சூல் – சோ.தர்மன்

Posted: மார்ச் 29, 2020 in பார்வைகள், பகிர்வுகள்

குமுக்காய்த் தளிர்த்து மஞ்சளாய்ப் பூத்துக் குலுங்கிக் குடையாய் நிற்கும் பெரிய கருவ மரத்தின் அடியில் அவர்கள் வட்டமாய் உட்கார்ந்திருந்தார்கள்.

சோ.தர்மனின் தூர்வை நாவலில் வரும் இந்த வரிகளை வாசிக்கையில் எங்க ஊர் கண்மாயில் பள்ளியில் படிக்கின்ற நாட்களில் நண்பர்களோடு கண்மாயில் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நாட்கள் நினைவிற்கு வந்தது. ‘சூல்’ நாவலை வாசித்ததும் பால்ய காலத்திலிருந்து சமகாலம் வரையிலான நினைவுகள் ஐப்பசி மாத கண்மாய்போல பெருகத் தொடங்கின.

கிராமங்களில் இன்றும் கண்மாய்களும், வயக்காடுகளும் இருக்கின்றன. ஆனால், அந்தக் காலத்தில் இருந்ததுபோல இயற்கையோடான அறிவும், விவசாயப் பணிகளில் கொண்டாட்டமும் இன்று இல்லை. சாதியும், வன்மமும், அதிகாரமும் எல்லாக் காலங்களிலும் இருக்கிறது. ஆனால், அதைக்கடந்து இயற்கை சூழ வாழ்ந்த அந்தக் காலம் எப்படியிருந்திருக்கும் என்ற கேள்விக்கு விடையாய் அமைவதுதான் சூல் நாவல்.

உருளைக்குடி என்ற கிராமத்தைப் பற்றிய கதையை பாப்பாகுடி கிராமத்திலிருந்து சொல்லப்போகிறேன். ஆற்றங்கரைகளில் நகர நாகரீகம் வளர்ந்ததுபோல, கண்மாய்க்கரைகளில் கிராம நாகரீகம் வளர்ந்ததை சொல்கிறது சூல் நாவல். கண்மாயை ஆதாரமாகக் கொண்டு குடிகளின் வாழ்க்கையைப் பேசுகிறது சூல்.

சனங்களின் சாமிகள் எவ்வாறு தோன்றுகிறது என்பதை இந்நாவலின் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். எல்லா ஊர்களிலும் கண்மாய்க்கரைகளில் உள்ள அய்யனாரோடு வேறுபல தெய்வங்களும் இருப்பதைப் பார்த்திருப்போம். அவர்களெல்லாம் ஒருவகையில் ஊரைக்காக்க, நீர்நிலைகளைக் காக்க உயிர்துறந்து தெய்வமானவர்கள் என்பதை நாம் நாவலின் வழியாகப் பார்க்கலாம். கட்டக்கருப்பன் கதையும் இப்படி காவல்தெய்வமான நீர்ப்பாய்ச்சியின் கதைதான். மக்களைக் காக்க உயிர்த்துறந்தவர்களை மட்டும்தான் கும்பிடுவார்களா என்றால் கொலையானவர்களை, அகால மரணம் அடைந்தவர்களையும் வழிபடுவார்கள். அதற்கு உதாரணம்தான் இந்நாவலில் வரும் கள்ளன் சாமி, குரவை சாமியும்.

நானும் நண்பரும் கள்ளந்திரி கிராமத்தில் மீன்பிடித்திருவிழாப் பார்க்க போகும்போது அந்த ஊரில் கண்மாய் இன்னும் அழியவில்லை அடுத்த வாரம் வாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். மறுவாரம் கள்ளந்திரி கண்மாய் அழிந்தபிறகு மீன்பிடித்திருவிழா நடந்த போது மீண்டும் சென்றோம். சுற்றியுள்ள ஊர்களிலிருந்தெல்லாம் மக்கள் மீன்பிடிக்க வந்திருந்தார்கள். விதவிதமான வலைகள், ஊத்தா, மீன்பிடிக்கருவிகள், பானைப்பொறி போன்ற பலவற்றை வைத்திருந்தனர். ஆனால், இன்று பெரும்பாலான கண்மாய்கள் மீன் குத்தகைக்கு விடப்பட்டு சிலேபி கெண்டைகளே ஆக்கிரமித்திருப்பதை நாவல் பதிவு செய்கிறது. சுதந்திரத்திற்கு பிறகான ஆட்சிக்காலத்தில் சிலேபி கெண்டையும், சீமைக்கருவேல மரமும் இறக்குமதியாகி இங்கிருந்த நாட்டுவகைகளை அழித்த வரலாற்றை ‘சூல்’ வாசிக்கையில் அறிந்துகொள்ளலாம்.

ஆரா, உளுவை, கெண்டை, பாம்புக்கெண்டை, கூனக்கெண்டை, பல்க்கெண்டை, வட்டக்கெண்டை, அயிரை, கெளுறு, கொரவை, விலாங்கு, விரால், ஊளி, தேழி இவையெல்லாம் எங்கே?

நாவலில் மறக்க முடியாத கதாபாத்திரங்களுள் ஒருவர் கொப்புளாயி. குழந்தையில்லாததால் தன் தங்கச்சியை கணவனுக்கு கட்டிவைத்து எருமைகளோடு பேசித் திரியும் கொப்புளாயி எங்க ஊரில் கூட எருமைமாட்டை மேய்த்துகொண்டு திட்டிக்கொண்டே செல்லும் ஒருவரை நினைவு ஊட்டினார். இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குச் செல்பவர்கள் ஓரிடத்தில் இளைப்பாற மரங்களும், குடிக்க மோரும் தந்து எல்லோருக்கும் தாயாகிறாள். இதில் முக்கியமான விசயம் என்னவெனில் கொப்புளாயிடம் வளரும் காட்டுப்பூச்சி என்ற பையன் ஒருமுறை நகரத்தில் காசு கொடுத்து சாப்பிட்டதை நம்ப முடியாமல் பலமுறை கேட்பார். கொப்புளாயி போலத்தான் நானும். இன்னும் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்க தயங்குவேன். வெளியூர்களுக்குப் போனாலும் அந்த மனநிலை வருவதில்லை. கல்லுலயும் சோறு, கத்தாளைலயும் சோறு! கழுத்துக்கு கீழ போனா நரகலு! சோறை யாராவது காசுக்கு விப்பாங்களா? என்ற கொப்புளாயின் வார்த்தைதான் மனதிற்குள் ஓடுகிறது.

அன்றைய காலத்தில் பாவங்களுக்கு பரிகாரம் சொன்னவர்கள் நீர்நிலைகளை பாதுகாக்க, மரங்களை நட என நல்ல விசயங்களைச் சொன்னார்கள். இன்று பரிகாரம் செய்கிறேன் என்று நீர்நிலைகளில் உடுத்திய உடைகளைப் போடுவது, பிளாஸ்டிக் பைகளில் மாலைகளைப் போடுவது என பாழ்படுத்தும் பரிகாரம்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். அந்தக் காலங்களில் பெரிய பாவங்களை செய்தவர்களுக்கு பரிகாரமாக மரங்கள் நடுவதையும், நீர்நிலைகளை உருவாக்குவதையுமே பரிகாரமாகச் சொன்னார்கள். அதனால்தானோ என்னவோ அக்கால அரசர்கள் இதையெல்லாம் அதிகமாகச் செய்தார்களா என கொப்புளாயி ஓரிடத்தில் கேட்பார். ஆனால், சமகால அரசுகள் சாலையோரங்களில் மரங்களை வெட்டி நாலுவழிச்சாலைகள் அமைப்பதும், நீர்நிலைகளை மூடி அரசு அலுவலங்களை உருவாக்குவதுமாக இருக்கிறார்கள். நாமும் வேகமாக பயணிக்க, மக்கள் தொகை பெருக்கமென இந்தப் பாவத்தில் பங்கு போட்டுக் கொள்கிறோம்.

வரலாற்று நாயகரான வீரபாண்டிய கட்டபொம்மன் வரும் இந்நாவலில் வரும் காட்சியை மிக அருமையாக பதிவு செய்திருக்கிறார். உருளைக்குடி எட்டப்ப மகாராசா ஆட்சிக்கு கீழுள்ள கிராமம். இந்த ஊர் வழியாக வரும்போது அவருக்கு உதவும் எலியனுக்கும், பிச்சை ஆசாரிக்கும் பின்னாளில் பரிசை கொடுத்தனுப்பவது பெரிய மனிதர்களின் கொடை உள்ளத்தை காட்டுகிறது. அந்த நகைகளின் பட்டியல் நம்மை வியக்க வைக்கிறது.

 “நெத்திச்சூடி 1, சந்திர பிறை -1, சூரிய பிறை – 1, ராக்கடி -1, தோடு 1 ஜோடி, ஜடைமாட்டி 1, டோலக் – 1 ஜோடி, ஜிமிக்கி 1 ஜோடி, தலைமாட்டி 1, பாம்படம் 1 ஜோடி, தண்டட்டி 1, பூடி 1, குருட்டுத்தட்டு 1 ஜோடி, புல்லாக்கு – 1 ஜோடி, கரடு 1, அட்டியல் 1, சங்கிலி 1, காசுமாலை 1, வங்கி 1, வளையல் 1 ஜோடி, கங்கணம் 1, ஒட்டியாணம் 1, ஓலை 1 ஜோடி ஆகமொத்தம் இருபந்து ஐந்து” இதை வைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் அனுபவிக்க முடியாமல் போவது காலத்தின் விளையாட்டு.

சூல் நாவலில் சுதந்திரத்திற்குப் பிறகான கதையில் ஊராட்சிமன்ற தலைவரான சின்னா நீர்பாய்ச்சியிடம் மடை நீரை மாற்றி தான் புதிதாக வாங்கிய நிலத்திற்கு பாய்ச்சச் சொல்லும்போது அவர் முடியாது என்று மறுத்துவிடுகிறார். இதுபோன்ற ஒரு விசயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாண்டியர் ஆட்சி காலத்தில் நடந்துள்ளது. குருவித்துறை அருகே புதிதாக வயல் வாங்கியவர் மடை நீரை தனக்கு முதலில் பாய்ச்ச சொல்ல ‘கால் மேல் கால் கல்லலாகாது’ என பாண்டியன் வழங்கிய ஆணை குறித்த கல்வெட்டு ஒன்றுள்ளது. அதேபோல வைகை குருவிக்காரன்சாலை பாலமருகில் கிடைத்த கல்வெட்டில் பாண்டியன் அரிகேசரி காலத்தில் வைகை நீரை கொந்தகை, திருப்புவனம் வழியாக நரிக்குடி வரை கொண்டு சென்றதைக் குறித்த கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. இதுபோன்ற வரலாற்றுத் தகவல்கள் தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு சான்றாக உள்ளதை நாம் காணலாம். மேலும், விக்கிரமங்கலம் நடுமுதலைக்குளம் அருகே உள்ள உண்டாங்கல் மலையில் காணப்படும் தமிழிக் கல்வெட்டில் வேம்பத்தூர் பேராயம் செய்தவர்’ என்ற வரி காணப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர்நிலைகளை வெட்டுவித்ததை குறித்த முக்கியமான கல்வெட்டு.

இம்மாதம் (பிப்ரவரி 2020) பசுமைநடையில் நிலையூர் கூத்தியார் குண்டு பெரிய கண்மாயில் பாண்டியன் வீரநாராயணன் பெயர் பொறித்த மடை கல்வெட்டை வரலாற்று ஆர்வலர்களை அழைத்து காண்பிக்கையில் அங்கு சூல் நாவல் குறித்து பசுமை நடை பயணிகளிடம் சொல்லும் வாய்ப்பு கிட்டியது. கண்மாய் கரைகளைக் காக்க சங்கஞ்செடிகளை பாதுகாப்பது, பனைகளை வளர்ப்பது, குமிழிமடை வழியாக பாசனம், தூக்கணாங்குருவி கூடு இருக்கும் திசைக்கு எதிர்திசையில் மழைவருவது, கண்மாய் பெருகும் அளவை முன்கூட்டியே கணித்து கூடு கட்டும் பறவைகள் குறித்து பேசியபோது அனைவரும் இந்நாவல் குறித்து விசாரித்தனர்.

எங்க ஊரில் நீரோடை ஆர்வலர் குழு என்று ஆறேழு பேர் சேர்ந்து சில செயல்பாடுகளை செய்து வருகிறோம். அதன் முதல்பகுதியாக எங்க ஊர் ஊராட்சி பள்ளியில் எங்க கண்மாய் என்ற தலைப்பில் போட்டி நடத்தினோம். அதில் கண்மாய் சார்ந்த கேள்விகளைக் கொடுத்து அதன் விடைகளை பெற்றோம். பள்ளியில் எல்லா மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கினோம். அதற்கடுத்து எங்க ஊர் அருகிலுள்ள ‘பொதும்பில் வாழ்ந்த சங்கப்புலவர்கள்’ குறித்த சிறுநூல் ஒன்றை அச்சிட்டு அங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினோம். இதை சொல்வதற்கான காரணம் என்றவென்றால் இதுபோன்ற செயல்களைச் செய்வதற்கு எங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது சூல் போன்ற நல்ல நூல்கள்தான்.

சூல் நாவலில் சுதந்திரத்திற்குப் பிறகான இறுதிப்பகுதி விரைவாக முடிந்துவிடுகிறது. இன்றைய காலகட்டம் வரை கதை நீண்டு கூட நூறு பக்கங்கள் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கண்மாயை மையமாகக் கொண்டு அற்புதமான நாவலை எழுதி கரிசல் காட்டில் நம்மையும் உலவ வைத்த சோ.தர்மன் அவர்களுக்கு நன்றி. நல்லதொரு நாவலுக்கு சாகித்த அகாடமி விருது வழங்கியமைக்கு நன்றி. இன்றைய அரசு குடிமராமத்து போன்ற பணிகளைச் செய்ய முன்வந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. அதைப்போலவே அக்கால மன்னர்களைப் போல சாலையோர மரங்களை நடுவதும், ஊருக்குஊர் இருக்கும் நீர்நிலைகளைப் பராமரித்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

வாசக சாலை அமைப்பு நடத்திய சூல் நாவல் குறித்த நிகழ்வில் வாசக பார்வையில் பேசுவதற்காக எழுதிய கட்டுரை. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சூல் நாவல் குறித்து பேசியதும், சோ.தர்மன் அய்யாவோடு நாவல் குறித்தும், அவரது எழுத்துக்கள் குறித்தும் கொஞ்ச நேரம் உரையாட வாய்ப்பு கிட்டியதும் மகிழ்ச்சி. வாசக சாலைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இந்நாவலை வாசிக்கக் கொடுத்த சகோதரர்க்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s