வாரத்திற்குக் குறைந்தது இருமுறையாவது நூலகங்களுக்கு சென்றுகொண்டிருந்த நாட்களில் முதலில் குமுதம், விகடன், குங்குமம் போன்ற வார இதழ்களை வாசித்துவிட்டு இலக்கிய மாத இதழ்களை வாசிக்கத் தொடங்குவேன். உயிர்மையில் அப்போது அணுஉலை குறித்து அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகள் அதன் தீமைகளைத் தெளிவாக எடுத்துரைத்தது. அதிலும் உயிர்மையின் நூறாவது இதழில் அவர் எழுதிய கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் கட்டுரை அதைக் குறித்து பலரிடமும் விவாதிக்கவும் உதவியது. அ.முத்துக்கிருஷ்ணனின் “மலத்தில் தோய்ந்த மானுடம்” தொடங்கி அவரது பலநூல்களை வாசித்திருக்கிறேன்.
சமீபத்தில், வாசல் பதிப்பக வெளியீடாக வந்த மாயவலை என்னும் கட்டுரைத் தொகுப்பை வாசித்தேன். இந்த கட்டுரைகள் வாயிலாக நமக்குத் தெரிந்ததாய் நினைக்கும் பல விசயங்களுக்குப் பின்னால் இப்படியொரு கோரமுகம் இருக்கிறதா என வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார். அதிகாரங்களுக்கெதிராக புள்ளிவிவரங்களோடு தன்னுடைய தரவுகளை நம்முன் வைக்கிறார். இயற்கை, மக்கள், சமூகநீதி எனப் பலதளங்களில் இக்கட்டுரைகளின் வாயிலாக நம்மையும் அவரோடு சேர்ந்து பயணிக்க வைக்கிறார். மாயவலையில் என்னென்ன சிக்குகிறது எனப் பார்க்கலாம் வாருங்கள்.
தண்ணீர் பிரச்சனை குறித்த கட்டுரை வாயிலாக கப்பல்களின் வழியாக நல்ல தண்ணீர் கடத்துவது தொடங்கி தண்ணீர் பிரச்சனைக்காகப் போராடி மதுரையில் கொலையுண்ட லீலாவதி வரை பல விசயங்களை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. பெரிய, பெரிய நீர் பூங்காக்கள் எல்லாம் லட்சக்கணக்கில் நீரை உறிஞ்சி அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தைக் குறைப்பதைப் பார்க்கும்போது அதன் தீமைகள் நமக்குப் புலனாகிறது.
1984 டிசம்பர் மாதம் போபால் நகரில் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து வெளியேறிய விசவாயுவால் பத்தாயிரத்திற்கும் மேலான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த விசவாயுவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அந்த அமெரிக்க நிறுவனத்தைக் கண்டித்து மக்களுக்கு எந்த இழப்பீடும் பெற்றுத்தர இங்குள்ள அரசுகள் தயாராக இல்லை என்பதுதான் பெரும்சோகம். இதில், யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கிய டவ் நிறுவனம் அதற்கு முன் நடந்த விபத்துகளுக்குத் தான் பொறுப்பில்லை எனக் கையை விரிக்கிறது. அமெரிக்க நிறுவனத்தின் பொறுப்பாளரைப் பத்திரமாக விமானத்தில் ஏற்றி அனுப்பும் நமது அரசு, மக்கள் மீது அதில் ஒருதுளி அக்கறையை காட்டவில்லை.
நம்முடைய தாகசாந்திக்குத் தண்ணீரைப் போல ஔடதமில்லை. ஆனால், விதவிதமான குடினிகளை விளம்பரங்களின் வாயிலாக, அவை இல்லாமல் நாம் தாகத்தைத் தணிக்க இயலாது என்பதுபோலக் காட்டுகிறார்கள். இது உடலுக்கு ஒருவகையான கேடு என்றால் இந்தக் குடினிகளை தயாரிப்பதற்காக அந்த நிறுவனங்கள் பல கிராமங்களை பலிகடாவாக்கிக் கொண்டிருப்பது அதன் பின்னாலுள்ள குரூரம். பாலக்காடு அருகேயுள்ள பிளாச்சிமடா கிராமத்தில் கோக்ககோலா நிறுவனம், தினமும் 5 லட்சம் லிட்டர் நீரை உறிஞ்சி மழைகொட்டும் பசுமையான மலையாள கிராமத்திற்கே தண்ணீர் லாரியை வரவழைத்துவிட்டது. போதாக்குறைக்கு உரமென்று ஆலைக்கழிவுகளைக் கொடுத்து வயல்வெளிகளையும் பாழாக்கிவிட்டது. கோக்கோ கோலாவிற்கு எதிரான போராட்டத்தில் பழங்குடி மக்களின் சமர் இறுதியில் வென்றது. ஊடகங்கள் இதில் தன்னார்வலராக இருந்த மயிலம்மாவை தூக்கிப்பிடித்து அவரை மக்களிடையே விரோதமாக்கிய கதையையும் கூறுகிறார்.
நவதீண்டாமை என்ற கட்டுரை வாயிலாக எயிட்ஸ் நோயாளிகளின் மீது இச்சமூகம் நிகழ்த்தும் புறக்கணிப்பைச் சொல்கிறது. தினசரி 6,000 பேர் இந்நோயால் மடிகிறார்கள். 50 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசோ, அரசு சாரா தொண்டு நிறுவனங்களோ மக்கள் கூடுமிடங்களில், சாலையோரங்களில் இந்நோய்க்கெதிரான பிரச்சாரத்தை நிகழ்த்துகிறது. ஆனால், ஒரு ஐ.டி. நிறுவனம் முன்னின்று இந்த விழிப்புணர்வு நாடகத்தைப் போடுவார்களா என்ற கேள்வி சாட்டையடி.
இன்று வளர்ந்துவரும் தொழில்நுட்பம் நுகர்வு எனும் மாயவலைக்குள் நம்மை இழுத்துவிடுகிறது. அதில் நாமும் தானாகப்போய் விழுந்துவிடுகிறோம். அதிவேக ஜெட் விமானங்களும், நான்கு வழிச்சாலைகளும் யாருக்காக? வேகவேகமாகப்போய் நாம் என்ன செய்யப் போகிறோம். மிஞ்சிப்போனால் ஒரு திரைப்படமோ, ஒரு கிரிக்கெட்டோ பார்ப்போம். அதற்கெதற்கு இந்த அசுர வேகம்? பெரிய, பெரிய அணைகள் எதற்கு? தண்ணீரை நிரப்பி பல்லுயிரியத்தை சிதைப்பதற்கா? அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு முறையான இழப்பீடு வழங்கப்படாதது எவ்வளவு கொடுமை.
பழங்குடிகளை வனப்பாதுகாப்பு, கடற்கரையோர எல்லைப் பாதுகாப்பு என்ற பெயரில் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு பெரிய, பெரிய உல்லாச விடுதிகளைக் கட்ட அனுமதிக்கிறது அரசு. சமவெளிப்பகுதியிலிருப்பவர்கள் மலைகளில் போய் அங்கிருந்த பூர்வ குடிகளை வெளியேற்றிவிட்டனர். நேசனல் ஜியாகிரபி, டிஸ்கவரி அலைவரிசைகளில் வெள்ளையர்களே காட்டின் ஆதி அந்தம்வரை தெரிந்தது போலப் பயணம் செய்வதையும், அவர்களே காட்டை இரட்சிப்பவர்களை போலக் காட்டுவதையும் தொடர்ந்து செய்துவருகின்றன. இதை வாசித்ததும் இந்த அலைவரிசைகளின் பின்னால் இப்படியொரு அரசியல் இயங்குகிறதா என்றறிய முடிந்தது.
மருத்துவத்துறையில் நிலவும் காப்பீடுகளும், கொள்ளையும் பற்றி வாசிக்கும்போது சமகால மருத்துவம் எளியவர்களுக்கானதா? வசதிபடைத்தவர்களுக்கானதா? என்ற கேள்வி எழுகிறது. ஒவ்வொரு மருத்துவமனையும் எடுக்கச் சொல்லும் பரிசோதனைகளை நாம் செய்தால் நம்மை ஒரு பெருநோயாளிப் பட்டியலில்தான் வைக்க வேண்டும். எது லாபமோ அதை நோக்கியே செல்கிறது மருத்துவத்துறை. சமீபத்தில் மருந்தே கண்டுபிடிக்காத கொரோனாவுக்கு லட்சக்கணக்கில் பணம் கேட்டது ஊரறியும். அந்நிய நிறுவனங்கள் தொடங்கி இங்குள்ள பெருநிறுவனங்கள் வரை ஏராளமான சலுகைகளையும், கடன்களையும் வாரிக்கொடுக்கும் அரசுகளும், வங்கிகளும் விவசாயி எனும்போது கழுத்தில் துண்டைப்போட்டு இறுக்குகின்றன.
உலக நாடுகளின் நுகர்வு வேட்கையால் புவி சூடாகி ஆண்டுதோறும் கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே போகிறது. அதிகமாக சம்பாதி, உலகத்தை முழுக்க பாழ்படுத்து என்பதுதான் சமகால கொள்கையாகயிருக்கிறது. எல்லோரும் ‘செட்டில்டு’ ஆக வேண்டும் என்ற ஓட்டத்தில் பல சிறு தீவுகளைக் கடலோடு ‘செட்டில்’ ஆக்கிக் கொண்டிருக்கிறோம். துவாலி என்ற சிறு தீவின் வாழிடப்பகுதியில் நான்கு அடி கடல்மட்டம் உயர்ந்து வருகிறது. அங்குள்ள குழந்தைகள் நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது.
மாயவலை நூலை வாசித்து முடிக்கையில் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்’ என்ற பாரதியின் வரிகள் நினைவிற்கு வருகிறது. உலகமயத்திற்கு எதிராக, பிரம்மாண்டங்களுக்கு எதிராக நாம் நேரடியாகச் செயல்படாவிட்டாலும் எளிய செயல்களை, இயற்கையோடு இயைந்த செயல்களை செய்யத் தொடங்கினாலே போதும். இந்நூலாசிரியர் அ.முத்துக்கிருஷ்ணனின் முயற்சியால் 2010ல் தொடங்கப்பட்ட பசுமைநடை எனும் அமைப்பு கடந்த பத்தாண்டுகளில் மதுரையில் தொல்லியல், வரலாறு, சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை ஆயிரக்கணக்கான மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளது. இதுபோன்ற செயல்களை ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு வீட்டிலும் செய்யத் தொடங்கவேண்டும். அப்போதுதான் நம்மைச் சூழ்ந்திருக்கும் மாயவலையிலிருந்து மீள முடியும். இந்நூலில் கட்டுரைகளுக்கு ஏற்ற படங்களை ஆங்காங்கே அழகாய் இணைத்திருப்பது, நூல் வடிவமைப்பும் மிகச் சிறப்பு. வாசல் பதிப்பகத்திற்கு வாழ்த்துக்கள். நூலின் விலை 200 ரூபாய்.