ஆதலினால் நன்றி சொல்வோம்!

Posted: ஏப்ரல் 13, 2020 in பார்வைகள், பகிர்வுகள்

“ஒவ்வொரு நாளும் நம் வாழ்வோடு நூற்றுக்கணக்கானவர்களின் வாழ்வு பின்னப்பட்டிருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், ஒரு மனிதருக்குக் கூட நன்றி சொல்வதில்லை” 

  – எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணனின் ஆதலினால் கட்டுரைத் தொகுப்பை வாசித்ததும் நம் வாழ்வில் எத்தனை பேர் நமக்காக உழைக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் நாம் நன்றி சொல்லவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. சாதி, மதம், மொழி, தேசம் கடந்து நம்மை நல்ல மனிதனாக உணரச் செய்ய உதவும் ஒற்றைச் சொல் நன்றி.

எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய நூல்களிலும், தன்னுடைய உரையிலும் தோழர்.எஸ்.ஏ.பெருமாளுக்கும், கவிஞர் தேவதச்சனுக்கும் நன்றி சொல்வதைக் காணலாம். எவ்வளவு விருதுகள் பெற்றாலும் தனது ஆசான்களை மறக்காத பண்பை நாம் எஸ்.ராமகிருஷ்ணனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பை வாசித்ததும் எனக்கும் என்னை முதன்முதலில் பச்சிளங்குழவியாகப் பார்த்த பெண் மருத்துவரின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அந்தக் கட்டுரையை வாசித்த வாரத்தில் பசுமைநடை நண்பர் ரகுநாத்தின் மனைவி துர்காவிற்கு வளைகாப்பு விழா திருமங்கலத்தில் நடந்தது. அந்த மண்டபத்திலிருந்த பழைய போட்டோ ஒன்று என்னை திகைப்பில் ஆழ்த்திவிட்டது. அந்த நிழற்படத்தில் இந்திராணி – பாஸ்கர் தம்பதியர் இருந்தனர். என் தாய்க்கு மருத்துவம் பார்த்த இந்திராணி அம்மாவும், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் பாஸ்கர் அவர்களையும் பார்த்ததும் பெருமகிழ்ச்சி. அதன்பிறகு நண்பர் ரகுநாத்திற்கு குழந்தை பிறந்த சமயத்தில் ஒருமுறை அவரைக் காணச் சென்றபோது உடல்தளர்ந்து வயதான இந்திராணி பாஸ்கர் தம்பதியைப் பார்க்க முடிந்தது. மனம் முழுக்க நன்றியோடு கிளம்பினேன். ரகுநாத்திற்கு நன்றி.

Jpeg

எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பை வாசித்து ஒவ்வொரு கட்டுரையிலும் நன்றி சொல்ல வேண்டிய விசயங்களை மட்டும் தொகுத்துள்ளேன். ஒவ்வொரு கட்டுரை குறித்தும் எழுதத் தொடங்கினால் நம்முடைய நினைவுகள் நீளும். இந்நூலை வாசித்ததும் நாம் நன்றி சொல்ல வேண்டிய நபர்களைப் பட்டியலிட்டால் ஒரு நோட்டுப் புத்தகம் பத்தாது என்பதை அப்போதுதான் உணர முடியும். தினசரி நேரம் கிட்டும் போதெல்லாம் நமக்கு உதவியர்களுக்கு மனமார நன்றி சொல்வோம்.

 • நம்மைச் சுற்றியுள்ள எறும்பு முதலான அனைத்து உயிர்களுக்கும் நன்றி!
 • நம்மை இவ்வுலகில் பார்த்த முதல் பெண் மருத்துவர்க்கும், செவிலியர்களுக்கும், மருத்துவமனைக்கும் நன்றி!
 • நமக்கான உணவை செய்து தரும் சமையல் கலைஞர்களுக்கு நன்றி!
 • நமக்காக இரவெல்லாம் விழித்து காவல்காக்கும் கூர்காக்களுக்கும், காவலர்களுக்கும் நன்றி!
 • அழகழகான சிற்பங்களை செய்து தம் பெயரைக்கூட பொறித்துக் கொள்ள விரும்பாத அந்தச் சிற்பிகளுக்கு நன்றி!
 • எண்ணும், எழுத்தும் கற்றுத் தந்த ஆசிரியர்களுக்கு நன்றி! ஆசிரியர்களைப் போற்றும் மாணவர்களுக்கு நன்றி!
 • நன் கண்முன்னே நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்கும் சமூக ஆர்வலர்களுக்கு நன்றி!
 • பல்வேறு சிக்கல்களுக்கிடையே போராடும் மாற்றுத்திறனாளிகளின் தன்னம்பிக்கைக்கு நன்றி!
 • சுடுகாட்டில் கல்லறைகளைப் பாதுகாக்கும் மனிதர்களுக்கு நன்றி!
 • குழந்தைகளின் திறமைகளை அடையாளம் கண்டு அதை வெளிக்கொணரும் நல்ல பெற்றோர்க்கு நன்றி!
 • புத்தகங்களை வாசிக்க நூலகம் அமைத்து உதவும் மனிதர்களுக்கு நன்றி!
 • தமக்குத் தெரிந்த விவசாயப் பணிகளை மக்கள் சேவையாக செய்யும் எளிய மனிதர்களுக்கு நன்றி!
 • பறவைகளுக்கும், அணில்களுக்கும் சோறும் நீரும் வைக்கும் அனைவருக்கும் நன்றி!
 • நிழற்படங்களை எடுத்து நினைவுகளை காலப்பெட்டகமாக மாற்றித் தரும் புகைப்படக்கலைஞர்களுக்கு நன்றி!
 • திரைப்படங்களுக்குப் பின்னால் உழைக்கும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி!
 • குழந்தைகளின் பால்யத்தை மீட்கும் மனங்களுக்கு நன்றி!
 • தன் மனைவியின் விளையாட்டு ஆர்வம் அறிந்து அதை ஊக்குவிக்கும் நல்ல கணவன்மார்களுக்கு நன்றி!
 • குடிப்பவர்களை வைத்து காக்கும் குடும்ப உறுப்பினர்களின் அன்பிற்கு நன்றி!
 • பசிக்கு உணவளிக்கும் கரங்களுக்கு நன்றி! யாசகம் கேட்கும்முன் வழங்கும் மனிதர்களுக்கு நன்றி!
 • ஊரெல்லாம் பயணிக்க சாலையமைக்கும் சாலைப்பணியாளர்களுக்கு நன்றி!
 • பெயர்தெரியாத மரங்களையும், பறவைகளையும் அடையாளம் கண்டு மற்றவர்களிடம் சேர்க்கும் மனிதர்களுக்கு நன்றி!
 • பிறமாநிலங்களில் பிழைக்கப் போகிறவர்களைக் காக்கும் மண்ணின் மைந்தர்களுக்கு நன்றி!

இயற்கைப் பேரிடர் காலங்களில் நம் சமூகம் மக்களுக்கு உதவுபவர்களை கொண்டாடிவிட்டு உடனே மறந்தும்விடுகிறது. தினசரி அதிகாலையில் நாம் குடிக்கும் தேநீரிலிருந்து அன்றாடப்பாடுகளினூடாக நமக்கு உதவும் லட்சக்கணக்கான மனிதர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். தினசரி உணவு உண்பதற்கு முன்னால் நமக்காக எத்தனை பேர் உழைக்கிறார்கள். அதை எண்ணி அவர்களுக்கு அக்கணத்தில் நன்றி சொல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். நமக்கு உதவுபவர்களுக்கு நாம் நன்றி சொல்லும் போது சாதி, மதம், இனம் கடந்து நாம் வாழ இந்த முழுபிரபஞ்சமும் நமக்கு நெருக்கமாகிவிடுவதை உணரலாம். நன்றி என்ற சொல் ஒரு மந்திரம் போல நம்மை நிகழ்காலத்தில் வாழ வைக்கிறது.

நன்றி: பரிசல் கிருஷ்ணா

டிஸ்கவரி புக் பேலஸ் இந்த நூலை வெளியிட்டிருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

நன்றி: விகடன் தடம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s