சரவண பெலகுளா

Posted: மார்ச் 3, 2019 in பார்வைகள், பகிர்வுகள்
சரவண பெலகுளா

கர்நாடக மாநிலத்திலுள்ள சரவணபெலகுளாவிலிருந்து ஒரு காலகட்டத்தில் கொங்குப் பகுதி வழியாக சமணம் மதுரைப் பகுதிகளுக்கு வந்தது என சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதிருந்தே அந்த இடத்தைப் போய் பார்க்க வேண்டுமென்ற ஆசை மனதில் இருந்து கொண்டேயிருந்தது. நம் நல்விருப்பங்களை நிறைவேற்றத்தானே இப்பிரபஞ்சம் பெருவிருப்பம் கொண்டிருக்கிறது.

நவம்பர் மாதத்தின் இறுதியில் கர்நாடகா மாநிலத்திலுள்ள சரவணபெலகுளா, ஹலேபீடு, பேலூர், மைசூர் அரண்மனை, சாமுண்டி கோயில், பிலோமீனா தேவாலயம் செல்லும் வாய்ப்புகிட்டியது. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் திப்புசுல்தானின் கோடை கால மாளிகை மற்றும் தர்ஹாவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

ஹாசன் மாவட்டத்தில் சரவணபெலகுளா அமைந்துள்ளது. செல்லும் வழியெல்லாம் இயற்கை எழில் கொண்ட எளிய கிராமங்கள் மதுரை கிராமங்களை நினைவூட்டியது. பனை மரங்களைத்தான் கர்நாடகத்தின் இந்தப் பகுதியில் பார்க்க முடியவில்லை. மற்றபடி ஓட்டுவீடுகளும், எளிய வாழ்க்கையும் கொண்ட மனிதர்கள்தான்.

ஹாசனிலிருந்து சரவணபெலகுளா நோக்கிச் செல்லும்போதே தொலைவில் மலையும், மலைமீது கோமதீஸ்வரர் சிலையின் தலைப்பகுதியும் தெரிகிறது. ஊரின் மத்தியில் ஒரு பெரிய குளம் உள்ளது. அதன் ஒரு புறம் விந்தியகிரியும், மறுபுறம் சந்திரகிரியும் அமைந்துள்ளது. பெரிய மலையை தொட்டபெட்டா என்றும் சின்னமலையை சிக்கபெட்டா என்றும் சொல்கிறார்கள்.

470 அடி உயரமுள்ள இம்மலை மீது ஏறிச் செல்ல 600க்கும் மேலான படிகள் வெட்டப்பட்டுள்ளன. மலைமீது செருப்பு அணிந்து ஏறக்கூடாது என்பதால் சூடுதாங்க காலுறைகள் வாங்கி மாட்டிக்கொண்டு ஏறத்தொடங்கினோம். கொஞ்சப்படிகள் ஏறியதுமே இதயத்துடிப்பு அதிகமாகிவிட்டது. மதிய உணவுக்குப் பின் கிளம்பியதால் கொஞ்சம் மெல்ல ஏறினேன். அதிலும் ஒரு சௌகர்யம் என்னவென்றால் மெல்லச் செல்லும்போது திரும்பி ஊரை பார்த்துக் கொள்ளலாம்.

கண்ணுக்கெட்டியவரை தென்னந்தோப்புகள் சூழ்ந்துள்ளன. ஊரிலுள்ள ஓட்டுவீடுகள் மலைமேலிருந்து அழகாகத் தெரிகின்றன. மேலும் மஞ்சள்நிற தண்ணீர்த்தொட்டி பெரும்பாலான மாடிகளில் மையம் கொண்டுள்ளது.

மலையில் முக்கால்வாசிதூரம் கடந்ததும் சமணக்கோவில் ஒன்றுள்ளது. இது, ‘ஒடேகல் பஸ்தி’ என்று அழைக்கப்படுகிறது. மூன்று தீர்த்தரங்கரர் சிற்பங்களைக் கொண்டுள்ளது.

இதன்நடுவில் ஆதிநாதர், இடதுபக்கம் சாந்திநாதரும், வலதுபக்கத்தில் நேமிநாதரும் இருக்கிறார்கள். மூன்று தீர்த்தங்கரர் சிற்பங்களும் சிங்காசனத்தில் அமர்ந்தபடியிருக்கிறது. இதில் ஆதிநாதரின் பின்னால் இரண்டு தேவர்கள் செண்டுடன் சாமரம் வீச இருபக்கமும் நிற்பதை போலுள்ளது.


அங்கிருந்து இறங்கி நடந்தால் பெரிய வாசல் உள்ளது. அதன் இருபக்கமும் தீர்த்தங்கரர் சிற்பங்கள் உள்ள சிறிய கோவில் உள்ளது. மலையில் கொஞ்சம் சமணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பார்த்ததும் கோவில்பட்டி கழுகுமலையின் நினைவு வந்தது. படியேறிச் சென்றால் கோமதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள கோவிலை அடையலாம். முன்மண்டபத்துடன் கூடிய நுழைவாயிலில் இருபுறமும் துவார பாலகர்கள் வரவேற்கிறார்கள். அண்ணாந்து பார்த்து வணங்கக்கூடிய அளவில் 58 அடி உயர கோமதீஸ்வரர் ஒற்றைக்கல் சிலை அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் தவம்.

Jpeg

கி.பி.981ஆம் ஆண்டில் அரிட்டநேமி எனும் ஸ்தபதியால் தொடங்கப்பட்டு கி.பி.983ல் முடிக்கப்பட்டுள்ளது இச்சிற்பப்பணி. நான்காம் ராஜமல்லாவின் அமைச்சரான சாமுண்டராயாவால் நிர்மாணம் செய்யப்பட்ட இச்சிலை இந்தியாவின் அதிசயங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. திக்கையே ஆடையாக கொண்டு நிற்கும் கோமதீஸ்வரரின் சிலையில் பெரிய கொடிகள் சுற்றியபடி தவத்தில் உள்ளபடி அமைக்கப்பட்டுள்ளது. அவரின் சகோதரிகளான சுந்தரி, பிராமி சிற்பங்கள் ஆளுயரச் சிற்பங்களாக உள்ளன. ஒரு சமணத்துறவி அங்கு ஆராதனை செய்ய அமர்ந்திருக்கிறார். உட்பிரகாரத்தைச் சுற்றிவரும் வழியில் 24தீர்த்தங்கரர் சிற்பங்கள் உள்ளன. அதில் சில தீர்த்தங்கரர்களுக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. கடைசியில் யட்சியின் சிலை ஒன்றுள்ளது.  வெளிப்பிரகாரத்தைச் சுற்றிவரும் வழியிலுள்ள சிற்பங்கள் பிற்காலத்தவையாக இருக்கலாம். வெளியில் உள்ள தூணில் பெண்யட்சியின் சிற்பம் ஒன்றுள்ளது. ஒடேகல் பஸ்திபோல மலையில் இன்னொரு சமணக்கோவில் ஒன்றுள்ளது.

சமணத்தீர்த்தங்கரர்களில் முதலானவரான ஆதிநாதரின் மகன் கோமதீஸ்வரன். இவரது இன்னொரு பெயர் பாகுபலி. ஆதிநாதர் ராஜ்யத்தை துறந்தபோது அவரது மகன்கள் பரதாவும், பாகுபலியும் கடுமையாக சண்டை புரிகின்றனர். வெற்றி பெற்ற பாகுபலி நாட்டைத் துறந்து துறவறம் செல்கிறார். இந்த கதையின் மையச் சரடை வைத்துதான் சமீபத்தில் வந்த திரைப்படம் புனையப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இச்சிலைக்கு ஆராதனை நடைபெறுகிறது. மஹாமஸ்தகாபிசேகம் என்றழைக்கப்படுகிறது. சென்ற வருடந்தான் இந்த நிகழ்வு முடிந்திருந்தது. கோமதீஸ்வரர் முன்பு சாரமும், பின்னால் பெரிய பெரிய இரும்பு உருளைகளும் கொண்டு பெரிய மேடை அமைத்திருந்ததை பிரித்து எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு வயதான மூதாட்டி கையில் ஒரு மயில் பீலியுடன் மந்திரம் போல ஒன்றை சொல்லியபடி சுற்றி நடந்து வந்துகொண்டிருந்தார். பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள், குடும்பத்தோடு வந்தவர்கள் என நிறையப் பேர் நாங்கள் சென்ற சமயத்தில் வந்திருந்தனர்.

இம்மலையிலிருந்து எதிரேயுள்ள சந்திரகிரி மலையில் நேமிநாதருக்காக எடுக்கப்பட்ட கோவில் உள்ளது. அக்கோவில் விமானத்தை இம்மலையிலிருந்து பார்க்க முடிகிறது. மலையடிவாரத்தில் உள்ள பெரிய குளம் கி.பி.17ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணராஜ உடையாரால் வெட்டப்பெற்றது. பெலகுளா என்றாலே வெண்மையான குளம் என்று பொருளாம். மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலியின் சின்ன சிற்பங்கள் கொஞ்சம் வாங்கினேன். மற்ற இடங்களில் புத்தர்தான் நிறைந்திருக்கிறார்; இங்குதான் என் வாசிப்பறையில் வைக்க மகாவீரர் சிலையொன்றை வாங்க முடிந்தது.

மலையடிவாரத்தில் நடைபயணமாக வந்த திகம்பர சாமியார்களைப் பார்த்தேன். நிர்வாணமாக இப்படி பயணிக்கும் சமணத்துறவிகளைப் பற்றி எஸ்.ரா. தேசாந்திரியில் எழுதியது நினைவிற்கு வந்தது. ஆண்டுதோறும் பாதயாத்திரையாக நிறையப் பேர் வருவார்களாம். இம்மலை மீது ஏற முடியாதவர்களை தூக்கிச் செல்ல கீழே ஆட்கள் இருக்கிறார்கள்.

சரவணபெலகுளாவில் காணப்படும் சிலைகளும், மதுரை சமணமலையிலுள்ள சிலைகளும் ஒரே காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. மேலும், சமணமலை உச்சியில் கம்பத்தின் கீழ் கன்னடக் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. அதை சரவணபெலகுளாவிலிருந்து வந்தவர்கள் வெட்டியிருப்பார்கள் போல. மதுரை சமணமலையில் “மாதேவிப் பெரும்பள்ளி” என்ற சமணப்பள்ளி அப்போதிருந்த பாண்டிய மன்னனின் ஆதரவுடன் நடந்துள்ளது.

சரவணபெலகுளாவிலிருந்துதான் சமணம் தெற்கே வந்தது என்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சான்றுகள் எதுவும் இங்கில்லை. மேலும், மதுரையிலுள்ள சமணமலைகளில் உள்ள தமிழிக் கல்வெட்டுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை. அதில் சித்தர்மலைக் கல்வெட்டொன்றில் ‘மதுரை அமணன்’  என்ற வரிகள் வருகிறது. மதுரைக்காஞ்சியில் சமணப்பள்ளிகள் இருந்ததைப் பற்றிய குறிப்பு உள்ளது.

சரவணபெலகுளாவிலுள்ள பாகுபலி சிற்பம் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய சிற்பங்களுள் ஒன்று. அதிலும் ஒற்றைக்கல்லிலான இதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு அமைத்தது பெரும்சாதனைதான். வெகுநாள் ஆசையொன்று நிறைவேறிய மனநிறைவோடு அங்கிருந்து கிளம்பினேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s