சுளுந்தீ

Posted: மார்ச் 8, 2020 in பார்வைகள், பகிர்வுகள்
குறிச்சொற்கள்:

தருமத்துப்பட்டியிலிருந்து கன்னிவாடியை ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் பழனி பாதயாத்திரையின்போது கடந்திருக்கிறேன். என் கைபிடித்து ‘சுளுந்தீ’ வெளிச்சத்தில் அப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார் முத்துநாகு.

பண்டுவர்கள் வாழ்க்கை, கன்னிவாடி ஜமீன், குலநீக்கமானவர்களின் பாடு, நாயக்கர் காலத்தில் நட்ட புளிய மரங்கள், கோயில் மாடுகளை நேர்ந்துவிட்டதன் காரணம், அனந்தவல்லியின் காதல் என பலவிசயங்களை சுளுந்தீ வழியே அறிந்தேன்.

இந்நாவலைப் பரிசளித்த இ.சுதாகரன் அவர்களுக்கு நன்றி

இந்நாவலை வாசித்த சகோதரர் ப. தமிழ்ச்செல்வத்தின் அருமையான பதிவை இப்பக்கத்தில் பகிர்கிறேன்:

சுளுந்தீ

தொடக்கப்பள்ளி நாட்களில் அசகாயசூரர்களான நண்பர்கள் சிலர் எனக்கு இருந்தனர். பெரியவர்கள் பீடி, சிகரட் பிடிப்பது போல சுளுந்துக்குச்சிகளைப் பற்றவைத்துப் புகைவிடுவதைப் பற்றி அவர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். சொக்கப்பனை நாளில் சைக்கிள் டயர்கள், கருக்குமட்டைகள் போன்றவற்றைச் சிறுவர்கள் சுற்றி விளையாடும்பொழுது ‘நாங்களெல்லாம் முந்தி சுளுந்து சுத்துவோம்’ என்று சிலர் சொல்வார்கள். நம் முன்னோர் வாழ்வில் சுளுந்து ஏந்தியதே தீ. சுளுந்தீயின் கதை ஒருவகையில் நமது பூர்வகதை.

மலையிலும், மன்னார் வளைகுடாத் தீவுகளிலும் இருக்கும் சுளுந்துக் கட்டைகளை நாவலாசிரியர் இரா. முத்துநாகு தனது வலைப்பூவிலேயே படங்களுடன் பதிந்திருக்கிறார். இட்டிலிப் பூ குடும்பமான இக்சோரா வகைத் தாவரம்;   பிச்சி போல பூக்கும், வெட்சி என்பது இந்தக் குடும்பம்தான் என்றெல்லாம் சொல்கிறார்கள். அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை ஒன்றில் சூள் என்று வழங்கிய தென்னம்பாளை தீப்பந்தம் பற்றிச் சொல்லுகிறார். பனையோலையை மடித்துச் செய்யும் தீவட்டி பற்றிய குறிப்பும் சுளுந்தீயில் உள்ளது. சுளுந்தீ பாதைக்கு வெளிச்சமாயும் இருக்கலாம். பற்றி எரியவைக்கவும் செய்யலாம்.

கன்னிவாடி அரண்மனையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியை முதன்மையாகக் கொண்ட கதை சுளுந்தீ. நாவலிலேயே ஓரிடத்தில் வருவதுபோல அரண்மனை விவகாரங்கள் கொழுந்துவிட்டு எரிவதில்லை. சுளுந்து விட்டு எரிகின்றன.

ரங்கமலை, பன்றிமலை, அகமலை, மேகமலை, சிறுமலை, அழகர்மலை, கரந்தமலையால் சூழப்பட்ட நிலப்பரப்பில், வைகை மற்றும் அதன் துணையாறுகளின் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்களுக்கு இந்த நாவல் கூடுதல் நெருக்கமுடையது. பழனி பாதயாத்திரை சென்றவர்களுக்கு மிகவும் பழக்கமான திணைநிலம்.

அழகுமலையான் நமது அனைவருக்கும் பொதுவானவர். தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லும் குடும்பம் ஒன்றையாவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாவித, குடும்ப, கள்ள, இடைய, வெள்ளாள, ஆசாரி, செட்டி, அனுப்ப, வெலம, காப்பு, கம்பிளி, ராவுத்த, மாவுத்த இனங்கள் அத்தனையும் தாயாய், பிள்ளையாய் அடித்துக்கொண்டும், அணைத்துக்கொண்டும், அடக்கியும், அடங்கியும், மீறியும் வாழ்ந்த கதை.

இந்த நாவலின் மொழி நமக்கு அணுக்கமானது. ‘இரகசியம்’ எனலாம், ‘மந்தணம்’ எனலாம், இந்த நாவல் அரண்மனை ‘கமுக்கங்கள்’ என்கிறது. அதனாலேயே நெருக்கமாகிறது.

எரிச்சல் மீதுறும்போது ‘வீட்டுச்சுவத்தில காலைத் தூக்கிக்கிட்டு நிக்கிறவ’  என்று தெருவில் திரியும் நாயின்மீது கல்லெறிபவர்களை நாம் கண்டிருக்கிறோம். அத்தகைய இயல்பும், மொழியும் கொண்டவர்களே இக்கதை மாந்தர்கள். ‘உத்தப்புரம் மேளகாரர்கள் தவிலை முதுகில்போட்டுக் கொண்டு தாளம் தப்பாமல் அடிப்பார்கள்’ என்று சொல்பவரை நாம் பார்த்திருப்போம் (பேசுபொருள் கிரிக்கெட்டாகக் கூட இருந்திருக்கும்).

விட்டை தள்ளி மேடு, பொண்ணு மாப்பிள்ளை கல் போன்ற இடப்பெயர்கள் எங்கள் ஊரில் இருந்த தேவிடியா பொட்டல் போன்ற இடங்களை நினைவுப்படுத்துகின்றன. அவற்றின் பின்னுள்ள கதையை அறியத் தூண்டுகின்றன.

ஈத்தரக் கழுதை, வெங்கம்பய, வகுசீ(ர்) போன்ற சொற்களின் பின்னணி திடுக்கிடவைப்பது. இப்படித்தான் ‘எடுபட்ட பய’ போன்ற சொற்களின் அர்த்தம் அறிந்தபோது அதிர்ச்சியானேன். பொ** வகுசி என்று ஏன் சொல்லுகிறார்கள் என்பது ஆராயற்பாலது.

அதிர்ச்சி மதிப்புக்காக ‘கெட்ட’ வார்த்தைகளை அப்படியே போடாமல் ‘தண்டு’ என்பது போன்ற இடக்கரடக்கல்களையே எழுத்தாளர் பயன்படுத்தியிருக்கிறார். வசவாகவோ, உரிமைச்சுட்டாகவோ, இணைப்புச் சொல்லாகவோ அன்றி பொதுப்புழக்கத்தில் அதுவே இயல்பும்கூட.

இது பண்டுவத்தின் கதை. சித்த மருத்துவத்தை சித்த பண்டுவம் என்றே சொல்லலாம். ‘பண்டித ஜவகர்லால் நேரு’வில் வருவதல்ல, ‘அயோத்திதாச பண்டிதர்’, ‘ஆபிரகாம் பண்டிதர்’ – இவை சுட்டும் பண்டுவம்.  முப்பதுக்குமேல் வயதானவர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் தாமோ, உடன்பிறந்தவர் ஒருவரோ மருத்துவமனையில் அல்லாது மருத்துவச்சியின் உதவியால் வீட்டில் பிறந்தவராக இருக்கக் காணலாம்.  மருத்துவச்சியே நம்மை குளிக்கவைத்து வளர்த்து ஒருவகையில் உருவுபிசைந்திருப்பார். எங்கள் பகுதியில் நாவிதர்களின் பண்டுவம் நம் கண்முன்னேயே வெகுவாகக் குறுகிவிட்டது. முள்தைத்த இடங்களில் எருக்கலம்பால் அடித்துவிடுவதாகவும், நூலோ, மயிரோ கட்டி முகப்பருவைத் தழும்பு இல்லாமல் அகற்றிவிடுவதாகவும் சில இடங்களில் நீடிக்கிறது.

பண்டுவத்தோடு ஆனை வாகடம், மாட்டு வாகடம், குதிரை வாகடம் பற்றிய குறிப்புகளும் உண்டு. (தகுந்த பண்டுவ ஆலோசனையின்றி இதிலுள்ள மருத்துவக்குறிப்புகளைத் தாமாகச் சோதித்துப் பார்க்கவேண்டாம்).

எந்தச் சுழிகொண்ட மாட்டை மஞ்சுவிரட்டில் எப்படி அடக்குவது என்பதில் இருந்து நெஞ்சுக்கூடு வேகும்படி எப்படி பிணம் எரிப்பது வரை எல்லா சூட்சுமங்களும் கதையில் வருகின்றன.

அந்தக் காலத்திலும் அரசு இசைநாடகம், கூத்து போன்றவற்றைத் தடைசெய்திருக்கிறது. சாமியார்கள், சாமக்கோடாங்கிகள், ஆல்வரேசு, சைமன் பாதிரிகள் என்று அரசின் ஒற்று வலை அமைகிறது.

நாவிதர்கள் தனிமனிதர்களின் கமுக்கம் (பிரைவசி) குறித்து இன்றைய நவீன அரசுகளுக்கே இல்லாத அக்கறை கொண்டு அறம் பேணியிருக்கிறார்கள். சிறிது தானியத்தையும், ஒரு கோழியையுமே சீதனமாக மணப்பெண் எடுத்துப்போகிறாள். ஊறவைத்த புளியங்கொட்டை தின்று மக்கள் பஞ்சம் வெல்கிறார்கள். ரெட்டி கடை வழியே வந்துசேரும் இட்டிலி அவர்களைக் கட்டிப்போடுகிறது. புகையிலை போதையிலை என்றே குறிப்பிடப்படுகிறது.

மகனையே கொன்றவனானாலும் வல்லத்தாரை வங்காரனை ‘வீரனை வென்ற வீரன்’ என்று உச்சி முகர்கிறாள். பல்லக்கில் பவனி வரும் வங்காரனின் முழியில் ஏதோ சரியில்லை என்பதை அவன் தாய் இருளாயிதான் அறிகிறாள். அதிகாரத்தின் விதிகளால் கட்டுண்டு உடன் கட்டை ஏறியவர்களும், ஆணவக் கொலையுண்டு சாமிகளானாவர்களும் நம் பெண்கள்.

கொலையுண்டவனின் குதிரையின் மீதும் வன்மம் காட்டும் மன நிலை இன்றும் மாறவில்லை. ‘இவனெல்லாம் ஏறுவதா’ என்பதுவும் மாறவில்லை. இறுதிப்பகுதியில் மல்யுத்தம் காண மக்கள் செல்லும் காட்சி ‘ஆயிரத்தில் ஒருவன்’ (2010) படக்காட்சியை நினைவுப்படுத்துவது.

கரிசல்நிலத்துக்கும், கன்னியாகுமரி ஈர நசநசப்புக்கும் பழகியிருக்கும் தமிழ் வாசகமனம் கருங்காடுகள், கெவிகள், கரடுகள், ஓடைகளில் உலாவுவது மாறுதலானது. இங்கும் முசிறு எறும்புகள் உண்டு. யட்சிகளுக்குப் பதில் குரளி வித்தையும், கோடாங்கிகளும் உண்டு. பரங்கிப்பட்டை மூலிகை உறிக்க பளியர் குல பூதகன் மரத்தில் ஏறியதும் அதிலிருக்கும் குரங்குகள் அங்கும் இங்கும் தாவி பட்டுப்போன சுள்ளி, பூ இவற்றைப் பிடுங்கி எறிகின்றன. மரமெங்கும் திரிந்தும் அதன் சிறு துரும்பைக்கூடச் சிதைக்காமல் மூலிகை சேகரித்து பூதகன் இறங்கிவருகிறான்.

மெய்ப்பு பார்ப்பதும், செப்பம் நோக்குவதும் சிற்சில இடங்களில் பாக்கி இருக்கிறதோ எனத் தோன்றுகிறது. பள்ளங்களை சுட்டும் பிட்டு (pit?), நீதிபதிகளான சூரிக்கள் (jury?) போன்ற ஆங்கிலச் (?) சொற்கள் வருகின்றன. இவைபற்றி சொற்பிறப்பு காணவேண்டும்.

எடுத்தவுடன் நாவலைப் படித்துவிட்டே முன்பகுதியைப் படித்தேன். நூலாசிரியரின் முன்னுரை, சொ. சாந்தலிங்கம், ஒ. முத்தையா ஆகியோரின் அணிந்துரைகள் தாண்டி நாம் சொல்வதற்கு எதுவும் பெரிதாக இல்லை. ‘இதை நான் வழிமொழிகிறேன்’ என்று சொன்னாலே போதுமானது. அத்தனை நுணுக்கமாக கச்சிதமான மொழியில் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக சாந்தலிங்கம் அய்யாவின் பெல்லாள மண்டபத்துப் பெண்சிற்பங்கள் குறித்த மேற்கோள் அவரது தனிச்சிறப்பு. கொடும்பாளூர் மூவர் கோயிலுக்குச் சென்றிருந்தபோதும் தனக்கேயுரிய குறுநகை தவழ அவர் அங்கிருந்த சிற்பமொன்றின் சிறப்பைச் சொன்ன நினைவு. இவரது உரைகளைக் கேட்க வாய்ப்பளித்த மதுரை பசுமைநடை அமைப்பு சித்தர்கள் நத்தம் போன்ற ஊருக்குச் செல்லும்போது முத்துநாகு அவர்களின் உரையையும் கேட்கும் வாய்ப்பை அளிக்கும் என்று நம்புவோம்.

கொற்றவை, நிலம் பூத்து மலர்ந்த நாள், அஞ்ஞாடி, ஆழிசூழ் உலகு, சூல், சுளுந்தீ போன்ற புனைவுகளின் வழி உருவாகிற வரலாற்றுச் சித்திரம் வறட்டுத் தரவுகளில் இருந்து விடுதலை செய்து புத்தொளி பாய்ச்சுவது (விடுபடல்களுக்கு எனது மறதியும் அறியாமையுமே காரணம்). ஏற்கனவே அஞ்ஞாடி, சூல் நாவல்களுக்கும், நிலம் பூத்து மலர்ந்த நாளுக்கு மொழிபெயர்ப்புக்காகவும் விருது வழங்கி சாகித்திய அகாடெமி நல்லபிள்ளையாகப் பெயரெடுத்து வருகிறது.

ஒவ்வொரு மனிதப்பிறவிக்குள்ளும் நெறி அறிவுறுத்தும் மனசாட்சி இருப்பதுபோலவே அவனது முன்வரலாற்றைக் கூறும் கதைசாட்சி ஒன்று மௌனமாக உறங்கிக்கொண்டிருக்கிறது. அதிலும் ‘ஹீ கான்ட் ஈட்’ல்ல. வயிறு ட்டூ ஸ்மால்’ல. கான்ஸ்டிபேஷன் வந்துருது’ என்பது போன்ற உரையாடல்களைக் கேட்டு வாழ விதிக்கப்பட்டவர்களுக்கு அது கோமா நிலையில் உள்ளது. சுளுந்தீ போன்ற நாவல் படிக்கும்போது கதைசாட்சியான அந்த தாத்தனோ பாட்டியோ விழித்துக்கொள்கிறார்கள்.

வெளியீடு: ஆதி பதிப்பகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s