காஷ்மீரியன்

Posted: ஏப்ரல் 15, 2020 in பார்வைகள், பகிர்வுகள்

யாருக்காகவோ கட்டும்
பூக்காரியின்
மல்லிகைப் பூவிலும்
பனித்துளியைப் போல
நேசமும்
படிந்துதானுள்ளது.

– தேவராஜ் விட்டலன்

பனிபடர்ந்த மலை, தெளிந்தோடும் ஆறு, பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள், உயர்ந்து நிற்கும் மரங்கள் என இந்திய எல்லையிலுள்ள ஊர்களுக்கே தம் எழுத்தின் வாயிலாக அழைத்துச் செல்கிறார் தேவராஜ் விட்டலன். பல மாநிலத்தைச் சேர்ந்த படைவீரர்கள், அவர்களுடைய பணியிடங்களை எல்லாம் நமக்குத் தம் கதைகளின் வாயிலாகச் சுற்றிக் காட்டுகிறார். ‘எழுதி எழுதிப் பார்க்கிறேன் தீராமல் இருக்கிறது அன்பு’ எனும் தேவராஜ் விட்டலனின் கவிதை போலவே உள்ளன அவரது கதைகளும்.

இந்தியா முழுக்க பயணிக்க வேண்டுமென்ற ஆசையிருந்தாலும் எனக்குத் தென்னிந்தியாவைத் தாண்டி இன்னும் வடக்கே சுற்றும் வாய்ப்பு அமையவில்லை. இத்தொகுப்பிலுள்ள சில கதைகளின் வாயிலாக வடமாநில எல்லைகளில் உள்ள ஊர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. ஊர்காண்காதைபோல வடக்கிலுள்ள சில ஊர்களைச் சுற்றிப் பார்க்கலாம் வாங்க.

‘காஷ்மீரியன்’ இத்தொகுப்பிலுள்ள மிக முக்கியமான கதை. இக்கதையின் வாயிலாக யூசுப்கான் என்ற நல்ல மனிதரை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். காஷ்மீரில் வாழும் யூசுப்கான் இராணுவ கன்டோன்ட்மென்ட்டில் தினக்கூலியாக வேலை செய்கிறார். அவரோடான உரையாடலின் வாயிலாக காஷ்மீரில் அங்கு வாழும் மக்கள் இழந்த சுதந்திரத்தை கதைசொல்லியிடம் பகிர்கிறார்.

வரப்போரமிருக்கும்
மஞ்சணத்தி மரத்திற்காக
சண்டையிட்டு
பேசாமலிருக்கும்
பங்காளிக் குடும்பம்
வீதியில் போட்ட
கோலமேயானாலும்
மிதித்துச் செல்ல
வலிக்கத்தான்
செய்கிறது.

– தேவராஜ் விட்டலன்

நேசமுகங்கள், ஜான்சி என்ற இரண்டு கதைகளும் ஜான்சி என்ற ஊரை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. பாடப்புத்தகங்களில் படித்த ஜான்சிராணி வாழ்ந்த மண்ணில் பணிபுரிவது, முகமது ரபியின் பாடல்களை பிடித்த ஆட்டோக்காரர், கன்டோன்ட்மென்டில் உள்ளே கடைவைத்திருப்பவர்கள், அங்கு கிடைக்கும் நிம்புபாணி (எலுமிச்சை பழச்சாறு), லஸ்ஸி, ரஸமலாய் பற்றியெல்லாம் அருமையாக எழுதுகிறார். நேசமுகங்கள் கதையில் வரும் குர்ணாம் சிங்கின் ‘என் கண்ணு முன்னாடி வளர்ந்த மரம். இந்த மரத்தை அடிக்கிறது என் மகளை அடிக்கிறது போல’ என்ற வரிகளை வாசிக்கையில் புன்னை மரத்தை தம் சகோதரியாக பாவிக்கும் சங்க இலக்கியத் தலைவி நினைவிற்கு வருகிறாள். எல்லா காலத்திலும் ஆங்காங்கே இயற்கையை நேசிக்கும் மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்.

யார் அமர்ந்தாலும்
அழகாய் உள்ளார்கள்
வேம்படி நிழலில்…

– தேவராஜ் விட்டலன்

ஹாச்சூ கதையை வாசிக்கையில் பூடானுக்கே அழைத்துச் செல்கிறது அவரது வர்ணனை. ஹாச்சூ நதிக்கரையில் பூத்து நிற்கும் அழகிய புளு பப்பி மலர்கள், கரைகளில் மீன்பிடிப்பவர்கள், இராணுவத்தினரால் கட்டப்பட்ட இரும்பாலான பாலம், அதில் கட்டியிருக்கும் வண்ணக் கொடிகள், பூடானிய மக்களின் எளிமையான வாழ்க்கை, அங்கு நிலவும் கட்டுப்பாடுகளை நாம் அறிய முடிகிறது. இக்கதையில் வரும் பூடானிய இளைஞன் ஒரு அமெரிக்க பெண்ணை விரும்புகிறான். அந்த நாட்டின் கட்டுப்பாட்டின்படி அரசனே ஆனாலும் பிறநாட்டுப் பெண்ணை மணக்க கூடாது என்பதால் அந்த இளைஞன் தற்கொலை செய்து கொள்கிறான். இராணுவ வீரர்களுக்கு ஞாயிறன்று மீன்களை கொண்டு வரும் தார்ஸி சிறுவனும் நம்மை ஈர்க்கிறான்.

‘நாகஜோதிக்கு கன்னத்திலொரு மச்சம் இருந்தது’ சிறுகதையும் பூடானிலிருக்கும் இராணுவ வீரர்களின் அன்றாடப்பாடுகளைச் சொல்கிறது. வடக்கே பணிபுரியச் சென்ற மனிதரின் அனுபவங்களைச் சொல்லும் கதைகளாகவே இவைகள் உள்ளன. அந்த மண்ணில் வாழும் மனிதர்களைக் குறித்து இன்னமும் கதைகளை எழுதுவாரென எதிர்பார்க்கிறேன். மேலும், தம் சொந்த கிராம வாழ்வையும், ஊரை விட்டு வெளியூர்க்கு பணிக்குச் செல்லும் வலியையும் சொல்லும் சில கதைகள் இத்தொகுப்பிலுள்ளன. அன்பையும், நம்பிக்கையையும் விதைக்கும் கதைகள் தேவராஜ் விட்டலனுடையவை.

ஜன்னல் கம்பியைப்
பற்றிக் கொண்டு அழும்
ஏழைக் குழந்தைக்கு
கைத்துப்பாக்கியொன்றை
கொடுத்துவிட்டுச் செல்லும்
அவளின்
முதுகுக்குப் பின்னிருக்கும்
பொம்மைகள் மொழிந்தன
பொம்மைகள் விற்பவள்
பொம்மைகள் மட்டும்
விற்பதில்லையென்று.

– தேவராஜ் விட்டலன்

2013-இல் நூலாசிரியர் தேவராஜ் விட்டலனோடு சித்திரை வீதிகளில் சுற்றியபோது இத்தொகுப்பிலுள்ள ‘சில்லரை’ கதை கணையாழி மாத இதழில் வந்திருந்ததை கொடுத்தார். இலக்கியத்தின் மீது காதல் கொண்ட ஒருவனை குடும்பமும், சமூகமும் படுத்தும்பாட்டைச் சொல்கிறது இக்கதை. இந்தாண்டு குடியரசு தினத்திற்கு இருநாட்கள் முன்பு மதுரை வந்திருந்தபோது புதிதாக வந்த சிறுகதைத் தொகுப்பை கொடுத்தார். ‘எல்லையில் இராணுவ வீரர்கள்’ என்பது பகடி செய்யப்பட்டாலும் அவர்களின் வலியை கதைகளின் வாயிலாக நாமும் அறிந்து கொள்ள முடிகிறது. பிறை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகியுள்ளது. இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் உயிர் எழுத்து, கணையாழி, வடக்கு வாசல் போன்ற சிற்றிதழ்களில் வந்திருக்கின்றன. இத்தொகுப்பிலுள்ள நேசமுகங்கள் சிறுகதை க.சீ.சிவக்குமார் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை.

இப்பதிவிலுள்ள கவிதைகள் தேவராஜ் விட்டலனின் ‘ஜான்சிராணியின் குதிரை’ என்ற கவிதைத்தொகுப்பில் உள்ளவை.

இவரது வலைத்தளம்: http://devarajvittalan.com/

பின்னூட்டங்கள்
  1. SARAVANAN K சொல்கிறார்:

    அருமை . வாழ்த்துகள்

  2. Soban Soundararajan சொல்கிறார்:

    அருமை. சில நாட்களுக்கு முன்னாள் உத்தரகண்ட் – ரிஷிகேஷ், ப்ரஹ்மத்தால் வழியே சென்ற Trekகளும், அவ்வழியே கடந்து சென்ற பனிபோர்த்திய மலைகள், அவற்றின் மேல் பூத்து குலுங்கிய மலர்வனங்கள், பெரும் Oak மரங்கள் நிறைந்த சோலைகள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன!!! நன்றி சகோ!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s