வரலாற்றில் பெண்கள்

Posted: மார்ச் 28, 2020 in பார்வைகள், பகிர்வுகள்

பசுமைநடையிலிருந்து ‘வரலாற்றில் பெண்கள்’ என்ற தலைப்பில் மார்ச் 8  சர்வதேசப் பெண்கள் தினத்தன்று சமணமலையடிவாரத்தில் ஒரு சிறப்பு நடை ஏற்பாடு செய்யப்பட்டது. வரலாறு, தொல்லியல் துறையில் சிறந்து விளங்கும் இந்தியாவின் முதல் பெண் கல்வெட்டு அறிஞர் மார்க்சிய காந்தி அவர்கள் அன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். சமணமலையடிவாரத்தில் அதிகாலைப் பொழுதில் எல்லோரும் கூடினர். அங்கிருந்த கருப்பு கோவில் அருகே பெண்கள் எல்லோரும் குழுப்படம் எடுக்க அங்கிருந்து செட்டிப்புடவை நோக்கிச் சென்றோம். பெண்கள் முன் நடக்க ஆண்கள் பின்னால் வந்தனர். அங்கிருந்த பாறையொன்றில் மதுரை வரலாற்றில் ஆளுமைப் பெண்களில் ஒரு பத்து பேரைக் குறித்த சிறிய அறிமுகம் அவர்கள் படத்துடன் வைக்கப்பட்டிருந்தது.

செட்டிப்புடவில் எல்லோரும் அமர வரலாற்று வகுப்பு ஆரம்பமானது. பசுமை நடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பெண்கள் தினத்தைக் குறித்தும், பசுமை நடையில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் விரிவாகப் பேசினார்.

பேராசிரியர் சுந்தர்காளி அதியமான் இறந்தபோது அவ்வை எழுதிய கையறு நிலைப்பாடலோடு தொடங்கினார். சங்க காலத்தில் பெண்கள் கல்வி அறிவு பெற்றிருந்த நிலை, இடைக்காலத்தில் பெண்கல்வி மறுக்கப்பட்டது, தேவரடியார்களுக்கும் கோயில்களுக்குமான உறவு, நவீன காலத்தில் பெண்களின் கல்வி போன்ற விசயங்களை விரிவாகப் பேசினார்.

அன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினரான தொல்லியல் அறிஞர் மார்க்சிய காந்தி அவர்கள் உரையாற்றினார். இவர் சாந்தலிங்கம் அய்யாவிற்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களுள் ஒருவர். சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட காலம், தமிழர்களின் சமயம், அதியமானுக்கும் மலையமானுக்கும் திருக்கோவிலூரில் நடந்த போர் குறித்தும் விரிவாகப் பேசினார். (இவரது உரையை தனிப்பதிவாகப் பார்க்கலாம்)

பசுமை நடையில் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக உள்ள ஜெயராம் பிரசாத் அவர்களின் திருமணம் மார்ச் 6 அன்று நடந்தது. ஜெயராம் பிரசாத் – நிவேதா இணையரின் திருமணம் காதல் திருமணம். பசுமை நடையில் தொடர்ந்து பயணிக்கும் செ.பா.திலீபன் – சு.சுமித்திரா திருமணம் சென்ற மாதத்தில் நடந்தது. இவர்களுடைய திருமணம் சாதிமறுப்பு, சடங்கு மறுப்பு திருமணமாகவும் நடந்தது. இரண்டு தம்பதியர் குறித்த அறிமுகமும், அவர்களுக்கு வாழ்த்தும் இந்நடையில் இருந்தது.

முன்னதாக தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் அவர்கள் பேசும்போது,   “சமணமலைக்கு நாம் பலமுறை வந்திருக்கிறோம். 2013ல் தமிழிக் கல்வெட்டு கண்டறியும் வரை இம்மலை ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்டதாகவே கருதி வந்தோம். ‘பெருதேரூர் குழித்தை அயஅம்’ என்ற தமிழிக் கல்வெட்டில் உள்ள தேரூர் என்பது தேனூராக இருக்கலாம் என்பது எனது கணிப்பு. மலைமீது ‘மாதேவிப் பெரும்பள்ளி’ எனும் சமணக்கட்டுமானக்கோவில் இருந்துள்ளது. அங்குள்ள கல்வெட்டில் இம்மலையின் பெயர் அமிர்தபராக்கிரமநல்லூர், உருவகம் என்று இருப்பதை அறியலாம்.

மாதேவிப்பெரும்பள்ளிக்கு கீழேயுள்ள பேச்சிப்பள்ளத்தில் சமணப்பள்ளியும் நடைபெற்றுள்ளது. அந்தக் காலத்தில் பிறபகுதிகளிலிருந்தும் ஆசிரியர்கள் இப்பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். சரவணபெளகுலாவிலிருந்து வந்து சென்றதற்கு சான்றாகக் கன்னடக் கல்வெட்டு மலைமீதுள்ள தூணிற்கு கீழே உள்ளது. செட்டிப்புடவில் உள்ள சிற்பங்கள் யார் செய்து கொடுத்தனர் என்ற தகவல் அதன் கீழே வட்டெழுத்தில் குறிக்கப்பட்டுள்ளது. செட்டிப்புடவு மற்றும் பேச்சிப்பள்ளம் கல்வெட்டுக்களின் மூலம் இங்கு செயல்பட்டு வந்த பள்ளிக்கு நெடுங்காலம் பொறுப்பு வகித்தவர் குணசேனதேவர் என்பதும் அவரது சீடர்கள் பலர் இப்பள்ளியை நிர்வகித்தும், இச்சிற்பங்களை செய்தும் கொடுத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. மேலும், குறண்டித் திருக்காட்டாம் பள்ளியோடு இப்பள்ளி நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததையும் அறிய முடிகிறது.

நல்ல நெறிகளை கொண்ட சமணம் பெண்களுக்கு சமமதிப்புத் தரவில்லை என்பது வருத்தமான விசயம். 24 தீர்த்தங்கரர்கள் வந்திருக்கிறார்களே. ஒரு தீர்த்தங்கரி கூட அதில் இல்லையே?.

நம்முடைய குலதெய்வங்கள் பெரும்பாலும் தாய்த்தெய்வங்களாகத்தானே உள்ளனர். ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த முதல் செப்புச் சிலை சூலியாகயுள்ள ஒரு பெண்ணுடையது. சூலி என்பது வளமையை குறிக்கும். ஒன்றை பத்தாக்கும் தன்மை பெண்களுக்குண்டு. குடைவரைக்கோயில்களில் முதன்மை தெய்வமாக சிவன், பெருமாள் இருந்தாலும் இரண்டாம் நிலை தெய்வமாக ஜேஷ்டாதேவி, துர்க்கை உள்ளனர். ஜேஷ்டாதேவி மூத்த தேவி. இவளையே நாம் மூதேவி என நாம் சொல்கிறோம். வைணவர்கள் லட்சுமியை முதன்மைபடுத்தி மூதேவி வழிபாட்டை பின்தள்ளிவிட்டார்கள்.

மீனாட்சியம்மன் கோவிலேயே மீனாட்சி என்ற பெயர் பொறித்த பழமையான கல்வெட்டு கிடைக்கவில்லை. ‘அங்கயற்கண் அம்மையுடன் உறையும் ஆலவாய் அண்ணல், ஆலவாய் உடைய நாயனார்’ என்றுதான் தேவார பதிகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தாம் நூற்றாண்டில் சித்திரமேழி பெரிய நாட்டார் என்ற அமைப்பினர் ஆதிக்க சக்திகளுக்கும், அரசுக்கும் எதிராகப் போராடினர். இவர்கள் தங்களை பூமி தேவியின் புத்திரர்கள் என்று அழைத்துக் கொண்டனர். காமக்கோட்டங்கள் என்று பெண்களுக்கான கோவில்கள், தனிச்சன்னதிகள் எல்லாம் சித்திரமேழி அமைப்பினரின் போராட்டத்திற்குப் பிறகு ஏற்படுத்தப்பட்டன. மீனாட்சியம்மனுக்கு குலசேகரப் பாண்டியன் காலத்திலேயே தனிச்சன்னதி கட்டப்பட்டது.” என்றார்.

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அவர்களின் உரையிலிருந்து பெரும் போராட்டத்திற்குப் பிறகே கோவில்களில் பெண் தெய்வங்களுக்கான சன்னதிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் யூகிக்க முடிகிறது. (சித்திரமேழி என்ற சாந்தலிங்கம் அய்யாவின் நூலை வாசிப்பதன் வாயிலாக இன்னும் பல தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம்)

பெண்கள் தின சிறப்பு பசுமை நடையில் தொடர்ந்து பயணித்து வரும் பெண்கள் நாலைந்து பேர் பேசினர். அவர்கள் பேசியதன் சுருக்கத்தைக் காணலாம். பாடப்புத்தகங்களில் சித்தன்னவாசல், அஜந்தா, எல்லோரா என்று போட்டிருந்த சிறிய கருப்பு, வெள்ளை படங்களைப் பார்த்திருக்கிறோம். அதுபோன்ற இடங்கள் நம்ம ஊரிலும் உள்ளது என்பதை பசுமை நடைதான் அழைத்துப் போய் காட்டியது. வரலாறு படித்த போது பாடப்புத்தகங்களில் கல்வெட்டுக்கள், சமணம் குறித்தெல்லாம் பசுமை நடைபோல தெளிவாகச் சொல்லித்தரவில்லை. சமணப்பள்ளிகளுக்கு மட்டுமில்லாமல் பெரிய மடைகளுக்கு, ஆற்றுப்படுகைகளுக்கு அழைத்துச் சென்றது பசுமைநடை. அதிலும், பெரிய தென்னந்தோப்பிற்குள் (கீழடி) அந்தக் கால மதுரையை காட்டியது பசுமை நடை. அதிகாலைப் பயணங்களின் வாயிலாக காலை நேரக்குளிர், கிராமத்து மக்களின் எளிய காலைப் பொழுதுகளை இரசிக்கும் வாய்ப்பை தந்தது பசுமைநடை. பத்து பேர் சேர்ந்து ஒரு திருமணத்திற்கு செய்முறை செய்வதிலே குழப்பங்கள் வரும்போது பத்து வருடங்களாக வரலாற்றுப் பயணத்தை தொடர்ந்து நடத்திக் காட்டுவது பசுமைநடையின் தனிச்சிறப்பு. மலைகளுக்கெல்லாம் தனியாகப் போக அஞ்சிய எங்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வந்தது பசுமைநடை.

ஓவியர் மனோகர் தேவதாஸ் வரைந்த யானை மலை சித்திரம் பொறித்த டீ சர்ட்கள், பசுமை நடை வெளியீடுகளான மதுர வரலாறு, திருவிழாக்களின் தலைநகரம் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. செட்டிப்பொடவின் அருகிலேயே எல்லோருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. மரத்தடிகளில் கூடி அரட்டை அடித்தபடி உணவருந்திக் கொண்டிருந்தனர்.

இந்நடைக்கு ரகுநாத் தனது மகன் சித்தார்த்தனை (1/2 வயது) அழைத்து வந்திருந்தார். சமண மலையிலிருந்து சித்தார்த்தனின் பசுமை நடை பயணமும் தொடங்குகிறது.

ஆண்பால் பெண்பால் அன்பால் என்ற கட்டுரைத் தொகுப்பிலுள்ள அ.முத்துக்கிருஷ்ணனின் கட்டுரை வரிகளோடு முடிக்கிறேன்.

“வாழ்வை ஒரு கொண்டாட்டமாக மாற்ற நிபந்தனையற்ற அன்பும், நம்பிக்கையும், பரஸ்பர சுதந்திரமும் தேவை. இரு செடிகள் மரங்கள் செழித்து வளர ஓர் இடைவெளி தேவை, அந்த இடைவெளியை இருவரும் உணர்ந்து பரஸ்பரம் பரிமாறும் தருணத்தில் வாழ்க்கைக் கொண்டாட்டமாக மாறுகிறது. பகிர்வில்தான் வாழ்வின் மகிழ்ச்சியே சாத்தியமாகிறது. எல்லா வேலைகளையும் பகிரும்போதுதான் குடும்பங்களில் இசை உண்டாகும். உணவைப் பகிர்கிறோம், ஐஸ்கிரீமைப் பகிர்கிறோம், இனிப்பை பகிர்கிறோம், இறைச்சித் துண்டைப் பகிர்கிறோம். ஆனால், அதிகாரத்தைப் பகிரும்போதுதான் உண்மையான பகிர்வு நிகழ்கிறது. இந்தப் பகிர்தல் உணர்வைக் குழந்தைப் பருவம் முதலே ஒவ்வொரு குடும்பமும் உருவாக்க முனைய வேண்டும். கல்விக் கூடங்களின் வழியேதான் மாற்றத்தின் விதைகள் சாத்தியம். குடும்பமும் கல்விக்கூடமும் இணைந்துதான் ஒரு புதிய மனிதனை/ மனுஷியை உருவாக்க வேண்டும்.”

அ. முத்துக்கிருஷ்ணன்

படங்கள் உதவி – பிரசாத், அருண், ரகுநாத், முத்துக்கிருஷ்ணன், சூர்யா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s