வரலாற்றில் பெண்கள்: பேரா.சுந்தர்காளி உரை

Posted: ஏப்ரல் 12, 2020 in பார்வைகள், பகிர்வுகள்

பசுமை நடையில் பேராசிரியர் சுந்தர் காளியின் உரைக்கு இரசிகர்கள் அதிகம். மொழி, வரலாறு குறித்த அவரது உரைகள் கேட்பவரை ஈர்க்கும் தன்மை கொண்டவை. ‘வரலாற்றில் பெண்கள்’ என்ற நிகழ்வில் சங்க காலத்திலிருந்து சமகாலம் வரையிலான பெண்கள் கல்வி நிலை குறித்து பேசினார்.

அதன் சாரம் வருமாறு:

தமிழ்நாட்டில் 2300 – 2500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வியின் தொடக்கத்தோடு கூடவே பெண்கள் பலர் கற்றறிந்தவர்களாக மட்டுமல்லாமல் பாடல் இயற்றும் புலமை பெற்றவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவ்வை உட்பட நாற்பது பெண்பாற் புலவர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகின்றனர். நக்கண்ணை, நச்செள்ளை, வெண்ணிக்குயத்தி போன்ற பல பெண் கவிஞர்கள் இருந்தனர். வெண்ணி குயவர் குலத்தை சேர்ந்தவர். பல்வேறு தொழில் செய்யும் சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கல்விபெற்றிருந்ததைக் காட்டும் சான்றுகள் உள்ளன.

சங்க காலத்துக்குப் பிறகு கல்வியறிவு பெண்களுக்கு மறுக்கப்பட்ட சூழலில் வெகு அபூர்வமாகவே பெண்கவிஞர்களைக் காண்கிறோம். அவ்வை என்ற பெயரிலேயே, சித்தர்கள் காலத்தில் ஞானக்குறள் எழுதிய ஔவையார் ஒருவர்; ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்ற நீதிநூல்கள் எழுதிய இன்னொரு அவ்வை. [இப்பக்கூட ஒரு ஔவை இருக்காங்க. ஈழத்துக் கவிஞர் மஹாகவியுடைய மகள் கவிஞர் ஔவை. மகாகவி பிள்ளைகளுக்கு சேரன், சோழன், பாண்டியன் என பெயர் வைத்தார். அவருடைய மகளுக்கு ஔவை என்ற பெயர் வைத்தார்]. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார், பின்னர் ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் போன்ற வெகு சிலரையே காண்கிறோம்.

அதன் பிறகு வெகுகாலம் கழித்து தேவதாசி மரபிலே வந்த அம்மைச்சி என்ற காளிமுத்து. இவர் பிரபந்தங்கள் பாடுவதில் வல்லவர். இவர் ‘வருணகுல ஆதித்தன் மடல்’ என்ற அற்புதமான காதல் சுவை சொட்டும் பாடல்களை எழுதியிருக்கிறார். தஞ்சாவூரில் வாழ்ந்து வந்த முத்துப்பழனி என்ற தேவதாசி தெலுங்கில் ‘ராதிகா சாந்தவனமு’ என்ற நூலை எழுதியுள்ளார்.

பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றி தத்துவராயர், தாண்டவராயர் எனத் தொடரும் தமிழ் வேதாந்த மரபில் வந்தவர் செங்கோட்டை ஆவுடையக்காள். இவர் பாரதிக்கு பலவிதங்களிலும் முன்னோடி. ஆனால், அவரது நேரடியான பாதிப்பிருந்தும், பக்கத்து ஊரினராய் இருந்தும் பாரதி செங்கோட்டை ஆவுடையக்காளைப் பற்றி ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை. செங்கோட்டை ஆவுடையக்காவின் பாடல்கள் தற்போது மறுபதிப்பு கண்டுள்ளன. இன்றளவும் பிராமண வீடுகளில் வைபவங்களின்போது ஆவுடையக்காளின் அழகிய பாடல்களைப் பாடும் மரபு இருந்து வருகிறது.

இவ்வாறு சங்க காலத்துக்குப் பிந்தைய காலமானது பெண்கல்வி மறுக்கப்பட்ட காலமாகவே இருந்துள்ளது. பிராமணப் பெண்களுக்கும்கூட கல்வி மறுக்கப்பட்டே உள்ளது. புலமை பெற்றவர்களை அரிதாகவே காண்கிறோம்.

சங்க காலப் பெண் சமூகத்தில் புலவர்களோடு கூடவே நிகழ்த்து கலைஞர்கள், பரத்தையர், குடும்பப் பெண்கள் போன்ற வகைப்பாடுகளைக் காண்கிறோம். பாடும் திறமைபெற்ற பாடினியர், பாடுவதோடு கூடவே ஆடவும் திறமை பெற்ற விறலியர்கள் போன்ற நிகழ்த்து கலைஞர்கள் இருந்தனர். திருமண உறவுக்கு வெளியே, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமூக அமைப்பாக பரத்தையர் என்ற பொதுமகளிர் இருந்திருக்கின்றனர். அவர்களுக்குள்ளே இற்பரத்தை, சேரிப்பரத்தை, காமக்கிழத்தி என்ற வகைப்பாடுகள் உண்டு. மற்றபடி காதல் வாழ்வாகிய களவு குடும்ப வாழ்வாகிய கற்பில் சென்று முடிவது பொதுவான ஒழுக்கநெறியாக இருந்துள்ளது.

சங்க காலத்திற்குப் பிறகு, களப்பிரர் காலம் முடிந்து பல்லவர்காலத்தில் பரத்தையர்கள், விறலியர்கள், பாடினியர்கள் ‘கோயில்’ என்ற நிறுவனத்துக்குள் இழுக்கப்பட்டார்கள். ஐந்தாம் நூற்றாண்டுக்கும் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பக்தி இயக்க காலத்தில் ஊர்கள்தோறும் கோயில்கள் கட்டப்பட்டன. கோயில் என்ற நிறுவனம் கலைகளை வளர்த்தல், பொருளாதாரக் கருவூலமாகத் திகழ்தல் எனப் பல்வேறு செயல்களைச் செய்தது. கலைகளோடு கோயில்கள் கொண்ட தொடர்பால் பரத்தையரும், நிகழ்த்து கலைஞர்களும் கோயில்களுக்குள் இழுக்கப்பட்டனர்.

கோவிலில் பணியாற்ற நிறையப் பெண்கள் தேவைப்பட்டனர். நாம் சாதாரணமாக கூட்டிச் சுத்தப்படுத்துதல், கழுவித் துடைத்தல் என்று சொல்வதை கோவில் கல்வெட்டுக்களிலே திருஅலகிடல், திருமெழுகிடல் என்று குறிப்பார்கள். இவ்வாறான பணிகளைச் செய்பவர்களுக்குத் தேவரடியார், பதியிலார் என்று பெயர். தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் ராஜராஜன் காலத்தில் 400 தேவரடியார்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டதையும் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. பரத்தையர், பாடினியர், விறலியர் போக படையெடுத்துச் சென்ற அரசர்கள் தோற்றுப்போன நாடுகளில் இருந்து பொன், பொருளோடு பெண்களையும் கவர்ந்து வந்து கோயில் பணியில் அமர்த்தினர். இவ்வாறு கொண்டுவரப்பட்ட மகளிருக்கு கொண்டி மகளிர் என்றே பெயர்.

இவை போக கோயிலுக்கு நேர்ந்துவிடுதல் என்ற வழக்கமும் ஏற்பட்டது. சோழர்கள் காலத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரையும் தேவரடியாராக நேர்ந்துவிட்டிருப்பதைக் குறித்துள்ளார்கள். எப்படிக் கத்தோலிக்க சமயத்தில் குடும்பத்தில் ஒருவரை சாமியாராகவோ, கன்னியாஸ்திரியாகவோ நேர்ந்துவிடும் வழக்கம் உள்ளதோ அதுபோன்ற ஒரு வழக்கம் இங்கும் இருந்துள்ளது. சிவன் கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட பெண்கள் திருமணம் செய்ய முடியாது. பொட்டுக்கட்டுதல் என்று சடங்கின் வாயிலாக அவர்கள் கடவுளையே மணந்தவர்களாகிறார்கள். பத்திற்கும் மேற்பட்ட சாதிகளிலிருந்து கோவிலுக்கு நேர்ந்துவிடும் வழக்கம் 18ஆம் நூற்றாண்டு இறுதிப்பகுதிவரை இருந்தது.

குறிப்பிடத்தக்கது என்னவென்றால் பெண்கல்வி மறுக்கப்பட்ட சூழலிலும் தேவரடியார்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், பொருளாதாரத்தில் நல்ல வசதிபெற்றவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அரசர்கள், அரசு சார்ந்த அதிகாரிகளுக்கு அடுத்து அதிக தானம் செய்தவர்களாக தேவரடியார்கள் குறிப்பிடப்படுகிறார்கள். அதனால் சமூகத்தில் மதிக்கப்பட்ட பிரிவினராகவே இருந்திருக்கிறார்கள். அத்தகைய தேவதாசி மரபில் வந்தவர்கள்தான் முத்துப்பழனியும், காளிமுத்து அம்மைச்சியும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கோவில்களுக்கான மானியம் அப்போதிருந்த பிரிட்டிஷ் காலனிய அரசால் கைப்பற்றப்பட்டதால் தேவதாசிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர்களில் பலர் வெறுமனே பொதுமகளிராக மாறிப்போனார்கள். அப்போதிருந்த நடுத்தர வர்க்கத்தின் விக்டோரியன் ஒழுக்க மனநிலைக்கு இது எதிராக இருந்ததால் தேவதாசி முறைக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ல் தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இடைக்காலத்தில் கல்வி மறுக்கப்பட்ட பெண்களுக்கு இருபதாம் நூற்றாண்டில் காலனிய ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட பொதுக்கல்வித் திட்டம் ஒரு வாசல் திறந்தது. தொடக்கத்தில் பிராமணப் பெண்கள், தேவதாசிப் பெண்கள், ஆங்கிலோ இந்தியப் பெண்கள்தான் கல்வி கற்க முன்வந்தனர். முதன்முதலில் மருத்துவராகப் பட்டம் பெற்ற முத்துலெட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு முறைக்காக பாடுபட்டார். நவீனத்துவம் வேரூன்றியபிறகு இன்று ஆண்களைப் பின்னுக்குத் தள்ளி ஒவ்வொரு துறையிலும் முன்னுக்கு வந்துள்ளனர்.

முன்னதாக பேரா. சுந்தர்காளி உரையைத் தொடங்கும்போதே அவ்வையின் புறநானூற்றுப் பாடலோடு கணீரென்று தொடங்கியிருந்தார். அவ்வை அதியமான் நட்பைப் பற்றி அவர் பேசியது உரையின் வெகுசுவையான பகுதி. அதிலும் அவரது குரலில் சங்கக் கவிதைகளைச் சொல்லி அதன் உரையை கேட்பது சுகமான அனுபவம்.

சிறியகட் பெறினே, எமக்குஈயும்; மன்னே
பெரியகட் பெறினே,
யாம்பாட,தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன்;மன்னே!
பெருஞ்சோற் றானும் நனி பல கலத்தன்;மன்னே!
என்பொடு தடிபடு வழிஎல்லாம் எமக்குஈயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழிஎல்லாம்தான் நிற்கும்; மன்னே!
நரந்தம் நாறும் தன்கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்; மன்னே!
அருந்தலை இரும்-பாணர் அகல்மண்டைத் துளைஉரீஇ
இரப்போர் கையுளும் போகி,
புரப்போர் புன்கண் பாவை சோர,
அம்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று, அவன்
அருநிறத்து இயங்கிய வேலே!
ஆசுஆகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே!

அவ்வையினுடைய இந்தப் பாடல் கையறு நிலைப் பாடல். கையறு நிலைப்பாடலென்றால் நெருக்கமான ஒருவர் இறந்தபொழுது வருந்திப்பாடுவது. அவ்வையின் நெருங்கிய நண்பன் அதியமான் நெடுமான் அஞ்சி இறந்த பொழுது எழுதிய பாடல். சங்க இலக்கியத்தில் அதியமான் வம்சத்து அரசர்கள் பெயர்கள் பல வந்தாலும் மிகவும் புகழ்பெற்றவன் அதியமான் நெடுமான் அஞ்சி.

அசோகருடைய ஆனைக்குகை (ஹாத்திகும்பா) கல்வெட்டு மூலம் தமிழ்ப் பண்பாட்டின் வீச்சு 2300 ஆண்டுகளுக்கு முன்பே மௌரியப் பேரரசு வரை பரவியிருந்ததை அறியலாம். தமிழகத்தின் பெரும்பகுதியை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களுடைய பெயர்கள் மௌரியப் பேரரசு வரை பெயர் புகழ்பெற்றிருந்தது. அதில் ஆச்சரியம் இல்லை. அந்த பிராமிக் கல்வெட்டில் மூவேந்தர்களுடன் சேர்ந்து ‘ஸதியபுதோ’ என்ற பெயரும் இருந்தது. நெடுநாளாக சதியபுதோ என்ற பெயர் யாரைக் குறிக்கிறது என்ற ஆய்வு அறிஞர் பெருமக்களிடத்தில் இருந்தது. பலவித ஊகங்கள் சொல்லப்பட்டுவந்தன.

பின்புதான் வடதமிழ்நாட்டிலுள்ள ஜம்பை என்ற ஊரில் ஒரு தமிழிக் கல்வெட்டு கிடைத்தது. அதில் ‘ஸதியபுதோ அதியன் நெடுமான் அஞ்சி ஈத்த பாளிய்’ என்றுள்ளது. இது ஸதியபுதோ யாரைக் குறிக்கிறது என்பதை நமக்கு தெளிவாக காட்டுகிறது. அதிய என்பதுதான் பிராகிருதத்தில் சதிய என்றாகிறது. மான் – மகன் என்பது சமஸ்கிருதத்தில் புத்ர என்றும் பிராகிருதத்தில் புதோ என்றும் வழங்குகிறது. இவ்வாறு பிராகிருதச் சொல்லும் தமிழ்ச்சொல்லும் அடுத்தடுத்து வந்ததால் நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம் தீர்ந்தது.

சங்ககால அவ்வை ஒரு பாணர் குலத்துப் பெண். ஜெமினி பிக்சர்ஸ் எடுத்த திரைப்படத்தில் வருவது போல வயதான பாட்டி அல்ல. அவரது பாடல்களை வைத்துப் பார்க்கும்போது நடுத்தர வயதுப் பாடினியாகத்தான் தெரிகிறது. அவ்வை அதியமானின் நினைவேந்திப் பாடும் பாடலுக்கு பொருளைக் காணலாம்.

குறைவாகக் கள் கிடைக்குமானால் அதனை எங்களுக்குத் தருவான். அதுவே மிகுதியாகக் கள் கிடைத்தால் எனக்கும் கொடுத்து எஞ்சியதைத் தானும் குடித்து எனது பாடலை மகிழ்ந்து கேட்பான். கொஞ்சம் சோறு கிடைத்தாலும் நிறைய பாத்திரங்களில் போட்டு பலரோடும் பகிர்ந்துதான் சாப்பிடுவான். நிறையச் சோறு இருந்தாலும், அவ்வாறுதான் செய்வான். தடி என்பது கறி. ஊன்சோற்றில் நல்ல எலும்போடு உள்ள கறி முழுவதையும் எங்களுக்குக் கொடுத்துவிடுவான். அதே நேரத்தில் எங்கெல்லாம் அம்பு வருகிறதோ, வேல் வருகிறதோ அங்கெல்லாம் தானே முன் சென்று நிற்பான்.

இவ்வாறு செல்லும் அந்தப் பாடலில் சில இடங்கள் முக்கியமானவை. குறிப்பாக கள் மயக்கத்தில் அதியமான் என்னவெல்லாம் செய்வான் என்பது பற்றிச் சொல்லியிருக்கிறார். கொஞ்சம் கள் கூடிப்போய்விட்டால் நரந்தம் நாறும் தன் கையால் என் தலையைத் தடவிக்கொடுப்பான் என்று பாடுகிறார். அலைந்து திரியும் புலவர் வாழ்வில் அவ்வையின் தலை சிக்குப் பிடித்த புலால் நாற்றமுடையது. அதியமானது கை நரந்தம் பூவின் மணம் கமழ்வது. தன் கையால் புலால் நாற்றம் வீசும் அவ்வையினுடைய தலையைத் தடவுவான். [நரந்தம் புல்லை மலைகளில் நாம் பார்த்திருக்கிறோம். கொடைக்கானலில் நரந்தம் புல் எண்ணெய் விற்பனைக்கு கிடைக்கிறது.]

கடைசியில் முடிக்கும்போது வருத்தம் மேலிட்டு ‘இனிப் பாடுவோரும் இல்லை, பாடுபவர்க்கு ஒன்றை ஈகுநரும் இல்லை’ என்கிறார். இவனோடு முடிந்துவிட்டது எல்லாம். நல்ல குளிர்ச்சியான நீரில் குளத்தோரம் மலர்ந்துகிடக்கும் பெரிய பகன்றைப் பூ யாராலும் சூடப்படாமல் வீணாகப் போவதைப் போல் பிறர்க்கு ஒரு பொருளைக் கொடுக்காமல் வீணில் இறந்து போகின்ற ஆட்கள் இவ்வுலகத்தில் மிகப் பலர். அதியமானைப் போன்று அள்ளி அள்ளிக் கொடுப்பவர்கள் லட்சத்தில் ஒருவராக, கோடியில் ஒருவராகத்தான் இருக்கிறார்கள் என்று அவ்வை முடிக்கிறார்.

மகளிர் தினத்திற்கு பெண்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களுக்கு கை கொடுக்கக்கூடிய ஆண்களுக்கும் வாழ்த்துகள் என்று சொல்லி சுந்தர்காளி உரையை முடித்தார்.

படங்கள் – முத்துக்கிருஷ்ணன் (ஆசிரியர்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s