
தெய்வங்களுள் ஆண்டாளை எனக்கு மிகவும் பிடிக்கும். பூமாலை மட்டுமல்ல, சங்கத்தமிழ் மாலையும் கோர்த்தவள். மதுரையம்பதியை, திருமாலிருஞ்சோலையை தம் பாடல்களால் அழகு சேர்த்தவள். ஆண்டாள் சூடிய மாலையோடுதான் அழகர் வைகையில் எழுந்தருளுவார். அழகருக்கும், ஆண்டாளுக்கும் ஆடிமாதம் தேரோட்டம் என்பது நல்ல பொருத்தம்தானே.
தமிழகத்தின் மிகப் பெரிய தேர்களுள் ஒன்றான ஶ்ரீவில்லிபுத்தூர் கோவில் தேரோட்டத்தை சென்றாண்டு நேரில் பார்த்த அனுபவப்பகிர்வு. ஆடிப்பூரத்தன்று அதிகாலைக் கிளம்பி ஆரப்பாளையத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, திருமங்கலம் போய் அங்கிருந்து பேருந்தில் படிக்கட்டில் நின்றபடி வில்லிபுத்தூர் பயணம். வழியெங்குமுள்ள ஊர்களிலிருந்து நிறையப்பேர் தேர் பார்க்க வந்தபடியிருந்தனர். வெட்டவெளியையும், வேப்பமரங்களையும், அகவியபடி திரியும் மயில்களையும் பார்த்தபடி ஶ்ரீவில்லிபுத்தூர் சென்றேன். பேருந்திலிருந்து இறங்கிக் கோவிலை நோக்கிச் செல்லும் வழியெங்கும் விழாக்கோலம். நீர்மோர் பந்தல்கள், சிற்றுண்டிகள் என மக்களுக்கு வழங்கியபடியிருந்தனர்.

நான் சென்றபொழுது தேர் கிளம்பிவிட்டது. தேரின் பின்னாலேயே போய் முன்னேற முயன்றால் முடியவில்லை. நல்ல கூட்டம். இரண்டு யாளிகள் பின்னின்று தேரைத் தள்ளுவது போல இரண்டு பெரிய புல்டோசர்கள் தேரின் பின்சக்கரத்தை நகர்த்திக்கொண்டிருந்தது. தேரின்முன் செல்வதற்காக வீதிகளின் ஊடாக சென்று தேர்வரும் வீதியை அடைந்தேன்.

பழமையான வீடுகளைப் பார்க்கும் போது மதுரை வீதிகளில் பார்த்த பெரிய வீடுகள் நினைவிற்கு வந்தது. கோவில் முன்னுள்ள வீதியெங்கும் பால்கோவாக் கடைகள். பால்பண்ணையிலிருந்து தயாரித்த பால்கோவா, பால்அல்வா விற்கும் கடைகள். தேரோட்டம் முடிந்தபின் வாங்கிக் கொள்ளலாமென்று தேரோடு சேர்ந்து நடக்கத் தொடங்கினேன். பெரிய தேர். சன்னதியின் முன்னுள்ள துவாரபாலகர்களை தேரின் முன்னும் அமைத்திருந்தனர். தம் மனங்கவர்ந்த ரெங்கமன்னரோடு மக்களாயிரம் வலஞ்சூழ கோதை தேரில் வில்லிபுத்தூர் வீதிகளில் வலம்வந்து கொண்டிருந்தாள். ஒருபுறம் தேரின் வடத்தை ஆண்களுக்கு இணையாக பெண்களும் இழுத்து வந்தனர். ‘கோவிந்தா / கோபாலா’ ‘கோவிந்தா / கோபாலா’ என்ற நாமம் வீதிகளில் எதிரொலிக்க தேர் அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தது.

தேரின்முன் பாசுரங்கள் பாடி, டோலக் தட்டி ஆடிவரும் அடியவர்களை மதுரை கூடலழகர் கோவில் தேரோட்டத்திலும் பார்த்திருக்கிறேன். தமிழ் பாசுரங்களை பாடிக் கேட்கும்போது பால்கோவா போல சுவையாய் இனிக்கிறது. கோல் அடித்து ஆடிவரும் பெண்கள் தங்கள் வயதை மறந்து பெருமாளின் அடியாராய் வீதிவலம் வருகின்றனர். ஶ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில் வனப்பகுதிகள் இருப்பதால் வீதிகளில் மலையிலிருந்து கொண்டுவந்த சாம்பிராணிகளை விற்றுக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

ஶ்ரீவில்லிபுத்தூர் தேநீர்கடைகளில் சுடச்சுட சோமாஸ் போட்டுக் கொண்டிருந்தனர். ஒன்று 5 ரூபாய்தான். சுடச்சுட இரண்டு சோமாஸ் சாப்பிட்டு, ஒரு தேநீர் குடிக்கக் காலைப்பசி அடங்கியது. தெம்பானதும் தேரோடு சேர்ந்து ஓடத்தொடங்கினேன். நமக்குத்தான் சோர்வு, மதுரை விசிறித்தாத்தா இளவட்டங்களுக்கெல்லாம் சவால் விடும் விதமாக மயில்தோகை விசிறியை வீசியபடி வந்தார். அவரிடம் நான் மதுரையிலிருந்து வந்திருக்கிறேன் என கைகுலுக்கி அறிமுகமாகிக் கொண்டேன்.

தேர் வடங்களை திருப்புவதற்கு அவர்கள் வடங்களை ஒரு வீதியில் கொண்டுசென்று திருப்புவதை பார்க்கும்போது பாற்கடலை கடைய பாம்பை கயிறாக்கிச் சுற்றிய கதை நினைவுக்கு வருகிறது. தேரிலுள்ள சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக உள்ளன. பெருமாளின் அவதாரங்கள், பூதகணங்கள் என ஒவ்வொன்றும் மரச்சிற்பமும் அதைச்செய்த கலைஞனின் கலைவண்ணத்தைப் பறைசாற்றுகின்றன.

தேர் நிலையை அடையும் வரை கூடவே வந்தேன். அவ்வளவு பெரியதேரை ஓரமாக நகர்த்தி நிலைக்கு கொண்டுவந்ததும் மக்களின் ஆரவாரம் எழுந்தது. அரசு முத்திரையாய் அழகாய் நிற்கும் கோபுரத்தை வணங்கி பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். நல்ல கூட்டம். மதுரைப் பேருந்து வர ஓடியேறி இடம்பிடித்தேன்.

ஆண்டாள் நேரில் சென்று பாடிய அழகர்கோவிலிருந்தும், ஶ்ரீரங்கத்திலிருந்தும் ஆண்டாள் கோவில் தேரோட்டத்திற்கு பட்டு வஸ்திரங்கள் அனுப்புகிறார்கள். ஐப்பசி தைலக்காப்புத் திருவிழாவின் அழகர் நீண்ட சடையுடன் நீராடச் செல்லும்போது ஆண்டாளைப் போலிருப்பார். மார்கழிமாத எண்ணெய்காப்பு உற்சவத்தில் ஆண்டாள் ஒருநாள் கள்ளழகர் வேடம் சூடுகிறாள். ஆண்டாள் கோவிலில் தேரோட்டமும், ஐந்து கருட சேவையும் பார்க்க வேண்டுமென்று ஆசையில் ஒன்று நிறைவேறிவிட்டது. செங்கோட்டை பாஜென்சரில் பயணிக்கும்போதெல்லாம் ஆண்டாள் கோவில் கோபுரத்தை மலைகளினூடாகப் பார்ப்பேன். அந்தக் கோபுரமே வீதிவலம் வந்தது போல தேரோடு சேர்ந்து நடந்த நாள் இனிய நாளே!