மனித வாழ்வில் தாவரங்கள் உணவு, உடை, இருப்பிடம் என அடிப்படைத் தேவைகளிலிருந்து பயணம், மருத்துவம் போன்றவைகளுக்கும் ஆதாரமாக அமைகின்றன. ஆ.சிவசுப்பிரமணியனின் தமிழரின் தாவர வழக்காறுகள் என்ற இந்நூலில் மொத்தம் 11 கட்டுரைகள் உள்ளன. அதில் 6 கட்டுரைகள் மிகச் சிறிய அளவிலும், 4 கட்டுரைகள் விரிவான அளவிலும், தமிழர் வரலாற்றில் தாவர எண்ணெய் என்ற கட்டுரை ஒரு சிறு நூலாக வெளியிடும் வண்ணம் பெரிய கட்டுரையாகவும் உள்ளன. இந்நூலின் சிறப்பு குறித்து முன்னுரையாக தாவரவியல் பேராசியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரை மிக முக்கியமான ஒன்று. அதில், இந்நூல் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவனின் பண்பாட்டு அசைவுகள் கட்டுரைத் தொகுப்புபோல தாவரங்களின் பொருள்சார் பண்பாட்டு ஆய்வாகத் திகழ்கிறது எனப் பாராட்டுகிறார். இந்நூலிலுள்ள கட்டுரைகளின் வாயிலாக மனிதர்களுக்கும் தாவரங்களுக்குமான உறவை நாம் அறிந்து கொள்ளலாம்.
நொச்சி என்ற தாவரம் ஆவிபிடிக்க பயன்படும். பூச்சி வராமல் தடுப்பதற்காக நொச்சி இலைகளைக் களஞ்சியங்களில் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன்.
மயிலின் காலடித்தடங்கள் நொச்சியிலை போலிருக்கும் என முதலாம் வகுப்பு பாடநூலில் படித்திருக்கிறேன். அரிட்டாபட்டிக்கு பசுமைநடையாகச் சென்றபோது மயிலின் காலடித்தடங்களைக் கண்டு அது நொச்சியிலை போலிருக்கிறது என உடன்வந்த சகோதரர் சொன்னது நினைவிற்கு வருகிறது. இந்நூலின் வாயிலாக நொச்சியின் பக்கக்கிளைகளைக் கொண்டு பஞ்சாரம் என கோழியை அடைப்பதற்கான கூடை செய்வதை அறிந்துகொண்டேன். நான் சிறுவயதாக இருந்தபோது பஞ்சாரம், பஞ்சாரம் என விற்றுக்கொண்டு வந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். மேலும், தேவராட்டம் எனும் நாட்டார்கலையில் உறுமி இசைப்பதற்கு நொச்சியின் குச்சி இடப்பக்கத்திலும், வலப்பக்கத்தில் ஆவாரையின் குச்சியும் பயன்படுகிறது. ‘ஆடு பயிர் காட்டும், ஆவாரை நெல் காட்டும்’ என்ற பழமொழிக்கான காரணத்தை அறிந்தபோது ஆச்சர்யம் ஏற்பட்டது. அதை நீங்களும் அறிந்துகொள்ள இந்த நூலைவாங்கி வாசியுங்கள். மேலும், செருப்புத் தைப்பதற்கு ஆவாரை எதற்கு உதவுகிறது என்ற தகவலும் புதிதாக உங்களுக்குக் கிடைக்கும்.
மஞ்சனத்தி மருத்துவ பயன்மிக்கது. புளிப்புச் சுவையும், அதன் மணமும் கடந்துவிட்டால் மஞ்சணத்திப் பழத்தைச் சுவைக்கலாம். ஒருமுறை சமணமலையில் அதை சாப்பிட்டு பார்த்தபின் அடுத்தமுறை முயற்சிக்கவில்லை. மஞ்சனத்தி கட்டை மாட்டு வண்டியில் பயன்படுகிறது. சீமைக்கருவேல மரத்திற்கு மாற்றாக இதை வளர்க்கலாம். சங்ககாலத்தில் தலைவன் தான் காதலித்த பெண்ணை விரும்பி அடைய செல்லும்போது எருக்கம்பூவை சூடிக் கொள்வானென்று சொல்கிறது. பின்னாளில் தஞ்சையில் மராத்தியர் மற்றும் நவாபின் ஆட்சிக்காலங்களில் தண்டனையின் போது எருக்கம்பூ மாலையை அணிவித்து ஊர்வலமாக கூட்டிவருவர் என்பதும் நாம் அறியாத தகவல். வெள்ளெருக்கு வேரில் விநாயகர் செய்து வழிபட்டால் நல்லது என்ற கருத்தும் நிலவுகிறது.
ஆமணக்கு எண்ணெய் விளக்கு எரிக்க சமண, பௌத்தர்களால் அறிமுகம் செய்யப்பட்டதாக அயோத்திதாசர் கூறுகிறார். உறுதியான முடிவெடுக்க முடியாமல் திணறுபவர்களை விளக்கெண்ணெய் திட்டுவார்கள். சிறுவயதில் எள்ளுப் புண்ணாக்கு மாட்டுக்கு உணவாக வாங்கிச் செல்வதை பார்த்திருக்கிறேன். எள் இறப்பு சடங்குகளோடு தொடர்புடையதால் இதை வீட்டில் வளர்க்கும் பழக்கம் இல்லை என்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன்.
விளக்குமாறும் தாவரங்களும் என்ற கட்டுரை வாயிலாக நாம் வீட்டை சுத்தப்படுத்த உதவும் விளக்குமாறு எத்தனை வகைகளில் நமக்கு கிடைக்கிறது என அறியலாம். இன்று விளக்கமாறு பிளாஸ்டிக்கில் கூட வந்துவிட்டது. என்னுடைய சிறுவயதில் தென்னை மட்டைகளை எடுத்து வந்து அதன் கீற்றுகளை ராட்டி, கையடக்க அரிவாளைக் கொண்டு விளக்கமாறு குச்சிகளை கல்திண்ணைகளில், மரத்தடிகளில் அமர்ந்து பேசியபடியே கிழித்துக் கொண்டு இருந்தவர்களை பார்த்திருக்கிறேன். ஆக்ராவில் உள்ள சிவன் கோவில் ஒன்றில் விளக்குமாறைக் காணிக்கையாக வைக்கும் பழக்கம் உள்ளது. அந்தோணியார் கோவிலில் விளக்கமாறு காணிக்கை செலுத்துகின்றனர்.
‘ஒட்டப்பிடாரம் கத்தரிக்காய்’ கட்டுரையில் ஊரின் அமைப்பு, அங்கு உள்ள நீர்நிலைகள், நிலவுடமை, நெல் அறுவடை, மிளகாய் சாகுபடி, ஊடுபயிராக கத்திரி, தக்காளி, வெண்டை பயிரிடுவதை குறிப்பிடுகிறார். ஆமணக்கு நடுவதன் வாயிலாக அதில் வந்து அமரும் ஆந்தை எலி வராமல் தடுக்க உதவுகிறது. கத்திரிக்காய்களின் வகைகள், அதன் விற்பனை பற்றி விரிவாகப் பேசுகிறார்.
பருத்தி கட்டுரையில் அழகர் மலைப்பகுதியில் உள்ள தமிழிக் கல்வெட்டொன்றில் அறுவை வணிகன் என்ற சொல் வருவதை குறிப்பிடுகிறார். இதன் வழியாக பருத்தி நம் வாழ்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலந்து இருப்பதை அறியலாம். பருத்திப் பெண்டிர் என்ற தலைப்பில் சங்கச்சுரங்கம் எனும் இணையப்பத்து தொடரில் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் உரையாற்றுவதை கேட்கும் வாய்ப்பு கிட்டியது. வாய்ப்புள்ளவர்கள் அதையும் கேட்டுப்பாருங்கள். சங்க இலக்கியங்களில் பருத்தி பற்றிய குறிப்பு உள்ளது. கீழடி அகழாய்வில் நமக்கு கிடைத்த பொருட்களின் வாயிலாக அக்காலத்தில் நெசவுக்கு பயன்படுத்திய பல பொருட்களை காண முடிந்தது. நெட்டைப் பருத்தி ஏற்றுமதிக்கு பயன்பட்டிருக்கிறது. பருத்தி விவசாயத்திலும் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் பருத்திப்பால் குடிக்கலாமா என்ற அச்சமும் எழுந்துள்ளது. பருத்தி ஆலைகள் மதுரை மற்றும் கரிசல் பகுதிகளில் எழுந்தது. “காணியை விற்று கரிசலை வாங்கு” என்று சொலவம் பிறந்ததை இந்நூலில் குறிப்பிடுகிறார்.
தமிழர் வரலாற்றில் தாவர எண்ணெய் என்ற கட்டுரை சங்க காலம் தொடங்கி இன்று வரை எண்ணெய் நம் வாழ்வோடு கொண்டுள்ள உறவைச் சொல்லும் மிக நீண்ட கட்டுரை. எள், இலுப்பை, புன்னை, புங்கம், வேம்பு, ஆமணக்கு, கடலை இவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்டாலும், எண்ணெய் என்ற சொல் எள்ளிருந்து (எள்+நெய்) எடுக்கப்பட்ட எண்ணெயையே குறித்தது. விளக்கு எரிக்கப்பயன்படும் எண்ணெய்கள், மருந்தாகப் பயன்படும் எண்ணெய்கள் குறித்து விரிவாகச் சொல்கிறார். செக்கு, செக்கின் அமைப்பு பற்றி படத்தோடு விளக்குகிறார். செக்கு குறித்த கல்வெட்டுகளைப் பற்றிய விரிவான தகவல்களைத் தருவது ஆ.சிவசுப்பிரமணியன் அய்யாவின் சிறப்பம்சமாகக் கொள்ளலாம். நம் வாழ்வியல் சடங்குகளுக்கும் எண்ணெய்க்குமான தொடர்பு, எண்ணெய் வணிகம் செய்த சாதியினரை மனுநீதியின் அடிப்படையில் ஒதுக்கிவைத்தது பற்றியெல்லாம் இக்கட்டுரையின் வாயிலாக நாம் தெற்றெனத் தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும் வணிகர்கள் விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டுவதை பருத்தி – கத்திரி கட்டுரைகள் வாயிலாக அறியலாம்.
பெருமரம் என்ற அயல்தாவரம் இந்தியாவிற்கு வந்த விதம், அவை உள்ள ஊர்கள், அந்த மரத்தின் பயன்கள், அந்த மரத்தை சவ அடக்கம் செய்ய ஆப்பிரிக்காவில் பயன்படுத்தும் முறை, அதை வணிக நோக்கில் வளர்ப்பது குறித்து விரிவான பலதகவல்களைத் தருகிறது.
நூலின் சிறப்பம்சமாக சான்றாதாரம் பகுதியையும், சொல்லடைவு பகுதியையும் சொல்லலாம் 59 புத்தகங்களை சான்றாக காட்டுகிறார். அதில் பல புத்தகங்கள் கல்வெட்டுகள் பற்றியவை. சொல்லடைவு பகுதியில் நூற்றுக்கும் மேலான சொற்களை கொடுத்திருப்பதால் நாம் எந்த சொல்லைக் குறித்து வேண்டுமானாலும் தேடி அந்தப் பக்கத்தில் அதைக்குறித்து பலவிடயங்களை அறிந்துகொள்ளலாம். மேலும் தகவலாளர்களின் பெயர்களையும் குறித்திருப்பது குறிப்பிட வேண்டிய விஷயம். தானே அறை எடுத்து யோசித்து பலவிடயங்களைக் கண்டடைந்ததாகப் பலரும் பகிர்ந்துவரும் வேளையில் தகவல் தந்து உதவியவர்களின் பெயர்களையும் தொகுத்திருப்பது இந்நூலாசிரியரின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது. நம் வீட்டில் இருக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில், நாம் பிறர்க்கு பரிசளிக்கும் புத்தகங்களின் பட்டியலில் இந்நூலையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்நூலை மிகச் சிறப்பாக பதிப்பித்த உயிர் பதிப்பகத்திற்கு வாழ்த்துகள். இந்நூலின் விலை 210ரூபாய்.
சிறப்பான மதிப்பீடு…வணக்கங்கள்..!