வீ. எஸ். வீரணக் கோனார் என்ற வெ. சி. வீரநாதக் கோவலனார்

Posted: ஜூன் 16, 2020 in பார்வைகள், பகிர்வுகள்

தெருக்கூத்து எப்படி தமிழ்நாட்டின் வடபகுதியில் புழக்கத்தில் இருக்கிறதோ அவ்வாறு மதுரை வட்டாரத்தில் வழக்கத்தில் இருப்பவை இசை நாடகங்கள். ‘சாமி கும்பிடு’ என்று சொல்லப்படும் ஊர்த் திருவிழாக்களில் வள்ளி திருமணம் போன்ற நாடகங்களை இன்றும் நடத்தாமல் இருப்பதில்லை. அத்தகைய இசைநாடகப் பிரதிகளை இயற்றியவர்களுள் ஒருவர்தான் வீ. எஸ். வீரணக்கோனார்.

தமிழ் எண்ம நூலகத்தில் அரிய நூல்களின் வரிசையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது இரண்டு நூல்கள் கண்ணில் பட்டன. ஒன்று சிங்கார நவீன கான ஸ்ரீ வள்ளி திருமணம் (இரண்டு பாகங்களும் சேர்ந்தது); மற்றொன்று சம்பூரண சங்கீத கோவலன் சரித்திரம் (இரண்டாம் பாகம்). அவற்றை இயற்றிய வீரணக்கோனார் என்பவர் அம்பலத்தாடி என்ற ஊரைச் சேர்ந்தவராக அட்டையில் குறிக்கப்பட்டுள்ளதாலேயே எனக்கு ஆர்வம் பிறந்தது. இவ்வூர் எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ளது. ‘உத்தமர் போற்றிப் புகழும் முத்தமிழ் க்ஷேத்திரத்தைச் சார்ந்த’ அதே ‘சிறுவாலை ஜெமீன் சமஸ்தானத்துக்குள்’தான் எங்கள் ஊரும் இருந்திருக்கிறது.

கோவலன் சரித்திரம் 1929-இல் மதுரை புதுமண்டபம் புத்தக வியாபாரம் எஸ். வேணுகோபால் நாயுடுவால் வெளியிடப்பட்டு மதுரை மீனாக்ஷி விலாஸ் பிரஸில் பதிப்பிக்கப்பெற்றது. ஸ்ரீவள்ளி திருமணம் 1930-இல் மதுரை மீனலோசனி அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பெற்றதாகவும், புது மண்டபம் எஸ். வீராசாமி நாயுடு புத்தகசாலையில் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  வண்ண அட்டை  ஸ்ரீகிருஷ்ணா பிரசில் அச்சிடப்பட்டுள்ளது. பதிப்பிக்கப்பெற்றது என்ற சொல் அச்சிடப்பட்டதையே குறிக்கிறதெனலாம்.

வீரணக் கோனார் பெயருக்கு முன் ‘வித்வானந்த பாஷ்ய’, ‘வித்வத் பஹதூர்’ போன்ற அடைமொழிகளைப் பார்க்க முடிகிறது.

1929-இல் வெளிவந்த கோவலன் சரித்திரம் நூலின் பின்னட்டையில் கண்டுள்ளபடி, வீரணக் கோனார் இயற்றிய நூல்கள் மூன்று வகையின:

 • புராண தமிழ் நாடகங்கள்: சங்கீத கோவலன், அல்லியரசாணி, சுபத்ரா திருமணம், சந்தானு கங்கா, ஸ்ரீகிருஷ்ணலீலா, சிசுபாலவதம், சௌ சௌ ஐந்து சரித்திரங்கள் ஆகியன. ஒவ்வொரு நூலும் நாலணா விலை கொண்டவை. சங்கீத கோவலன் இரண்டு பாகங்கள் கொண்டது.
 • நவீன நாடகங்கள்: விஜயேந்திரன், ரமணாகரன், சௌந்தரகாந்தா. முன்னிரண்டும் பன்னிரண்டணா விலை கொண்டவை. பின்னது பத்தணா விலையினது.
 • பகவத் பக்திரச நூல்கள்: ஸ்ரீபாலகிருஷ்ண பஜனார்ஜிதம் என்னும் அமிர்தகானம் (இரண்டு பாகங்கள், தலா ஐந்தணா), கீதநவநீத கிருஷ்ணகானம் (இரண்டணா), பாலகிருஷ்ண பாமாலை என்னும் செய்யுள் தொகுப்பு (இரண்டணா)

1930-இல் வெளிவந்த ஸ்ரீவள்ளி திருமணம் நூலின் பின்னட்டையில் சந்தானு கங்கா, ஸ்ரீகிருஷ்ணலீலா, சிசுபாலவதம், விஜயேந்திரன், ரமணாகரன், சௌந்தரகாந்தா, கீதநவநீத கிருஷ்ணகானம், பாலகிருஷ்ண பாமாலை ஆகியவை குறிப்பிடப்படவில்லை. ஸ்ரீவள்ளி திருமணம் இரண்டு பாகங்களும் சேர்ந்து ஒரே நூலாக ஆறணா விலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முன்னட்டையிலோ ஐந்தணா என்றே விலை உள்ளது. கோவலன் சரித்திரத்தின் அட்டையில் ஸ்ரீபாலகிருஷ்ண பஜனார்ஜிதம் என்று குறிக்கப்படும் நூல் வள்ளி திருமணத்தின் அட்டையில் பஜனாமிர்தம் என்று அச்சிடப்பட்டுள்ளது.  இந்நூல் இரண்டு பாகங்கள் உடையதாகக் கோவலன் சரித்திரம் அட்டையில் இருக்க, வள்ளி திருமண அட்டையில் அவ்வாறு கூறப்படவில்லை.

இவைபோக, தேவகோட்டை கே. எஸ். சுப்பையாப் பத்தர் இயற்றி மதுரை மனோன்மணி விலாசம் அச்சியந்திரசாலையில் 1934-இல் பதிப்பிக்கப்பெற்ற பக்தியானந்தமெனும் பஜனாமிர்த கானம் என்ற நூலுக்கு சாற்றுக் கவியாக ஒரு வெண்பாவை வீரணக் கோனார் வழங்கியுள்ளதைக் காணமுடிகிறது.

இந்த நூல்களிலிருந்து பிற கலைஞர்கள் பெயரையும் அறிந்துகொள்ள முடிகிறது. ஸ்ரீவள்ளி திருமணம் நாடகத்தை ‘புதிய பிளேட் சங்கீத ரத்தினங்கள்’ எஸ்.வி. சுப்பையா பாகவதர், ஆரியகான கே.எஸ். செல்லப்பா ஐயர், அனந்தநாராயண ஐயர், பி.எஸ். வேல் நாயர், எம். எஸ். தாமோதர ராவ், கே.பி. சுந்தராம்பாள், எஸ்.ஜி. கிட்டப்பா ஆகியோர் பாடி வருவதாகக் குறிப்பிடப்படுகின்றனர்.  அந்நூலின் பின்னட்டையில் கிராமபோன் புதிய பிளேட் விகட ரத்தினங்கள் என்னும் பபூன் பாட்டுக்களைப் பற்றிய விளம்பரம் உள்ளது. இவை ‘படிக்கப்படிக்க ஓயாசிறிப்பை தரக்கூடிய நூதனபாடல்கள்’ என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றைப் பாடியவர்கள் மதுரை பபூன் என். எஸ். ஷண்முகம், ஏ. எம். கார்மேக ஆச்சாரி, ஆரியகான எம். எஸ். இராமச்சந்திர அய்யர், எஸ். எஸ். மணி அய்யர், எம். சாரங்கபாணி நாயுடு, பி. எஸ். பிச்சுமணி அய்யர், ஏ. நடராஜ ஆச்சாரி, மனமோகன எம். இரங்கசாமி நாயுடு, ராமாராவ், ஆலந்தூர் மிஸ்டர் ஆத்மலிங்கம் பிள்ளை ஆகிய ‘விகட சிகாமணி’களாவர். ஆனால் குறிப்பிட்ட ‘நாடகக் கம்பெனியார்’ பெயர் எதுவுமில்லை. மதுரை எம். இ. எம். பாஸ்கரசாமி இயற்றிய பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு துரை சரித்திர கதை (இரண்டு பாகங்கள்) பற்றிய விளம்பரமும் இருக்கிறது.

சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கிவைத்த அலையின் தொடர்ச்சியாகக் கருதத்தக்க இத்தகைய புராணநாடகங்களை ‘இயற்றுவது’ என்பதன் உண்மைப்பொருளை ‘கட்டபொம்மு துரை’ நூலுக்கு அந்நூலை இயற்றிய எம்.இ.எம். பாஸ்கரசாமி வழங்கியுள்ள முன்னுரைப் பகுதியிலிருந்து அறியலாம்: “பாஞ்சாலங்குரிச்சி நாட்டை அரசாட்சி செய்த கட்டபொம்மு ஊமத்துரையவர்களின் ஜீவிய சரித்திரத்தை பண்டைக்கால வித்வசிரோன்மணியாகிய மணிமுத்துப் புலவரவர்கள் எழுதிய ஏட்டுப்பிரதி வசனகாவியத்திலிருந்து மொழிபெயர்த்து என் சிற்றறிவிற்கெட்டியவரையில் சிலவிதமான தன்னன சந்தங்களாகவும், பலவிதமான வர்ணமெட்டுகளில் பாடல்களையமைத்தும், நாடகரூபமாக நடிப்பவர்களுக்கும், கதாபிரசங்கம் செய்பவர்களுக்கும், ஏனையோர்களும் சுலபமாக படித்தறிந்துகொள்ளும்படி எளிய நடையில், இரண்டு பாகங்களாக எழுதி முடித்திருக்கிறேன்.”

வீரணக்கோனார் அவர்தம் முத்திரையை தாம் இயற்றிய நூல்களில் இடம்பெறச்செய்யத் தவறுதில்லை. கோவலன் சரித்திரத்தில் ‘இருதாரம் ஒருநாளும் கொள்ள வேண்டாம்’ என்ற ‘நல்லுபதேசப் பொன்னுரை’க்கு முன்பாக ஓரடியில் “வீரண காவிய வீக்ஷ்ணயமே சாலும்” என்று வருகிறது. வள்ளி திருமணத்தில் வள்ளியம்மை பிரவேசத்துக்குமுன் கன்னிகா மாடத்தில் முருகனைத் துதித்துப்பாடப்படும் பாடலின் ஈற்றடியில் “வீரணதுதி கொள் காரணனே” என்று வருகிறது.

 கோவலன் சரித்திர அட்டையில் ‘கோபாலகுலதிலக ஸ்ரீமான்’ என்று வீரணக்கோனார் குறிப்பிடப்படுகிறார். கண்ணன் மீதான பஜனைகள், செய்யுள்களைப் பாடியதோடு, முகவரியில் தமது இல்லத்தை ‘ஸ்ரீபாலகிருஷ்ண விலாசம்’ என்றே குறித்துள்ளார். மதுரைக்குள் சிலம்பு விற்கச் செல்லுமுன் கண்ணகியை யார்வீட்டில் விட்டுச்செல்வதென்று கோவலனும் கண்ணகியும் ஆலோசிக்கிறார்கள். வேதியர் வாழும் தெருவில் இருக்கலாமென்றால் “பிராமண வர்க்கத்தினப் பெருமான் பெருமாட்டிகளோ தமிழர்களை மிகவும் கேவலமாக நினைப்பவர்கள். தன்னலங் கருதும் கன்னெஞ்சப் பார்ப்பனர் கருணை யென்பதே திரணமும் இல்லாக் கடுஞ்சித்தமுடைய கொடுஞ்சினக்கோபிகள். ஆதாலால் அன்னவர்களின் அன்பில்லா அகத்தில் தரிக்க என்னகம் பின்னடைகிறது” என்று மறுத்துவிடுகிறாள். இவ்வாறே உத்தம குணமிருந்தாலும் அதிகாரத் திமிர் இருக்குமென்பதால் க்ஷத்திரியர் வீடுகளையும், சொந்த இனத்தவர்களிடம் வறிய நிலையில் செல்ல மனங்கூசி வைசிய வீடுகளையும் கண்ணகி தவிர்த்துவிடுகிறாள். ஆனால் யாதவர்களின் ஆதரவுதன்னில் இரு என்றவுடன் உடனே ஒப்புக்கொள்கிறாள். இவ்விடத்தை நீட்டிச்செல்லும் வீரணக்கோனார் கண்ணகி கூற்றாக யாதவர் பெருமைகள் பலவற்றைச் சொல்கிறார். யாதவர்கள் பசித்தார் முகங்கண்டு பால் தயிர் ஈய்ந்து பராமரிக்கும் பரமதயாகுண பரிதர்கள். ‘அமுதர்’, ‘பொதுவர்’, ‘இடையர்’, ‘கோன்’ என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் பெற்றவர்கள். ஆய்ச்சியர் அகத்தில் கண்ணகியும் கோவலனும் அடைக்கலம் பெறுவது, அங்கு நடக்கும் விருந்தோம்பல் ஆகியவை இன்னும் சில பக்கங்களுக்கு நீள்கின்றன.

காட்டுவழியில் தாகத்துக்குத் தண்ணீர் எடுத்துவர கோவலன் சென்றுவிடுகிறான். கண்ணகி தனித்திருக்கிறாள். அப்போது திருடர்கள் வருகிறார்கள். அவர்கள் “ஏ குட்டீ, பொம்ப்லே. சர்த்தாங் நீ ஆரு, எங்கே வந்தே?” என்றும் “அடே அண்ணாத்தே! இந்தப் பொம்ப்லே என்னா அயகாத்தாங் இரக்கிறாங்றேங் பாரேங்” என்று கொச்சை மொழியில் பேசுகிறார்கள். அவர்கள் தொல்லை மிகவே அவர்களைக் கண்ணகி கல்லாகச் சபித்துவிடுகிறாள். திரும்பி வந்த கோவலன் இவர்கள் ‘குட்சிவாதை’யின் (வயிற்றுப்பாடு) பொருட்டே திருடவந்திருப்பர் என்று நன்மொழி சொல்லி எல்லாரையும் முன்போலாக்கு என்கிறான். அவர்களும் “ஆத்தா யீஸ்பரீ, கும்பிடுரோம்” என்று சொல்லி திருந்திச்செல்கிறார்கள்.

இவ்விரு நூல்களில் பயன்பட்டுள்ள வர்ணமெட்டுகளில் சில வருமாறு:

 • சுதேச முகமதலி (இந்துஸ்தானி தோடி)
 • ராசவிசுவாசலாலா
 • ஆறுமோ ஐயோ நான்
 • மான்குச்சரியா
 • கடுக்கன் மோதிரம்
 • கருவினுருவாகிவந்து
 • பழனிநாதன் பரப்ரமாதன்
 • மானேய வனந்தலங்கை என்ற கண்டிராஜா நாடக வர்ணமெட்டு (பியாகு ராகம்)
 • ஒப்பேனென்றவள் சொன்னாளா என்ற கண்டிராஜா நாடக வர்ணமெட்டு
 • வீடலால வாயிலாய் என்ற தேவார வர்ணமெட்டு
 • தசரதராஜ குமாரா என்ற தசாவதார நாடக வர்ணமெட்டு
 • அம்பா ளென்பால்
 • தயவிலாததென வஞ்சம்
 • தில்லாலங்குடி தில்லாலங்குடி (கள்வர் வருகையின்போது)
 • பச்சமலை பவளமலை
 • மகாஸ்தலமும் அதோ தெரியுது
 • காட்சி கண்காட்சியே என்ற வர்ணமெட்டில் சேர்க்கை
 • மஞ்சுநிகர் குந்தளமின்னே
 • ஆறுமுகவடிவேலவனே கலியாணமும்
 • வெள்ளிமலை யொத்தபலமேடை

அரைக்கண்ணித் தத்ககம் போன்ற இசைவடிவங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றைத் தேடிச் சுவைப்பது பயன் தரும்.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் எண்ம நூலகத்திலேயே மேலும் நான்கு வள்ளி திருமணப் பனுவல்கள் கிடைக்கின்றன. இவற்றை ஒப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும்.

அம்பலத்தாடியில் அவரது வாரிசுகளை, வாழ்ந்த வீட்டைக் காணச்சென்றோம். பலரும் பெயரை அறிந்திருக்கிறார்களேயன்றி அவரைப் பற்றிய தகவல்கள் அதிகம் கிட்டவில்லை.  அவரது பெயரரிடம் பேசினோம்.  வீரணரின் படங்களோ, நூல்களோ இல்லையென்றார். அவருக்குப் பெண்ணடி வாரிசுகளே உண்டென்றும், கடைசிக் காலத்தில் ஏதோ குடும்பப் பிணக்கென்றும், அருகிலுள்ள நெடுங்குளத்தில் வாழ்ந்துமறைந்தார் என்றும் சொன்னார்கள். வீரணக்கோனார் புத்தகங்களில் இடம்பெற்ற ‘பாலகிருஷ்ண விலாசம்’ எங்கேயென்று கேட்டோம். சீமைக் கருவேலம் மண்டி ஓரிரு கல்லுக்கால்களும் உளுத்த உத்திரக்கட்டை எச்சங்களும் மிஞ்சியிருந்த ஒரு சிதிலத்தைக் கைகாட்டினார்கள்.

எங்கள் ஊரில் ஒரு பெரியவரிடம் கேட்டோம். அம்பலத்தாடி வீரணக்கோனார் என்றதும் அவர் வீரநாதக் கோனார் என்று திருத்தினார். வீரணக்கோனார் என்ற இயற்பெயரும் வீரநாதக் கோவலனார் என்ற புனைபெயரும் முயங்கி வீரநாதக் கோனாராக அவர் மனதில் பதிவாகி இருந்தது.

 • சித்திரவீதிக்காரன் & ப. தமிழ்ச்செல்வம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s