
தென்னிந்தியாவில் அதிக மக்கள் கூடும் திருவிழா சித்திரைத் திருவிழா உலகப்புகழ்பெற்றது. அழகர் ஆற்றில் இறங்கும் வேளையில் குறைந்தது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுகிறார்கள் எனப் புள்ளிவிவரம் சொல்கிறது. மதுரை சித்திரைத் திருவிழா இதுவரை நின்றுபோனதாக எந்த வரலாற்றுப் பதிவும், வாய்மொழி வழக்காறும் நமக்குக் கிடைக்கவில்லை. சிலசில கால மாறுதல்கள், சிலசில மாற்றங்கள் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், திருவிழா இதுவரை நின்றதாகத் தெரியவில்லை. திருமலைநாயக்கர் ஆட்சிக்காலத்தில் தேனூரில் வைகையில் இறங்கிய அழகர் இன்று மதுரை மத்தியிலுள்ள வைகையில் இறங்குகிறார். மாசி மாதத்தில் நடந்த மீனாட்சி திருக்கல்யாணம் இன்று சித்திரையில் நடக்கிறது.

1942ல் இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்தபோதுகூட சித்திரைத் திருவிழாவில் நேர மாற்றம்தான் செய்திருக்கிறார்கள். அதிகாலை அழகர்கோயிலிருந்து புறப்படும் அழகர் அன்று மாலை தல்லாகுளம் வருகிறார். மறுநாள் காலை புறப்பட்டு பதினொரு மணியளவில் வைகையில் எழுந்தருளுகிறார். இரவு நேரங்களில் எந்த உற்சவங்களும் அந்த ஆண்டு நடைபெறவில்லை என்பதை அந்தாண்டு கோயிலின் திருவிழா பத்திரிக்கையின் வாயிலாக அறியலாம்.
1351-பசலி கோடைத்திருநாள் எனும் சைத்ரோத்ஸவப் பத்திரிகையில் “தற்கால உலக யுத்த நெருக்கடியை முன்னிட்டும், பக்தகோடிகளின் சாவதானத்தை முன்னிட்டும், இரவு காலங்களில் உத்ஸவங்களை நிறுத்தியிருக்கிறது. தசாவதாரம் 2-5-42ல் மாலை 2 மணி முதல் 6 மணிக்குள் நடத்தப்படும். மோகினி அவதார சேவை மட்டும் வழக்கம்போல் மறுநாள் காலை 5.30 மணிக்கு நடைபெறும். இடையிலுள்ள இதர மண்டபங்களில் பெருமாள் 3 நிமிஷம் எழுந்தருளுவார். இராஜீகத்தாலும், தெய்வீகத்தாலும் மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் மாறுதல்களுக்கு தேவஸ்தானம் ஜவாப்தாரியல்ல.” என்று கூறப்பட்டிருக்கிறது.
தல்லாகுளம் கருப்புச்சாமி கோயிலருகே திருவிழாக்காலத்தில் கட்டி வைக்கும் பெரிய சப்பரத்தை அந்தக்காலத்தில் வைகைக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த சப்பரம் கொண்டுவருவது பங்காளிச் சண்டையால் நின்றுபோனது. இன்றும் அழகர் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வரும்போது கட்டிவைத்த சப்பரம் அருகே சென்று வருவார்.

உலகையே இன்று புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவும் விதம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டு நிற்கிறது. எல்லா நாடுகளும் கொரோனா முன்பு கைகட்டி நிற்கின்றன. சாதி, மத, அரசியல், அதிகாரச் சண்டைகளுக்காக இதுவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இப்போது கொரோனா நாடடங்கு, உலகடங்கு என இப்புவியையே ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் சித்திரைத் திருவிழா இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் கூடும் சூழலில் நோய்தொற்று ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தும் வழியில்லாததால் மதுரை மற்றும் அதைச்சுற்றியுள்ள மக்களின் நலன் கருதி கோயில் நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. சித்திரைத் திருவிழா மதம் சார்ந்த நிகழ்வாகத் தோன்றினாலும் அது இப்பகுதி மக்களின் மனம் சார்ந்த கொண்டாட்டத்தின் வெளிப்பாடு. கொரோனா நோய் நமக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்திருக்கிறது.

கொரோனா உலக நாடுகளுக்கு ஒரு முக்கியமான பாடத்தையும் தற்சமயம் கற்றுக் கொடுத்துள்ளது. எவ்வளவோ ஆயுதங்கள், கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் என அழிவுக்கருவிகள் லட்சக்கணக்கில் இருக்கும் நாடுகளின் அதிகாரங்களின் கண்களில் விரல்விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது கொரோனா. மருத்துவத்திற்கும், கல்விக்கும்தான் வருங்காலங்களில் அரசு அதிகம் செலவளிக்க வேண்டும் என்பதை கொரோனா அறிவுறுத்துகிறது. காலங்காலமாக சூழலியலாளர்கள் சொல்லிக் கொண்டிருந்த பல விசயங்களை, அவர்கள் செய்ய நினைத்த பல செயல்களை கொரோனா செய்துவிட்டது. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அலைந்த மனிதர்களை வீட்டிலேயே கட்டிப்போட்டு வேடிக்கை பார்க்கிறது கொரோனா. மனித இனத்தின் ஆட்டத்தைக் கண்ணுக்குத் தெரியாத ஒரு நோய்க்கிருமி நிறுத்தி வேடிக்கை பார்க்கிறது.
போரைவிட கொடியதுதான் கொரோனா. ஆனால், அது ஒருபுறம் பல நன்மைகளையும் செய்துகொண்டிருக்கிறது என்றெண்ணும்போது கொரோனா கொஞ்சம் நல்லதும்தான். கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வரும் காலம் எப்போதெனத் தெரியவில்லை. “அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். கொதிநிலை எட்டியவுடன் மீண்டும் சமநிலைக்கு வந்துவிடும்.” என்ற தொ.ப.வின் வரிகளோடு முடிக்கிறேன். நல்லதே நடக்கும்.
நன்றி –
1942 பத்திரிகை உதவி ப.தமிழ்ச்செல்வம்
படங்கள் – மதுரக்காரன் கார்த்திகேயன்