
2010 அக்டோபர் 23-இல் சகோதரர் உதவியுடன் தொடங்கியது இந்த வலைப்பூ பயணம். இன்று திரும்பிப்பார்க்கும்போது வலைப்பூ எழுதத் தொடங்கியதால் எனக்கு கிடைத்த ஏராளமான நன்மைகளை எண்ணி மகிழ்ச்சிகொள்கிறேன். 2003ல் வேர்டுபிரஸ்ஸை தொடங்கிய Matthew Charles Mullenwegக்கு இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எழுதிய கட்டுரைகளுக்கு அதிகமான மறுமொழி அளித்த சீனா அய்யாவை இக்கணத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். அவர் இக்கணத்தில் இல்லாதது பெரும் வருத்தத்தைத் தருகிறது.
சித்திரவீதிக்காரன் என்ற பெயருடன் “மதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துகொண்டவர்களுள் ஒருவன்” என்ற அடைமொழியுடன் எழுதத் தொடங்கியபோதே அவை என்னை ஆட்கொண்டுவிட்டன. என்னை வழிநடத்த, என்னுடைய நல்ல விருப்பங்களை உடனே நிறைவேற்ற என மதுரையும், தமிழும் கங்கணம் கட்டிக்கொண்டது என நினைக்கிறேன்.
290 கட்டுரைகள்கிட்ட இத்தளத்தில் எழுதியிருக்கிறேன். அதில் 100-க்கும் மேலான கட்டுரைகள் மதுரை, தொல்லியல், வரலாறு சார்ந்தவை. 75-க்கும் மேலான கட்டுரைகள் புத்தகங்கள் சார்ந்தவை. 2010ல் பசுமைநடையில் இணைந்தது மதுரையிலுள்ள தொல்லியல் தளங்களுக்கெல்லாம் தொடர்ந்து பயணிக்க உதவியது. பசுமைநடைப் பயணங்கள் குறித்தே இத்தளத்தில் 75-க்கும் மேலான பதிவுகளை எழுதியிருக்கிறேன்.
ஓவியர் மனோகர் தேவதாஸ், பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சமூகச் செயற்பாட்டாளர் அ.முத்துக்கிருஷ்ணன் இந்த ஐவரும் ஒருவகையில் என்னை அதிகம் ஆட்கொண்டவர்கள் எனலாம். புத்தகங்கள் வாயிலாகவும், பயணங்கள் வாயிலாகவும் இன்னும் ஏராளமான மனிதர்கள் என்னை வழிநடத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.
மதுரை திருவிழாக்களைக் குறித்து ஏராளமான கட்டுரைகள் இந்த வலைப்பூவில் எழுதியிருக்கிறேன். அழகர்கோயில் ஆடித்திருவிழா குறித்தே நாலு பதிவுகள் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன். இப்படி எழுதிய கட்டுரைகள் எல்லாம் பின்னாளில் ஒரு நூலாகும் என்று நான் எண்ணியதில்லை. 2019ல் திருவிழாக்களின் தலைநகரம் மதுரை என்ற நூல் வந்தது மதுரையும், தமிழும் தந்த பரிசு என்றுதான் நினைக்கிறேன். 2010ல் ஏற்கனவே எழுதிவைத்திருந்த ஆறேழு கட்டுரைகளுடன் இந்த வலைப்பூவை தொடங்கினேன். திரும்பிப்பார்க்கும்பொழுது மலைப்பாக இருக்கிறது. தொடங்கிய சில வருடங்களில் ஆண்டிற்கு 50 கட்டுரைகள் கிட்ட எழுதியிருக்கிறேன். 2015-ற்கு பிறகான வருடங்களில் மாதம் ஒரு கட்டுரை என்றாகி வருடத்திற்கு 12 கட்டுரைகள்கிட்ட எழுதியிருக்கிறேன்.
“உலக அளவில் இந்த ஆண்டு வலைப்பூக்கள் மறுமலர்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் தெரிவதாகச் சொல்கிறார்கள்” என்ற குறுந்தகவல் சமீபத்தில் ப.தமிழ்ச்செல்வம் அண்ணனிடமிருந்து வந்தது. இப்படி நான் சோர்ந்துபோகும் போதெல்லாம் ஊக்கப்படுத்தும் சகோதரர்களும், “என்னாச்சு ரொம்ப நாளா எழுதவே இல்ல?” என்று வலைப்பூ வாயிலாக கிடைத்த நண்பர்கள் கேட்கும்போது எழும் உத்வேகத்தில் மீண்டும் எழுதத்தொடங்கிவிட்டேன்.
பத்து வருடங்களில் முத்தாய்ப்பாக சொல்ல சமீபத்தில் வந்துள்ள பத்தாம் வகுப்பு தமிழ் பாடநூலில் இணையவளங்கள் பகுதியில் நாட்டுப்புறக்கலைகள் அகமும்-புறமும் என்ற கட்டுரைக்கான இத்தள இணைப்போடு வந்துள்ளது பெருமகிழ்ச்சி. விகடன் வரவேற்பறையில் எழுதத் தொடங்கிய சில வருடங்களிலேயே அறிமுகம் கிடைத்தது, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் வலைத்தளங்களில் அவர்கள் நூல் குறித்து நான் எழுதிய பதிவுகள் வந்ததும் பெருமகிழ்ச்சியைத் தருகிறது.
கடந்த பத்துவருடங்களில் வாசிப்பும் வளர்ந்திருக்கிறது. நூறுக்கும் மேலான நாவல்களை கடந்த பத்துவருடங்களில்தான் வாசித்திருக்கிறேன். அதேபோல இருநூறுக்கும் மேலான (நாவல் தவிர்த்து) நல்ல புத்தகங்களையும் கடந்த பத்துவருடங்களில் வாசித்திருக்கிறேன். வாசிப்பதை பதிவு செய்ய வேண்டும், பயணித்ததை வலைப்பூவில் பதிவு செய்ய வேண்டுமென்றேகூட பல நல்ல செயல்களை செய்வதற்கு உதவியாக இத்தளம் இருந்திருக்கிறது.
2020, அக்டோபர் 23-இல் இந்தப் பதிவை தட்டச்சு செய்யும் கணத்தில் நன்றி சொல்ல வேண்டிய லட்சக்கணக்கான மனிதர்களை நினைத்துக் கொள்கிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.