தூரம் காதலைக் கொல்கிறது. தூரமின்மையும்கூட.
அலர் காதலைக் கொல்கிறது.
சில சமயம் ஏதுமின்றியே காதல் சாகிறது.
காஹா சத்தசஈ
எஸ்.ராமகிருஷ்ணனின் பத்தாவது நாவலான ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை’ மதுரை புத்தகத் திருவிழாவில் வெளியானது. எஸ்.ரா.வின் நாவல்கள் உப பாண்டவம் தொடங்கி பதின் வரை எல்லா நாவல்களையும் வாசித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் தனித்துவமானவை. காதலை மையங்கொண்ட நாவல்களில் ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை’க்கும் தனியிடம் உண்டு. இருநூறு பக்க அளவு கொண்ட இந்நாவல் மனதை நெகிழ்வூட்டும் அருமையான காதல் கதை. காதல் என்ற சொல் எப்போதும் பரவசத்தைத் தரக்கூடியதுதானே!

இந்நாவல் இரண்டு காலகட்டங்களில் பயணிக்கிறது. ஒன்று கோடைகால விடுமுறையில் மலரும் பதின்பருவக்காதல். இந்தக் கதை 1980-90களில் நிகழ்கிறது. அருப்புக்கோட்டை அருகேயுள்ள சிறிய கரிசல் கிராமத்திலிருந்து தாத்தா வீட்டுக்கு விடுமுறைக்கு வரும் இராமசுப்பிரமணியனுக்கும், சென்னையிலிருந்து தாத்தா வீட்டுக்கு விடுமுறைக்கு வரும் சில்வியாவிற்கும் இடையே கோவில்பட்டியில் மலரும் காதலைச் சொல்லும் கதை.
மற்றொன்று சமகாலத்தில் நிகழும் கதை. இதில் குளிர்காலத்தில் கர்நாடகாவிலுள்ள சித்தாபுரம் என்ற மலைக்கிராமத்தில் வசிக்கும் சில்வியாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடச் சொல்லும் இராமசுப்பிரமணியனுக்குமான அன்பைச் சொல்லும் கதை. இந்நாவலின் கதை சில அத்தியாயங்களிலேயே தெரிந்துவிட்டாலும் முழு நாவலையும் வாசிக்காமல் நூலை கீழே வைக்க முடியாத அளவிற்கு சுவாரசியமாக கதை நம்மை இழுத்துச் செல்கிறது.
எஸ்.ரா.வின் எழுத்தின் வாயிலாக நாம் கோவில்பட்டி வீதிகளில் அலையும் வெயிலையும், சித்தாபுரா எனும் மலைகிராமத்துக் குளிரையும் நாவலை வாசிக்கையில் உணர்கிறோம். கிராமத்திலிருந்து வரும் சுப்பிரமணியனுக்கு சில்வியா இயல்பாய் தொட்டுப் பேசுவதும், அடித்து விளையாடுவதும் ஆச்சர்யமாக இருக்கிறது. அவளை ஒரு தேவதைப் போல பார்த்துக் கொண்டே இருக்கிறான். சின்னச் சின்னக் குறும்புகளால், துணிச்சலான செயல்களால் நம்மையும் சில்வியா ஈர்க்கிறாள்.
சித்தாபுராவில் கணவன் இறந்து மகளோடு வாழும் சில்வியாவை எதிர்பார்ப்பில்லாத அன்பால் பார்த்துக் கொள்ளும் இடங்களில் இராமசுப்பிரமணியன் ஈர்க்கிறான். இக்கதையில் சில பக்கங்களில் வந்தாலும் தன் தாய்க்கு யாரும் இல்லாத நிலையில் தாயின் முன்னாள் காதலனான இராமசுப்பிரமணியனை சில்வியாவின் மகள் நான்சி ஏற்று புரிந்து கொள்ளுமிடத்தில் அவள் இவர்களிருவரையும் விட உயர்ந்து நிற்கிறாள். பால்யத்தில் வறுமையும், தனிமையும் ஏற்படுத்திய பக்குவம் அது.
சித்தாபுராவில் சில்வியாவும், சுப்பியும் (இப்படித்தான் இராமசுப்பிரமணியனை சில்வியா அழைப்பாள்) சேர்ந்து நிழற்படம் எடுத்துக் கொள்வது அழகான காட்சி. எந்த அலங்காரமும் இல்லாமல் காய்கறிக்கூடையுடன் இயல்பாய் நிழற்படம் எடுப்பதும், இருவரும் ஒருவருக்கு பிடித்த உடையைத் தேடி கிறிஸ்துமஸிற்கு வாங்குவதும், சில்வியாவிற்காக தேவாலயத்திற்கு செல்வதும் கவிதையான காட்சிகள். கோவில்பட்டியில் கதிரேசன் மலையில் அமர்ந்து உரையாடுவதும், சைக்கிளில் பயணிப்பதும், மதுரை வந்து ஜிகர்தண்டா குடிப்பதும் என பதின்பருவக் காட்சிகள் அத்தனை அழகு. இப்போதுபோல அந்தக்காலத்தில் சட்டெனத் தொடர்பு கொள்ள முடியாத சூழலில் இருவரும் பிரிவதும், விதிவசத்தால் மறுபடி சந்திப்பதும் வாழ்வின் தீராத விளையாட்டு.

விடுமுறை எப்படா வருமென்று காத்துக்கிடந்து தாத்தா – பாட்டி வீட்டுக்கு சென்ற நாட்களை, தொட்டி மோட்டரில் குளித்து கும்மாளமிட்டதை, நொங்கு வண்டியோட்டி விளையாடியதை, கரிப்பிடித்த அடுப்படியில் வெல்லம் மணக்க பணியாரம் தின்றதை, கிணற்றடியில் சித்திகளோடு சேர்ந்து கதையடித்ததை, ஓசிக்கஞ்சி என மாமாக்கள் அழைத்த கேலியை எல்லாம் நினைவுக்கு கொண்டு வருகிறது இந்நாவல். அத்தோடு கோடை கால விடுமுறையில் தல்லாகுளம் திருக்கண்ணில் நாலைந்து நாட்கள் தங்கிருந்து ஓடிஓடிப்போய் பார்த்த அழகனின் மீதான காதலை இந்நாவல் ஞாபகமூட்டியது.
கோடை காலத்தை, காதலை மட்டுமல்ல. குடும்பத்தில் நடக்கும் சண்டைகள் பிள்ளைகள் வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கிறது என்பதையும் சில்வியா வாழ்க்கை வழியாக அறிகிறோம். 8, 9, 10 வகுப்பு விடுமுறைகளுக்கு கோவில்பட்டிக்கு வருகையில் குடும்பப்பிரச்சனை சில்வியாவை ஒவ்வொரு ஆண்டும் மாற்றியிருப்பதை நாம் அறியலாம். சில்வியாவின் பெற்றோரது எதிர்பாராத அகால மரணம் சில்வியாவையும் அவளது இருசகோதரிகளையும் முடக்கிவிடுகிறது.

1990களில் பத்தாவது படித்தவுடன் பாலிடெக்னிக் படிக்க வைப்பதுதான் அன்று பல பெற்றோர்களின் கனவு. அதற்கு இந்த கதை நாயகனும் என்னைப் போல பலிகெடாவாகிறான். எனக்கு காதல் வரம் கிட்டாவிட்டாலும், இன்றுவரை கோடைகால விடுமுறை வரமாய் கிட்டியிருப்பது மகிழ்ச்சி. மிக அழகான இக்காதல் கதையை தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்நாவலின் விலை 200 ரூபாய்.