மூலவளங்களை நாம் காக்க வேண்டும் – தொ.பரமசிவன்

Posted: ஏப்ரல் 14, 2020 in பார்வைகள், பகிர்வுகள்

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தொ. பரமசிவன் அளித்த காணொளி உரையின் எழுத்து வடிவம்:

நம் முன்னால் இருக்கக்கூடிய சிக்கலாக நான் எதைப் பார்க்கிறேனென்றால் வளங்களைத் தரும் மூலவளங்களை உடைய இயற்கையைக் கடந்த 40, 50 ஆண்டுகளில் நாம் கடுமையாக நாசப்படுத்தி வைத்திருப்பதைத்தான்.

நம்முடைய முன்னோர்கள் நமக்குப் பல நல்ல விசயங்களை (கெட்ட விசயங்களையும்தான்) விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். திருக்குறள், தஞ்சாவூர் கோயில் போன்றவற்றை விட்டுவிட்டு போயிருக்கிறார்கள். அதுபோல சுத்தமான காற்றையும், சுத்தமான தண்ணீரையும் விட்டுவிட்டு போயிருக்கிறார்கள். இதிலெல்லாம் நம்முடைய முன்னோர்கள் கவனம் செலுத்தியிருக்கிறார்களா என்று கூட உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். சங்கரன் கோயில் பக்கத்திலே பனையூர் என்று ஒரு ஊர் உள்ளது. அந்த ஊரிலுள்ள கோயில் கல்வெட்டைப் பார்த்தால் அந்த ஊரினுடைய சாமிக்குப் பெயர் ‘நன்னீர்த் துறையுடைய நாயனார்’ என்று எழுதியிருக்கிறார்கள். தண்ணீரைப் பாதுகாப்பதிலும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் அவர்கள் கவனம் செலுத்தியிருப்பதை நாம் அறியமுடிகிறது. இன்றைக்கும் தமிழ்நாட்டிலுள்ள பல ஊர்களிலே மனிதர் உண்ணுகின்ற நீர்நிலையை தனியாகவும், கால்நடைகளைக் குளிப்பாட்டுகின்ற நீர்நிலையைத் தனியாகவும் வைத்திருக்கிறார்கள். குளம் என்பது குளிப்பதற்கு உரிய இடம், ஊருணி என்பது உண்ணும் நீர் இருப்பதற்குரிய இடம். இதிலெல்லாம் நம் முன்னோர்கள் கவனம் செலுத்தியே இருக்கிறார்கள்.

குறிப்பாக இந்த 50 ஆண்டுகளில் அதாவது விடுதலைக்குப் பிந்திய காலத்தில்தான் நாம் நமது மூலவளங்களை நிறைய தொலைத்திருக்கிறோம். நெல்லை, பாளையங்கோட்டை போன்ற நகரங்கள் எல்லாம் நூற்றாண்டு கண்ட நகர்மன்றங்களாக இருந்தாலும்கூட இயற்கையோடு இயைந்த ஒரு சூழலை இவர்கள் வைத்திருந்தார்கள்.

விடுதலை பெற்று பத்து ஆண்டுகள் கழித்துக்கூட நம்முடைய வயல்களும், நீர்க்கால்களும் எவ்வளவு சுத்தமாக இருந்தன என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இப்போது எந்த ஆற்றிலும் இறங்கி குளிப்பதற்கு பயமாக இருக்கிறது. தாமிரபரணியிலே இறங்கிக் குளிக்க எனக்குப் பயமாக இருக்கிறது. ஏனெனில், ஆற்றுப்படுகைகளைக் குப்பை கிடங்காக மாற்றியதை திருநெல்வேலியிலே பார்க்கலாம். தைப்பூச மண்டபத்திற்கும், சுலோசனா முதலியார் பாலத்திற்கும் நடுவே உள்ள ஆற்றுப்படுகையை ஒரு ரெண்டு, மூணு ஏக்கருக்கு குப்பை கொட்டுகிற இடமாக மாற்றிவைத்திருக்கிறார்கள். அந்த இடம் நல்ல மணல் பரப்பான இடம். அந்தக் காலத்தில் காமராசர், அண்ணா போன்ற தலைவர்களெல்லாம் கூட்டங்கள் பேசுகிற இடம்.

நான் சிறுவனாக இருந்த காலத்திலே ‘உரநிறுவன வயல்’ என்று சாலையோரத்திலே இருக்கிற வயல்களிலே ஒரு தட்டி வைத்திருப்பார்கள். அந்த ஒன்றிரண்டு வயல்களைத் தவிர மற்ற எல்லா வயல்களுக்கும் இயற்கை உரங்கள்தான். யார்யாரெல்லாம் வயல் வைத்திருந்தார்களோ அவர்களுடைய வீடுகளில் எல்லாம் உரத்தைச் சேகரித்து வைக்க உரக்குழி என்றொரு பகுதி இருந்தது. ஜூன் மாதம் பிறந்துவிட்டாலே பாளையங்கோட்டை, நெல்லை வீதிகளில் உர வண்டிகள் செல்வதையும், அதிலிருந்து இயற்கை உரங்கள் சிதறிக்கிடப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.

வாய்க்காலில் குளித்துவிட்டு வரப்போரமாகச் சென்றால் நீர்முள் மட்டுமல்ல, மஞ்சள்காமாலைக்கு மருந்தான கீழாநெல்லி, அதுபோன்ற இருபது வகையான தாவரங்களைப் பார்க்கலாம். ஒரு நிலம் என்பது வெறும் நெல்லை உற்பத்தி செய்கிற இடமாக மட்டுமில்லாமல், அந்த வயலினுடைய வரப்பு பல தாவரங்களை குறிப்பாக மூலிகைகளை உருவாக்கக் கூடிய இடமாக இருந்தது.

வயல் நெல்லை மட்டும் உற்பத்தி செய்யவில்லை. மீனையும் உற்பத்தி செய்தது. வயக்காட்டிலே விறால் பார்த்திருக்கிறேன், விலாங்கு பார்த்திருக்கிறேன். குறிப்பாக ஆரல் மீனும், உளுவை மீனும். வயலுக்குத் தண்ணீர் கொண்டு போகும் ஓடைகளிலே ஆரல் மீனைப் பிடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். இலக்கியங்களிலே இந்தக் காட்சியை நாம் பார்க்கலாம். இரண்டாவது போகத்திற்காக வித்து கொண்டு போகிற நார்ப்பெட்டியிலே மீனை எடுத்துக் கொண்டு வருகிறார்கள் என்று ஒரு பாட்டு உண்டு. சங்க இலக்கியப் பாட்டு மட்டுமல்ல, நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய நடைமுறையாகவும் இருந்தது. செயற்கை உரங்களைப் போடப்போட வயல்களிலே உளுவை மீன் இல்லை, ஓடைகளிலே ஆரல் மீனைக் காணோம். ஒரு வயலிலிருந்து இன்னொரு வயலுக்குத் தாவும் விரால், விலாங்கு போன்ற மீன்களை எல்லாம் பார்க்கவே முடியவில்லை.

செயற்கை உரங்களினால் வயல்களில் மீன் உற்பத்திச் சங்கிலி இன்று அறுந்துவிட்டது. முன்னாடி எல்லாம் தாமிரபரணி ஆற்றில் காலில் புண் உள்ளவர் இறங்கிக் குளிக்க முடியாது. மீன்கள் வந்து கால்களைக் கடிக்க தொடங்கிவிடும். குறிப்பாக மோட்டர் ஆலைக்கழிவுகள் உள்ளே வந்த பிறகு தாமிரபரணி ஆற்றின் மீன்வளம் மிகவும் பாதிக்கப்பட்டது. இப்போது கடிப்பதற்கு மீன் இல்லை. இப்ப அழிந்துபோன உளுவை மீனை மீன்கடைகளில் கூட பார்ப்பது கடினம். ஏனெனில், உளுவை மீன் வயலிலே கிடைப்பது.

மரபுவழி தொழில்நுட்பத்தின் வாயிலாக சேர்த்துவைக்கப்பட்டிருந்த பல்வேறுவகையான விதைகள் அழிக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் அறுபது வகையான சம்பா நெல் ரகங்கள் இருந்ததாகச் சொல்வார்கள். நான் அறிய ஐ.ஆர்.8ம், ஐ.ஆர்.20ம் வருவதற்கு முன்னாலே செங்கல்பட்டு சிறுமணி, அரிக்கிராவி, கௌதம்பித்தாளை, பொட்டைச்சம்பா, ஆனைக்கொம்பன் என்று நிறைய நெல் ரகங்கள் இருந்தன. போகத்துக்குப் போகம் நெல்லை மாற்றிமாற்றித்தான் நட்டுக் கொண்டு இருந்தார்கள். கௌதமபித்தாளை என்பது இன்றைக்கு இருக்கிற பாசுமதியைவிட பொடிசாக இருக்கும். இதெல்லாம் போய் இன்று எங்கு பார்த்தாலும் ஐ.ஆர்.8, ஐ.ஆர்.20, ஐ.ஆர்.50, கோ.36 என அறுபது வகையான நெல் வகைகள் இருந்த இடத்திலே இன்று நான்கு வகையான நெல் வகைகள்தான் இருக்கிறது. பன்முகப்பட்ட தன்மையினை அழிக்க அழிக்க நாம் எங்கே போய் கொண்டிருக்கிறோம் என்ற சந்தேகம் வருகிறது.

காலம் என்ற பரிமாணத்தைக் கணக்கிலே எடுத்துக் கொள்ளாமல் இயற்கை பலநூற்றாண்டுக்கால பரிமாணத்திலே நமக்கு உருவாக்கித் தந்த பல விசயங்களை நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். வானம் பார்த்த கண்மாய்களிலே தண்ணீர் அதிகம் வந்துவிட்டால் அதற்கென்றே ஒரு பயிர் வைத்திருப்பார்கள். அதற்குப் பெயர் அரியான். குளத்திலே தண்ணீர் ஏற ஏற இந்த அரியான் தாமரை மாதிரி வளர்ந்து கொண்டே வரும். குளத்திலே தண்ணீர் நிறைய இருக்கிறபோது இந்தப் பயிர் ஆறடி உயரம் இருக்கும். வாழை மரங்களைப் படகுபோல கட்டி தண்ணீரில் போய் அதன் கொண்டையிலுள்ள கதிர்களை மட்டும் அறுத்துக் கொண்டு வருவார்கள். இந்தப் பயிர் எத்தனை நூற்றாண்டு காலப் பரிணாமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விசயம். இந்தப்பயிர் இப்போது இல்லை. வறட்சிதாங்கும் பயிரான மின்னி என்ற ஒரு பயிர் உண்டு. மிளகாய்ச்செடி போல இருக்கும். அது எந்த பஞ்சம் வந்தாலும் கால்நடைகளுக்கு உணவு பஞ்சம் வரக்கூடாது என்பதற்காக நம்மிடம் இருந்தது இந்த மின்னி. இந்த மிள்ளி இன்று காணப்படவே இல்லை. இப்படி நாம் தொலைத்த விசயங்களை மீண்டும் உருவாக்குவதாக இருந்தால் இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆகும். இவைகளை நாம் எப்படி உருவாக்கப்போகிறோம் என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய விசயம்.

வளங்களைத் தருகிற மூலவளங்களை அழித்துக் கொண்டிருப்பதை இந்த இடத்தில் நாம் தெளிவாகப் பார்க்கிறோம். அதன் விளைவாகப் பல்வகைப்பட்ட உயிரினங்கள், பயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது இதற்கான மாற்று பற்றி சிந்திக்கக் கூடிய இடமும், நேரமும் வந்திருக்கிறதென நான் கருதுகிறேன்.

இந்த விசயத்தை வேறொரு கோணத்திலும் பார்க்கலாம் என நான் கருதுகிறேன். ஏப்ரல் – மே மாதமானால் குளங்களின் மேற்பரப்பு முழுக்க இலந்தைச் செடிகள் பழுத்துக் கிடக்கும். ஜூன் மாதங்களில் பள்ளி திறக்கும் சமயங்களில் வாய்க்கால்களில் தண்ணீர் வர, கரையோரங்களில் உள்ள நாவல் மரங்களில் பழங்கள் பழுத்துக் கிடக்கும். தெற்கே வள்ளியூர் பக்கம் போனால் நெடுஞ்சாலை முழுக்க நாவல் மரங்களைப் பார்க்கலாம். ஏப்ரல் – மே மாதங்களில் நான் இலந்தைப் பழங்களை சாப்பிட்டிருக்கிறேன். ஜூன் – ஜூலை மாதங்களில் நாவல் பழங்கள் சாப்பிட்டிருக்கிறேன். இவைகளெல்லாம் பள்ளிக்கூடங்களில் முன்னால் உள்ள கடைகளில் கிடைக்கும். மார்ச் ஏப்ரல் வந்துவிட்டால் நல்ல பதனீர், நுங்கு கிடைக்கும். அதோடு அக்கானி என்று சொல்லக்கூடிய கூழ்பதநீர் வரும். இதுபோன்ற விசயங்களை எல்லாம் நாம் இப்போது இழந்திருக்கிறோம்.

இதற்கு மாற்றாக என்ன கொண்டுவந்திருக்கிறோம் என்பதை யோசிக்கும்போதுதான் சிக்கல் உருவாகிறது. நாவல் மரங்களெல்லாம் முன்னைப்போல இல்லை. இலந்தைச்செடிகள் குளக்கரைகளில் இல்லை, எங்காவது மலைச்சரிவுகளில் கிடைத்தால்தான் உண்டு. ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள வயல்களில் விரால், உளுவை போன்ற மீன்கள் எவ்வளவு கால்சியத்தை உற்பத்தி செய்தது? இந்த கால்சியத்திற்கு மாற்றாக நாம் என்ன வைத்திருக்கிறோம்? இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு நாம் திரும்பத்திரும்ப இரசாயனங்களை நோக்கித்தான் போய் கொண்டிருக்கிறோம். இப்படி அழிந்து போன விசயங்களின் பட்டியலை எடுக்க எடுக்க நான் முன்னரே சொன்னதுபோல வளங்களைத் தரும் மூலவளங்களைத் தின்று கொண்டிருக்கிறோம் என்பது தெளிவு. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘மடு அறுத்துப் பால் குடிக்கிற’ மாதிரி. அதையே மேலோர் மரபிலே சொன்னால் ‘பொன் முட்டையிடுகிற வாத்தை அறுக்கிற’ மாதிரி. ஒரு மரம் ஒரே நாளிலே வெட்டப்படலாம். அது உருவாவதற்கு எவ்வளவு நாள் ஆகும்?

பசுமை புரட்சின்னு ஒன்றை 30, 35 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தினாங்க. பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, நீலப் புரட்சி என்றெல்லாம் வந்தன. புரட்சி ஒன்றும் அவ்வளவு மலிவான சரக்கு அல்ல. இந்த பசுமைப் புரட்சியின் பின்விளைவுகளில் ஒன்றைத்தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய மூலவளங்களை நாம் பறிகொடுத்தது பசுமை புரட்சியின் பின்விளைவு என்று நினைக்கிறேன். நான்கு வகையான புதிய விதைகளை மட்டுமே அறிமுகப்படுத்தி, அதோடு துங்ரோ வைரஸ் என்று சொல்லக்கூடிய ஒரு கிருமியையும் அறிமுகப்படுத்தி, உரம் என்ற பெயரிலே நம் பணத்தை பிடுங்கி, பூச்சிக்கொல்லி மருந்து என்ற பெயரிலே நம் பணத்தைப் பிடுங்கித் திரும்பத்திரும்ப வகைப்பட்ட தன்மையுடைய மரபுவழி தொழில்நுட்பத்தையும் சாய்ப்பதற்கென்றே இந்த பன்னாட்டு மூலதனங்கள் பின்னாலே நின்று வேலை பார்க்கின்றன. இதிலேதான் நாம் நிறைய இழந்துபோனோம். எங்கெங்கெல்லாம் பன்முகத்தன்மை அழிக்கப்பட்டு ஒன்று மட்டும் முன்னிருத்தப்படுகிறதோ அங்கு கலாச்சாரமும் சுரண்டப்படுகிறது, பொருளாதாரமும் சுரண்டப்படுகிறது.

ஐ.ஆர்.8ன் மூலமாக பசுமை புரட்சியை அறிமுகப்படுத்திய எம்.எஸ்.சுவாமிநாதன் இப்போது சொல்கிறார் நம்முடைய இயற்கை வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்று. எப்படி முடியும்?. அந்தக் குழுவுக்கும் அவரே தலைவராக இருக்கிறார் என்பதுதான் பெரிய வேடிக்கை. பசுமைப் புரட்சிக்காக மகசேசே அவார்டெல்லாம் வாங்கிய ஒருத்தர் செயற்கை உரங்களை விட்டு இயற்கை உரங்களை இடுங்கள், மணிச்சத்து உரங்களை இடுங்கள், தழைச்சத்து உரங்களை இடுங்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்.

இந்தப் பசுமைப்புரட்சியின் பின்விளைவுகளில் ஒன்றாக நான் எதைப் பார்க்கிறேனென்றால் ஒரு இரண்டு, மூன்று தாவரங்கள் நாடெல்லாம் மண்டிப்போய்விட்டன. குழை என்று சொல்லக்கூடிய வெங்காயத்தாமரை முன்பு குளத்தில் மட்டும்தான் கிடக்கும். எப்பொழுதாவது வெள்ளம் வந்தால் வாய்க்காலிலோ, ஆற்றிலோ மிதந்து வரும். இப்போது பார்க்கிற இடமெல்லாம் வெங்காயத்தாமரையாக இருக்கிறது. அதற்கடுத்து நாட்டு விடுதலைக்குப் பிறகுவந்த காட்டுக்கருவை (சீமைக்கருவேலம்), அது எல்லா இடங்களிலும் பரந்து கிடக்கிறது. அது நிலப்பரப்பை வெயில்தாக்காமல் மூடிவிடுகிறதென இவர்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் கூட அதனால் அழிக்கப்பட்ட மற்ற பயிர்வகைகள்? காட்டுக்கருவேல இருக்கிற இடத்துல பிரண்டை வளர்கிறதில்லை. பிரண்டை இருக்கிற இடத்தில் காட்டுக்கருவேலம் இருக்கிறது. அதுபோல நீர்நிலைகளில் ஜிலேபிக் கெண்டை என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். இந்த ஜிலேபிக் கெண்டையை நீருக்குள் விட்டால் மற்ற மீன்களுடைய இருப்பை முழுக்க அது அழித்துவிடுகிறது. அதுபோல காட்டுக்கருவேலம் மற்ற தாவரங்களுடைய இருப்பை மொத்தமாக அழித்துவிடுகிறது. பன்முகப்பட்ட தன்மையை நிராகரிக்கக்கூடிய விசயங்களில் இவர்கள் செயற்கையாக மட்டுமல்ல, இயற்கையாகவும் ஊக்கப்படுத்தினார்கள் என்பதுதான் நமது குற்றச்சாட்டு. இதிலிருந்து நாம் மீள வேண்டும். எப்படி மீள வேண்டும் என்பதை நாம் கூடிச் சிந்திக்க வேண்டும்.

நன்றி: ஆர்.ஆர்.சீனிவாசன்

பேட்டி எடுக்கப்பட்ட ஆண்டு – 2001

இந்த வீடியோவைக் காண்பதற்கான இணைப்பு

https://www.youtube.com/watch?v=LGBCUI5wxSg

படங்கள் – தொ.ப.வாசகர் வட்ட நண்பர்கள்

பின்னூட்டங்கள்
  1. கா. கான்முகமது சொல்கிறார்:

    கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டிற்கு முன்னால் வாய்க்கால் ஓடும் காலையில் பள்ளிக்கூடம் போவதற்கு முன்னால் தூண்டிலைபோட்டால் போட்ட விநாடியில் லபக்கென்று நாலடி நீளத்தில் வாளை மாட்டும் துள்ளத்துடிக்க வாளையை அறுத்து வருத்தெடுத்துக்கொண்டு அலுமினிய தூக்குச்சட்டியில் கஞ்சியை மதிய சாப்பாடுக்கு கொண்டுபோவோம். இப்போது நினைக்கும் போது கனவு போல் இருக்கிறது. ஆற்றில் தண்ணீர் வற்றி சேறாகும் காலத்தில் பாம்புபோல் விலாங்கு மீனை சேற்றில் புரண்டு பிடித்த காலத்தை நினைத்து நெஞ்சம் விம்முகிறது. ஒரு நாற்பது ஆண்டுகளில் எவ்வளவை இழந்துவிட்டோம். அடுத்த நாற்பது ஆண்டுகளில் நம் தலைமுறை இருக்குமா? என்ன செய்யப்போகிறோம். ஏதாவது செய்ய வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s