மதுரையில் வட்டெழுத்துப் பயிற்சி

Posted: ஜனவரி 23, 2020 in பார்வைகள், பகிர்வுகள்

தமிழ் மரபு அறக்கட்டளையும், மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய வட்டெழுத்துப் பயிற்சி 2019 டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வட்டெழுத்துப் பயிற்சி வகுப்பை நடத்துபவர்களில் தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் அவர்களின் பெயர் இருந்ததால் உடனடியாக என்னுடைய பெயரை பதிவு செய்தேன். என்னுடன் பசுமைநடை நண்பர் சமயமோகன் அவர்களும் கலந்து கொண்டார். மதுரை காமராசர் பல்கலைக்கழக அப்துல்கலாம் அரங்கில் இந்த வகுப்பு நடைபெற்றது.

வட்டெழுத்துப் பயிற்சிக்கு மொத்தம் 140 பேர் வந்திருந்தனர். தமிழ் எழுத்துமுறை மீதான மக்களின் ஆர்வம் மகிழ்வளிக்கிறது. மேலும், தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக பல்துறை சார்ந்தவர்களும் இந்த வகுப்புக்கு வந்திருந்தனர். மதுரை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும், கர்நாடகா மற்றும் கேரளாவில் வசிக்கும் ஓரிரு நண்பர்களும் இந்த வகுப்பிற்கு வந்திருந்தனர். தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் சுபாஷினி இந்த வகுப்பை ஒருங்கிணைக்க ஜெர்மனியிலிருந்து வந்திருந்தார்.

வட்டெழுத்துப் பயிற்சி வகுப்பு பற்றிய அறிமுக உரையை முனைவர் கோ.சசிகலா நிகழ்த்தினார். அவர் 2008ல் செந்தமிழ்க்கல்லூரியில் சாந்தலிங்கம் அய்யாவிடம் கல்வெட்டுக்களை கற்று பின் இத்துறையில் முனைவர் பட்டம் பெற்றதை குறிப்பிட்டார். வரலாற்றைக் கற்றுக் கொள்வதற்கு கல்வெட்டுக்களே முதல்நிலை சான்றுகளாக உள்ளன. இந்தியாவில் தமிழகத்தில்தான் 65% கல்வெட்டுக்கள் உள்ளன. அதில் 50% கோயில்களில் உள்ளன என்ற தகவலையும் கூறினார். கல்வெட்டை வாசிக்கையில் மைப்படி எடுத்தல் போல கண்படி எடுத்தல் அவசியம் என குறிப்பிட்டார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத்தலைவர் மகாலிங்கம் கல்வெட்டுக்கலைப் பற்றி பேசினார். இந்திய கல்வெட்டியலின் தந்தை ‘ஜேம்ஸ் பிரின்ஸப்’ என்ற வெளிநாட்டவர் பற்றி குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் சுபாஷினி அவர்கள் அமைப்பின் செயல்பாடுகளை படக்காட்சிகளாக பகிர்ந்து கொண்டார். 2001ல் தொடங்கப்பட்ட தமிழ் மரபு அறக்கட்டளை குறித்து விரிவாக தனியொரு பதிவில் காணலாம்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.கிருஷ்ணன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் நாகமலைப் புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவருடைய மகன் என்பதை பெருமையாகச் சொன்னார். தமிழ் மற்றும் வரலாறு மீதான தனது தேடலை குறிப்பிட்டார். மதுரை காமராசர் பல்கலையில் பட்டயப் படிப்பாக வளரி, சிலம்பம் போன்ற கலைகள் கற்றுத்தரவிருப்பதாகத் தெரிவித்தார். அதேபோல, கல்வெட்டுப்பயிற்சி வகுப்புகளும் பட்டயப்படிப்பில் கொண்டுவர இருப்பதாகத் தெரிவித்தார். தமிழ் மரபு அறக்கட்டளையின் மதுரை பொறுப்பாளர்களுள் ஒருவரான தேவி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். தேநீர் இடைவேளைக்கு பிறகு அடுத்த அமர்வு தொடங்கியது.

சுபாஷினி அவர்கள் தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் குறித்த அறிமுகத்தை வழங்கினார். சாந்தலிங்கம் அய்யா வட்டெழுத்துக் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தமிழிலிருந்து வட்டெழுத்துக்கள் வந்த காலகட்டம் தொடங்கி அவை சமகாலத்தமிழ் எழுத்துக்களாக மாறிய காலகட்டம் வரையிலான பல தகவல்களைக் கூறினார். அவருடைய உரையில் தமிழகத்திலுள்ள பல முக்கியமான வட்டெழுத்துக் கல்வெட்டுப் படங்களை காட்டினார். பிறகு வட்டெழுத்துக்களை உயிர், மெய், உயிர்மெய் என படிப்படியாக எழுத எல்லோரும் பார்த்து எழுதினோம். எழுதிப்போடும்போதே எப்படி எழுத்து ஒவ்வொரு இடங்களிலும் எவ்வாறு எழுதப்படுகிறது என்பதையும் எழுதிக் காட்டினார். மாணவர்களின் கேள்விகளுக்கு விரிவாக, தெளிவாக பதிலளித்தார். முதல்நாள் வகுப்பு இனிதே நிறைவடைந்தது. அன்று கற்ற வட்டெழுத்துக்களை 10 முறை எழுதிவரச்சொன்னார்கள். நான் நாலு முறை எழுதினேன். அதற்குள் இருட்டிவிட்டது.

இரண்டாம் நாள் வகுப்பின் தொடக்கமாக சுபாஷினி அவர்களின் உரையுடன் தொடங்கியது. அதன்பின் பங்கேற்பாளர்களை அறிமுகம் செய்யச்சொல்ல, பாதிப்பேர் மைக் கிடைத்த உற்சாகத்தில் விரிவுரை ஆற்றினார்கள். நல்லவேளை அறிமுகத்தைப் பாதியோடுவிட்டு வகுப்புத் தொடங்கியது. நாங்கள் எழுதிவந்த வட்டெழுத்துக்களை இராஜேந்திரன் அய்யாவும், சசிகலா அவர்களும் சரிபார்த்தார்கள்.

தொல்லியல் அறிஞர் இராஜேந்திரன் அய்யாவுடன் இணைந்து சசிகலா அவர்களும் வகுப்பெடுத்தார்கள். வட்டெழுத்து எவ்வாறு தமிழியிலிருந்து வந்தது என்பதை அழகாக விளக்கினார்கள். தமிழி எழுத்துக்களையும் எழுத கற்றுக் கொடுத்தது கூடுதல் சிறப்பு. வட்டெழுத்துக் கல்வெட்டுக்களை எழுதி அதை வாசித்துக்காட்டினார்கள். மாணவர்களின் ஐயங்களுக்கு பதிலளித்தார்கள். இராஜேந்திரன் அய்யா படிக்கும் காலங்களில் தினசரி 50 முறை எழுதி வரச்சொல்வார்களாம். வகுப்பு ஆரம்பிக்கும் முன் மெய்கீர்த்தி ஒன்று சொல்ல வேண்டுமாம். அப்படி அவர்கள் கற்றதால்தான் எந்த ஊர் கல்வெட்டைப் பற்றிக் கேட்டாலும் அதை பார்க்காமல் உடனடியாக சொல்ல முடிகிறது. மதிய உணவிற்குப் பின்னர் தமிழி, வட்டெழுத்துக் குறித்த படக்காட்சியுடன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் வந்திருந்தார். எல்லோரும் களப்பயிற்சி எடுக்க முத்துப்பட்டி பெருமாள் மலைக்குச் சென்றோம். அங்குள்ள தமிழி மற்றும் வட்டெழுத்துக்களை பற்றிய அறிமுகத்தை செய்ய வாய்ப்பு கிட்டியமைக்கு மகிழ்ச்சி. பசுமை நடைப் பயணங்கள் குறித்தும், இதுபோன்ற இடங்களுக்கு தொடர்ந்து பயணிப்பதன் அவசியம் குறித்தும், கல்வெட்டுக்களை வாசிப்பது போல அவற்றை பாதுகாப்பது குறித்தும் அ.முத்துக்கிருஷ்ணன் பேசினார். பசுமைநடையின் மதுர வரலாறு புத்தகத்தை விற்பனைக்கு வைத்திருந்தோம். எல்லோரும் ஆர்வத்துடன் வாங்கினார்கள். அவரது உரையைத் தொடர்ந்து சுபாஷினி அவர்களின் நன்றியுரையோடு இரண்டுநாள் பயிற்சி இனிதே நிறைவுற்றது. இதுபோன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு நன்றி.

படங்கள் உதவி : செல்வம் ராமசாமி

பின்னூட்டங்கள்
  1. முத்துசாமி இரா சொல்கிறார்:

    வட்டெழுத்து பயிற்சிப் பட்டறை குறித்த சுவாரஸ்யமான பதிவு,

  2. பிச்சைக்காரன் சொல்கிறார்:

    இவ்வளவு சிறப்பான நிகழ்வு மதுரையில் நடந்ததும்,அதில் இத்தனைபேர் கலந்து கொண்டதும் மகிழ்ச்சி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s