இந்தக் கதைகள் உங்களுக்கு மறக்காது…

Posted: ஓகஸ்ட் 11, 2020 in பார்வைகள், பகிர்வுகள்

சிறுகதை என்பது நீந்திக்கொண்டிருக்கும் மீனைச் சித்திரம் வரைவது போன்றது. அது ஒரு சவால். மீனின் தோற்றத்தை வரைய முயன்றால் அதன் இயக்கம் பிடிபடாமல் போய்விடும். இயக்கத்தை வரைய முற்பட்டால் தண்ணீரின் இயல்பு வெளிப்படாமல் போய்விடும். என்னளவில் சிறுகதை எழுதுவதே எப்போதும் அதிக உத்வேகமும் சவாலும் நிரம்பியதாக இருக்கிறது.                             

– எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் அவரது நாவல்களுக்கு ஒற்றைச் சொல்லையே தலைப்பாக தேர்ந்தெடுப்பார். சமீபத்தில் வந்த ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை’ தவிர. புத்தனாவது சுலபம் சிறுகதைத் தொகுப்பிலுள்ள சில கதைகளின் தலைப்புகள் நீளமாக இருக்கின்றன. உதாரணத்திற்கு ‘ஜெயந்திக்கு ஞாயிற்றுக்கிழமையைப் பிடிக்காது’, ‘கோகில வாணியை யாருக்கும் நினைவிருக்காது’, ‘ஜன்னலைத் தட்டாதே அஷ்ரப்’, ‘சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன் சிங்கைப் பிடிக்காது’, ‘ஆம் புருனோ, அவர்கள் குற்றவாளிகளே!’. பெரிய தலைப்புகள் நமக்குக் கதையைச் சட்டென நினைவுக்குக் கொண்டுவந்துவிடும்.  உதாரணத்திற்கு ஜெயந்திக்கு ஏன் ஞாயிற்றுக்கிழமையை பிடிக்காது என்று யோசித்தாலே நமக்குக் கதை ஞாபகத்திற்கு வந்துவிடும்.

புத்தனாவது சுலபம் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 16 கதைகள் உள்ளன. அதில் சரிபாதிக்கு மேலான கதைகள் பெண்களின் அன்றாடப்பாடுகளை, அவர்கள் கடந்துவரும் வலிகளை பற்றிப் பேசுகிறது. பெண் காவலராகப் பணிபுரிபவரை குடும்பமும், உறவுகளும் பார்க்கும் பார்வையும், திருமணம் செய்ய விரும்பும் ஆண்கள் தோசை சுடும் பெண்களைத் தேடுவதையும் துப்பாக்கி சுடும் பெண்களைத் தவிர்ப்பதையும் நிர்மலா என்ற பெண் காவலரின் வாயிலாகவும், குடும்ப வறுமையால் பணிக்குச் செல்லும் பெண்கள் மீது நடக்கும் பாலியல் சீண்டல்களையும், அதனால் பாதுகாப்புக்கு திருடி சிறைச்சாலைக்கு வரும் பெண்ணின் வலியை சபீனா என்ற பெண்ணின் வாயிலாகவும் சொல்கிறார். இக்கதையில் நம்மை நெகிழவைக்கும் பகுதியென்றால் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் அதிகாரியின் மிடுக்கிலிருக்கும் நிர்மலாவும், விளையாட்டால் பேசியபடி வரும் சபீனாவும் ஒரு கணத்தில் இருகுமிழ்களும் உடைந்து ஒன்றாகிறார்கள். பயணத்திடையில் வரும் மாதவிலக்கால் சபீனா துடித்து அமரும் கணத்தில் நிர்மலாவுக்குள் உள்ள பெண்மை அவளை அரவணைத்துக் கொள்கிறது. இரண்டு குமிழ்கள் கதையைக் குறும்படமாகவும் பார்த்திருக்கிறேன்.

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பணிக்குச் செல்லும் பெண்களுக்கு அதிகமான வேலைநாளாக அமைந்துவிடுகிறது. எல்லோருக்கும் விதவிதமான உணவு, எல்லோருடைய உடைகளையும் சலவை செய்தல் போன்ற பணிகளைச் செய்யும் நாளாக இருக்கிறது. ஜெயந்திக்கு ஞாயிற்றுக்கிழமையை பிடிப்பதில்லை என்ற கதையில் வரும் ஜெயந்தி சைவ உணவுப் பழக்கம் கொண்டவள். அவள் காதலித்து மணந்த கணவனோ அசைவப்பிரியன். பிறகு, நடப்பதைக் கேட்கவும் வேண்டுமா?

இராமாயண, மகாபாரத காலம் தொட்டு சொத்துக்களைப் பங்கிடும் பிரச்சனை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இழவு வீட்டில் நடுவில் பிறந்த மகளுக்காகக் காத்து நிற்கின்றனர். அவள் வரமாட்டாள் என மூத்த அக்காள் சொல்ல, கதையை வாசிக்கையில் வறுமையில் இருக்கும் நடுவில் பிறந்தவளை மற்றவர்கள் பிரிப்பதைப் பார்க்க முடிகிறது.

சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன் சிங்கைப் பிடிக்காது என்ற கதையில் வரும் சொர்ணத்து ஆச்சி தன் கணவன் இறந்த பிறகு பிள்ளைகள் வீட்டில் மாறிமாறி தங்கி வருகிறாள். தனிமையில் இருக்கும் சொர்ணத்து ஆச்சிக்குத் தொலைக்காட்சிதான் துணை. அவள் செய்திகள் பார்த்து அரசியல் பேசுவது ஆண்களுக்குப் பிடிப்பதில்லை. தன்னுரிமையை நிலைநாட்டக் கோவித்துக் கொண்டு கிளம்பும் சொர்ணத்து ஆச்சியை நமக்குப் பிடித்துவிடுகிறது.

தன் மனைவி கதை எழுதுவது பெரும்பாலான ஆண்களுக்குப் பிடிப்பதில்லை. மேலும், கதையை வாசிக்கையில் அந்தக் கதை அவர்கள் வாழ்வில் நடந்தது என நினைக்கும் போக்கும் வாசகர்களிடம் உண்டு. சொந்தக்குரல் கதையில் வரும் பெண் நூலகம் சென்று புத்தகம் எடுத்து வந்து வாசிப்பதும், கதை எழுதுவதையும் அவளது கணவன் கண்டு அவளை மட்டுமல்ல அந்தப் பெண்ணின் தந்தையையும் அழைத்து வந்து அசிங்கப்படுத்திவிடுகிறான். இறக்கும் வரை அவள் சொந்தக்குரல் ஒலிக்கவில்லை என்பதுதான் சோகமான விடயம்.

வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு ஒருநாள் பொழுது வேகமாகக் கடந்துவிடுகிறது. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு?. அமெரிக்காவில் மணம் முடித்துக்கொடுக்கப்பட்ட பெண்ணிற்கு கணவன் பணிக்குச் சென்றபின்பு தனிமைதான் பெரிய கொடுமையாக இருக்கிறது. பெண்கள் நீரோடும், நெருப்போடும் உரையாடுவதை இந்தக் கதை பேசுகிறது.

கோகில வாணியை யாருக்கும் நினைவிருக்காது என்ற கதையின் வாயிலாக நாம் அன்றாடம் கேள்விப்பட்டுக் கடந்துவிடும் நிகழ்வை ஞாபகப்படுத்துகிறார். காதலிக்க மறுத்த பெண்ணின் மீது அமிலம் வீச்சு, கழுத்தறுத்துக் கொலை போன்ற செய்திகளை வாசித்துக் கடந்துவிடுகிறோம். அப்படிக் காதலிக்க மறுத்த கோகில வாணி மீது அமிலம் வீசப்பட்ட பின் அவளது வாழ்க்கையில் நிகழும் வலியைப் பேசுகிறது இக்கதை.

புத்தனாவது சுலபம் என்ற கதை பதின்பருவ மகன்களுக்கும் தந்தைக்கும் இடையிலான சிக்கல்களைச் சொல்கிறது. அக்கதையை வாசிக்கையில் பதின்பருவ மகன்களை அம்மாக்கள் எளிதில் புரிந்துகொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதேபோல பொய்த்தொண்டை கதை எப்போதும் கலகலப்பாக இருக்கும் ஒரு ஆண் திருமணத்திற்குப் பிறகு மிகவும் மாறிப்போய்விடுவதைச் சொல்கிறது. சிற்றறிவு என்ற கதையில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னதாக தீவொன்றை ஒரு ராணி ஆண்டு வருகிறாள். அவளிடம் வரும் போர்த்துக்கீசிய மாலுமி அரிய பரிசுகளெனச் சிலவற்றைக் கொடுத்து வியாபாரம் செய்ய அனுமதி கோருகிறான். அந்த அரிய பரிசுகளான உலக உருண்டையோ, தொலைநோக்கியோ, காற்று மானியோ இயற்கையோடான தங்கள் உறவைச் சிதைத்துவிடும் எனக்கூறி அவனையும், அவன் உடன் வந்தவர்களையும் சிரச்சேதம் செய்யச்சொல்லி உத்தரவிடுகிறாள். ஆண்களைவிடப் பெண்கள் ஒரு விசயத்தைப் பலகோணத்தில் பார்க்கக் கூடியவர்கள் என்பதை நாம் அறிய முடிகிறது.

புருனோ என்ற வானியல் அறிஞனை மதத்தின் பெயரால் கொலை செய்ததைச் சொல்லும் ‘ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே!’ என்ற கதையும், எதிர்காலத்தைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் காண்பவர்களை ஈர்த்து தம் செயல்களைச் செய்து கொள்ளும் அஷ்ரப் போன்ற மனிதர்களை ‘கதவைத் தட்டாதே அஷ்ரப்’ கதையில் பார்க்கிறோம்.

ஊரடங்கு காலத்தில் மாலை நேரத்தில் எங்கள் கிராமத்தில் வயல்வெளிகளை நோக்கிச் செல்லும் சாலையில் நடந்துகொண்டே இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகளை என் மனைவியுடன் உரையாடியபடி நடக்க முடிந்தது. மேலும், இத்தொகுப்பில் இல்லாத, எனக்கு மிகவும் பிடித்த சிறுகதையான ‘அவளது வீடு’ என்ற கதையையும் வாசித்து அதைக் குறித்தும் பேச முடிந்தது. தேசாந்திரி பதிப்பக வெளியீடாகப் புத்தனாவது சுலபம்  வெளிவந்துள்ளது.

பின்னூட்டங்கள்
  1. sudharsan sundarsan சொல்கிறார்:

    அருமையான சொல்லாடல் நிறைந்த ஒரு விமர்சனம். இந்த தொகுப்பில் உள்ள இரண்டு குமிழ்கள் மற்றும் ஜெயந்திக்கு ஞாயிற்றுக்கிழமையைப் பிடிக்காது எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகள். இரண்டு குமிழ்கள் சிறுகதையை குறும்படமாக பார்த்து ரசித்ததுண்டு.

    இந்த கொரோன காலத்தில், நீங்களும் ஏதேனும் சிறுகதை , நாவல் அல்லது கட்டுரை எழுத வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s