றுவிடுகிறது கல்பட்டா நாராயணின் எழுத்து. அவர் கவிஞராக இருந்து எழுதிய முதல் நாவல். ஒவ்வொரு பக்கத்திலும் கவித்துவமான வரிகள் நிரம்பிக்கிடக்கிறது. இந்நாவலை படமாக எடுக்கையிலும் ஒவ்வொரு அத்யாயம் போல பெயர் போடுவது சிறப்பு. ஒரு நாவலை படமாக்கும் கலையை அறிய இத்ர மாத்ரம் படம் பார்த்தால் போதும். அந்நாவலின் ஆன்மா குலையாமல் படமாக்கியிருக்கிறார்கள். கல்பட்டாவும் அப்படத்தில் பணியாற்றியிருக்கிறார்.

swethamenon

மரண வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் சுமித்ராவுடனான நினைவுகளை எண்ணிப் பார்க்கிறார்கள். தன்னை சிறுவயதிலிருந்து வளர்த்து கல்லூரி நாட்களில் தன் காதல் குறித்தெல்லாம் பகிர்ந்து கொள்ளக்கூடிய அளவிற்கு தாயாக, தோழியாக இருந்த சுமித்ரா குறித்த புருஷோத்தமனின் நினைவு, சுமித்ரா இறப்பதற்கு முதல்நாள் தன் குடிகார கணவனிடமிருந்து பாதுகாக்க யாருக்கும் தெரியாமல் நகையைக் கொடுத்து வைத்த மரியாக்காவின் பதற்றம், எப்போதும் அமைதியாக இருக்கும் சுமித்ராவின் மகள் அனுசுயா அம்மா உடலைக் கண்டு கதறி அழுது கட்டிப்பிடித்து முத்தமிடுவது, சுமித்ராவிடம் தன் வாழ்க்கையை கடிதங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளும் தோழி கீதா தனக்கு இனி இறந்த காலமே இல்லையென எண்ணுமளவிற்கான அவளது வாழ்க்கை, சுமித்ராவோடும் கீதாவோடும் படித்த சுபைதா என பலர் வருகிறார்கள். ஒவ்வொருவர் வருகையிலும் சுமித்ரா பழங்கலத்திலிருந்து உயிர்பெற்று வந்துகொண்டேயிருக்கிறாள்.

ithramathram

வீட்டில் தனிமையில் வாழும் பெரியவருக்கு ஆறுதலாக, அவர் பசி போக்க உப்புமா கிண்டிக் கொடுக்கும் மகளாக இருக்கும் சுமித்ராவிற்கு அவர் சொன்ன ஆருடம் பொய்த்து போனதை கண்டு கலங்குகிறார். அந்த ஊரில் உள்ள பெண்களிடமெல்லாம் உரிமையாக பழகும் தாசன் கதாபாத்திரம் நம்மை ஈர்க்கிறது. தாயின் பயணத்திற்கு பிறகு தேசாந்திரியாய் வாழும் தாசன் எப்போதாவது ஊருக்கு வருகிறான். வரும்போது அங்குள்ள மனிதர்களிடம் வாஞ்சையாய் நடந்து கொள்கிறான். இரவு சர்க்கஸ் பார்க்கச் செல்வதென்றாலும் தாசனின் கரம்பிடித்து தைரியமாய் நடந்து செல்லலாம் பெண்கள். பணிச்சி இனப்பெண்ணாக வரும் கருப்பி, துணிதுவைக்கும் மாதவனின் மனைவியான மாதவி. இவர்களெல்லாம் சுமித்ராவின் தோழிகள்.

இராசாயன உரங்கள் போட்டதால் வயல்களில் நண்டுகள் இல்லாமல் போய், வயநாட்டில் நரிகள் கூட இல்லாமல் போய்விட்டதை நாவலின் வாயிலாக அறிய முடிகிறது. பல்துலக்காவிட்டாலும் பளீறிடும் பற்கள் கொண்ட கருப்பியை டூத்பேஸ்ட் விளம்பரங்களுக்கெதிராய் சுமித்ரா எண்ணுவாள். பிற்பாடு இராசயன உரங்களால் அவர்களது பற்களும் மஞ்சள் படிந்து உடைவதைப் பார்க்கிறாள். இதெல்லாம் தனியாக துருத்தித் தெரியாமல் நாவலினூடாக வருகிறது. கேரள கிராமங்களில் வீட்டையொட்டி நெல் குதிர்கள், உரல் வைக்கப் பயன்படும் அறைதான், பழங்கலம். சுமித்ரா திருமணமாகி வந்ததலிருந்து பெரும்பாலான நேரங்களைக் கழிப்பது அந்த இடத்தில்தான். நம் ஊர் பெண்களுக்கான கிணற்றடிபோல. (இப்போது கிணறுகள் இல்லையென்பது தனிசோகம்).

ஜனவரி மாத இறுதியில் திருநெல்வேலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது வந்த அலைபேசிச் செய்தி வாயிலாக என்னோடு முன்பு பணியாற்றிய சகோதரியொருவர் மரணமடைந்துவிட்டார் என்றதைக் கேட்டதை மனம் அதிரத் தொடங்கியது. அவர் வாழ்க்கை போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாய் ஒரு பக்கம் தோன்றினாலும் மனது மிகவும் கனத்துக்கிடந்தது. என்னைவிட மூத்தவரானாலும் என்னை ‘அண்ணே’ என்றே அழைப்பார். மிகவும் பாசமானவர். ஏராளமான பிரச்சனைகளோடு இருந்தாலும் எப்போதும் சிரித்தபடி அதை சமாளித்து வந்தார். உடலில் புதிதாய் ஒரு நோய் வந்தது. அதற்கும் பெரிய மருத்துவமனைகளில் கடன் வாங்கி சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் பேரதியசமாக அரசுப்பணி லஞ்சம் ஏதும் இல்லாமல் தகுதி அடிப்படையில் அவருக்கு கிடைத்து வெளியூர் சென்றார். சென்ற கொஞ்ச நாட்களில் மீண்டும் அந்த நோய் முற்றி மரணத்தோடு போராடி விடைபெற்றார். இத்ர மாத்ரம் என்ற நாவலின் நாயகியைப் போல ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளை விட்டு நாற்பது வயதிற்குள்ளாக காலமானார். அச்சகோதரியின் நினைவு இந்நாவலோடு எனக்குள் நிறைந்துவிட்டது.

title

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s