தொல்லியல் திருவிழா – நூறாவது பசுமை நடை

Posted: ஜனவரி 13, 2019 in பார்வைகள், பகிர்வுகள்

எந்தத் திசையிலிருந்து நீங்கள் மதுரையை நோக்கி வந்தாலும் உங்களை ஒரு மலை வரவேற்கும். நாலாபக்கமும் மலைகள் சூழ அமைந்த ஊர் மதுரை. நாகமலை, சமணமலை, திருப்பரங்குன்றமலை, யானைமலை இந்த நான்கு மலைகளுள் ஒன்றை பார்க்காமல் மதுரைக்குள் ஒருவர் வர இயலாது. மதுரையில் தொல்தலங்களை நோக்கி பயணிக்கும் பசுமை நடையின் வரலாற்றில் ஒரு மகுடமாக –  தொல்லியல் திருவிழாவாக – நூறாவது நடை நிகழவிருக்கிறது.

பசுமைநடை முகிழ்த்த வரலாறு

மதுரைக்கு அரணாக, அழகாக வீற்றிருக்கும் யானைமலையை அறுத்துச் சிற்ப நகராக்குகிறோம் என்று அறிவித்தார்கள். நல்லவேளை அப்பகுதி மக்கள் விழிப்படைந்து போராடி அதை தடுத்து நிறுத்தினார்கள். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் யானைமலை குறித்து மிக விரிவாக ‘யானைமலையைச் சூழ்ந்த தீவினை’ என்ற கட்டுரையை உயிர்மை இதழில் எழுதினார். மதுரை புத்தகத்திருவிழா நடந்து கொண்டிருந்த சமயம் என்பதால் அங்கு வந்த வாசகர்கள் அவரிடம் யானைமலையிலுள்ள வரலாற்றுச் சின்னங்களை பார்க்க விரும்புவதாக கூறினர். ஒரு நாள் அதிகாலை முப்பது, நாற்பது நண்பர்கள் சேர்ந்து யானைமலையிலுள்ள சமணச்சிற்பங்கள், கல்வெட்டுகள், குடைவரைகளைப் போய் பார்த்தனர். அந்த இடத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்ல பேராசிரியர் சுந்தர்காளியும் சென்றிருந்தார். இதுபோல மதுரையிலுள்ள எல்லா மலைகளின் வரலாற்றையும் அறிந்தால் நன்றாகயிருக்குமே என அவர்கள் நினைத்த போது உதயமானது பசுமைநடை.

நான் இணைந்த கதை

பசுமைநடை குறித்த அறிவிப்பு உயிர்மை இதழில் வந்த போது நான் அதைப்பார்த்து அதில் இணைந்தேன். இரண்டாவது நடை சமணமலை. அதிலிருந்து சமீபத்திய திருவேடகம் நடை வரை தொடர்ந்து பயணித்து வருகிறேன். மேலும், 2010 அக்டோபரில் வலைப்பூ தொடங்கினேன். அதில் பசுமைநடை குறித்து ஐம்பதுக்கும் மேலான கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இதுபோன்ற பலரையும் எழுதத் தூண்டியது பசுமைநடை. மேலும், பசுமைநடை ஒருங்கிணைப்புக் குழுவில் இணைந்து செயல்படத் தொடங்கி இன்று ஒரு குடும்ப நண்பர்கள் போல பசுமைநடை குழுவினர் ஆகிவிட்டோம். பசுமைநடை வாயிலாக மதுரையின் தொன்மையை அதன் மடியில் கற்கும் வாய்ப்பு கிட்டியது பெரும் பாக்கியம்.

பசுமைநடை

மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதுரையிலுள்ள தொன்மையான இடத்திற்கு பசுமைநடை பயணம் நடைபெறுகிறது. எல்லோருக்கும் பத்து நாட்களுக்கு முன்பே அந்த தேதி மற்றும் இடம் குறுந்தகவலாக அனுப்பப்படும். பயணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு எல்லோரும் ஒன்றாக சந்திக்கும் இடமும், வருபவர்கள் உறுதி செய்யவேண்டிய தேதியும் அனுப்பப்படும். உணவு வழங்குவதற்காகத்தான் உறுதி செய்ய வேண்டிய ஏற்பாடு.

பசுமைநடை பயணநிகழ்வு

பசுமைநடை செல்ல வேண்டிய இடத்திற்கு வழியிலுள்ள பொதுவான ஒரு இடத்தில் கூடி அங்கிருந்து எல்லோரும் ஒன்றாக அவரவர் வாகனங்களில் அந்த இடத்திற்கு செல்வோம். அந்த இடத்தைப் பார்த்ததும் அந்த இடத்தின் வரலாறு, சிறப்பு குறித்து துறை சார்ந்த அறிஞர்கள், பேராசிரியர்கள் எடுத்துரைப்பார்கள். எங்கள் குழுவில் தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம், பேரா. சுந்தர்காளி, பேரா. கண்ணன், ஓவியர்கள் ரவி, பாபு உள்ளிட்டோர் இருக்கின்றனர். அந்த இடத்தின் வரலாறு குறித்த கைப்பிரதி வழங்கப்படும். மக்கள் எல்லோரும் சுற்றிப் பார்த்து நிழற்படங்கள் எடுத்தவுடன் எல்லோருக்கும் காலை உணவாக இட்லி வழங்கப்படும். அந்த இடத்தில் பசுமைநடை வெளியீடுகளும், விருப்பமானவர்கள் நன்கொடை அளிக்க ஏதுவாக ஒரு பையும் வைக்கப்பட்டிருக்கும். அதோடு அன்றைய நடை முடிகிறது.

பசுமைநடையின் சாதனைகள்

பொதுவாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக அல்லாமல் குடும்பம், குடும்பமாக மக்களை வரவைத்தது பசுமைநடை. அதிலும் எல்லா வகையான மக்களும் ஒன்றாக சாதி, மதம், இனம், மொழி, ஏழை, பணக்காரன் என எல்லோரும் ஒற்றுமையாக வரலாற்றை அறிய, அதைக்காக்க வரவைத்தது பசுமைநடை. தொல்லியல் சார்ந்த புத்தகங்களின் விற்பனை பொதுவாக மந்தமாகயிருக்கும். அப்படியிருக்கையில் பசுமைநடை வெளியீடான மதுர வரலாறு நான்காயிரம் பிரதிகள்வரை விற்பனையாகியுள்ளது. மேலும்,  நீரின்றி அமையாது உலகு, பசுமைநடையாக பயணித்த அனுபவங்களை வந்தவர்கள் எழுதிய காற்றின் சிற்பங்கள், ஆங்கிலத்தில் History of Madura   என பசுமைநடை வெளியீடுகள் எல்லாவற்றையும் விரும்பி வாங்கி வாசிக்கும் நூற்களாக மாற்றியது பசுமைநடையின் சாதனை.

விருது

ஆனந்தவிகடன், சுட்டிவிகடன், குங்குமம், தினகரன், தமிழ் இந்து மற்றும் ஆங்கில நாளிதழ்களில் பசுமைநடை குறித்து வந்துள்ளது. மேலும், நீயா – நானா விருது, ரேடியோ மிர்ச்சி வழங்கிய மதுரையின் மாமனிதர்கள், சென்னை பெருவெள்ளத்தின் போது செயல்பட்ட சமூகக்குழுவிற்கான விருது என பசுமைநடையைத் தேடி விருதுகள் பல வரத்தொடங்கின.

குறிஞ்சிக்கூடல் – அகிம்சை நடை – தொன்மைநடை

பசுமைநடை செயல்பாடுகளால் உந்தப்பட்டு வழக்கறிஞர்கள் குடும்பத்தோடு வரலாற்றுத் தலங்களுக்குச் செல்லும் குறிஞ்சிக்கூடல், வடதமிழ்நாட்டில் அகிம்சை நடை, இலங்கையில் தொன்மைநடை போன்றவை தொடங்கப்பட்டன. அவர்களும் இதுபோல மாதம் ஒரு நாள் வரலாற்றுப் பயணமாக செல்கின்றனர்.

பசுமைநடையாக பயணித்த மலைகள் – தொல்தலங்கள் -குடைவரைகள் – மண்டபங்கள் – நீர்நிலைகள்

கீழக்குயில்குடி சமணமலை, கொங்கர்புளியங்குளம், முத்துப்பட்டி பெருமாள்மலை, விக்கிரமங்கலம் உண்டாங்கல்லுமலை, நடுமுதலைக்குளம், சித்தர்மலை, திருப்பரங்குன்றம், யானைமலை, திருவாதவூர், அரிட்டாபட்டி, மாங்குளம் மீனாட்சிபுரம், கருங்காலக்குடி, கீழவளவு, வரிச்சூர் குன்னத்தூர், அழகர்கோயில், திருவேடகம், பேரையூர், கூத்தியார்குண்டு சதுர்வேதிமங்கலம், சிவரக்கோட்டை, புதுமண்டபம், இராயகோபுரம், இராமாயணச்சாவடி, செல்லத்தம்மன் கோயில், புட்டுத்தோப்பு மண்டபம், வைகை மையமண்டபம், திருமலைநாயக்கர் மஹால், விளக்குத்தூண், பத்துத்தூண், கீழடி, கோவலன் பொட்டல், கோரிப்பாளையம் தர்ஹா, தேனூர் மண்டபம் என ஏராளமான இடங்களுக்கு பசுமைநடையாகச் சென்றிருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் மதுரையைத் தாண்டி கோவில்பட்டி கழுகுமலை, சங்கரன்கோயில், திருமலாபுரம், வீரசிகாமணி, புதுக்கோட்டை கொடும்பாளூர், குடுமியான்மலை, திருமயம், தாண்டிக்குடி என மேற்குத்தொடர்ச்சி மலைகள் வரை பசுமைநடைப் பயணம் நீண்டது.

விழாக்கள்

9வது வருடம் – 99 நடைகள் – 3 பெருவிழாக்கள்

பசுமைநடைப் பயணங்களில் 25 வது நடையை விருட்சத் திருவிழாவாகவும், 40 வது நடையை பாறைத் திருவிழாவாகவும், 50 வது நடையை இன்னீர் மன்றல் என நீர்த்திருவிழாவாகவும்  கீழக்குயில்குடி சமணமலையடிவாரத்தில் கொண்டாடினோம். இந்த விழாவில் தொல்லியல் அறிஞர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேலானோர் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்காக தனியாக நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பசுமைநடையிலிருந்து நாட்காட்டி கடந்த சில வருடங்களாக வெளியிடப்பட்டு வருகிறது.

பசுமைநடையின் மதுரை தகவல் மையம்

வரலாறு, தொல்லியல், கல்வெட்டுகள், நூலகம், இலக்கியம், வாசிப்பு என பல தலங்களில் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் களமாக பசுமைநடை மதுரை தகவல் மையத்தை நகரின் மையப்பகுதியான வடக்குசித்திரை வீதிக்கும் – வடக்காவணி மூல வீதிக்கும் நடுவில் அமைந்துள்ள மேலப்பட்டமார் தெருவில் தனது அலுவலகத்தை 2017ன் இறுதியில் தொடங்கியுள்ளது. மதுரை ஆர்வலர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

பசுமைநடையில் நீங்களும் கலந்து கொள்ள

உங்களுடைய அலைபேசி எண்களை எங்களுக்கு வழங்கினால் ஒவ்வொரு நடையின்போதும் குறுந்தகவல் உங்களுக்கு வரும். நீங்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் நடையில் கலந்து கொள்ளலாம். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு எத்தனை பேர் வருகிறீர்கள் என்பதை மட்டும் பசுமைநடை எண்ணுக்கு உறுதி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அன்று காலை உணவை தயார் செய்வதற்கு வசதியாகயிருக்கும். பசுமைநடை அலைபேசி எண் – 97897 30105

தொல்லியல் திருவிழா

பசுமை நடையின் நூறாவது நடை தொல்லியல் திருவிழாவாக நிகழவிருக்கிறது. கீழக்குயில்குடி சமணமலையில் காலை பசுமை நடையும் மாலை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கீழடி குறித்த புகைப்படக் கண்காட்சியும், உரைநிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் நடைபெறுகிறது. எல்லோரும் குடும்பத்தோடும், சுற்றத்தோடும் வருக, வருகவென அன்போடு அழைக்கிறோம்.

பின்னூட்டங்கள்
  1. Advaith சொல்கிறார்:

    Epadi bro join panradhu intha walk la ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s