
பதினெட்டாம்படிக்கருப்பு சன்னதி வாயிலில் கூட்டம் மருளேறி நிற்கிறது. சாமியாடிகள் சாட்டையைச் சொடுக்கி ஆடிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் குலவை எழுப்புகிறார்கள். கோவிந்தோ, கோவிந்தோ எனும் நாமம் மலையில் எதிரொலிக்கிறது. பதினெட்டாம்படிக் கருப்பு கதவு அசைகிறது. அங்கிருந்த அத்தனைக் கண்களும் கதவைப் பார்க்கும் கணத்தில் கதவு திறக்கிறது. மெல்லக் கொட்டு மேளத்தோடு சின்னச் சிவிகையில் சக்கரத்தாழ்வாரைத் தூக்கி வருகிறார்கள். எல்லோரும் கதவை மூடுவதற்குள் கதவுகளுக்கிடையே தெரிந்த படியைப் பார்த்து வணங்குகிறார்கள். ஆடித்திருவிழாவின்போது தேரோட்டத்திற்கு முந்தையநாள் வரை சக்கரத்தாழ்வார் தேரோடும் வீதிகளில் உலா வந்து மீண்டும் பதினெட்டாம்படிக்கதவு வழியாக கோவிலுக்குள் செல்வார். அழகரே வண்டிப்பாதை வழியாகத்தான் எப்போதும் வருவார்.
ஆடி என்றாலே கொண்டாட்டமாக இருக்கும் அழகர்கோயில் ஆடித்திருவிழா நினைவுகள்தான் மேலெழுகிறது. தொ.ப.வின் அழகர்கோயில் படித்ததிலிருந்து ஆடித்தேரோட்டத்திற்கு தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன். புழுதிபறக்க அழகாபுரிக்கோட்டையைச் சுற்றிவந்த தேரோடு அலைந்த நாட்களும், பின்னாளில் புதியதேர் சிமெண்ட் சாலையில் சுற்றிவந்த போது அந்த வெளியெங்கும் வெயிலில் அலைந்த நாட்களும் அற்புதமானவை.
அழகர்கோயிலிலிருந்து அப்படியே பால்யகால ஆடிநினைவுகளுக்குள் செல்லலாம். அண்ணாநகரிலிருந்து கோவில்பாப்பாகுடி கிராமத்திற்கு வந்தபின் ஒவ்வொரு ஆடியின் போதும் பதினெட்டாம் பெருக்கிற்கு பயிர்க்குழி போடுவோம். கண்மாயிலிருந்து அள்ளிவந்த கரம்பைமண்ணை வைத்து குழிபோட்டு வெண்டை, அவரை, புடலை போன்ற விதைகளைப் போட்டு பனையோலையால் மூடிவைத்துவிட்டு தினமும் காலையில் எவ்வளவு முளைத்திருக்கிறது என்று பார்த்த நினைவுகள் இன்றும் பசுமையாகயிருக்கிறது. கண்மாயின் நீரலைகள் ஊருக்குள் மகிழ்ச்சியைப் பரப்பும். ஆடிப்பதினெட்டாம் பெருக்கிற்கு கிணறு, அடிகுழாய்க்கு சாமிகும்பிடுவார்கள்.
வைகையாற்றில் நீராழி மண்டபம் அருகில் காவல்தெய்வங்களுக்கு பெட்டிகள் புறப்பட்டுக் கொண்டேயிருக்கும். பம்பை உறும, நையாண்டி மேளம் முழங்க அடிக்கிற அடியில், அங்கு நிற்கும் ஆட்களுக்கெல்லாம் சாமி இறக்கிவிட்டுவிடுவார்கள். உடுக்கடித்துப் வர்ணித்துப் பாட சாட்டையைச் சுழற்றியும், நாங்குலிக்கம்பை தூக்கிக்கொண்டும், நாக்கைத் துருத்தியபடியும் ஆடி வரும் சாமியாடிகள் அவரவர் கோயில்களை நோக்கி பெட்டியோடு பெருங்கூட்டமாகச் செல்வார்கள்.
ஆடிப்பதினெட்டாம்பெருக்கிற்கு எங்க ஊர் சோனையா கோயிலில் அன்னதானம் போடுவது சில வருடங்களாய் பெரிய விழாவாக மாறிவருகிறது. ஆடிமாதங்களில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவார்கள். ஒவ்வொரு வீதியிலும் மக்கள் கூட்டங்கூட்டமாய் தூக்குகளில் கூழை வாங்கிக்கொண்டு, பொங்கல் புளியோதரையை பாக்குத்தட்டுகளில் தூக்கிக்கொண்டு அலைவதை பார்க்கலாம். ஆடிப்பதினெட்டாம் பெருக்கிலிருந்துதான் பொன்னியின் செல்வன் நாவல் தொடங்கும். கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானுடத்திலும் காவிரியில் ஆடிப்பதினெட்டாம் பெருக்கு காட்சிகளை எழுதியிருந்ததாய் நினைவு. கொரோனா காலத்தில் நல்ல நினைவுகள்தான் நிம்மதி தருகின்றன.