கோபல்ல கிராமம்

Posted: ஓகஸ்ட் 28, 2018 in பார்வைகள், பகிர்வுகள்

gopalla kiramamஇளம்பிராயத்தில் நகரத்திலிருந்து பிடுங்கி கிராமத்தில் நடப்பட்ட ஒட்டுக்கன்று நான். 1990களின் தொடக்கத்திலிருந்து இன்று வரை வாழ்வு கிராமத்தினூடே பிணைந்திருக்கிறது. கிராமம் தனது ஆணி வேரை (விவசாயம், மருத்துவம், விளையாட்டு) கொஞ்சம் கொஞ்சமாக மறந்து நவீன மாயையில் இன்று சிக்கி வரும் வேளையிலும், அதன் சல்லி வேர்கள் (சாதிகள்) கிளைகளாக பெருத்துக் கொண்டு போகும் சோகமும் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு சூழலில் 1850களுக்கு முந்தைய தெக்கத்தி கிராமத்தின் ஆவணமாய், காலச்சக்கரத்தில் நம்மை ஏற்றிச் செல்லும் வாகனமாய் கி.ரா.வின் நினைவுகளின் தொகுப்பாய் “கோபல்ல கிராமம்” திகழ்கிறது.

இஸ்லாமியர்களின் ஆட்சிக்காலத்தில் தெற்குநோக்கி புலம்பெயர்ந்த தெலுங்கு மொழி பேசும் மக்களின் கதை அல்லது பிரிட்டீஸ் ஆட்சிக்கு முந்தைய அந்த தென்தமிழக கிராமத்தின் கதைதான் கோபல்ல கிராமம். ஒரு ஊரில் பெரிய வீடு, அந்த வீட்டிலுள்ள நூறு வயதிற்கு மேலான பாட்டி, அந்த வீட்டின் ஆண்கள், அந்த ஊர்ப்பெரியவர்கள் இவர்கள்தான் நாயகர்கள்.

ஓவியர் ரவிகோபல்ல கிராமத்தை வாசித்த பின் நாவலின் மாந்தர்களை நாம் பார்த்தால் அடையாளங் கண்டுவிடும் அளவிற்கு அறிமுகப்படுத்தி விடுகிறார் கி.ரா. வாசிக்கும்போதே நாம் அந்த இடத்தில் இருப்பது போன்ற வர்ணனை நம்மை அந்த கோபல்ல கிராமத்துத் தெருக்களில் கொண்டு சேர்க்கிறது.

“எந்தச் சந்தோஷமும் பயமாய் இருக்கிறது தொடர்ந்து வரும் துன்பம்” என்ற விக்ரமாதித்யனின் கவிதை வரி போல, கோபல்ல கிராமத்தின் முன்னோரான சென்னா தேவியின் தெய்வீக அழகு அவளுக்கு மட்டுமல்ல. அந்த சமூகத்திற்கே ஆபத்தாய் அமைகிறது. ஒரு பெண் அழகாய் இருந்தால் அந்த ஊரின் அரசன் எந்த சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவளை தனதாக்க முயல்கிறான். அவனிடமிருந்து தப்பி வரும் சமூகம் பல இழப்புகளை மேற்கொள்கிறது. தாங்கள் அங்கிருந்து வந்தபின் அந்த நினைவுகளை புனைவாக்கி, புனிதமாக்கி கதையாக்கிவிடுகின்றனர். அதுபோன்ற கதையைத் தான் இக்கதையின் வரும் வயதான பூட்டி மங்கத்தாயாரம்மா சொல்கிறாள்.

ovier raviகிராமங்கள் இன்று தொலைத்துக் கொண்டு வருகிற பல விசயங்களை நாவலினூடாகப் பார்க்க முடிகிறது. நீர்நிலைகளை அமைத்தது, பயிர்த்தொழில் செய்தது, விவசாயத்திற்கு ஏர்க்கலப்பைகளை பயன்படுத்தியது, சிறுதானியங்கள் அன்றாட உணவாய் இருந்தது, பாலை உறைய வைப்பது, வேம்பு மற்றும் ஆமணக்கு வித்துக்களை கொண்டு எண்ணெய் தயாரிப்பது, மூலிகைகளைக் கொண்டு மருத்துவம் செய்தது, நாடி வைத்தியம் பார்ப்பது,  விளைச்சலுக்கு ஏற்ற மண்ணைத் தேர்ந்தெடுப்பது, பருத்தி பஞ்சிலிருந்து நூல் எடுப்பது போன்ற பலவற்றை காண முடிகிறது.

ஒரு கிராமத்தை உருவாக்க காட்டை அழிக்கும் போது பல்லுயிரியம் அழிவதை காண முடிகிறது. அதற்கு பரிகாரமாக அவர்கள் மரங்கள் பின் நடுவதையும் நாவலில் காண முடிகிறது. கோபல்ல கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு மரத்தை கண்மாய்க் கரையில் நட்டிருக்கிறார்கள். அரசு, ஆல், அத்தி, கல்லத்தி, புங்கை, வேம்பு, வாகை, நாவல், புளி என பல்வேறு வகையான மரங்களை நட்டிருப்பதை சொல்கிறார். இன்று நாம் வாசிப்பதினூடாக ஒரு செயலை செய்ய விரும்பினால் இதைச் செய்யலாம். நூறு நாள் வேலையாக செய்தாலும் சரி, இந்த நூற்றாண்டுக்கான நற்பணியாக செய்தாலும் சரி.

கிராமத்து மக்களின் பல நம்பிக்கைகளை கதையின் ஊடாக அறிய முடிகிறது. ஒருவர் இறக்கும் போது அழக்கூடாது. ஏனெனில், அவர்கள் ஆன்மா வருந்தும். அதேபோல இறக்கும் போது ஒருவர் சொல்வது பலிக்கும். பிள்ளைத்தாச்சி இறந்தால் சுமைதாங்கி கல் நட வேண்டும். மதுரையில் சைவர்களிடம் வாதத்தில் தோற்ற சமணர்களை கழுவேற்றினார்கள் என்ற கதையை கேள்விப் பட்டிருக்கிறேன். இந்தக் கதையில் கொலை செய்த திருடனை கழுவேற்றுவதை வாசிக்கும்போது மிரட்டலாக இருந்தது. அதிலும் அவன் கழுவில் இறக்கும் சமயம் அந்தப் பக்கம் வரும் குழந்தைகளை கும்மி கொட்டச்சொல்லி கேட்பது அவனுள் இருக்கும் மனிதனை உயிர்த்தெழச் செய்த காட்சி எனலாம். கொலை செய்யப்பட்ட பெண்ணையும், கொலை செய்தவனையும் பின்னாளில் தெய்வமாக வழிபடும் எளிய மக்கள் மரபு நாவலில் பதிவாகிறது.

மண்ணுதிண்ணி ரெங்கநாயக்கர், நல்லமனசு திரவத்திநாயக்கர், புலிகுத்தி சுப்பன்னா, படுபாவி செங்கண்ணா, பச்சைவெண்ணெய் நரசய்யா, பொறை பங்காரு நாயக்கர், ஜோசியம் எங்கட்ராயலு, வாகடம் புல்லையா, எளவுப்பெட்டி ராமய்யா” என ஒவ்வொருவரின் பெயர் முன்னால் உள்ள பட்டப்பெயர்களின் பின்னால் போகும்போது கதை சுவாரசியமாக நீள்கிறது. ஒரே பெயரில் நாலைந்து பேர் இருக்கும்போது பட்டப்பெயர் தான் தனித்து அடையாளம் காட்டும் சாவி.

இந்நாவலில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் அக்கையா தான். ஒற்றை ஏர் பிடிக்கும் ஊரில் இரண்டு ஏர் பூட்டும் வல்லமை, யாரையும் மனங்கோணாமல் பகடி செய்யும் லாவகம், திருடர்களை வீழ்த்த கேப்பையை கொட்டி வைக்கும் சமயோசிதம், பாம்பை அடிக்க சாக்கை கட்டி இறங்கும் துணிச்சல், தீவட்டி திருடன்களுக்காக காத்திருக்கும் வேளையில் சொல்லும் இரண்டு பொண்டாட்டிக்காரன் கதை என அவர் வரும் போதெல்லாம் நம் மனதை ஈர்க்கிறார்.

கோவிந்தப்ப நாயக்கர் குடும்பத்திலுள்ள சகோதரர்கள் ஏழு பேருக்குமான பணியை விவரிக்கும்போதே, அக்காலத்தில் கூட்டுக்குடும்பங்கள் இயங்கிய சூழலை அறிய முடிகிறது. அதில், மூத்தவர் கோவிந்தப்ப நாயக்கருக்கு அரச இலைகளை சோளத்தட்டையை கொண்டு தைப்பது பொழுதுபோக்கு. அப்படி தைக்கும்போது தனக்கு கண்பார்வை போய் கஷ்டப்படுவதுபோல, தன் தம்பிகள் தன்னை கைவிட்டு போவது போலவெல்லாம் கற்பனை செய்து கொள்கிறார். இதை வாசிக்கையில்  இதையொட்டிய கதை ஒன்று எங்க ஊரில் நிலவிவரும் கதை நினைவிற்கு வருகிறது.

எங்க ஊரில் ஒரு தாத்தா மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை இலை தைப்பதற்காக மரத்திலேறி பறித்து போட சொல்லியிருக்கிறார். அவன் உடனே நான் செத்தா எனக்கு கறியும் சோறும் ஆக்கிப் போடுவீங்களான்னு கேட்க, அவரும் சரி என்றிருக்கிறார். அவன் சொன்னமாதிரி எதிர்பாராத விதமாக விழுந்து இறந்து போகிறான். அந்த தாத்தா காலம் தொட்டு இன்று வரை “அல்லங்காத்தான் சோறு’ என்ற சடங்கு எங்க ஊர் கிராமத் திருவிழாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கோபல்ல கிராமம் வாசிக்கையில் ஆலமரத்தடியில் பட்டியக்கல்லில் உட்கார்ந்து தாத்தாவிடம் கதை கேட்பது போல வெகு சுவாரசியமாய் கதை நீள்கிறது. தற்போது இதுபோன்ற கதைசொல்லிகளை நம் கிராமங்களின் காண்பது அரிதாகி வருகிறது. இந்நாவலை 8.9.10 அன்று ஐந்தாவது மதுரை புத்தகத்திருவிழாவில் வாங்கினேன். காலச்சுவடு கிளாசிக் வரிசையில் இந்நாவலை பதிப்பித்துள்ளது. இந்தப்பதிப்பிற்காக யுவன் சந்திரசேகர் எழுதிய முன்னுரை அவரது பார்வையில் கோபல்ல கிராமம் விரிகிறது. இந்நூலுக்கு ஆதிமூலத்தின் ஓவியங்கள் இன்னும் வலுசேர்க்கின்றன. இந்நூல் தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளது.

Ki. Rajanarayanan

கி.ரா.வின் எழுத்துக்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய சிறுகதைகள், கட்டுரைகள், கடிதங்கள், நேர்காணல்கள் எல்லாம் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். கி.ரா.வின் ஒரு கட்டுரையில் அவர் முன்பு நாட்குறிப்பேடு எழுதிய நாட்களில் அதில் “அன்று முடிவெட்டினேன், ஊருக்குப் போனேன்” போன்ற செய்திகளாக இருந்ததைக் கண்டு பின்னாளில் அதை விட்டுவிட்டு எழுத வந்ததை குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்தவுடன் நானும் அதுபோலவே நானும் பள்ளிநாட்களில் எழுதியிருந்த நாட்குறிப்பேட்டைத் திருப்பி பார்த்தேன். அதேபோல இருந்ததால் நிகழ்வுகளைக் கொஞ்சம் பத்தியாக எழுதத் தொடங்கினேன். இன்று வலைப்பூவில் கட்டுரைகள் எழுதுவதற்கு கி.ரா.வின் அந்தக் கட்டுரையும் உதவியாக இருந்ததை மறக்க இயலாது.

சித்திரங்கள் உதவி – ஓவியர் ரவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s