
தசராவை குலசேகரன்பட்டினத்திலும், மைசூரிலும் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆசையிலொன்று கடந்த ஆண்டு கொஞ்சம் நிறைவேறியது. தசரா சமயத்தில் மைசூரு சென்று அம்பா விலாஸ் மாளிகையை பெருங்கூட்டத்தினூடாக சென்று பார்த்தது மறக்க முடியாத அனுபவம்.

பராசக்தி சாமுண்டீஸ்வரியாக மகிஷனை கொன்ற ஊர் மைசூரு என்று கதைகளில் சொல்லப்படுகிறது. மைசூரில் முன்பு மகிஷபுரம், மகிஷூர் என்றழைக்கப்பட்டிருக்கிறது. மைசூரில் ஆண்டுதோறும் தசரா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாமுண்டீஸ்வரி கோயிலுள்ள மலையிலிருந்து பார்த்தால் மைசூரு நகரம் மிக அழகாய்த் தெரிகிறது. அங்கு மிகப்பெரிய மகிஷனின் சிலை உள்ளது. மைசூரு அரண்மனைகளின் நகரம் என்று சொல்லப்படுவதற்கேற்ப இந்த ஊரில் ஆறேழு அரண்மனைகள் உள்ளன.
நாங்கள் பெங்களூரிலிருந்து மைசூரு செல்லும்போது நல்ல மழை. இரவு இரண்டு மணிக்கு தங்கும் விடுதியை அடைந்தோம். காலையில் எழுந்து மைசூரு வீதிகளில் கொஞ்ச நேரம் நடந்தோம். மைசூரு அருங்காட்சியகத்தை வெளியிலிருந்து பார்த்தேன். வாசலிலிருந்த டெரக்கோட்டா சிற்பங்கள் அழகாகயிருந்தது. எங்கள் பயண திட்டத்தில் அது இல்லாததால் காலை மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு சென்றோம். பலவிதப்பறவைகள், மிருகங்களைப் பார்த்துவிட்டு மதியத்திற்கு மேல் மைசூரு அம்பாவிலாஸ் அரண்மனைக்குச் சென்றோம்.

காலணிகளை பாதுகாப்பு இடத்தில் வைத்துவிட்டு அரண்மனைக்குள் செல்லும் வழியில் இம்மண்டபம் கட்டப்பட்டதைக் குறித்த கல்வெட்டு ஒன்றுள்ளது. முன்னர் இருந்த அரண்மனை தீக்கிரையானதால் 1897ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரண்மனை கட்டுமானப்பணி 1912இல் கட்டி முடிக்கப்பட்டது. சிம்லாவில் வைஸ்ராய் மாளிகையை வடிவமைத்த ஹென்றி இர்வின் இந்த அரண்மனையை வடிவமைத்துள்ளார். 50 ஹெக்டேர் பரப்பரவில் இந்த அரண்மனையை கட்ட அந்தக் காலத்தில் 41 லட்சம் செலவானதாம். ஜெய்பூர் மற்றும் இத்தாலியிலிருந்து கிரானைட் கற்கள் இந்த அரண்மனை கட்ட கொண்டுவரப்பட்டன. இந்தோ சாரசெனிக் கட்டிடக் கலையில், ஹொய்சால கிரேக்க கட்டிட வடிவமைப்பில் கட்டப்பட்ட இந்த அரண்மனை உடையார் மன்னர்களின் புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அரண்மனையிலுள்ள மன்னர் குடும்பத்துச் சித்திரங்கள் உயிரோட்டமாக உள்ளது. அரண்மனையைக் கட்டிய நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் சித்திரத்தைப் போன்றே பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்த மாவுச்சிலையும் உள்ளது. திருமணங்கள் நடக்கும் கூடம் அவ்வளவு அழகு. திருமலைநாயக்கரின் நாடகசாலையை சில இடங்கள் நினைவூட்டுகிறது.

அரண்மனையிலுள்ள ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. தசரா கொண்டாட்ட நிகழ்வுகள் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டாடப்பட்ட காட்சிகள் 25க்கும் மேலுள்ளன. அதில் குதிரைப்படை வரும்போது பெரிய வீடுகளில் இருந்து பார்க்கும் மக்கள், பிலோமினா தேவாலயம் முன் ஊர்வலம் வரும் ஓவியக் காட்சியைப் பார்க்கையில் மதுரை மாசி வீதிகளில் சித்திரைத் திருவிழாக் காட்சிகளும், மரியன்னை தேவாலயமும் நினைவிற்கு வருகிறது.

நிறைய திரைப்படங்களில் இந்த அரண்மனையின் முகப்பை பார்த்திருக்கலாம். மாடங்களும், உப்பரிகைகளும் பார்க்க மிக அழகு. அரண்மனையின் நடுவில் தர்பார் மண்டபம் உள்ளது. அதன் விதானத்தில் வரையப்பட்ட ஓவியம் அற்புதமாக உள்ளது. அரண்மனையிலிருந்து சாமுண்டீஸ்வரி கோயிலுள்ள மலை தெரிகிறது. மைசூரு அரண்மனை இன்றளவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அரண்மனையை தூய்மை செய்யவும், பாதுகாக்கவும் ஏராளமான பணியாளர்கள் இருக்கிறார்கள்.

கர்நாடகாவில் சுற்றுலாத்துறை சிறப்பாக செயல்படுகிறது. அதிலும், குறிப்பாக மைசூரு சுற்றுலாத்துறை. அங்கு தயாரிக்கப்படும் மைசூரு சில்க், மைசூரு-பாகு, சந்தன ஊதுபத்திகள், மரங்களில் செய்த கைவினைப் பொருட்கள் எல்லாக் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. மேலும், ஏராளமான சிறுவியாபாரிகள் சுற்றுலாப் பகுதிகளில் உலவுகின்றனர். மைசூரு அரண்மனை, சரவணபெலகொலா கோமதீஸ்வரர், ஹொய்சால மன்னர்களின் சிற்பக்கலைக்கு சான்றான பேளூர் – ஹலேபேடு சிற்பங்கள், சாமூண்டிஸ்வரி கோயில் நந்தி, மகிஷாசுரன் மாதிரிச் சிற்பங்கள், மரபொம்மைகள், கீசெயின் என பல்வேறு வகையில் நமக்குக் கிடைக்கிறது.

நாங்கள் கிளம்பும் சமயத்தில் அரண்மனை மின்னொளியில் ஒளிரத்தொடங்கியது. சற்றுநேரத்தில் ஊரே ஒளிமயமாகிவிட்டது. பொதுஇடங்கள் மற்றும் சாலைகளில் உள்ள மரங்கள் எல்லாம் ஒளிமயமாக இருக்கிறது. அங்கிருந்து திம்மம் மலைப்பாதை வழியாக வரும்போது வானில் பார்த்த நட்சத்திரங்களும், அடிவாரத்திலுள்ள ஊரில் ஒளிர்ந்து மின்விளக்குகளும் தந்த அனுபவம் அலாதியானது. கொண்டை ஊசி வளைவுகளில் நின்று, நின்று பேருந்து மெல்ல மலையிறங்கியது. வனவிலங்குகள் நடமாடும் பகுதி என்ற அறிவிப்புப் பலகையை ஆங்காங்கே காண முடிகிறது. மைசூர் அரண்மனை கடந்த இரண்டாண்டுகளில் மூன்று முறை செல்லும் வாய்ப்பு கிட்டியது. முந்தைய ஆண்டு பயணித்தபோது பார்த்த திப்புசுல்தான் தர்கா மற்றும் கோடைகால அரண்மனை, ஹலேபீடு, பேளூர் பற்றியெல்லாம் தனிப்பதிவொன்று எழுதணும். நன்றி.
